அத்தியாயம் 6 

மறக்கும் நிலைக்கு தள்ளப் 

படும் இதயம் என்றும் 

வாசிப்பது மௌன ராகமே!!!

அழகு மீனா விடுதிக்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கிறது தான். ஆனால் இப்போது எந்த சண்டையும் சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.

போன் இன்னும் சரி செய்து வரவில்லை என்பதால் அவளால் பணத்தை தாமரையிடம் கொடுக்க முடிய வில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று சென்று கொண்டிருந்தாள். ஹாஸ்டலில் தனி அறை தான் என்பதால் எந்த தொல்லையும் இல்லை. அவளுக்கு ஆன்லைன் கிளாஸ் எடுக்கவும் அது தான் வசதியாக இருந்தது. மொத்தத்தில் நிம்மதியாக இருந்தாள், நேரத்துக்கு சாப்பிட்டாள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்று வேலை முடிந்ததும் ஃபோன் கடைக்கு தான் நேராக சென்றாள். இன்று தான் அவளை வரச் சொல்லி இருந்தார்கள். அவள் கையில் போனைக் கொடுத்த கடைக்காரன் பணம் எவ்வளவு என்று சொல்ல அந்த பணத்தை அவனுக்கு கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்ததும் உடனே ராஜனுக்கு தான் அழைத்தாள். “சொல்லு மா மீனா எப்படி இருக்க? போன் சரியாகிருச்சா?”, என்று கேட்டான்.

“சரியாகிருச்சு அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கு என்ன மா நல்லா தான் இருக்கேன். உனக்கு ஹாஸ்டல் செட் ஆகிருச்சா? அன்னைக்கு உன்னை அங்க தள்ளி விட்ட மாதிரி விட்டுட்டு வந்துட்டோம். திருப்பி வந்து பாக்கணும் தான். ஆனா அடிக்கடி வந்தா உன்னை அங்க யாரும் எதுவும் சொல்லிறக் கூடாது. அதான் மா வரலை. தப்பா எடுத்துக்காத”

“எனக்கு புரியுது அண்ணா. நான் எதுவும் தப்பா நினைக்கலை. இந்த உலகம் அப்படி பேச தான் செய்யும். சரி உங்க பிரண்ட் கிட்ட பணம் கொடுக்கணுமே? அவங்க நம்பர் தரீங்களா? அனுப்பி விட்டுறேன்?”

“சரி மா நம்பர் தரேன், என்ன அமெளண்ட் எல்லாம் அவன் கிட்ட கேட்டுக்கோ. அவன் உன்னைப் பத்தி கேட்டுட்டே இருந்தான். அதனால அவன் கிட்ட ரெண்டு வார்த்தை பேசிடு. அப்ப தான் நீ நல்லா இருக்கேன்னு நம்புவான்”

“நான்.. அது… அவங்களுக்கு..”, என்று தடுமாறினாள். உதவி செய்தான் தான். ஆனால் அவனிடம் என்ன பேச என்று தெரியவில்லை.

“தாமரை ரொம்ப நல்லவன் மா. பயம் வேண்டாம். அவங்க வீட்லயும் உன்னைப் பத்தி கேட்டாங்களாம். அதான் நீயா பேசிட்டா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். உங்க அம்மா அப்பா இன்னும் மாறலை. உன் அம்மா வரவங்க கிட்ட எல்லாம் உன்னை திட்டிகிட்டு தான் இருக்கு. அவங்களுக்காக பாவம் பாத்து இனியும் உன் வாழ்க்கையை தொலைச்சிறாத. சரி மா நான் அப்புறம் பேசுறேன். நேரம் கிடைகிறப்ப பாக்க வரேன்”

“சரி அண்ணா”, என்று சொல்லி போனை வைத்ததும் தாமரையின் எண்ணை அவளுக்கு அனுப்பி இருந்தான். இன்று அவன் பேருந்தில் ஏறும் நாள். அதனால் இந்நேரம் பேருந்து நிலையத்தில் தான் இருப்பான் என்று தோன்றியது. பஸ் கிளம்ப இன்னும் நேரம் இருப்பதால் அங்கேயே சென்று விடலாம் என்று எண்ணி கிளம்பி விட்டாள். பணத்தை போனில் அனுப்பி விடலாம் தான். ஆனால் உதவி செய்தவனை பார்க்க வாய்ப்பு இருக்கும் போது அதை எதற்கு இழப்பானேன்?

அவள் எண்ணியது போல அவன் கதிருடன் பேசிய படியே பேருந்துக்கு கீழே தான் நின்றிருந்தான். ஆட்கள் சேருவதற்காக பேருந்தை நிறுத்தி இருந்தார்கள்.

அவளைக் கண்டு இருவரும் புன்னகைக்க சிறு தயக்கத்துடன் அவளும் சிரித்த படி அவர்களை நெருங்கினாள்.

