“இப்போ சிவ பெருமான் ஒரு போட்டி வச்சு யாருக்கு பழம்னு முடிவு எடுக்கலாம்னு சொன்னார். எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க போட்டி என்னனா யாரு உலகத்த முதல்ல சுத்தி வாராங்களோ அவங்களுக்கு தான் பழம். சொன்ன உடனே வேலன் உலகத்த சுத்த கிளம்பினான், ஆனா விநாயகர் எனக்கு அம்மா அப்பா தான் உலகம் அவங்கள சுத்தி வந்தாலே உலகத்த சுற்றின மாதிரி தான என கேட்டு அம்மை அப்பனை சுற்றி வந்து பழத்தை பெற்றுவிட்டார். இது வேலனுக்கு தெரிய வந்ததும் அவன் கோபித்து கொண்டு பழனிக்கு சென்றுவிட்டான்.

உடனே வேல்விழி கையை உயர்த்தினாள். தாத்தா மீண்டும் புன்னகை செய்தார். “உனக்கென்ன சந்தேகம்?” என்றார்.

“இந்தக் கதையில யாரு மேல தப்பு?” எனக் கேட்டாள். தாத்தா கலகலவென சிரித்தார்.

“நீ யாரு மேல தப்பு இருக்கணும்னு நினைக்கிற?” என்று கேட்டார்.

“சிவன் மேல தான் தப்பு. அவரால பழத்தை இரெண்டா தான் பிரிக்க முடியாது. ஆனா இரெண்டு பழமா மாத்த முடியும்ல. ஏன் அதை அவர் செய்யல? அப்பச் சிவன் மேல தான தப்பு” என்று கேட்டாள்.தாத்தா மீண்டும் கலகலவெனச் சிரித்தார். சிரித்துவிட்டு சொன்னார்,

“அவர் அன்றைக்கு அத இரெண்டு பழமா மாத்தி இருந்தா இன்னைக்கு நமக்கு இந்தக் கதை கிடைச்சு இருக்காது இல்ல. அதனால தான் அவர் இரெண்டா மாத்தல” என்று சொன்னார்.

வேல்விழிக்குப் பதில் பொருந்துவதாகத் தெரியவில்லை. அவள் அமைதியானாள். இதுக்கு மேல் பேச்சை வளர்க்கவும் அவள் விரும்பவில்லை.

சாயங்காலம் எப்பொழுதும் போல வேலனின் கோவிலில் பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். வேல்விழி பாட்டு பாடுவதால் கார்த்தி கோவிலுக்கு வருவதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டான். தினமும் கோவிலுக்கு வருவான்.பிடித்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி, வேலனை கும்பிட்டுவிட்டு வேல்விழியைக் கண்ணாரப் பார்த்துவிட்டுத் தான் செல்வான். இந்தக் கதை சொன்ன அன்று வேல்விழி எந்தவித சிரிப்பும் முகத்தில் இல்லாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருந்தாள். இதைக் கவனித்துக்கொண்டே இருந்த பனுவன் தாத்தா சிரித்துக்கொண்டே கேட்டார்,

“என்ன உன் வேலனை தப்பா சொல்லிட்டேன்னு சொல்லி இப்படி கோச்சுட்டு இருக்கியா?” என்றார்.

வேல்விழி பதில் எதுவும் சொல்லவில்லை. “நான் வீட்டுக்குப் போறேன். குளோரியா சிஸ்டர் ஓட ரூம் சுத்தம் பண்ணனும்னு சொன்னாங்க” என்று சொல்லிவிட்டுக் கடந்தாள்.

கார்த்தி பனுவன் தாத்தாவிடம் கேட்டான், “அவளுக்கு வேலன்னா அவ்வளவு பிடிக்குமா?”

