“இனி நாம் உற்று கவனிக்கப்படுவோம் ஆயி. எதைக் கேட்டாலும், தெரியாது என்ற பதிலோடு நிறுத்திக்கொள்”, என்று ரூயூன் கூற, 

“என்ன ஆனாலும் உன் சினத்தைக் காட்டிவிடாதே. நம்மை முட்டாளாகக் கருதிக்கொண்டிருக்கும் வரைதான் அவர்களிடமிருந்து நமக்குப் பாதுகாப்பு”, என்று மீமி அவள் பங்குக்கு அறிவுரை கூறினாள். 

வேகமாக மிங்  தம்பிகள் புடை சூழ உள்ளே  நுழைந்தான். ஷீயின் அறையை அடையும் முன்னரே ரூயூனின் அழுகைக் குரல் கேட்டது. வேகமாக உள்ளே செல்ல, “பாபா…பாபா”,என்று அவர் உடல் மீது விழுந்து கதறிக்கொண்டிருந்தாள். அதிகாலையிலிருந்து அடக்கி வைத்திருந்த துயரமெல்லாம் இப்போது வெளிப்பட்டது. 

மருத்துவர் அவளிடம் விடியலுக்கு சில நாழிகைகள் இருக்கும்போதே அழைக்க வந்திருந்தார். அப்போதுதான் அறைக்கு திரும்பியிருந்தவளுக்கு இது நடக்கப்போவது தெரிந்திருந்தாலும், ஒரு நொடி உள்ளம் நின்று துடித்தது. மருத்துவர் அவளிடம் நேற்றே  தனியே அழைத்து எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்று சொல்லியிருந்தார். தந்தையின் உயிரை அநியாயமாகப் பறித்த மாமன்கள் மேல் வன்மம் ஏறியது. 

மாறனைப் பார்த்து துயரச் செய்தியை பகிர்ந்தாள். இவனின் துணையுடந்தான் மிங் கூட்டத்தை விரட்ட முடியும் என்பதால் இப்போதைக்கு நட்பு பாராட்டினாள். அவன் கேட்டிருந்தபடியே மாளிகையிலேயே அவனுக்கும் வல்லபனுக்கு  விருந்தினர் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது இப்போது வசதியாக இருந்தது. 

சற்று யோசித்த மாறன், “தேவி, திட்டப்படி இன்று உங்கள் மாமன் சாலையை பார்த்துவிட்டு வந்துவிடட்டும். உங்கள் தந்தை இறப்பு செய்தி தெரிந்து, பார்க்காமலேயே முழுவதும் அவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் மீட்பது கடினம்”, என்று கூற அடுத்தடுத்த திட்டங்கள் உருவானது. 

மருத்துவரை செய்தி யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பியிருந்தவள், “நம் திட்டப்படியே காலையில் அவர்களோடு சாலைக்குச் செல்கிறேன். நீ இங்கே பார்த்துக்கொள்”, என்று விடைபெற்றுத் திரும்பினாள். 

“என் ஆழ்ந்த வருத்தங்கள் தேவி”, என்றதோடு கதவைத் திறந்து அவள் செல்ல வழிவிட்டான் மாறன். 

 நேராக அவள் அறைக்குச் செல்லாமல், சற்று நேரம் இருட்டில் கலந்து நின்று காத்திருந்தாள். அமைதியாக இருந்தது. பின் மெதுவாய் ஷீயின் அறைக்குச் சென்றாள். மிமி ஷீயின் காலருகே அமைதியாக அமர்ந்திருந்தாள். 

இவள் வரும் ஓசை கேட்டு  நிமிர்ந்தவள், நிலவொளியில் தெரிந்த கோட்டோவியத்திலேயே ரூயூனை அடையாளம் கண்டு, “மகளே!”, என்று விளிக்க, 

“இப்போது அவகாசம் இல்லை மிமி. தந்தை நிலவறையில் இருக்கும் செல்வங்களை அப்புறப்படுத்த வேண்டும்”, என்று வேகமாக அறையின் மூலையில் இருந்த அலங்கார வெங்களி ஜாடியை நகர்த்தியவள், சுவற்றில் கைவைத்து ஒரு புறம் அழுத்த, ரகசிய கதவு ஒரு ஆள் செல்லும் அளவு திறந்தது. 

