இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருக்க மங்கையின் வெங்கல குரல் அவர்களை நிகழ்வுலகிற்கு கொண்டு வந்திருந்தது.

‘வந்தாச்சு ராணி மங்கம்மா’என்று மனதில் திட்டியவள் “நான் வெளியில் போறேன் நீங்க தூங்க போங்க குட் நைட்”என்றதும் கன்னத்தில் கை வைத்தபடியே “ஹ்ம்ம் “என்றான் அரைக்கண் மூடி திறந்து.

‘இத்தனை நாளும் இந்த எக்ஸ்பிரஸன் எல்லாம் எங்க வச்சிருந்தான். இப்ப தூரத்தில் இருந்துட்டு அநியாயம் பண்றான்’என்று அவனைத் திட்டியநக்ஷபடி பார்க்க

“ராட்சசி இத்தனை நாளும் கடுகு வெடிச்ச மாதிரியே முகத்தை வச்சிருப்ப இப்போ படுத்தறடி”என்று அவன் வாய் விட்டே திட்டி விட சிரித்தபடியே இணைப்பைத் துண்டித்தாள் வெண்ணிலா.

இருவரும் தங்கள் கடந்த காலத்தை எண்ணங்களில் தேக்கி இன்முகத்துடன் வேலையை கவனிக்க வரலக்ஷ்மியும் வேலவனும் அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டனர். அவசர திருமணம் தான். அதை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர் இருவரும் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

“வர்மன் ஊரில் இருந்து வந்ததும் ரெண்டு பேரையும் அழைச்சுட்டு நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரணும்ங்க”என்றார் வரலக்ஷ்மி.

“போயிட்டு வந்தா போச்சு.”என்ற வேலவன் “வேதாவுக்கு சொல்லி வை. மாப்பிள்ளை கிட்ட நான் பேசறேன்.”என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

“இந்நேரத்துக்கு கிளம்பறீங்க. வேலை எதுவுமா”என்று வரலக்ஷ்மி சட்டென கேட்க

“ஒண்ணும் இல்லை மா. அக்கா தான் கூப்பிட்டாங்க.‌ போயிட்டு சீக்கிரம் வந்திடுறோம்”என்றவர் எதற்கு மங்கை அழைத்தார் எனக் கூறவில்லை.

பவேஷிற்கு இடம் ஒன்றை ரெஜிஸ்டர் செய்ய பணம் கேட்டு இருந்தார் மங்கை. அதற்காக ஒருவரிடத்தில் கேட்டிருக்க அவர் தான் வரச் சொல்லி இருந்தார். வட்டி மட்டும் இப்போதைக்கு கட்டும்படியும் தான் அசலை அடைத்துக் கொள்வதாக மங்கை சொல்லி இருக்க சரியென்று சம்மதித்திருந்தார் வேலவன் அதனை மனைவி மகனிடத்தில் கூட கூறவில்லை அவர். மங்கை பேச்சுவாக்கில் ‘எல்லாத்தையும் சொல்லணுமா வேலா. வட்டி தானே. கொஞ்ச பணம் தான் அதுக்கு போய் மவனை கேட்பியா நீ. சொல்றதில் ஒண்ணும் இல்லை. என்ன இருந்தாலும் வர்மன் மனசுல ஒரு தப்பான எண்ணம் வந்திடக் கூடாது பாரு. அப்புறம் என்னை அவன் மதிப்பானா எல்லாத்துக்கும் நம்ம கிட்ட தான் நிக்கிறாங்கனு நினைச்சுட்டா’ என்று சொல்லி இருக்க வேலவனோ “வர்மன் அப்படி நினைக்கிற ஆளாக்கா… சரி நான் வரு கிட்ட மட்டும் சொல்றேன்.”என்றதும் வேகமாய் மறுத்தார் மங்கை.

“சரியா போச்சு போ. வரா கிட்ட சொன்னா எப்படியும் வர்மன் கிட்ட பேச்சு வாக்கில் சொல்லிடுவா அப்புறம் அது உன் மருமக கிட்ட பெறவு அவங்க வீடு னு வரிசையா சேதி போகும். இன்னும் உன்னை கஷ்டப்படுத்துறேன்னு பேசுவாங்க”என்றவர் “நானும் உனக்கு கஷ்டம் தர வேண்டாம் னு தான் நினைக்கிறேன் வேலா ஆனா பாரு ஏதாவது ஒரு கஷ்டம் னா உன் நெனப்பு தான் எனக்கு முதல்ல வருது”என்று பேசிப் பேசியே வேலவனை கரைத்திருந்தார் மங்கை.

அக்காவின் பேச்சில் கட்டுண்ட வேலவன் மனைவி மகனிடம் என்று யாரிடமும் கூறாமல் அவ்வளவு பெரிய தொகைக்கு ஜாமீன் கையெழுத்து போட கிளம்பி விட்டார்.