“எப்படி மா இருக்க?”, என்று கதிர் வார்த்தையால் கேட்க தாமரையோ அதே கேள்வியை கண்களால் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் அக்கறையான பார்வை அவளுக்கும் புரிய “நான் நல்லா இருக்கேன் அண்ணா”, என்று இருவருக்குமே பதில் கொடுத்தாள்.

அப்போது அங்கே வந்த கலை மற்றும் வதனா இருவரும் “ஹாய் மீனா அக்கா எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டார்கள்.

அவள் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க தங்கைகளுடன் பேசிக் கொண்டிருந்த அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் தாமரை.

ஒரு வாரமாக அவன் மனதுக்குள் குடைந்து கொண்டிருந்தாள் மீனா. அவளை அன்று விடுதியில் விட்டுவிட்டு வந்த பிறகு அவன் நிம்மதியாக தூங்க கூட இல்லை.

ஏதோ ஒரு பாதிப்பு அவனிடம். ஒரு மாதிரி யோசனையாக தான் இருந்தான். அவளை நேரடியாக சென்று பார்வையிட ஒரு மனது தவிக்க அறிவோ அது தவறு என்று எச்சரித்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் அடக்க முடியாமல் தான் ராஜனுக்கு அழைத்து அவளைப் பற்றி விசாரித்தான்.

“அவளைப் போய் பாத்தியா ராஜா? எப்படி இருக்கா? ஹாஸ்டல் செட் ஆகிருச்சா? ஏதோ அந்த பொண்ணை தனியா விட்ட மாதிரி ஒரு குற்ற உணர்வு. ஒண்ணும் பிரச்சனை இருக்காது தானே?”, என்று கேட்டான் தாமரை.

“நல்லா தான் டா இருப்பா. நம்ம அங்க அடிக்கடி போனா அவளைப் பத்தி ஏதாவது நினைப்பாங்கள்ல? அவளா போன் சரி பண்ணிட்டு பேசினா தான் உண்டு”, என்று ராஜன் சொல்லி விட இவனால் என்ன செய்ய முடியுமாம்?

இது வரை எத்தனையோ பெண்களை கடந்து வந்திருந்தாலும் அவர்கள் மீது வராத உணர்வு இவள் மேல் வந்திருந்தது. நிறைய யோசித்தான். அவள் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் சரி வர மாட்டாள் என்று கூட புரிந்தது. ஆனாலும் அவள் நினைவு மட்டும் அவனை விட்டு அகலவே இல்லை.

இப்போதும் தங்கைகளுடன் புன்னகை முகமாக பேசும் அவளைப் பார்க்க பார்க்க ஏனோ மூவரையுமே அவன் குடும்பமாக தான் அவன் மனது எண்ணியது. எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டுக் கொடுக்க கூடாது என்ற எண்ணம் அவன் மனதில் விழுந்தது.

“அவ எப்படி உன்னோட குடும்பமா வருவா?”, என்று மனசாட்சி கேள்வி எழுப்ப அதற்கான பதில் அவனுக்கு பிடித்திருந்தது. அவனுக்கு மனைவியானால் அவள் அவனுடைய குடும்பம் தானே?

ஏனோ தன்னுடைய மனைவியும் தங்கைகளும் பேசிக் கொண்டிருப்பது போல தோன்றி வைக்க அப்போது தான் அவன் மனதே அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.

தனக்கு அவளை பிடித்திருக்கிறது என்று புரிந்தாலும் அதற்கு அவனால் சட்டென்று சந்தோஷப் பட முடியவில்லை. அதனால் என்னென்ன பின் விளைவுகள் வரும் என்று அவன் மனம் ஆராய முயன்றது. இந்த சமுதாயத்தில் நாம் நினைத்தது போல வாழ முடியாதே. ஒன்றும் இல்லாத விஷயத்துக்கே கண் காது வைத்து பேசும் சமூகம் அவளைத் திருமணம் செய்தால் தன்னை மட்டும் அல்லாமல் அவளையும் என்ன எல்லாம் பேசும் என்று தெரியுமே?

ஆனாலும் அவளைப் பார்க்கும் தருணத்தை இழக்க விரும்பாமல் அவன் கண்கள் அவளை ரசித்துக் கொண்டிருந்தது. சிரித்த இதழ்களும் பேசும் கண்களும் நடனமாடும் விரல்களும் அவளிடம் இருந்து பார்வையை நகர விட வில்லை.

“டீ குடிக்க போகலாமா?”, என்று கேட்க வந்த கதிர் அப்போது தான் தாமரையின் பார்வையைக் கண்டான். இது வரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத தன்னுடைய நண்பனின் பார்வை இன்று வேறு விதமாக இருக்கிறது என்று அவனுக்கு தெரியாதா என்ன?

கதிருக்கு நண்பனின் அமைதியும் பார்வையும் என்ன சொல்லியதோ? “ஏய் வாயாடிகளா? பேசினது போதும். ஒழுங்கா போய் உங்களுக்கு போட்ட சீட்ல உக்காருங்க. அப்புறம் வேற யாராவது உக்காந்தா என்னைச் சொல்லக் கூடாது”, என்று தாமரையின் தங்கைகளை விரட்டினான்.