Advertisement

மின்னல் 9

மேஜையின் மேல் அமர்ந்து ஒரு காலை ஆட்டியவாறு இருந்தவனைக்காணவே பயங்கரமாக இருக்க கையை முன்னால் கட்டியவாறு முழங்கால்களில் அமர்ந்திருந்தவனின் கால்களிரண்டும் பலமிழந்து நடுங்கிக் கொண்டு இருந்தது. கையில் இருந்த வெள்ளிக்காப்பை முறுக்கி விட்டபடி  

“ம்ம்! சொல்லு!” என்று உறுமியவனின் குரலில் விக்ரமிற்கே ஒரு நிமிடம் உடல் தூக்கிப் போட்டது என்றால் முழங்கால்களில் அமர்ந்திருந்தவனோ பட்டென்று அமர்ந்து விட்டான்.  

“சார்!  சார் எனக்கொன்றும் தெரியாது சார்! என்னை ஏன் சார் அநியாயமா பிடிச்சு வைச்சு விசாரிக்கிறீங்க?” என்று நடுங்கிய படியே கூறியவனின் அருகே சென்று அவனின் முழங்கால் மேலேயே பூட்ஸ் காலால் மிதித்தவன் 

“யாருக்கிட்டடா இந்த பச்சா கதையெல்லாம் விடுற? கண்ணைப்பார்த்து சொல்லக்கூட தைரியம் இல்லை. உனக்கெல்லாம் என்னடா நியாயம்?” என்று கடித்த பற்களிடையே உறுமியவனின் குரல் “ஆஆ” என்று அலறியவனைத் தாண்டி அங்கிருந்தவர்களின் காதை வந்து அறைந்தது.

“ஆஆ..சொ..சொல்…ஆஆஆ…சொல்லிடுறேன் சார்! நான் தான் நான் தான் அந்தப் பொண்ணை  வரச்சொன்னேன்” என்று வலியை மீறி அவன் கத்தியதும் தான் அபியின் பூட்ஸ் அவனது காலின் மேலிருந்து நகர்ந்தது. மீண்டும் மேஜை மீது சென்று அமர்ந்தவன் கைகளை நீட்டி சோம்பல் முறித்தபடியே “ம்ம்ம்! மேல” என்றான். 

“அந்தப்பொண்ணு நான் வேலை செய்யுற கடைக்குப் பக்கத்தில இருக்கிற ஸ்கூலில தான் படிக்குது சார். ஸ்கூல் போறப்போவும் வர்றப்போவும் பார்த்து இருக்கேன். அழ..அழகா இருக்கும் சார்” என்றவன் அபிஷிக்த்தின் பார்வையில் மிடறு விழுங்கிக் கொண்டான்.

“அந்தப் பொண்ணோட கொஞ்சம் கொஞ்சம் பேச்சுக்கொடுப்பேன். அதுக்கு பிடிச்சதை ஃப்ரீயாக் கொடுப்பேன். அந்தப்பொண்ணும் நல்லாப் பேசும் சார்” 

“ம்ம்!”

“அ..அதுகி..அதுகிட்ட லவ் பண்றேன்னு சொன்னேன் சார்” தயங்கித் தயங்கிக் கூறியவனின் அருகில் சென்று ஓங்கி அறைந்தவன் 

“நாயே! அது பதினைஞ்சு வயசுக் குழந்தைடா. நீ முப்பது வயது மாடு. உனக்கு அந்த குழந்தை கேக்குதா?” அவன் அறைந்த வேகத்திலேயே அப்படியே மயங்கி தரையில் விழுந்தவன் “த..தண்..தண்ணி” என்று தவிக்கத் தொடங்கவும் தலையை அழுந்தக் கோதிக்கொண்ட அபியின் கண்ணசைவில் அவனுக்கு நீர் வழங்கப்பட்டது. அவனை இழுத்துச் சென்று அங்கிருந்த கதிரையில் அமர வைத்தவர்கள் மீண்டும் அபியின் கண்ணசைவில் விலகிச் செல்ல தலையை நிமிர்த்த முடியாமல் தொங்கப் போட்டுக்கொண்டு கிடந்தான் அந்தக் கொடியவன். 

“சொல்லு! இப்போ அந்தப் பொண்ணு பூர்ணா எங்க?”

“சார்! அவளை அவ வீட்டுல இருக்கிற நகையெல்லாம் எடுத்துட்டு வர சொல்லி நான் ஸ்டேஷன் ல வெய்ட் பண்ணது என்னமோ உண்மை தான். ஆனா. அவ வரவே இல்லை சார்!” என்று முணகவும் தலை சுற்றிப் போனது அபிக்கு. 

