அத்தியாயம் 5 

அர்த்தம் புரிந்த பிறகு 

தான் சுவையும் புரியும் 

தமிழிலும் காதலிலும்!!!

மீனாவின் குழந்தைக்கு மூன்று மாதம் ஆகி இருந்தது. அப்போது தான் குழந்தையைப் பார்க்க வந்தான் மகேஷ். அப்போதும் அவளிடம் அன்பு அக்கறை எல்லாம் இல்லை. அவனது தேவைக்கு அவளிடம் பேசினான். ஒரு வாரம் இருந்து விட்டு மீண்டும் சென்று விட்டான். அவளும் இப்போது அவனிடம் எதிர்பார்ப்பதை விட்டுவிட்டாள். அன்பைக் கூட பிச்சையாக கேட்க முடியாது அல்லவா?

குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகி இருந்தது. அன்று அவளுக்கு திடீரென்று பிரியாணி நினைவு வந்தது. குழந்தைக்கு நல்லது இல்லை என்று இது வரை பிரியாணி சாப்பிடாமல் இருந்த மீனாவுக்கு இன்று ஏனோ பிரியாணி சாப்பிட வேண்டும் போல இருந்தது. 

வீட்டில் செய்தாலும் அந்தக் சுவை வராது என்பதால் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படி உணவுக்கு ஆசைப் படுபவள் கூட கிடையாது. இன்று ஏனோ தோன்றியது. 

சோமசுந்தரத்திடம் கேட்கலாமா என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு நாள் அவரிடம் பானிபூரி கேட்டதும் அதற்கு கல்யாணி கொஞ்சம் அதிகமாக பேசியதும்  நினைவில் வர அந்த நினைப்பை விழுங்கிக் கொண்டாள். 

 அப்போது மகேஷ் அழைக்க அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்று மட்டும் சொன்னாள். வேறு எதிர்பார்ப்பு அவளிடம் இல்லை. 

“என்ன செய்யுற? அம்மா எங்க?”

“வெளிய தான் இருக்காங்க. கொண்டு போய் கொடுக்கவா?”

“இல்லை வேண்டாம். நான் பேசிக்கிறேன். இன்னும் நாலு நாள்ல ஊருக்கு வரேன். வரும் போது உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?”, என்று கேட்டான். 

“வறீங்களா? எப்ப? என்னைக்கு? நிஜமாவா?”, என்று எதிர்பார்ப்புடன் தன்னை மீறி கேட்க “என்ன நான் வரப் போறேன்னு ஷாக்கா? வேற எதுவும் திருட்டு தனமா பிளான் பண்ணிருக்கியா? எந்நேரமும் ஃபோன்லே இருக்கியாம்?”, என்று கேட்டான். 

அவள் மனது வெறுத்துப் போய் அமைதியாக இருக்க “சரி சொல்லு என்ன வேணும்?”, என்று கேட்டான். 

“நீங்க பேசினதே சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒண்ணும் வேண்டாம். நீங்க பத்திரமா வந்தா மட்டும் போதும்”

“சரி வைக்கவா?”

“என்னங்க?”

“என்ன?”

“எனக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு”

“சரி செஞ்சு சாப்பிடு”

“வீட்ல செஞ்சது வேண்டாம். நான் ஆர்டர் போட்டுக்கவா? பிளீஸ்”

“சரி”, என்று சொல்லி அவன் போனை வைத்து விட அவள் மனசாட்சியோ வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து ஆர்டர் போட வேண்டுமா என்று கேட்க தான் செய்தது. 

ஆனால் மனசாட்சியை குட்டி வைத்தவள் தனக்கு மட்டும் ஆர்டர் செய்து விட அந்த நிகழ்வு அவள் வாழ்க்கையவே தலை கீழாக புரட்டி தான் போட்டது. 