மனைவியிடம் உண்மையை கூறாமல் செல்வது மனதை உறுத்தியது தான். ஆனால் மங்கை அத்தனை பேசி இருக்கும் போது மீறி கூறினால் அதற்கும் கோபித்துக் கொள்வாரோ என்று எண்ணியவர் வட்டி மட்டும் தானே கட்டப் போகிறோம் என்ற அசட்டையில் கிளம்பியிருந்தார்.

வட்டியும் வெளி இடத்தை விட சற்று குறைவாக இருக்க அதில் திருப்தி கொண்டவர் பேசி முடித்து கையெழுத்து போட்டு பணத்தை வாங்கி மங்கையிடம் ஒப்படைக்க அடுத்த சில மணி நேரத்தில் எல்லாம் பவேஷின் பெயரில் இடத்திற்கு பணத்தை கொடுத்து ரெஜிஸ்டர் செய்திருந்தார் மங்கை.

“வாழ்நாளைக்கும் மறக்க மாட்டேன் தம்பி. இது எவ்வளவு பெரிய உதவி னு உனக்கு தெரியாது.”என்று வேலவனின் கையைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கிட உருகிப் போனார் வேலவன்.

“என்ன க்கா நீங்க. உங்களை விட நான் என்ன செஞ்சுட்டேன். இதைப் போய் பெருசா பேசிட்டு இருக்கீங்க”என்று பெருந்தன்மையுடன் கூறியவர் “சரிக்கா கிளம்புவோம்”என்று அழைக்க இருவரும் கிளம்பி விட்டனர்.

வரும் வழியிலேயே உணவருந்தி விட்டு கிளம்பினர்.

மங்கைக்குள் அத்தனை சந்தோஷம். இன்னும் கொஞ்சம் தான் பவேஷ் படிப்பு முடிக்கவும்,வீட்டை கட்டி முடிக்கவும் சரியாக இருக்கும். நன்றாக படிக்க வைத்து வர்மனை விட அதிக சம்பளம் வாங்கும் வேலையில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும். என் கெத்தை விடாமல் அனைத்தும் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் மங்கை.

மகனை செட்டில் செய்து விட்டால் போதும் அதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தவர் அதற்காக எத்தனை பேரின் நிம்மதியை கெடுக்கப் போகிறாரோ என்று காலம் கசப்பாய் சிரித்தது.

வீட்டிற்கு வந்ததும் கடன் வாங்கிய தைக் கூறாமல் பவேஷின் பெயரில் இடம் வாங்கி இருப்பதாகவும் அதைக் காட்ட தான் வேலவனுக்கே சொல்லாமல் அழைத்து சென்று காட்டியதாகவும் வரலக்ஷ்மியிடம் கூறினார் மங்கை.

“நல்ல விஷயம் தான் அண்ணி.”என்றவரிடம் இனிப்பு பெட்டியை வழங்க அதுவே வரலக்ஷ்மிக்கு ஆச்சரியம் தான்.

“வாழ்த்துக்கள் பெரியம்மா”என்றதோடு வெண்ணிலா நிறுத்திக் கொள்ள அதற்கும் சிரித்து வைத்தார் மங்கை. அவ்வளவு தான் வேறெதுவும் பேசிடவில்லை.

வெண்ணிலாவிற்கு இவர் நிஜமாகவே இடத்திற்கு பணம் கட்டி இருப்பாரா என்ன… மாமாவிடம் பணம் வாங்கி தான் செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் வெண்ணிலாவிற்கு வர புருவம் முடிச்சிட வேலவனைப் பார்க்க அவர் அசதியாக இருப்பதாக சொல்லி படுத்து விட்டார்.

மாலை மேகன் அழைக்கவும் மங்கை இடம் வாங்கிய விஷயத்தை கூறினாள்.

“நல்ல விஷயம் தான். பாரு மாமாவுக்கு இப்பவாவது இடம் வாங்கிப் போட எண்ணம் வந்ததே”என்று பேசினான் மேகன்.

“ஹ்ம்ம் நல்ல விஷயம் தான். ஆனா பணம்… என்பது லட்சம் பக்கமா வருதே அந்த ஏரியாவோட பேசிக் வேல்யூ. இவ்வளவு பணம் அவங்க கிட்ட எப்படி”என்று தன் சந்தேகத்தை கேட்டாள் வெண்ணிலா.

“எனக்கு எப்படி தெரியும் வெண்ணிலா. ஒரு வேளை மாமா வீட்டில் தந்திருப்பாங்க. சொத்து விற்க போறதா சொல்லிட்டு இருந்தாங்க இப்போ பேச்சு வார்த்தை இல்லை தானே அதான் கட்டாயப்படுத்தி இவங்களே விற்க வச்சிருப்பாங்க”என்றான்.

