அடுத்த நாள் காலையில் மீனா வேலைக்கு கிளம்பி ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்தாள். சிறிது தூரம் நடக்க வேண்டும் என்பதால் எதையோ யோசித்த படி சென்று கொண்டிருந்தாள்.
அப்போது “ஹலோ மேடம்”, என்ற தாமரையின் குரலிலில் அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவனை அந்த நேரம் அவள் எதிர் பார்க்கவே இல்லை. வண்டியில் சாய்ந்து அவளைப் பார்த்த படி புன்னகையுடன் நின்றிருந்தான். அவள் முறைத்து விட்டுச் செல்வாள் என்று தான் எதிர் பார்த்தான். ஆனால் அவளோ அசைவற்று நின்று விட்டாள்.
அது அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் அவளை நெருங்கி செல்ல அவளுக்கோ அவனை கடந்து செல்ல முடிய வில்லை. அவனைக் கண்டதும் எதுவோ ஒன்று உள்ளுக்குள் உருகியது.
தனக்கென்று யாரும் இல்லாத போது ஒருவர் தன் மீது அன்பு வைத்து தன்னைத் தேடி வந்தால் ஒரு உணர்வு வருமே. அப்படி ஒரு உணர்வு.
அருகில் வந்ததும் அவள் அமைதியாக இருக்க “என்ன அழகி கோபம் எல்லாம் போயிருச்சா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“நான் எதுக்கு கோபப் படணும்? எனக்கு ஒண்ணும் கோபம் இல்லையே?”, என்று சொல்லும் போதே அவள் கோபம் வெளிப்பட சிறு புன்னகை வந்தது அவனுக்கு.
“சாரி”, என்றான் பட்டென்று. அவளிடம் மன்னிப்பு கேட்க அவனுக்கு ஒன்றும் சங்கடமாக இல்லை.
“எதுக்கு?”
“உனக்கு மாப்பிள்ளை பாக்குறேன்னு சொன்னதுக்கு. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லிட்டு அப்படி மாத்தி பேசினது தப்பு தான், சாரி, என்னை மன்னிச்சிரு”
“இதுக்கெல்லாம் எதுக்கு சாரி? என் வாழ்க்கைல எதிர்பாக்காம நிறைய நடக்கும். அதுக்கு நீங்க பொறுப்பாக முடியாது. நீங்க ஒண்ணும் சாரி கேக்க வேண்டாம்”
“ஏய், இப்ப கூட நீ கோபமா தான் சொல்ற? கொஞ்சம் கோபத்தை குறை டி. அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டம்”, என்று சொல்ல அவள் கண்கள் அகல விரிந்தது.
“என்னது டி யா?”
“என்னோட பொண்டாட்டியை நான் டின்னு சொல்லுவேன். உனக்கு என்ன?”, என்று கேட்க உள்ளுக்குள் அவள் மனதும் சந்தோஷப் பட தான் செய்தது. ஆனாலும் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“அதான் வேற மாப்பிள்ளை பாக்குறேன்னு சொல்லிட்டீங்க தானே? நான் எப்படி உங்க பொண்டாட்டி ஆவேன்?”, என்று சொல்ல தன்னுடைய அந்த சொல் அவள் மனதை காயப் படுத்தி இருக்கிறது என்று புரிந்தது.
“சரி சாரி, இனி அப்படி சொல்லவே மாட்டேன். சரி சாப்பிட்டியா?”, என்று கேட்டான். ஏனோ வெகு நாட்கள் கழித்து தன்னை யாரோ அக்கறையாக கேட்பது போல இருந்தது.
அவள் அமைதியாக அவனைப் பார்க்க அவள் பசி அவனுக்கு புரிந்ததோ என்னவோ? காலையிலே அன்னை கொடுத்த பழைய கஞ்சியை குடித்து விட்டு வந்தாலும் “எனக்கு பசிக்குது. வீட்ல சாப்பிடலை. தனியா சாப்பிட போக ஒரு மாதிரி இருக்கு. கூட வரியா?”, என்று கேட்டான்.
ஏனோ அவளுக்கு மறுக்க தோன்ற வில்லை. அவளுக்கும் பசிக்க தான் செய்தது. ஆனால் அப்படி உண்ண எல்லாம் செல்ல மாட்டாள். தனியே ஹோட்டல் சென்று சாப்பிட ஒரு மாதிரி இருக்கும். இன்று அவன் அழைத்ததும் “சரி”, என்பதாக தலையசைக்க சந்தோஷத்துடன் அவளை அழைத்துச் சென்றான்.
மௌனமாக அவனுடன் நடந்தாலும் மனது மட்டும் மீனாவுக்கு சந்தோஷமாக இருந்தது. சில பெண்களின் எதிர்பார்ப்பு பணம், நகை, உடை என இருந்தாலும் பல பெண்களின் எதிர்பார்ப்பு அன்பு, அக்கறை, காதல் தானே? என்ன யாருக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்காமல் மாற்றிக் கிடைக்கும் போது தான் அவர்கள் வாழ்க்கை வீணாக போகிறது.
ஹோட்டல் சென்றதும் அவளை அமர வைத்து தானும் அமர்ந்தான். “ஆபீஸ்க்கு எத்தனை மணிக்கு போகணும்? நேரம் இருக்கா?”, என்று கேட்டான்.
“அப்படின்னா பொறுமையா சாப்பிடலாம். இது வரை எப்படியோ? இனியாவது நீ நல்லா சாப்பிடனும்?”, என்று சொல்ல கலங்கும் கண்களை மறைப்பதற்க “நீங்க எப்ப வேலைக்கு போகணும்?”, என்று கேட்டாள்.