ஆம் டெலிவரி பையன் வந்து அவளிடம் உணவு பார்சலைக் கொடுக்க இவளும் பணம் கொடுக்க அது மட்டும் தான் நினைவில் நின்றது. 

அதற்கு பிறகு அவளுக்கும் சரி அந்த டெலிவரி பையனுக்கும் சரி மாறி மாறி அடிகள் தான் விழுந்தது. 

கல்யாணி இவளை போட்டு அடித்துக் கொண்டிருந்தாள். அந்த பையனை சோமசுந்தரமும் கிஷோரூம் சேர்ந்து அடித்தார்கள். ஏன் எதற்கு என்று எதுவும் புரிய வில்லை. 

கண் சிமிட்டும் நேரத்துக்குள் எல்லாம் முடிந்து விட அடி வாங்கிய அந்த கடை பையன் அவசரமாக போனை எடுத்து மேனேஜருக்கு அழைத்து நடந்ததைச் சொன்னான். 

“அங்க இருந்து அமைதியா வா. முடிஞ்சா அவங்க பேர் மட்டும் கேட்டுட்டு வா. நம்ம கம்பலைண்ட் கொடுக்கலாம். அவங்க எப்படி என் ஆள் மேல கை வைக்கலாம்?”, என்று கேட்டு அவர் நல்ல மனிதர் என்பதை நிரூபித்தார். அந்த பையன் சென்றதும் ஆள் ஆளுக்கு அவளை தவறாக பேச பூமிக்குள்ளே புதைந்து விட மாட்டோமா என்று இருந்தது. அவளை பேசக் கூட யாரும் விட வில்லை. 

அவர்கள் கேஸ் குடுத்து விட்டார்கள் என்று தெரிந்தது  தான் தாமதம் மீனாவை நெருங்கிய கல்யாணி “உனக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்குனு ஒத்துக்கோ. அதுக்கு தான் நாங்க அவனை அடிச்சோம்ன்னு நீ சொல்லணும்”, என்றாள். 

அதைக் கேட்டு அதிர்ந்து போனவள் “ஐயோ அந்த ஆள் யாருன்னே எனக்கு தெரியாது”, என்று அலறினாள்.

“தெரியுதோ தெரியலையோ? உன்னைப் பாக்க தானே வந்தான்? திருட்டு தனமா வரச் சொல்லிருக்க. இப்ப நீ நான் சொன்னதை அப்படியே சொல்ற? அப்படி சொன்னா தான் நாங்க தப்பிக்க முடியும்”

“முடியாது, நான் அப்படிப் பட்ட பொண்ணு கிடையாது”

“உன்னைப் பத்தி தெரியாது? ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்ற மாதிரி சொல்லு. இல்லைன்னா உன் பிள்ளை உனக்கு இல்லை. நிச்சயமா குழந்தையையும் உன்னையும் பிரிச்சிருவோம்”, என்றாள். 

அவள் குழந்தையை திரும்பி பார்க்க அதை தூக்கி வைத்திருந்தான் கிஷோர். அவள் வாங்க போக அவன் கொடுக்காமல் வெளியே சென்று விட்டான். 

“இப்ப போலீஸ் வந்து விசாரிக்கும் போது நீ ஆமா எங்களுக்குள்ள தப்பான தொடர்பு உண்டு. அதான் எங்க வீட்ல அடிச்சாங்கன்னு சொல்லணும். இல்லைன்னா உன் பிள்ளை உனக்கு இல்லை”, என்று சொன்னாள். 

“பிள்ளைக்கு பால் கொடுக்கணும் அத்தை. பிளீஸ் தாங்க. அழுறா பாருங்க”

“கொஞ்ச நேரம் கொடுக்கலைனா ஒண்ணும் ஆகாது. குழந்தைக்கு நான் பசும்பால் கொடுத்துக்குறேன்”, என்று சொல்ல “இவள் அரக்கியா?”, என்று பார்த்தாள் மீனா. 

