“எதுக்கு டா இவ்வளவு கஷ்டம்? ஏதாவது நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு போகலாம்ல?”, என்று கேட்டான் கதிர்.

            “என்னது கல்யாணமா? அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் முடிஞ்சு டிவோர்சே ஆகிருச்சு. ஒரு பெண் குழந்தை வேற இருக்கு”, என்று சொல்ல இருவருக்குமே அதிர்ச்சி தான்.

            இருவரும் வாயடைத்துப் போய் அமைதியாக இருக்க “அவ கதை ரொம்ப வித்தியாசமானது டா. இப்படி எல்லாம் நடக்குமானு இருக்கும். மீனாவோட அப்பா ஒரு டீக்கடை போட்டுருந்தார். அவ அம்மா வீட்ல தான் இருக்கும். மீனாவுக்கு ஒரு அக்கா உண்டு மாப்பிள்ளை. அப்படி ஒரு அடாவடி. அவ அம்மாவோட ஜெராக்ஸ். பக்கத்து ஊருல தான் கட்டிக் கொடுத்துருக்கு. ரெண்டு பிள்ளைங்க அவளுக்கு. அதே ஊர்ல தான் மீனாவையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துருந்தாங்க. அவன் பெரு ஜெகன். அவனை எல்லாம் ஒரு ஆம்பளைன்னு கூட சொல்ல முடியாது”, என்று ஆரம்பித்தவன் அவள் கதையை சொல்ல ஆரம்பித்தான்.

            அனைத்தையும் கேட்டு இடிந்து போய் அமர்ந்திருந்தார்கள் இருவரும். கதிர் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. இந்த கதையை கேட்டால் கல்லுக்கு கூட கண்ணீர் வரும் போல இருந்தது அவள் கதை.

            அவள் கஷ்டம் முடிய வில்லை என்பதற்கு அறிகுறியாக ராஜனின் அன்னை அவனை அழைத்தாள்.

            “சொல்லு மா”

            “எங்க டா இருக்க?”

            “நம்ம ஊரு டீக்கடைல தான் மா. என்ன ஆச்சு?”

            “இங்க மீனா வீட்ல ஒரே பிரச்சனை டா”

            “ஐயோ என்ன ஆச்சு?”

            “எப்பவும் போல தான் அவ அம்மா ஆரம்பிச்சா. அந்த பிள்ளையும் கொஞ்சம் பேசி அவளை ரொம்ப அடிச்சி விட்டுட்டா டா. ஏற்கனவே அடி பட்டுருக்கும் போல? அந்த இடத்துலே திருப்பியும் அடிச்சு ரத்தம் வருது. அந்த பிள்ளை அப்படியும் அவ அம்மாவை பேசிட்டு இருக்கா”

            “எவ்வளவு நாள் தான் அவளும் வாயை மூடிட்டு இருப்பா. சரி இரு நான் வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் “நான் சொன்னேன்ல நீ காலைல அங்க போனதுக்கு எதிரொலி இப்ப நடக்குது. என்ன நடக்குதுன்னு நீங்களே வந்து பாருங்க”, என்று சொல்லி வண்டியைக் கிளப்ப இவர்களும் பின்னே சென்றார்கள்.

            அவர்கள் அங்கே போன போது உண்மையிலே நெற்றியில் இருந்து ரத்தம் வடிய நின்றிருந்த மீனா அந்த வலியைக் கூட உணராமல் அன்னையை முறைத்த படி நின்றாள்.

            “ஐயோ”, என்று பதறிப் போய் தாமரை ஒரெட்டு முன்னால் வைக்க போக அவன் கையைப் பற்றி தடுத்த ராஜன் “இப்ப நீ போனா அந்த பொண்ணை இன்னும் காயப் படுத்துவா. கொஞ்சம் அமைதியா இரு”, என்று சொல்ல வேறு வழி இல்லாமல் நின்றான். ஆனாலும் அவனுக்கு ஆத்திரமாக இருந்தது.

            “இப்ப என்ன தான் பிரச்சனை, அதான் எல்லார் முன்னாடியும் அசிங்கப் படுத்திட்டியே. இதுக்கப்புறமாவது வாயை மூடு”, என்றாள் மீனா.

            “நான் எதுக்கு டி வாயை மூடனும்? உன் லட்சணத்தை சொன்னா வாயை மூடச் சொல்லுவியா?”, என்று கேட்டாள் வடிவு,

            “இப்ப என்னை என்ன தான் பண்ண சொல்ற? பேசாம செத்துறவா? செத்தா நிம்மதியா இருப்பல்ல?”

            “நீ செத்தா கூட என் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது”

            “அதெல்லாம் கண்ணீர் வரும், மாசம் பிறந்ததும் சம்பளத்தை அப்படியே உறிஞ்சு திங்குறல்ல. அப்ப கண்டிப்பா வரும். நீ அழணும்னு நானும் எதிர் பாக்கலை. எனக்கே எங்கயாவது ஓடி போயிரணும் போல இருக்கு. ஒரு நாள் அம்போன்னு விட்டுட்டு போக போறேன். அப்ப தெரியும் என் அருமை”

            “போடி, எவன் கூடயாவது போ. நீ அப்படி போறவ தான்”, என்று சொல்ல அவ்வளவு எரிச்சலாக வந்தது அவளுக்கு.