சற்று யோசிக்க வேண்டும் போல இருக்கவும் விக்ரமிடம் அவனைப் பார்த்துக்கொள்ளக் கூறியவன் தனது அறைக்கு சென்று சீட்டில் சாய்ந்து அமர்ந்தான். அந்தப் பெண்ணைக் காணவில்லையென அவளின் பெற்றோர்கள் கதறிய கதறல் இன்னும் காதில் அறைந்து  கொண்டு இருப்பது போல இருந்தது. 

ஸ்டேஷன் செல்வதாகக் கூறியவள் அங்கும் செல்லவில்லை! வீட்டிற்கும் திரும்பவில்லை. பெண் பிள்ளை வேறு! கையில் நகைகள் வேறு! சட்டென்று விழி திறந்தவன் மேஜையில் இருந்த மணியை அழுத்தி விக்ரமை அழைத்து வருமாறு உள்ளே வந்த ப்யூனிடம் கூறிவிட்டு தனது லேப்டப்பில் வேகமாக ஏதோ தேடத்தொடங்கினான்.

“சார்!”

“விக்ரம்! அந்தப்பொண்ணு கொண்டு போன நகைங்க எந்தக் கடையிலேயாவது அடகு வைச்சு இருக்காங்களா என்று ட்ரேஸ் பண்ணு! எல்லாக் கடைகளிலும் யாரவது சந்தேகப்படுற மாதிரி நகை அடகு வைக்க வந்தால் சொல்லச் சொல்லி தகவலைக் கொடுங்க. க்விக்! இன்னொரு டீமை அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸ்ட நகையோட டிஸைன்ஸ் பற்றிய ஐடியாவை எடுக்கச் சொல்லிட்டு நீ வா என் கூட” என்றவன் ஜீப்பை நோக்கி விரையவும் ஃபோன் கால்களிலேயே உத்தரவுகளைப் பிறப்பித்தவாறு அபிஷிக்த்தின் பின்னாலேயே விரைந்தான் விக்ரம்.

ஜீப் விரைந்து கொண்டு இருந்தது! 

இப்பொழுது அந்தப்பெண்ணினுடைய வீட்டிற்கும் ஸ்டேஷனிற்கும் இடையில் இருக்கும் நகைக்கடைகளில் விசாரணை செய்வதற்காக விரைந்து கொண்டிருந்தனர் அபிஷிக்த்தும் விக்ரமும். அதே நேரம் அவன் விசாரனைக்காக சென்று கொண்டு இருந்த நகைக்கடை ஒன்றினுள் சாரதாவுடன் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தாள் யுவரத்னா!

“ஏன் அத்தை இப்போ நகைக் கடைக்கெல்லாம்? வாங்க நம்ம போகலாம்”

“அடச்சே! சும்மா இரு யுவா! நீ வயசுப்பொண்ணு. நீ தான் உண்மையில நகைக் கடை, சினிமா, ஷாப்பிங்க் என்று சுத்தித் திரியனும். நான் கோவில் குளம் என்று சுத்தித் திரியனும். எல்லாமே இங்க தலை கீழா இருக்கு. வாயை மூடிட்டு இருக்கனும். உனக்கு இன்றைக்கு ஒரு செயின் வாங்கித் தராம நான் ஓய மாட்டேன்” என்றவர் “இந்தாம்மா! லேடஸ் மாடல்ல வீட்ட போடுற மாதிரி செயின் டிஸைன்ஸ் இருந்தா காட்டுமா” என்றவர் அதில் கவனமாகவும் ஆர்வமில்லாமல் இலக்கின்றி சுழற்றிய பார்வையில் விழுந்தான் அவன்.

அவனைப் பார்த்ததுமே சரியாகப் படவில்லை யுவாவிற்கு! அவனை முன்னொரு நாள் கோர்ட்டில் கண்ட நியாபகம். கன்னத்தில் இருந்த தழும்பு அவளுக்கு நன்கு நியாபகம் இருந்தது. ஏதோ ஒரு பையுடன் வந்தவன் அங்கு இருந்தவர்களிடம் எதையோ விவாதித்துக்கொண்டு இருந்தான். அவன் விவாதிக்கும் இடத்திற்கு அருகில் வளையல்களுக்கான பகுதி இருக்கவே  அதைப் பார்வையிடுவது போல அந்தப்பக்கமாகச் சென்றவளின் காதில் துல்லியமாக் அவன் பேசியது விழுந்தது. 

“சார்! நகைங்களை விக்கனும்”

“என்ன என்ன டிஸைன்ஸ் தம்பி? உங்களொட நகைங்க என்றதுக்கு ஏதாச்சும் பில் ப்ரூஃப் இருக்குதா?”