சொன்னது போலவே அவள் போலீஸிடமும் சொல்ல இப்போது அந்த பையனும் அவளை அதிர்ந்து பார்த்தான். இப்போது அந்த மேனேஜர் கூட அவனுக்கு எதிராக மாற அந்த நிமிடமே அந்த நல்ல பையனின் வேலை போனது. கேஸ் வேண்டாம் என்று பேசப் பட்டதால் அவன் வேலை மட்டும் தான் போனது. 

இல்லையென்றால் ஜெயில், கோர்ட் என்று அந்த பையனும் தடுமாறி இருப்பான். தலை குனிந்து அழுது கொண்டிருந்த மீனாவை ஒரே ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான் அவன். அவள் படும் கஷ்டம் அவனுக்கு புரிந்ததுவோ என்னவோ? 

அனைவரும் சென்றதும் குழந்தையை அவளிடம் ஒப்படைத்ததும் அழுது கொண்டே அறைக்குள் வந்து குழந்தையை தூங்க வைத்தவள் மனம் தீயாக எரிந்தது. திருமணம் முடிந்ததில் இருந்து இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்த்தவளுக்கு இனியும் இது தேவையா என்று இருந்தது. 

ஆனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழந்தை முகம் வேறு அவளை பாடாய் படுத்தியது. ஆனால் என்ன தான் குழந்தைக்காக என்றாலும் இதற்கு பிறகு இந்த வீட்டில் இருக்க அவளுக்கு உடன்பாடு இல்லை. அவள் பிறந்த வீட்டின் சூழ்நிலை வேறு அவளை தடுமாற வைத்தது. வெகு நேரம் யோசித்தவள் கணவனுக்கு அழைத்தாள். மனது முழுக்க அவ்வளவு வெறுப்பு அவளுக்கு. 

எடுத்ததும் “என்ன?”, என்று எரிந்து விழுந்தான் அவன். மனம் விட்டே போனது மீனாவுக்கு. 

“எனக்கு உங்க கிட்ட பேசணும். நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க. ரொம்ப முக்கியமான விஷயம்”, என்றாள். 

“இங்க பாரு எனக்கு வேலை ஆயிரம் கிடக்கு. உன் இஷ்டத்துக்கு ஆட முடியாது. நான் எப்ப வரேனோ அப்ப தான் வர முடியும்.  வை டி போனை”

“இப்ப வருவீங்களா? மாட்டீங்களா?”, என்று எரிச்சலில் கேட்டாள். எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கிறது? இப்போதும் அவன் பொறுப்பில்லாமல் இருக்க அவ்வளவு கடுப்பு அவளுக்கு. 

“என்னடி குரல் உயருது? என்ன திமிரா?”

“ஆமா கல்யாணம் முடிஞ்சதுல இருந்து உன் வீட்டு சோத்தை திங்குறேன்ல அந்த திமிர் தான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. நீ இப்பவே கிளம்பி வா. இல்ல டைவர்ஸ் தான்”

“என்ன மரியாதை தேயுது, வா போன்னு பேசுற?”

“அப்படி தான் தேயும் என்ன பண்ணுவ? அடிக்கணுமா? வா. வந்து அடி”

“உன் இஷ்டத்துக்கு வர முடியாது. வை போனை. டைவர்ஸ் வேணும்னா பண்ணிரு. உன் கூட வாழுறதுக்கு சும்மா இருந்துட்டு போயிறலாம்”, என்று சொல்லி போனை வைக்க அவன் பேச்சில் மனம் வலித்தாலும் எப்படி அவனை வரவைக்க என்ற யோசனையில் இருந்தாள் மீனா. 

டைவர்ஸ் கூட அவள் கோபத்தில் சொன்னது தான். அவன் வந்தால் ஒன்று தனிக் குடித்தனம் போக வேண்டும். இல்லை அவனுடன் சென்று விட வேண்டும் என்ற முடிவில் தான் அவனை அழைத்தாள்.