கையில் இராந்தலோடு உள்ளே சென்றாள். சில அடிகள் அகலத்தில் இருக்கும் ஒரு சிறிய அறையில் இருந்தாள், இரு புறமும்  நிலைமாடங்கள் இருந்தன. 

எடுத்து வந்த படுக்கைவிரிப்புகளை விரித்து, அதில் மாடத்திலிருந்த சில சிறிய பேழைகளை வைத்துமூட்டையாகக் கட்டினாள். மறுபுறம் இருந்ததை பிரித்து சில ஆபரணங்கள், வெங்கலம், வெள்ளி மற்றும் பொற்காசுகள் என்று தேந்தெடுத்து வேறு இரண்டு பேழைகளில் வைத்து நிலைமாடத்தில் அதனிடத்தே வைத்தாள். இரண்டு சிறு மூட்டைகளாக மீதம் இருந்த காசுகளை தனியே எடுத்து வைத்தாள். மீண்டும் ஒரு முறை அறையைப் பார்த்தாள். 

அவள் விட்டுவைத்திருந்த செல்வமும் கணிசம்தான் ஆனாலும், மிங்கின் எதிர்பார்ப்புக்கு மிகவும் குறைவுதான். 

அந்த சிறிய அறையின் மற்றொரு புறத்தில் ஒளிந்திருந்த ஒரு கதவைத் திறந்தவள், அங்கிருந்து நீண்ட பாதையில் சென்று வலது புறம் குறிபிட்ட ஒரு இடத்தில் கைவைக்க, மீண்டும் ஒரு கதவு திறந்தது. இது மற்றொமொரு நிலவறை. வேண்டாத பொருட்களை போட்டு வைக்கும் அறையின் அடியில் இருந்தது இந்த நிலவறை. அங்கே மூலையில், படுக்கை விரிப்பு மூட்டைகள் இரண்டையும் வைத்தாள். 

காசுகள் இருந்த இரு சிறு மூட்டைகளுடன் ஷீயின் அறைக்கே திரும்பி வந்தாள். 

காத்திருந்த மிமியிடம்,  “மிமி.. எந்த நேரமும் எதுவும் ஆகலாம். இந்தக் காசுகளை பத்திரமாக வைத்துக்கொள். தந்தையின் இறுதிச் சடங்கில் ஒரு குறையும் வரக்கூடாது. மாமன்கள் எதுவும் தர மறுத்தால், இதிலிருந்து செய்”, என்று கொடுத்தவள், மற்றதை தன்னுடனே வைத்துக்கொண்டு சத்தமிடாது வெளியேறினாள். ஷீயின் உடலிருந்தபுறம் பார்வையை மறந்தும் திருப்பவில்லை. துயரத்தை வெளிப்படுத்தக் கூட நேரமும் காலமும் கூடி வரவேண்டும் போல. 

காலை எதுவும் நடவாததுபோல எழுந்து வெளியில் செல்ல அலங்காரம் செய்ய, உணவருந்த என்று மனதை யோசிக்கவிடாது கடிவாளமிட்டு வேலைகளை கவனித்தாள். 

ஸீசாயும் சாலைக்குச் செல்வான் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்யாக, வல்லபன் அவனை வெளியேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். 

போதிய அவகாசம் தந்து, ஷீயின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக ரூயூனிடமும் மிங்கிடமும் செய்தி சொல்ல மாறன் புரவியில் கிளம்பியிருந்தான். 

மனக் கடிவாளத்தை ஒருவழியாக விடுவித்தவள், இப்போது தந்தை இறப்பிற்கான வேதனையை ஒரு வழியாக வெளிப்படுத்தலானாள்.  

மிங் உள்ளே வரும் நேரம் அவன் மனைவியும் அவசரமாக வந்தாள்.  