“அய்யோ! அதெல்லாம் கொண்டு வரலையே சார்”

“ம்ச்..என்ன தம்பி நீங்க? இவ்வளவு நகைங்க! அடகு வைக்கிற என்றாலும் பரவாயில்லை. விற்கப் போறேன் என்று நிற்கிறீங்க! ரேட் என்ன எதிர் பார்க்கிறீங்க?”

“நீங்க பார்த்து சொல்லுங்க சார்” என்றதுமே யுவாவிற்கு இது ஏதோ திருட்டு நகைகள் தான் என்பது உறுதியானது. அபி இதுபோன்ற கேஸில் இன்வால்வ் ஆக மாட்டான் என்பது யுவாவிற்குத் தெரியும். ஆனாலும் அவன் இருக்கையில் போலிஸிற்கு அழைக்கவும் மனம் வரவில்லை. 

அவனிடம் கேட்டுவிட்டு என்ன அடுத்தது செய்வது என்று முடிவெடுக்கலாம் என்று யோசித்தவளின் கண்களில் அந்த மனிதன் வைத்திருந்த பையில் ஒரு துணி ஒன்று கண்ணில் பட்டது. அது அவள் எங்கேயோ பார்த்து இருக்கின்றாள். நெற்றியைத் தட்டி யோசித்தவளிற்கு விடை கிடைக்கவும் அதற்கு மேலும் காலம் தாழ்த்துவது சரி இல்லை என்று அபிக்கு அழைத்தாள்.

மாறி மாறி அழைப்புக்களில் இருந்த அபியைப் பிடிக்கவே அவளுக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் பிடித்தது. 

“பிக் அப் மாமா! பிக் அப்!”

“ஹலோ!”

“மாமா”

“யுவா! நான் ஒரு கேஸ் விஷயமா பிஸியா இருக்கேன்! ஏதும் முக்கியமான விஷயமா?”

“ஆமா மாமா! நானும் அத்தையும் ஒரு நகைக் கடைக்கு வந்தோம்” என்றதுமே விக்ரம் அபியின் பார்வைகள் சந்தித்துப் பிரிந்தன! 

“ஒருத்தன் கையில ஒரு பையில நகைகளைக் கொண்டு வந்து விற்கனும் என்று பேசிட்டு இருக்கான்! அவனை நான் கோர்ட்டில பார்த்து இருக்கேன். அவனோட பையில ஒரு சின்ன துணித்துண்டு.. அது நான் ஏதோ ஒரு ஸ்கூல் யூனிஃபோர்ம்ல பார்த்த நியாபகம் மாமா! அதுதான் உங்களைக் கேட்டுட்டு என்ன செய்யலாம் என்று”

“ஃபென்டாஸ்டிக் யுவா” என்று ஸ்டியரிங்க்கில் தட்டியவன் “லுக் யுவா!! ஒரு பதினைஞ்சு வயசு பொண்ணைக் காணோம். நகையோட காணோம். அது விஷயமாத் தான் நாங்க சுத்திட்டு இருக்கோம். நீ அவனை போக விட்டுடாத! நான் இன்னும் இரண்டே நிமிஷம் அங்க இருப்பேன்” என்றவன் சற்றுத்தயங்கி “எனக்காக யுவா! தைரியமா இரு” என்றுவிட்டு ஜீப்பை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.

அவன் அவ்வாறு கூறவும் ஆச்சர்யமாக நோக்கிய விக்ரமிற்கு அவனது மாற்றம் தெரிந்த அளவு கூட அபிக்குத் தெரியவில்லை. வேலை என்று வரும் பொழுது வீட்டில் இருந்து வரும் அழைப்புக்களை முற்றாக புறக்கணிப்பவன் அபிஷிக்த். அதுமட்டுமின்றி இப்படி மென்மையாக இவனுக்கு பேச வரும் என்பதே இப்போது தான் விக்ரமிற்கே தெரியும். ஆனாலும் இப்பொழுது கேஸ் முக்கியமாகப் பட அவனது யோசனைகளும் அதனை நோக்கியே சென்றது.

அதற்குள் சாரதா செயின் ஒன்றை தேர்ந்து யுவாவை “அதுக்குள்ள இந்தப்பொண்ணு எங்க போனா?” என்று சுற்றும் முற்றும் பார்க்கத்தொடங்கினார். அவரது கண்களில் யுவா ஏதோ பதட்டமாக இருப்பது விழவும் அங்கிருந்தவாறே “ஏம்மா யுவா!” என்று அழைத்தார். அவரின் அழைப்பு பதட்டத்தில் யுவாவின் காதில் விழாமலே போக “என்ன பொண்ணோ! கவனம் இங்க வைக்கிறதே இல்லை” என்று புலம்பியபடி அவளின் அருகே சென்று தட்டி “யுவா!” என்று அழைக்கவும் “ஹுக்” என்றபடி அதிர்ந்து திரும்பியவள் அங்கு நின்ற அத்தையைப் பார்த்த பின்னர் தான் ஆசுவாசமானாள்.