“எனக்கு நேரம் இருக்கு மா”, என்றவன் பேரர் வந்ததும் அவளிடம் கேட்டு ஆர்டர் செய்தான்.
அவன் சென்றதும் “அப்புறம்?”, என்றவன் அவளை பார்த்தான். அவன் கண்கள் ராசனையாக அவளை அளவிட்டது. இவ்வளவு அருகில் அவளைப் பார்க்கவும் அவளிடம் பேசவும் இப்போது தானே அவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கேரளத்துப் பெண் போன்று தான் மீனா இருப்பாள். மஞ்சள் நிறமும், சிரிக்கும் போது குழி விழும் கன்னமும், ஈர இதழ்களும் என கொள்ளை அழகாக இருந்தாள்.
என்ன என்னும் விதமாய் அவள் அவனைப் பார்க்க அவள் பக்கம் செல்லும் பார்வையை அடக்கி “ஏதாவது முடிவு பண்ணிருக்கியா அழகி?”, என்று கேட்டான்.
“இப்ப இது பேசனுமா?”, என்று கேட்டாள். அவளுக்கு முடிவு எடுக்க ஆசை இருந்தாலும் பயமாக இருப்பதால் அந்த பேச்சைத் தள்ளிப் போட்டாள். சட்டென்று முடிவு எடுத்து மீண்டும் ஒரு புதை குழியில் விழ அவள் தயாராக இல்லை. தாமரை நல்லவன் தான். அவளுக்கு பிடித்திருக்கிறது தான். ஆனால் அவள் பட்ட சூடு அவளுக்கு நிதானத்தைக் கொடுத்திருந்தது.
“உன்னை பாக்க சந்தர்ப்பம் கிடைக்கிறதே கொஞ்ச நேரம் தான். அதுல பேசாம எப்படி பேச? உன் மனசுல என்ன இருக்குன்னு சொன்னா நான் நிம்மதியா இருப்பேன்ல டி”
“நான்.. வந்து”, என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட “சாப்பிடு”, என்றான்.
அவளும் அமைதியாக உண்ண ஆரம்பிக்க அவளைப் பார்த்த படி அவனும் சாப்பிட்டான்.
அவன் உணவை முடிக்கும் முன்பே தன்னுடைய உணவை முடித்துக் கொண்டவன் அவளுக்காக காத்திருந்தான். அவளை பொறுமையாக உண்ணும் படியும் அன்புக் கட்டளையிட்டான். ஏனோ அவள் உண்ணும் அழகை ரசித்துப் பார்ப்பதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக தான் அது இருந்தது. அவள் கை கழுவ போகச் சொல்லியும் அவன் போக வில்லை.
அவளும் அவ்வபோது அவனைப் பார்த்த படி தான் உண்டாள். ஏனோ அந்நிய ஆணாக அவனை நினைக்க முடிய வில்லை. அவள் கண்களும் அவனை சைட் அடிக்கவே செய்தது. ஆனால் அது முறைப்பு என்ற பார்வையில் மறைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தில் பிடிக்காத பாவனையோ, வெறுப்போ, கோபமோ இருந்திருந்தால் தாமரை இந்த அளவுக்கு அவளிடம் நெருங்கி வந்திருக்க மாட்டான். எப்போதோ விலகிச் சென்றிருப்பான். பிடிக்காத பெண்ணை தொல்லை செய்யும் அளவுக்கு அவன் வளர்ப்பு இல்லையே.
அப்படி எதுவும் இல்லாமல் ஒரு ஏக்கப் பார்வையும் அவளின் உரிமையான கோபமும் அவள் திருமணத்திற்கு மறுப்பு சொன்ன போது கூட பிடிக்க வில்லை என்று சொல்ல வில்லை என்ற காரணமும் தான் அவனை அவள் பக்கம் நெருங்க வைத்தது. உரிமையாக பேசவும் வைத்தது.
டி என்று சொல்ல அவனுக்கும் சிறிது சங்கடமாக தான் இருந்தது. ஆனால் அதற்கு அவள் ஆச்சர்யமாக பார்த்தாளே தவிர அவனைத் திட்ட வில்லையே? அதனால் தான் தைரியமாக உணவு உண்ண அழைத்தான்.
அவள் மனதில் நிச்சயம் தான் இருக்கிறோம் என்று நம்பியவனுக்கு அடுத்து எப்படி அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க என்று தான் யோசனையாக இருந்தது.
அவளும் உண்டு முடித்ததும் பில் கொடுத்து விட்டு வெளியே வர அவர்களை வெறித்து பார்த்த படி ஹோட்டலில் அமர்ந்திருந்தான் மகேஷ். அவன் கண்கள் அவர்களையே பார்த்துக் கொண்டது. வீட்டுக்கு டிபன் பார்சல் வாங்க வந்தவன் பார்சல் செய்ய நேரம் ஆகும் என்பதால் அங்கே காத்திருந்தான்.
வெளியே வந்ததும் தாமரை அவளிடம் “உன்னை உன் ஆபீஸ்ல டிராப் பண்ணணும்னு தான் ஆசையா இருக்கு. ஆனா நீ வருவியான்னு தெரியலையே?”, என்றான் ஏக்கப் பார்வையோடு.
“அப்படியா? எனக்கு என்னமோ என்னை எல்லாம் உங்க வண்டில கூட்டிட்டு போவீங்களான்னு தானே எண்ணம் வருது?”, என்றவள் லேசாக சிரிக்க “ஏய் அழகி, அதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் டி. பிளீஸ் ஏறு”, என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்ய அவளும் ஏறி அமர்ந்தாள்.