“இவ்வளவு நேரம் எங்கிருந்தாய்?”, மிங் கேள்விக்கும். “அது.. முதுகு வலி போக குத்தூசி மருத்துவம் (acupunture) பார்ப்பதில் வல்லவள் ஒருத்தி இருப்பதாக மிமி… இன்று காலை அவள் வந்து…” 

சினத்தில் முகம் சிவக்க, “ஆக  நான் சென்றதிலிருந்து இங்கு என்ன நடந்தது என்று உனக்கு எதுவும் தெரியாது? சை… உன்னையும் அந்த ஸீயை யும் நிம்பியதற்கு…”, என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவன், “ மிமி, ரூயூன் இருவரையும் விட்டு இனி ஒரு நிமிடம் அகலக் கூடாது. இல்லையேல் ஷீயோடு சேர்ந்து நீயும் இடுகாடு செல்வாய்”, உறுமிவிட்டு, செங்கை அழைத்தான். 

“நீ போய் ஸீசாயை எங்கிருந்தாலும் இழுத்து வா. கள் குடிக்க நாக்கை தொங்கப்போட்டு ஓடியிருக்கிறான் முட்டாள்”, என்று சீறினான். 

மிமியை அழைத்த மிங் எதுவும் பேசும் முன்னர், “ஊரில் இருப்பவர்களுக்கு தகவல் போயிருக்கும் அண்ணா. அவர்கள் வந்து பார்க்க ஏதுவாக அண்ணன் உடலை முன் வாசலருகே கொண்டு செல்ல வேண்டும். முக்கியஸ்தர்களுக்கு தனியே செய்தி அனுப்ப..” 

“எல்லாம் எனக்குத் தெரியும். அதற்குத்தான் ஏற்பாடு செய்கிறேன்.  வேலையாட்களை வரச்சொல்”, என்று ஏவினான். ஷீயின் உடல் வெளியில் சென்றுவிட்டால் அறையை அவன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணம் உதிக்க உடனே செயல்பட்டான். 

மாளிகையின் வரவேற்பறையில் இருந்த பொருட்கள் எல்லாம் நகர்த்தப்பட்டு சுவர்கள், சாளரங்கள் எல்லாம் இழப்பின் குறியீடாக வெள்ளை பருத்தி துணிகள் தொங்கவிடப்பட்டன. வாசலில் வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் சீனபட்டினால ஆன இரு ராந்தல்கள் தொங்கவிடப்பட்டன. இதுவும் இழவு வீடு என்பதை அடையாளப்படுத்தும். 

சீனர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும்போதே தங்கள் இறுதி அடக்கம் செய்வதற்கான பேழையை செய்து வைத்துக்கொள்வர். செல்வந்தர்கள் மத்தியில் இது வெகு இயல்பு. ஷீயும் சில காலம் முன்னர் செய்து வைத்திருந்தான். பெரிதான அலங்காரங்கள் ஏதுமில்லாது மிக எளிமையாக இருந்தது ஏங்கு (pine) மரத்திலான அந்தப் பேழை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரத்திலானது அந்தப் பேழை. மரத்தின் வயது செல்வ வளத்தின் குறிப்பு. 

மூத்த மகன் ஊரில் உள்ள பொது கிணற்றில் சிறு காசை விட்டெறிந்து தண்ணீரை வாங்கி வந்து, இறந்தவரின் முகத்தை துடைத்து, உடலை சுத்தம் செய்ய வேண்டும். இங்கே மிங் வாங்கி வந்தான்.  பெயருக்கு முகத்தை துடைத்தவன் வெளியேற, ஒரு விம்மலுடன் ரூயூன் தந்தையின் அருகில் வந்து முகம் கை கால்களையெல்லாம் கழுவினாள். 

