“இது நம்பிக்கை இல்ல வேலா மண்பானைல பூந்தொட்டி அதுவும் மேசை மேல எப்படி தானா வரும், என்ன கேலி பண்ணுறியா?”
“நான் கேலி பண்ணல ஐயா இவ்ளோ பெரிய உலகம். அதில் இருக்குற இத்தன உயிர்கள், இத்தன கோள்கள், இவ்ளோ பெரிய அண்டமே தானா உருவாகுது. இந்த ஒரு சின்னப் பூச்செடி அதுவா வராதா?” என்று கேட்டாள்.
பாலன் வாத்தியார் வாயடைத்துப்போய்விட்டார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதற்கு மேல் அந்தப் பேச்சையும் அவர் தொடரவில்லை. பாடம் நடத்த ஆரம்பித்தார். பாடம் மரங்களை பற்றியது என்பதால் கடவுள் பற்றிய எந்தப் பேச்சையும் எடுக்காமல் அன்று பாடவேளை முடிந்தது.
சாயங்காலம் கார்த்தியின் வீட்டில் அவர் அப்பா எதையோ ஆழமாகச் சிந்தித்துக்கொண்டே இருந்தார். கார்த்தியின் அம்மா உமையாள் வந்து தேனீரை மேஜையில் வைத்ததை கூடக் கவனிக்காமல் எதையோ ஆழ்ந்து யோசித்துக்கொண்டே இருந்தார். பாலன் வாத்தியாரின் தோளைத் தொட்டு,
“என்னாச்சுங்க? என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
இப்போது தான் உமையாள் அழைத்ததையே கவனித்த பாலன் வாத்தியார் அவள் பக்கம் திரும்பி,
“என்னமா” என்றார்.
“பள்ளிகூடத்துல ஏதாவது பிரச்சனையா?”என்று கேட்டாள்.
“அது எல்லாம் ஒன்னும் இல்ல” என சமாளித்தார்.
கார்த்தியை திரும்பிப் பார்த்தாள்.
“பள்ளிகூடத்துல ஏதாவது சண்டையா என்ன?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. அப்பா பள்ளிக்கூடத்துல கூட இன்னைக்கு அமைதியாதான் இருந்தாரு. யார்கிட்டயும் எந்தக் கேள்வியும் கேக்கல எதுக்குனு தெரியல”
அவர் அருகே அமர்ந்து நெற்றியில் கைவைத்து, “என்னாச்சுங்க? உடம்பு எதாவது சரியில்லயா” என்று கேட்டாள் உமையாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. பாடம் நடத்தும் போது பிரபஞ்சம் அதுவா உருவானது, வேதிவினையால உருவானதுன்னு சொல்லிப் பாடம் எடுத்தேன் நேத்து, கார்த்தி வகுப்புல, வகுப்பு முடிஞ்சதும் நீ ரொம்ப நாளா ரோஜா செடி கேட்டுட்டு இருந்தேன்னு சொல்லி யாரு வீட்டுலயாவது பூச்செடி இருந்ததுன்னா எடுத்துட்டு வாங்கனு சொல்லிருந்தேன். ஆனா இன்னைக்கு வேலாவோட வகுப்புக்குள்ள போனதும் பூந்தொட்டி இருந்தது, யாரு கொண்டு வந்து வச்சதுன்னு கேட்டேன். வேல்விழி எழுந்து தானா வந்ததுன்னு சொல்னா. தானா எப்படி வரும்னு கேட்டேன். என்ன சார் இவ்ளோ பெரிய பிரபஞ்சமே தானா உருவாகும் போது ஒரு பூச்செடி தானா உருவாகாதா அப்படின்னு கேட்டா. எனக்கு அதுக்கு சொல்ல பதில் எதுவும் இல்ல. அதான் ரொம்ப யோசனையா இருக்கு” என்றார்.
உமையாள் சிரித்துக்கொண்டே,
“சரி சரி காப்பி குடிச்சுட்டு யோசிங்க”
என்று சொல்லிச் சமையலறைக்குள் சென்றாள்.
