ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் “ஏய் மீனா வெளிய வா டி”, என்ற கல்யாணியின் ஆங்காரமான குரல் கேட்டது. 

“இப்ப என்னவோ? அதுக்குள்ள இவ மகன் ஏதாவது வத்தி வச்சிட்டானா?”, என்று எண்ணிக் கொண்டவள் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வெளியே வர அங்கே அவளை குரோதத்துடன் பார்த்த படி நின்றாள் கல்யாணி. 

சோமசுந்தரம், கிஷோர் மற்றும் வினோதா எல்லாரும் அங்கே வந்து விட அடுத்து கல்யாணி கேட்ட கேள்வியில் அப்படி மூச்சடைத்தது மீனாவுக்கு. 

“என்னமோ என் மகன் கிட்ட டைவர்ஸ் கேட்டியாமே? அப்படியா?”, என்று கேட்டாள் கல்யாணி. 

“அதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லிட்டானா?”, என்று எண்ணி மீனா அதிர்ந்து அவளைப் பார்க்க ”ஆக பண்ணுற தப்பை எல்லாம் பண்ணிட்டு உத்தமி மாதிரி என் பிள்ளை கிட்ட டைவர்ஸ் கேட்டுருக்க? அவ்வளவு பெரிய இவளா டி? நீயெல்லாம் ஒரு பொண்ணுன்னு உன்னைப் போய் என் பிள்ளைக்கு கட்டி வச்சேன் பாரு? இது தான் சாக்குனு உன் குடும்பமும் உன்னைத் தள்ளி விட்டதோட சரி? அதுவும் உன் அம்மா இருக்காளே? என்னமோ இந்த வீடு சொந்த வீடா, தேக்குல பண்ணினதான்னு அவ்வளவு கேள்வி கேட்டா. அவ தான் சொல்லிக் கொடுத்தாளா டைவர்ஸ் பண்ணுன்னு? இல்லை என் பிள்ளையை என் கிட்ட இருந்து ஒரேடியா பிரிக்க பிளான் போடுறீங்களா?”, என்று கேட்டாள் கல்யாணி. 

“என்ன கல்யாணி சொல்ற?”, என்று கேட்டார் சோமசுந்தரம். 

“ஆமாங்க, இவ தான் டைவர்ஸ் கேட்டுருக்கா. மகேஷ் இப்ப தான் கால் பண்ணி சொன்னான். இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? ஐயோ என் பையன் வாழ்க்கை போச்சே. இவளைப் போய் என் பையனுக்கு கட்டி வச்சு குடும்ப மானம் போச்சே”

“நான் அப்படி நினைச்சு எல்லாம் கேக்கல அத்தை. பிளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க. அவரை வரச் சொன்னேன். வர மாட்டேன்னு சொன்னதுனால ஒரு கோபத்துல தான் டைவர்ஸ் பத்தி பேசிட்டேன்”

“இல்லை டி இல்லை. நீ தெளிவா தான் பிளான் போட்டுருக்க. முதல்ல என் பையனை மயக்கி உன் கைக்குள்ள போட பாத்த. அது நடக்கலை. அவன் கூட தனியா போய் இருந்து அவனை ஆட்டி வைக்கணும்னு நினைச்ச. அதுவும் நடக்கலை. இப்ப டைவர்ஸ் நாடகமா? நீ என்ன டி டைவர்ஸ் கேக்குறது? நான் சொல்றேன் இனி நீ என் மகனுக்கு வேண்டாம். உன்னை விட ஆயிரம் மடங்கு உயர்ந்த பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கலை என் பேரு கல்யாணி இல்லை”, என்று சொன்னவள் “டேய் சின்னவனே பெரியவனுக்கு போன் போட்டு தா”, என்றாள். 

அவனும் கால் செய்து ஸ்பீக்கரில் போட்டு அன்னையிடம் கொடுக்க “டேய் சொல்லு டா, எப்படி இருக்க?”, என்று கேட்டான் மகேஷ். 

“நான் நல்லா இருக்கேன். அம்மா கிட்ட கொடுக்குறேன் அண்ணா, அம்மா உன் கிட்ட பேசனுமாம்”

“சொல்லுங்கம்மா”

“டேய் கண்ணா”

“அம்மா என்ன ஆச்சு? உங்க குரலே சரி இல்லை”, என்று தேன்குரலில் நலம் விசாரித்தான் மகேஷ். இவன் இந்த அளவுக்கு பாசமாக பேசுவானா என்று அந்த நேரத்திலும் வியப்பாக இருந்தது மீனாவுக்கு, 

“நீ என்ன பண்ணுவியோ தெரியாது, நீ உடனே கிளம்பி இங்க வர. இவளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்”, என்றாள் கல்யாணி. 