பின்னர் மருத்துவரும் இரண்டு வேலையாட்களுமாக, ஷீயின் உடலை சுத்தம் செய்து, வெண்பட்டுத் துணியில் சுற்றி பேழையில் கிடத்தினர். அவர்களது வழக்கமாக நவ துவாரங்களும் சீனப்பச்சைக் கல்லால் (Jade) அடைக்கப்பட்டது.  பேழையை வரவேற்பறைக்கு சுமந்து வந்து கால்கள் வாசல் பார்த்திருக்குமாறு வைத்தனர். 

மிமி, ரூயூன், அவள் மாமி என்று அனைவரும் வெள்ளை உடை அணிந்து பெண்கள் ஒரு புறம் வந்து நிற்க, மாமன்கள் மிங்கும் டாங்கும் மறுபுறம் நின்றனர். அனவரும் மண்டியிட்டு தலை பூமியின் படுமாறு மூன்று முறை விழுந்து வணங்கினர்.  

அதற்குள் ஊர் மக்கள் கூடிவிட்டனர்.  செங் போதையில் தள்ளாடிய ஸீ சாயை அழைத்து வந்திருந்தான். தண்ணீரைக் கொட்டி, முகத்தில் அறைந்து சற்று தெளிய வைத்து, ஷீயின் இறப்பைக் கூறினான் செங். மருத்துவர் கஷாயம் ஒன்றை தரவும் அதைக் குடித்து ஒரு வழியாக போதை தெளிந்திருந்தான்.  

வல்லபனை தனியாக சந்தித்தான் மாறன். 

“வல்லபா… எதுவும் கூறினானா?” 

“…” 

“என்னடா முறைக்கிறாய் ?” 

“சீன மொழியை சாதாரணமாகப் பேசினாலே புரிந்து கொள்வது கடினம். இதில் போதையில் அவன் உளறலாக பேசுவதை எப்படி புரிந்து கொள்ள முடியும்?  போதை தலைக்கேற, ஏதேதோ ஓயாது பேசிக்கொண்டிருந்தான். தாங்க முடியாது அங்கே இருந்த கேளிக்கை பெண்ணோடு அனுப்பிவிட்டேன். அங்கிருந்துதான் செங் மாமா அவனை அள்ளிக்கொண்டு வந்தான்.” 

வல்லபன் கண்ணடித்துக் கூற, மாறன் முகம் புன்னகை பூத்தது.  “குளித்து வெள்ளை உடை அணிந்து வா வல்லபா. துக்க வீட்டில் இங்கே வெள்ளை உடுத்துகிறார்கள்” 

“ஹ்ம்ம்… உன் தேவி எப்படி இருக்கிறாள்? பார்த்தாயா?” 

“இல்லை. மாளிகைக்கு அழைத்து வந்த பின்னர் பார்க்க முடியவில்லை. அசாத்திய துணிச்சல் மிகுந்தவள்”, சிலாகித்துக் கூறியவனை, 

“ம்ம்… இரும்புப் பெண்ணாகத்தான் தெரிந்தாள். அதில் காதல் போன்ற மெனுணர்வுகளுக்கு இடம் இருக்கும் என்றா தோன்றுகிறது உனக்கு? அவர்களை விரட்ட தற்போது நம்மை சார்ந்திருக்கிறாள். அவள் காரியம் ஆனதும்  நம்மை வெகுமதி அளித்து அனுப்பி வைப்பாள்.  வேறு எந்த கற்பனையையும் நீ வளர்த்துக் கொள்ளாதே மாறா”,  நண்பன் புண்படுவது பிடிக்காமல் மீண்டும் எச்சரித்தான் வல்லபன். 

“அதைக் கூட அறியாதவனா வல்லபா. தெரிந்தும் என்னால் விலக முடியவில்லை. அவள் இன்னலை போக்குவோம். பின்னர் நடப்பது நடக்கட்டும். அவளிடம் இழந்த மனதை மீட்க என்னிடம் வழியில்லையடா”, சற்றே வருத்தமாகக் கூறியவன், “மக்கள் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. நான் வாயிலுக்குச் செல்கிறேன். நீ விரைவில் வந்து சேர்”, என்று சொல்லிச் சென்றான்.