“சின்ன வயசுல இருந்தே அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவ பத்து வயசு குழந்தையா இருந்தப்போ. ஒரு தடவை எல்லாருக்கும் அப்பா அம்மா இருக்காங்க. எனக்கு மட்டும் அப்பா அம்மா எதுக்கு இல்லேன்னு என்கிட்ட கேட்டா. பச்சைப் பிள்ள அதுட்ட போய் நான் என்ன சொல்றதுனு முழிச்சிட்டு இருந்தேன். வேற வழி இல்லாம அவளைக் கையில தூக்கி என் அறைல ஒட்டி வச்சிருக்கிற எல்லா சாமி போட்டோவையும் காமிச்சு, இங்க பாரு. இவங்களுக்கு எல்லாம் சாதாரண அம்மா அப்பா தான் இருக்காங்க. உனக்கு சிவன் தான் அப்பாவா இருக்காரு. பார்வதி அம்மாவா இருக்காங்க. ஏசப்பா அப்பாவா இருக்காரு. அல்லா அப்பாவா இருக்காரு. உனக்கு ஒன்னு தெரியுமா? உனக்கு திருவள்ளுவர் ஆசானா இருக்காரு. அப்புறம் வேலன் அப்படின்னு கை காமிச்சப்போ அவ சொன்னா அது நான் தான் அப்படின்னு. நான் ஆடிப் போயிட்டேன். எதுக்கு இப்படி சொல்ற அப்படின்னு கேட்டேன். என் பேரு வேல்விழி. அவன் பேரு வேலன். அப்ப நாங்க ரெண்டு பேரும் ஒன்னுதானே அப்படின்னு சொன்னா. அவகிட்ட என்ன சொல்றது இத மீறி அப்படின்னு சொல்லி, நானும் ஆமா நீ தான் வேலன்னு சொல்லிட்டேன். அன்னையில இருந்து அவளுக்குப் பிடிச்சது தான். வேற எல்லா கோவிலுக்கும் போவா. ஆனா அவளுக்குப் புடிச்சது வேலன் மட்டும்தான்.”

கார்த்தி சற்று யோசித்தான். மீண்டும் பனுவன் தாத்தாவிடம் கேட்டான்.

“ஆனா இதெல்லாம் உண்மை இல்லேல தாத்தா! இவங்க எல்லாம் இருந்தாங்களான்னு கூடத் தெரியாது. இதெல்லாம் கதையில வர்ற கற்பனை கதாபாத்திரம். இதெல்லாம் அவளுக்கு உண்மைன்னு சொல்லி நம்ப வைக்கிறது அவளை ஏமாத்துற மாதிரி இருக்காதா? ஒருவேளை வேலன் கடைசி வரைக்கும் அவ முன்னாடி வராம போயிட்டா. அவளோட நம்பிக்கை உடைஞ்சு போச்சுன்னா, அன்னேரம் அவ அழுகும் போது உங்களால பாக்க முடியுமா?” என்று கேட்டான்.

“அது எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான். அவங்க அப்பா இங்க கூட்டிட்டு வந்து கொடுத்தபோது அந்த வேலன் மேல பாரத்தை போட்டுத் தான் எனக்குக் கொடுத்துட்டு போனாரு. அதைப் பத்தி யோசிக்க வேண்டிய வேலை நமக்குக் கிடையாது. அது எல்லாம் அவன் பாத்துக்குவான்” என்று சொன்னார்.

மறுநாள் வரப்புக்கு முதல் முறையாகக் கார்த்தி இளங்கோவுடன் வந்தான். வரப்பு எங்குப் பார்த்தாலும் பச்சை பசேர் என்று மிகவும் அழகாக இருந்தது. கார்த்தி வரும்போது செருப்பு போட்டு வந்திருந்தான். இளங்கோ,

“டேய் வரப்புக்குள்ள வரும்போது செருப்பு போட்டு வராதே. வெளிய கழட்டி போட்டுவா” என்றான்.

“எதுக்குடா?” என்று கேட்டான் கார்த்தி.

