அத்தியாயம் 7 

புரியாத கேள்விக்கு 

விடை போல தான் புரியாத

மனங்களின் காதலும்!!!

தாமரை அன்னை மற்றும் தந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க “இன்னைக்கு எங்களுக்கு முடிவு தெரியணும் தாமரை. நாளைக்கு பொண்ணு பாக்க வறோம்ன்னு அவங்க வீட்ல சொல்லிறட்டுமா?”, என்று கேட்டாள் வசந்தா.

“அம்மா ஒரு வருஷம் போகட்டுமே?”, என்றான் அவன் பரிதாபமாக.

“கல்யாணத்தை தள்ளிப் போட ஏதாவது காரணம் இருந்தா சரின்னு சொல்லலாம். உனக்கு என்ன காரணம் இருக்கு? சொல்லு”

“வதனாக்கு முடிச்சிட்டு முடிக்கலாமே?”

“உனக்கு கல்யாணம் முடிஞ்சா நீ தங்கச்சிகளை பாக்க மாட்டேன்னு உன்னை பத்தி நாங்க நினைச்சா தானே அவளுக்கு முதல்ல முடிக்கணும்? அது மட்டும் இல்லாம அவளுக்கு ஏற்கனவே நகை ரெடியா இருக்கு. அவ படிப்பு முடிச்சதும் நல்ல சம்பந்தம் வந்தா உன்னைக் கூட எதிர் பாக்காம எங்களால  அவளை கரை சேக்க முடியும். இப்போதைக்கு உனக்கு தான் முதல்ல கல்யாணம் பண்ணனும். இன்னும் எல்லாம் தள்ளிப் போட முடியாது. நாளைக்கு பொண்ணு பாக்க போக தான் போறோம். உன் தங்கச்சிகளுக்கும் லீவ். உனக்கும் லீவ் தானே? போறோம் அவ்வளவு தான்.  வேற எதுவும் பேச வேண்டாம்”, என்று சொல்ல அதற்கு மேல் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கே இல்லை.

என்றாவது ஒரு நாள் உண்மையை சொல்லித் தானே ஆக வேண்டும்? அதை இப்போதே சொல்லி விடலாம் என்று எண்ணியவன் “அங்க போக வேண்டாம் மா”, என்று சொன்னான்.

மகனின் முகத்தில் இருந்த யோசனையே எதுவோ  பெரிதாக வரப் போகிறது என்று பெற்றவர்களுக்கு உணர்த்த அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இவங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க போக வேண்டாமா? இல்லை எந்த வீட்டுக்குமே போக வேண்டாமா தாமரை? உன் மனசுல வேற பொண்ணு இருக்கா?”, என்று கேட்டாள் வசந்தா.

“ஆமா டா, உன் மனசுல ஏதாவது எண்ணம் இருந்தா சொல்லு பாத்து பேசி முடிச்சிறலாம். எங்களுக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம்”, என்றார் அவனின் தந்தை.

அவன் அப்போதும் அமைதியாக இருக்க “இங்க பாரு தாமரை, கல்யாணம் சரியான நேரத்துல பண்ணினா தான் வாழ்க்கை நல்லா இருக்கும். ஒண்ணு நீ என்ன நினைக்கிறேன்னு சொல்லு. இல்லைன்னா எங்க முடிவுக்கு சரின்னு சொல்லு”, என்றாள் வசந்தா.

“என் மனசுல ஒரு பொண்ணு இருக்கா மா. ஆனா அவளைப் பத்தி சொன்னா நீங்க ரெண்டு பேரும் என்ன யோசிப்பீங்கன்னு தான் தெரியலை”, என்று அவன் சொன்னதுமே அது யார் என்று வசந்தாவுக்கு புரிந்து போனது.

ஏனென்றால் கடந்த சில நாட்களாக அவன் அதிகம் பேசியது மீனாவைப் பற்றி தானே? ஒரு தாயாக மகன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலை வந்தாலும் அவளுக்காகவும் பரிதாபம் வந்தது. யாரென்று புரிந்தது என்பதால் வசந்தா அமைதியாக இருக்க “யாரா இருந்தாலும் சொல்லு தாமரை. பேசி முடிச்சிறலாம்”, என்றார் வேலாயுதம்.

“அன்னைக்கு மீனாவை பத்தி சொன்னேன்ல பா? அந்த பொண்ணு தான்”, என்று சொன்னதும் அவர் அதிர்வாக அவனைப் பார்த்து விட்டு மனைவியைப் பார்த்தார்.