“சரி மா நைட் பஸ் ஏறுறேன், ஏறிட்டு சொல்றேன்”, என்று சொன்னதும் அதிர்ந்து போய் பார்த்தாள் மீனா. ஏன் என்று கேட்க வில்லை. எதற்கு என்று கூட அவன் கேட்க வில்லை. அவன் வர வேண்டும் என்று இவளும் நினைத்தாள் தான். ஆனால் இப்போது அவன் வருவதற்கு அவள் சந்தோஷப் பட வேண்டுமா? தனக்கான இடம் எது என்பதை தான் தெளிவாக சொல்லி விட்டானே?

“சரி டா பஸ் கிளம்பினதும் கால் பண்ணு”, என்று கல்யாணி சொல்ல “சரி மா”, என்று சொல்லி போனை வைத்தான். 

“இனி நீ எப்படி என் பையன் கூட வாழுறேன்னு பாக்குறேன்?”

“அத்தை, இந்த விஷயத்தை இவ்வளவு பெருசா ஆக்கணுமா? நான் தப்பு செஞ்சதாவே இருக்கட்டும். இதை இத்தோட விடுங்களேன்”, என்றாள் மீனா. 

“விடணுமா? எதை விடணும்? நீ வந்ததுல இருந்து எங்க வீடே நல்லா இல்லை. எல்லார் நிம்மதியும் போச்சு. ஐயோ உன்னைப் பத்தியும் உன் குடும்பத்தை பத்தியும் விசாரிக்காம போய்ட்டோமே. தப்பு பண்ணிட்டோம். இனி நீ எப்படி அவன் கூட வாழுறேன்னு பாக்குறேன்”, என்று சொன்னதும் கல்யாணியை முறைத்துப் பார்த்தவள் “அதை நீங்க சொல்லக் கூடாது. அவங்க வந்து சொல்லட்டும். பிள்ளை வேற இருக்கு. மனசாட்சி இல்லாம பேசுறீங்க? நான் எந்த தப்பும் செய்யலை. இனி டைவர்ஸ் பத்தி நானும் பேச மாட்டேன். நீங்களும் பேசக் கூடாது. நான் சாத்தியமா எந்த தப்பும் செய்யலை”, என்றாள். 

“யாருக்கு தெரியும்? இப்போதைக்கு அந்த சாப்பாடு கொண்டு வந்தவன் கூட. இன்னும் எத்தனை பேர் வருவாங்களோ?”

“ஐயோ அது நீங்க தானே ஒத்துக்க சொன்னீங்க? அவன் யாருன்னே எனக்கு தெரியாது”

“நீ எதுவும் இல்லாமலா ஆமான்னு சொன்ன? இருக்கும் நிறைய இருக்கும்”, என்று பேச எரிச்சல் ஆன மீனா பொறுமை இழந்து “வாயை மூடுங்க, இன்னொரு வார்த்தை பேசினா உங்களுக்கு மரியாதை இருக்காது”, என்று கத்தி விட்டாள். 

அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க “ஏய் யாரை பேசுற?”, என்று கேட்ட கல்யாணி அவளை அடிக்க அவள் கழுத்தில் கையில் எல்லாம் காயம் ஆனது. 

“ஐயோ விடுங்க வலிக்குது”, என்று சொல்ல அவளும் விட வில்லை. மற்றவர்களும் வேடிக்கை தான் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் மீனாவும் கல்யாணியை கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். 

அந்த கோபத்தில் கல்யாணி இன்னும் ஆங்காரத்துடன் அடிக்க அடித்த அடியில் பிள்ளை பெறும் போது அடி வயிற்றில் போட்டிருந்த தையல் பிரிந்து விட ரத்தம் வந்தது. 

“கல்யாணி போதும், சும்மா இரு. அவளுக்கு ரத்தம் வருது பாரு. செத்து கித்து போக போறா. இரு நான் ஆட்டோ கூட்டிட்டு வரேன். ஆஸ்பத்திரி போகலாம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் சோமசுந்தரம். 

அப்படியே மீனா மயங்கி விழ அவளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்கள். டாக்டர் மொத்த குடும்பத்தின் மீதும் கேஸ் கொடுப்பேன் என்று சொல்ல கொஞ்சம் பயந்து தான் போனார்கள். அடுத்த நாள் வந்த மகனிடமும் அவளைப் பற்றி தவறாகவே சொல்ல அவனோ அவளை வேண்டவே வேண்டாம் என்றான். 