இந்தக் கேள்வி கார்த்தியும் துளைக்க ஆரம்பித்தது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை. சுப்புத்தாய் பாட்டியின் திண்ணையில் பிரபு உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். சாளரத்தின் வழியாகச் சுப்புத்தாய் பாட்டி எட்டிப் பார்த்தாள். அவன் ஏதோ ஒரு பெட்டிக்குள் ரோஜா பூவையும் வளையல்களையும் கம்மல்களையும் அடுக்கி கொண்டிருந்தான். எதுவும் சத்தம் போடாமல் சுப்புத்தாய் பாட்டி பார்த்துக் கொண்டே இருந்தார். சற்று நேரம் கழித்து வேல்விழி வந்து பிரபுவின் அருகில் அமர்ந்தாள்.
“என்னடா எதுக்குடா கூப்பிட்டே” என்று கேட்டாள்.
“ஏய் இந்தா இதுல வளையல், கம்மல் எல்லாம் இருக்குது. இதெல்லாம் பத்திரமா கொண்டு போயி வசுமதிட்ட நீ குடுக்குற மாதிரி கொடுத்துடு. பொங்கலுக்கு அவ இந்த வளையல், இந்தக் கம்மல் தான் போட்டுக்கணும். சரியா?” என்று சொன்னான்.
“அட பாவி! இதுக்கு தான் கூப்பிட்டியாடா, உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயாடா”
“என்ன வேலா நீயே என்னை என்னோட வள்ளி கிட்ட சேத்து வைக்கலனா எப்படி” என சொல்லி, அவள் கரங்களை அந்த பரிசுகளோடு சேர்த்து பிடித்தான்.
சுப்புத்தாய் பாட்டி எல்லாவற்றயும் பார்த்து கொண்டு இருந்தாள், அவளுக்கு காது சரியாக கேட்காது. இருவரும் கிசுகிசுத்து கொண்டு இருந்ததால் கிழவிக்கு ஒன்றும் கேட்கவில்லை. பிரபு வேல்விழியின் கையை பிடித்ததும், கிழவி வாயை கைகளால் பொத்திக் கொண்டாள்.
“வேல்உண்டு வினையில்லை”னு சொல்லுவாங்க ஆனா எனக்கு “வேல்விழி உண்டு வினையில்லை” உன்ன தான் ஆத்தா மலை போல நம்பி இருக்கேன், உன் கையாள தூது போனாதான் என் காதல் கைகூடும்” என்று ஒரு பானை தேனை ஒன்றாக குடித்தவன் போல் பேசினான்.
“எப்பா புல் அரிக்குதுடா சாமி” அவன் கையை உதறிவிட்டு,
“இவ்ளோ ஆசை வச்சிருக்கல்ல. ஒரு வார்த்தை போயி அவகிட்ட எனக்கு உன்னை புடிச்சிருக்குன்னு சொன்னா என்னடா?” என்று கேட்டான்.
“என்ன வேலா தெரியாத மாதிரி கேக்குற, நம்ம ஊர்ல எல்லாரும் மாமா பையனதான பெரும்பாலும் கல்யாணம் பண்ணுவாங்க சின்ன வயசுலயே பேசிவச்சு, அவ என்ன யோசிச்சு வச்சிருக்காலோ என்னவோ, வேண்டாம்னு சொல்லி வாங்காம போய்ட்டானா?, அதான் நீ கொடுத்தனா வேண்டானு சொல்லாம, வாங்கவாது செய்வா”.
“இவ்ளோ பேசுறியே. கடைசியில மாமன் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டான்னா என்னடா பண்ணுவ” என்று சொல்லிச் சிரித்தாள்.
“எனக்கு கிடைக்கலனாலும் இந்த பொருளாவது அவகிட்ட இருக்குனு சந்தோஷப்படுவேன். அதெல்லாம் இப்போ எதுக்கு நல்லதா நாலு வார்த்தை பேசு. இத மட்டும் செய். எனக்கு வேலை கிடக்குது. நான் வரேன். காலைல இருந்து சாப்பிட கூட இல்ல”
“சரி போயிட்டு வா உன் மனசு போல எல்லாம் நல்லா நடக்கும்”
இருவரும் அங்கு இருந்து கடந்து சென்றனர்.