“வரப்பு சாமி மாதிரிடா. சாமி மேல செருப்பு போட்டு நடக்கக் கூடாது” என்றான்.
தூரத்தில் ஏதோ ஒரு பையன் வரப்பில் சிறுநீர் கழித்து கொண்டிருந்தான். அதை கவனித்த கார்த்தி இளங்கோவிடம்,

“அதோ அங்க பாரு. அங்க ஒருத்தன் சாமி மேல ஒன்னுக்கடிச்சிட்டு இருக்கான். அவனைக் கேக்க மாட்டியா?” என்றான். இளங்கோவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அந்தச் சமயம் வரப்பின் ஓரமாகப் பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வேல்விழி, வல்லகி, வசுமதி மூவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன கார்த்தி மொத நாள் வரப்புக்கு வார போல?” என்றாள் வசுமதி.

“ஆமா, வரப்பு பத்தி ஒண்ணுமே தெரியல. இவன் கூட நான் வந்திருக்கேன்” என சொல்லி சிரித்தான் கார்த்தி.

“என்னாச்சு அப்படி?” என்று கேட்டாள் வேல்விழி.

“இல்ல வேலா, கார்த்தி கேட்டான், எதுக்கு வரப்புக்குள்ள செருப்பு போட்டு வரக்கூடாதுன்னு. நான் வரப்பு சாமி மாதிரிடா நமக்குச் நிலம்தானே சோறு கொடுக்குது. அதனால செருப்பு போட்டு வரக்கூடாதுன்னு சொன்னேன். அந்தப் பக்கம் அந்தா, அந்த நண்டு பையன் இருக்கான் பாத்தியா, அவன் அங்க இருந்து வரப்புக்குள்ள ஒன்னுக்கடிச்சிட்டு இருந்தான். அதான் என்னடா சாமி மேல ஒன்னுக்கடிக்கிறான், இத கேக்க மாட்டியான்னு கேக்குறான். எனக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியல. அதுதான் முழிச்சிட்டு இருக்கேன்” என்றான்.

வேல்விழி கலகலவென சிரித்தாள். வல்லகி புன்முறுவலுடன் சொன்னாள்,
“கார்த்தி என்ன சின்னப் பையனா? இன்னும் பூச்சாண்டி கதை சொல்றதுக்கு, அதுவும் அறிவியல் வாத்தியார் மகன் வேற. காரணத்தைச் சொல்லிப் பழகு.

வரப்புக்குள்ள செருப்பு போட்டு வரக்கூடாதுங்குறதுக்கு காரணம் என்ன அப்படின்னா, வரப்புக்குள்ள நீ கால் வைக்கும்போது உன் கால்ல உயிர் இருக்குனு மண்ணுக்கு தெரியும். அப்ப உன் உடம்புல என்ன சத்து இருக்குதுன்னு மண்ணுக்கு தெரியும். அதுக்கு ஏத்த மாதிரி வரப்புல இருக்குற செடியில சத்து மாறி மாறி வளரும். அதே நீ செருப்பு போட்டு நடந்தேன்னா ரப்பர் தான். நீ ரப்பர் போட்டுதான நடக்குறனு நிலத்துக்குத் தெரியும் அதுக்கு சத்தே தேவை இல்ல. உயிர் இல்லாத பொருள் தான இதுக்கு எதுக்கு சத்துன்னு செடில சத்து குறையாவோ இல்ல சத்து இல்லாமலோ கூட வளரும்.

ஆனா ஒன்னு கடிக்கிறது அப்படி கிடையாது. உன் கழிவு தான வெளிய போகுது. மண்ணு சாமி மாதிரி இல்ல அம்மா மாதிரி அதுக்கு தெரியும். தான் பிள்ளைக்கு என்னென்ன சத்து இருக்கு, என்ன சத்து இல்லன்னு. அதனால அதுக்கு நம்மோட கழிவ உரமா மாத்தி தேவையான சத்த கொடுக்கத் தெரியும். அதனால தான் செருப்பு போட்டு வரக்கூடாதுன்னு சொல்றாங்க. புரியுதா? என்று கேட்டாள் வல்லகி.

கார்த்தி அதிர்ந்து போய் நின்றான்.