கண் விழித்த மீனா “கேஸ் எதுவும் கொடுக்க வேண்டாம்”, என்றாள். 

அவள் கண் விழிக்கும் போது அவள் கணவன் அங்கே தான் இருந்தான். ஆனால் அவனிடம் என்ன சொல்லப் பட்டதோ குழந்தையைக் கையில் வைத்திருந்தவன் “இங்க இப்படியே செத்து ஒழி, இனி என் கண்ணு முன்னாடி வராத. இவ்வளவு கேடு கெட்டவனு தெரியாம போச்சு. நீ கேட்ட டைவர்ஸ் கிடைச்சா ரொம்ப சந்தோஷப் படுவேன்”, என்றவன் குழந்தையுடன் அங்கிருந்து சென்றே விட்டான். 

அவளால் அசைய கூட முடிய வில்லை. வலி அப்படி உயிர் போனது. தன்னை இந்த நிலையில் வைத்திருந்த அந்த கடவுளின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது. 

மீண்டும் மருத்துவர் வந்து கேஸ் கொடுக்கலாமா என்று கேட்டுப் பார்த்தாள். “வேண்டாம் டாக்டர், நானே இந்த வாழ்க்கை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். பிரச்சனை இல்லாம பிரிஞ்சு வரது தான் எனக்கு நல்லது. குழந்தையை எப்படியாவது வாங்கணும்”, என்றாள். 

அவள் மருத்துவமனையில் நான்கு நாட்கள் அனுமதிக்கப் பட்டிருக்க அவள் வீட்டினர் கூட யாரும் வரவில்லை. அவர்களுக்கு சொல்லப் படவும் இல்லை. அவள் கேஸ் கொடுக்காததாலோ என்னவோ? மருத்துவமனை பில்லைக் கூட கல்யாணி தான் கட்ட சொல்லி இருந்தாள் மகனிடம். 

மீண்டும் தங்கள் வீட்டுக்கு தான் வருவாள், இன்னும் வைத்து செய்ய வேண்டும் என்று முடிவில் இருந்தது மொத்த குடும்பமும். 

மகேஷ் கூட அப்படி பேசி விட்டாலும் மீண்டும் இங்கு தான் வருவாள் என்று எதிர் பார்த்தான். ஆனால் அவள் நேராக சென்றது அவளுடைய வீட்டுக்கு தான். 

“என்ன டி சொல்லாம கொள்ளாம வந்துருக்க?”, என்று வடிவு கேட்க அதற்கு பதிலே சொல்ல வில்லை. 

வீட்டுக்குள் சென்று குளித்து முடித்து கிளம்பியவள் அழைத்தது ராஜனுக்கு தான். 

“சொல்லு மா மீனா, எப்படி இருக்க?”

“கொஞ்சம் உங்களை பாக்கணும். ஆபீஸ்ல இருக்கீங்களா?”

“ஆமா மா”

“சரி நான் வரேன்”, என்று சொன்னவள் வீட்டினருக்கு கூட சொல்லாமல் சென்றது அடகு கடைக்கு தான். கழுத்தில் கிடந்த சின்ன செயினை அடகு வைத்தவள் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ராஜனைக் காணச் சென்றாள். அவன் அப்போது ஒரு சீனியர் லாயரிடம் தான் ஜூனியராக பணியாற்றிக் கொண்டிருந்தான். 

அவனிடம் சென்று டைவர்ஸ் பற்றி பேசியவள் அந்த சீனியரிடம் நடந்தது எல்லாம் சொன்னாள். அவரும் அவள் சார்பில் மகேஷ்க்கு அழைத்து டைவர்ஸ் பற்றி சொல்ல அவனோ அவர் வயதானவர் என்று கூட புரியாமல் அவரையும் அவளையுமே தவறாக பேசிவிட்டு முடிவில் டைவர்ஸ் தரேன் என்று சொன்னான்.

“ஆனா குழந்தையை தர முடியாது. அவ கெட்டவதான்னு நிரூபிக்க போலீஸ் சாட்சி இருக்கு. புட் டெலிவரி பண்ணுறவன் கூட தொடர்பு இருக்குனு அவளே ஒத்துக்கிட்டா. அப்படி பட்ட அம்மா கிட்ட ஜட்ஜ் குழந்தையை ஒப்படைக்க மாட்டாங்க”, என்று அவன் அவருக்கு மேல் சட்டம் பேசி போனை வைத்தான்.