இங்கு நடந்த எதுவும் சுப்புத்தாய் காதில் விழவில்லை. அவள் பார்த்ததெல்லாம் அவன் வளையல் கொடுத்ததையும் அவள் அதை வாங்கிக்கொண்டதையும் மட்டும்தான். அன்று வரப்பு முழுவதும் கிழவிகளிடையே இதுதான் தலைப்பு செய்தி.
“ஏய்! பேச்சி உனக்கு தெரியுமா இந்த வேல்விழி பிள்ளையும் அந்த முனியம்மா மவனும் சோடியா சுத்துறது என்ன, பேசுறது என்ன, கைய பிடிக்குறது என்ன”
“யாரு பேச்சும் சரியில்லயே, உங்கள மாதிரி வெட்டி புரணி பேசுறதுக்கு எனக்கு நேரம் இல்ல சந்தைக்கு போகணும் வரேன்”
“ஆமா நாய்க்கு வேலையில்லயாம் நிக்க நேரம் இல்லையாம் போடா” என்றாள் பேச்சி கிழவி.
பிரபு கொடுத்த பரிசுகளை வசுவிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக வரப்பு பக்கம் துள்ளி வந்து கொண்டிருந்தாள் வேல்விழி. கிழவிகளை பார்த்ததும் வம்பு பேச அமர்ந்தாள்.
“சுப்பு இன்னைக்கு என்ன சாப்பாடு வீட்ல”
சிரித்து கொண்டே சொன்னாள் சுப்பு கிழவி
“கல்யாண சாப்பாடு”
“யாருக்கு உனக்கும் தாத்தாவுக்குமா 60ஆம் இல்ல 80 ஆம் கல்யாணமா அழகி இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுது” என கேலி செய்து சுப்பு பாட்டியின் கழுத்தை கட்டி கொண்டாள்.
“அட விடுடி சாக போற நாளுல சைக்கிள் ஏறி பாத்தியானு”
“அவ உன் கல்யாணத்த சொல்லுறாடி” என்றாள் பேச்சி கிழவி.
“எனக்கு கல்யாணமா என்ன பேசுற யாருகூட” என்றாள் வேல்விழி.
“நீயும் அந்த பிரபு பையனும் கைய பிடிச்சு விளையாடிட்டு இருந்தீங்களாம்லடி” என்றாள் பேச்சி.
“அட பாவி! சுப்பு கிழவி, நீ வீட்டுக்குள்ள இருந்து இதைப் பார்த்துகிட்டே இருந்திருக்க” என்று கேட்டாள் வேல்விழி.
“ஆமா, என் வீட்டு திண்ணையில உக்காந்து ரெண்டு பேரும் விளையாடிக்கிட்டு இருந்தீங்க. அதான் என்னன்னு பார்த்தேன்”.
“அடுத்தவங்க பேசுறதை ஒட்டு கேக்குறோம்னு கொஞ்சம் கூட இல்லேன்னா”
“இதுல என்னடி ஒட்டு கேக்குறதுக்கு? என் வீட்டு திண்ணையில என்ன சத்தம்னு பார்த்தேன்” என்றாள் கிழவி.
“ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையேங்கிற மாதிரியே பேசாத. இவ்ளோ பெரிய தண்டட்டி போட்டுருக்கேல்ல. காது சரியா கேக்குதா? அவன் எனக்கு ஒண்ணும் வளையல் கொடுக்கல. அவன் ஆளுக்கு என்கிட்ட கொடுத்துவிட்டான்”.
“என்னடி சொல்ற? தூதா போன? அப்போ உனக்கில்லையா அது?”
“எனக்கு இல்ல கிழவி, எனக்கு இல்ல”.
“சரி, அப்ப அவன் ஆள் யாரு?”
“அது எதுக்கு உனக்கு ஊர் முழுக்க தண்டூரா அடிக்க வா போ கிழவி எனக்குக் எப்பவும் வேலன்தான் ஆளு போ போய் வேலைய பாரு. எனக்கு நேரம் ஆயிடுச்சு. நான் வரேன் ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வேல்விழி.