“என்னடாம்மா! ஏன் இவ்வளவு பதட்டம்? யாரும் திருடன் வந்துட்டானா இந்தப்பக்கம்?” என்றதுமே அருகில் இருந்தவனின் பார்வை சட்டென்று இவர்களை நோக்கி திரும்பியது! 

“அய்யோ அதெல்லாம் இல்லை அத்தை! திடீரென கூப்பிட்டதும் பயந்துட்டேன்”

“அவ்வளவு தானே! இல்லனா சொல்லு என்னோட சிங்கம் சூர்யாவைக் கூப்பிடுறேன்” என்றவரின் பேச்சில் என்ன விளங்கியதோ அந்த சந்தேகப்பேர்வழி கடைக்காரர்கள் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே விரைந்தான்.

“யார்ரா இவன் லூஸு போல..காலையிலேயே நம்ம உயிரை எடுக்க வந்துட்டான்” என்று அவர்கள் புலம்புவதைக் கேட்கக்கூட யுவா நிற்கவில்லை. அத்தையை அங்கேயே இருங்கள் என்றுவிட்டு அவன் கடையில் இருந்து வெளியேற முன்ன்ரே விரைந்து அவனது பையைப் பற்றி “டேய்! நில்லு!” என்று மறித்தாள். 

சாரதாவிற்குத்தான் விழிபிதுங்கி போய்விட்டது! என்ன செய்கிறாள் இந்தப்பெண்! 

“யுவா!” என்று அவர் அவளை நோக்கி விரையப்போக “வராதீங்க அத்தை! இவன் திருடன்!” என்று வாசலில் இருந்தே கத்தியவள் “விடுடா பையை”  என்று முயன்றளவு இழுத்தாள். 

இறங்கிச்செல்லும் படிக்கட்டுகளின் அருகே நின்று இருவரும் பையைப் பற்றி இழுத்தபடி நிற்கும் போதே அபியின் ஜீப் கடை வாசலில் கிறீச் இட்டு நின்றது. அதில் யுவாவின் கனம் கலைய அத்திருடன் பையை வேகமாக இழுத்திருந்தான்.

அவன் இழுத்த இழுவையில் “அம்மா” என்றபடி முன்னால் சரிந்தபடி யுவா படிக்கட்டில் விழுந்து உருளத்தொடங்கவும் அபியும் விக்ரமும் அவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது. அவளிடம் இருந்து பையைப் பறித்த அந்தத் திருடன் ஓடத்தொடங்கவும் “யுவா!” என்று கூவிய அபிஷிக்த் “விக்ரம் அவனைப் பிடி” என்று கத்தியபடி யுவாவை நோக்கி விரைந்தான். அதற்குள் கடையாட்களும் சாரதாவும் யுவாவை நோக்கி விரைந்து வர கீழே விழுந்திருந்த யுவாவின் நெற்றியில் வழிந்த இரத்தத்தை தன்னுடைய கைக்குட்டையால் அழுத்திப்பிடித்த அபி அங்கு உறைந்து போய் நின்ற தாயை நோக்கி 

“அம்மா! ட்ரைவரைக் காரைக்கொண்டு வரச் சொல்லு. க்விக்” என்று கத்தினான்.

அதில் தெளிந்த சாரதா காரை வரச்சொல்லிப் பணித்துவிட்டு யுவாவைத் தாங்கிக் கொண்டார். மயங்கி இருந்தவளின் நெற்றியில் மட்டும் படியின் முனை தாக்கி இருந்தது. கைகள் கால்களை ஆராய்ந்தவர் கார் வரவும் அவளை பற்றி தூக்கி முனைய அவரை விலக்கிய அபி யுவாவைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.

காரில் வைத்தியசாலைக்கு தாய் மற்றும் யுவாவுடன் விரைந்தவனிற்கு “அதிர்ச்சி மயக்கம் தான் அபி! இலேசான நெற்றிக்காயம் தான். கொஞ்சம் ஃபீவர் வரலாம். டேப்லட்ஸ் கொடுத்துடுறேன்” என்ற வைத்தியரின் பேச்சின் பின் தான் மூச்சே வந்தது. அதன் பின்னர் சாரதாவைப் பார்த்து யுவா முழித்ததும் வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூறியவன் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு விக்ரமிருக்கும் இடத்திற்கு விரைந்தான்.

Advertisement