“அவ்வளவு ப்ராப்பர்டி அவங்க கிட்ட இருக்கா”என்று மீண்டும் சந்தேகமாய் கேட்க

“நீ ஏன் டி இவ்வளவு டவுட் பண்ற”என்று சிரித்தவன் “அவங்க சொந்த ஊரில் பத்து ஏக்கர் நிலம் இருக்கறதா கேள்வி பட்டேன் மூணு அண்ணன் தம்பிங்க தானே. வைத்திருக்கும் வெண்ணிலா”என்றிருந்தான்.

“ஹ்ம்ம் சரி தான். மாமாவை அழைச்சுட்டு போகவும் டவுட் வந்தது வேற எதுவும் இல்லை”என்றவளிடம் “அப்படியே இருந்தாலும் அப்பா என் கிட்ட இல்லை அம்மா கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டாங்க. ஒரு ரூபாய் னாலும் கணக்கு சொல்லிடுவாங்க”என்றான்.

“ஹ்ம்ம்”என்றவளுக்கு மனதில் ஏதோ உறுத்த அதை அவனிடம் கூறவில்லை. நேரில் வரவும் பேசிக் கொள்ளலாம் என்று அந்த நிமிடம் விட்டு விட்டு வேறு பேச்சைத் துவங்கினாள்.

உண்மையில் தர்மதுரை வீட்டில் நிலம் விற்று அவரது தம்பி அவரிடம் கணிசமான பணத்தை தந்திருந்தார் தான். அதைக் கொடுத்து இடத்தை வாங்கப் போக பணம் போதாமல் தான் வேலவனை கையெழுத்து இடச் சொல்லி பணம் வாங்கி இருந்தார் மங்கை. இடம் விற்று பணம் வந்தது என்று கூட தம்பியிடம் கூறவில்லை மங்கை.

எவ்வளவு வந்தது என்ன என்ற கேள்வி எல்லாம் வரும். கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்ற அசட்டை அவருக்கு.

தர்ம துரை கூட சொல்லி விடலாம் என்றதற்கு எல்லாம் எனக்கு தெரியும் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று அதட்டி அடக்கி வைத்தார் அவரை.

ஆனால் தர்மதுரை எப்படியாவது வேலவனிடம் சொல்லி விட வேண்டும் என்று தான் எண்ணினார்.

எப்படியும் மங்கை இந்த பணத்திற்கு வேலவனை வட்டி மட்டும் கட்ட வைக்க மாட்டார். அசலையும் அவரைக் கட்ட வைத்து விடுவார் என்று தான் தோன்றியது அவருக்கு. அது அவருக்கு தெரிந்து விட்டால் கூட பரவாயில்லை தெரியாமல் இருக்கும் போது மனது சங்கடப்படதான் செய்தது தர்மதுரைக்கு. ஆனாலும் மனைவியை மீறி என்ன செய்ய முடியும் அவரால். நேரம் பார்த்து வர்மன் வந்ததும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தவர் அந்த விஷயத்தை கிடப்பில் போட்டார்.

ஒரு வழியாக இடம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு மங்கையின் கைக்கு பத்திரம் வந்து விட்டது. ஒரு வித மிடுக்கிலேயே அலைந்தார் மங்கை.

வர்மனும் இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பி விடுவேன் வேலை முடிந்தது என்று தகவல் தந்திருந்தான் அனைவரிடமும்.

வேதாவும் விஷ்ணுவோடு வருவதாக கூறி இருக்க வர்மன் வந்த இரண்டு நாட்களில் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம் என்று வேலவன் கூறி இருக்க வரலக்ஷ்மி அகிலாவிடமும் விசாலத்திற்கும் சொல்லி இருந்தார்.

“இங்கே எல்லா ஏற்பாடுகளையும் நாங்க செஞ்சுக்கிறோம் வரு. நீங்க கிளம்பி வந்தா மட்டும் போதும்”என்று அகிலா சொல்லி விட சரியென்று கூறியிருந்தார் வரலக்ஷ்மி. அதிசயமாக மங்கை கூட மறுப்பு தெரிவிக்கவில்லை.

வேதாவும் “கோவிலுக்கு வந்துட்டு நாங்க நொய்டா கிளம்பறோம்மா. இவரை அங்கே ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க”என்றிருந்தாள்.

“நல்லது மா. போயிட்டு வாங்க என்ன எங்களுக்கு தான் உங்களை அடிக்கடி பார்க்க முடியாது”என்று வேலவன் வருத்தப்பட

விஷ்ணுவோ “அதுக்கென்ன மாமா எப்போ வர்றீங்கனு சொல்லுங்க ஃப்ளைட் டிக்கெட் போட்டுப்போம்”என்று சொல்ல புன்னகைத்தார் வேலவன்.