தாய் தந்தை இருவரும் அமைதியாக இருக்கவும் “என்னன்னு தெரியலை. வேற எந்த பொண்ணு மேலயும் அப்படி எதுவும் தோணலை. இவளை மட்டும் என்னால கடந்து வர முடியலை பா. அன்னைக்கு ஹாஸ்டல்ல விட்டுட்டு வரும் போது சத்தியமா என்னால முடியலை. அது மட்டும் இல்லாம என்னால கூட அவளுக்கு இந்த நிலமையோன்னு தோணுது. அவளுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா இப்ப, அவ கூட இருந்தா மட்டும் தான் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணுது. எனக்கு அவ வேணும் பா”, என்றவன் அமைதியாக இருக்கும் தாயைப் பார்த்தான்.

வசந்தா எதுவும் சொல்ல வில்லை என்றதும் “என்ன வசந்தா அவன் தான் அறிவு இல்லாம பேசிட்டு இருக்கான்னு பாத்தா நீயும் அமைதியா இருக்க?”, என்று கேட்டார்.

“அப்பா”

“என்ன டா அப்பா? நீ விரும்பினா யாரா இருந்தாலும் உனக்கு அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்க தயாரா தான் இருக்கோம். அதுக்குன்னு கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந்தை பெத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற? கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா?”

“இதுல என்னப்பா தப்பு இருக்கு? அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? அதை விட எனக்கு அவளை தான் பிடிச்சிருக்கு பா”

“உனக்கு அப்புறம் ரெண்டு தங்கச்சி இருக்கு. உன் வாழ்க்கை அப்படி அமைஞ்சா அவங்களுக்கு எப்படி நல்ல வாழ்க்கை அமையும்? சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு அவ பெண் குழந்தையைக் கூட்டிட்டு வருவா. அவனுங்க அனுப்பி விட்டுருவாங்க. அப்படி இருக்க இவ நம்ம வீட்டுக்கு வந்தா அம்மா பொண்ணுன்னு ரெண்டு பேரையும் நீ தாங்குவியா? ஊரே தப்பா பேசும் டா. மாடு கண்ணு ரெண்டு பேரையும் இழுத்துட்டு வந்துருக்கன்னு”

“நானும் எல்லாமே யோசிச்சேன் பா. ஆனா எனக்கு அவளை விட முடியாது, உங்களுக்கு ஒத்துக்க மனசு இல்லைன்னா நான் கல்யாணமே பண்ணாம வேணா இருக்கேன். வேற ஒரு பொண்ணு மேல இந்த உணர்வு வரும்னு எனக்கு தோணலை பா”

“அப்படினா கல்யாணம் பண்ணாம அப்படியே இரு. அவளைக் கல்யாணம் பண்ணினா சொந்தக்காரங்க ஒரு பய மதிக்க மாட்டான், நீ என்ன டி அமைதியா இருக்க? அவனுக்கு சொல்லு”

“என்னை என்ன சொல்ல சொல்றீங்க?”

“என்ன டி இப்படி சொல்ற? அவன் எவ்வளவு பெரிய விஷயம் பேசிட்டு இருக்கான்? நீ சாதாரணமா என்ன சொல்லன்னு கேக்குற?”

“நீங்களே சொல்லிட்டீங்களே இது எவ்வளவு பெரிய விஷயம்ன்னு. என் பிள்ளை பெரிய விஷயம் பண்ணினா அதுக்கு நம்ம பெருமை தானே படணும்?”, என்று கேட்க அவன் கண்கள் மின்னியது என்றால் அவளை அதிர்வாக பார்த்தார் வேலாயுதம்.

“உனக்கு பைத்தியமா வசந்தா?”

“இல்லைங்க. அந்த பொண்ணு ஒண்ணும் திமிர் பிடிச்சு குடும்பத்தை இழந்து நிக்கலையே? வாழ்க்கைய சகிச்சு வாழ முடியாம தானே வெளிய வந்துருக்கு. அது கடைசி வரை தனியா தான் இருக்கணுமா? அதுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைய கூடாதா?”

“அப்ப நம்ம பொண்ணுங்க வாழ்க்கை என்ன ஆகும்ன்னு யோசிச்சு பாத்தியா?”

“ஏன் அவங்களுக்கு என்ன? அப்படினாலும் தாமரைக்கு அந்த பொண்ணைத் தானே பிடிச்சிருக்கு?”

“உனக்கும் உன் மகனுக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு”

“அப்படி எல்லாம் இல்லைங்க”

“என்ன இல்லை?”, என்று அவர் சத்தம் கொஞ்சம் கூட ஆரம்பிக்க அதைக் கேட்டு வதனாவும் சரி கலையும் சரி வெளியே வந்து விட்டார்கள். அவர்களுக்கு முதலில் என்ன விஷயம் என்று புரியா விட்டாலும் அதற்கு பிறகு வேலாயுதம் பேசிய பேச்சில் புரிந்தது.