மகள் வாழ்க்கை நிறைவாய் அமைந்து விட்டது. இதோ மகனும் வந்து விடுவான் வெண்ணிலாவோடு இணக்கமாய் தான் பேசுகிறான் இனி அவன் வாழ்வும் சிறப்பாக அமைந்து விடும். தன் வீட்டு வாரிசைப் பார்த்து வளர்த்தால் போதும் என்று எண்ணிக் கொண்டார் நிம்மதியாக.

“என்னங்க கோவிலுக்கு போயிட்டு வந்திடுவோம். வர்மனை மாப்ளையும் வெண்ணிலா வேதா ரெண்டு பேரும் சேர்ந்து போய் அழைச்சுட்டு வரட்டும்”என்று வரலக்ஷ்மி கூற

“இப்ப எதுக்கு வரா கோவிலுக்கு. எப்படியும் நாளன்னைக்கு போகப் போறோம். இன்னிக்கும் கோவிலுக்கா? நானும் வேலனும் ஒரு இடத்துக்கு போகணும்” என்ற மங்கை “சீக்கிரம் கிளம்பு வேலா”என்றார்.

“பெரியம்மா ஒரு மணி நேரம் தானே ஆகும். அவங்க போயிட்டு வரட்டுமே நீங்க கொஞ்சம் நேரம் கழிச்சு போங்க. இல்லை அவசியமா மாமா வரணுமா. “என்று கேட்க

“நீ என்ன இப்படி சொல்ற. வேலன் வந்தா தான் அந்த காரியமே முடியும். கிளம்பும் போது தடங்கல் சொல்லாத”என்று வெண்ணிலாவை அதட்டி விட்டு “வேலா நேரம் ஆகுது”என்றார் வேகமாக.

“சரிக்கா கிளம்புவோம். வரு சங்கடப்படாத இப்ப கிளம்புறேன் பார்த்துக்க வரு”என்றவர் மங்கையோடு கிளம்பி செல்ல வரலக்ஷ்மிக்கு அதில் வருத்தம் என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை.

எல்லாம் இந்த அம்மா வச்ச சட்டம் என்று வெண்ணிலா மனதில் பொருமியவள் எதுவும் பேசவில்லை. ஆனால் முகம் மட்டும் கடுகடுப்பாய் இருந்தது.

“விடு விடு இதெல்லாம் கண்டுக்காத”என்று ஆறுதல் அளித்த வேதா கணவனோடு அவள் தோழி வீட்டிற்கு கிளம்யிருந்தாள்.

வெண்ணிலாவும் வரலக்ஷ்மியும் மட்டுமே வீட்டில் இருக்க மேகவர்மன் அழைத்திருந்தான்.

“என்ன இந்த டைம் கூப்பிட்டு இருக்கீங்க”என்று படபடத்தவளிடம்”ப்ப்ச் ஃப்ளைட் கேன்சல் ஆகிடுச்சு. இன்னும் டூ டேஸ் கழிச்சு தான் கிளம்ப முடியும் போல.”என்றான் சலிப்பாக.

“ஏன் என்னாச்சு”என்று உள்ளடங்கிய குரலில் கேட்க

“வானிலை சரியில்லையாம்”என்றவன் “ரொம்ப கஷ்டமா இருக்கு டி இப்போ தான்”என்றான் வருத்தமாக.

“இன்னும் நாலு நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணுங்க”என்றவளிடம் “உனக்கு என்ன ஈசியா சொல்லிட்ட”என்று பெருமூச்சு விட்டவன் “லவ் காட் நம்மை ரொம்ப சோதிக்கிறாரு போல.”என்றான் சலிப்பாக.

கலகலவென்று சிரித்தவள்”கஷ்டம் தான் பட் ரெண்டு நாள் தானே அதுவரைக்கும் இருக்கவே இருக்கு வீடியோ கால் பார்த்துக்கலாம்”என்றாள்

“வெண்ணிலா”என்றவன் சிறிது இடைவெளி விட்டு “மிஸ் யூ”என்றான் உணர்ச்சி மிகுதியால்.

“பார்றா”என்று புன்னகைத்து விட்டு “நா”என்று சொல்லும் போதே வரலக்ஷ்மியின் கைபேசி விடாமல் அடித்தது.

“யாரோ கால் பண்றாங்க அத்தையை காணல வைங்க அங்கே பேசிட்டு வர்றேன்”என்று இணைப்பைத் துண்டித்தவள் வரலக்ஷ்மியின் ஃபோனை எடுத்தாள்.

“ஹலோ”என்றதுமே எதிர்முனையில் கூறப்பட்ட செய்தியில் மயங்கி சரிந்தாள் வெண்ணிலா.

….. தொடரும்.