            ஏனோ இங்கிருந்து செல்லவும் முடிய வில்லை இருக்கவும் முடிய வில்லை அப்படி ஒரு நிலை. அவளிடம் இருந்து இந்த வீட்டையும் எழுதி வாங்கி விட்டார்கள். அவளது நகையையும் அடகு வைத்து விட்டார்கள், மாதம் மாதம் நகைக்கு வட்டி அவள் தான் கட்டுகிறாள். வீட்டு செலவு அவள் தான் பார்க்கிறாள். அவளது தந்தை வேலைக்கு போன போது கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. இப்போது சுத்தமாக அவளிடம் எதுவும் இல்லை.

            என்ன செய்ய என்று விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். பேசாமல் இந்த வீட்டை விட்டு இந்த ஊரை விட்டுச் சென்று விட்டால் என்ன என்று கூட தோன்றியது,

            ஆனால் அதற்கு பின்னே என்ன ஆகும் என்ற கேள்வி அவளை பலமாக தாக்கியது. அவள் யோசிக்கும் போதே அவளது அக்கா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவனுடன்  அங்கே வந்தாள்.

            ரத்தம் வழிய நின்ற தங்கையைப் பார்த்தாலும் எதுவும் கேட்காமல் “என்ன மா ஆச்சு? எதுக்கு எல்லாரையும் கூட்டி வச்சி பேசிட்டு இருக்க?”, என்று கேட்டாள் வசுந்தரா.

            “எல்லாம் இந்த தறுதலையால தான். எனக்குன்னு வந்து பிறந்துருக்குல்ல? இவளால ஊருக்குள்ள தலை காட்ட முடியலை. இன்னைக்கு எவன் கூடவோ ஆட்டோல வந்து இறங்கினா. அதுக்கு கேட்டா பேய் மாதிரி சண்டைக்கு வாரா. நீ உள்ள வா, உள்ள வாங்க பிள்ளைகளா, வாங்க மாப்பிள்ளை”, என்று அன்புடன் வரவேற்ற வடிவு “ஏய் ஏதாவது ஸ்பெஷலா சமைச்சு வை. வெறும் ரசத்தை வச்சு வைக்காத. முட்டை கிரேவி பண்ணிரு. உள்ள போ”, என்று மீனாவை வேலை வாங்க மீனாவின் பொறுமை சுத்தமாக பறந்தது.

            அதற்கு தன்னுடைய அக்கா ஏதாவது சொல்வாளா என்று பார்க்க “நாளைக்கு கோவிலுக்கு போகணும் மா. முட்டை வேண்டாம், வேற ஏதாவது பண்ண சொல்லுங்க”, என்று சொல்ல அவ்வளவு ஆத்திரம் மீனாவுக்கு.

            வடிவும்  வாசுவின் குடும்பமும் உள்ளே போக கால் எடுத்து வைக்க மற்றவர்களும் சண்டை முடிந்ததால் கிளம்ப போக “ஒரு நிமிஷம்”, என்றாள் மீனா.

            என்ன என்று அனைவரும் பார்க்க “என்னை பாத்தா எல்லாருக்குமே எப்படி தெரியுது? வேலைக்காரி மாறி இருக்கா? உன் மக வந்தா நீ விதவிதமா ஆக்கிப் போடு. என்னால எல்லாம் முடியாது”, என்றாள் வீம்பாக.

            இத்தனை நாள் வேறு வழியில்லாமல் பல்லை கடித்துக் கொண்டு செய்தாள் தான். ஆனால் இன்று வாங்கிய அடியில் உடலும் மனமும் ஓய்வுக்கு கெஞ்ச அவளால் சுத்தமாக எதுவும் முடியாது.

            அதனால் தான் மறுப்பு சொல்லி விட்டாள். “என்னது செய்ய மாட்டியா? என் பொண்ணு ஆசையா வந்துருக்கா. இந்நேரமும் உன் திமிரை காட்டுற? ஒழுங்கா போய் சமை. என் கிட்ட மேலும் மேலும் வாங்கிக் கட்டாத மீனா”

            “வாங்கிக் கட்டணுமா? நான் எதுக்கு வாங்கிக் கட்டணும்? இன்னொரு தடவை கையை வச்சி பாரு இருக்கு. இவ எல்லாம் ஒரு அக்கா. ரத்தம் வடிய நிக்கேன். ஏன் எதுக்குன்னு கூட கேக்கல. இவளுக்கும் இவ குடும்பத்துக்கும் இனி நான் பச்சை தண்ணி கூட கொடுக்க மாட்டேன். மாச மாசம் இவ பிள்ளைக்கு பஸ் பீஸ் நான் தான் கட்டிக்கிட்டு இருக்கேன். ஸ்கூல் பீஸ் ஒரு பிள்ளைக்கு கட்டிட்டு இருக்கேன். இனி என்னால முடியாது. அவங்க பிள்ளையை அவங்க பாத்துக்கட்டும்”, என்றாள் எரிச்சலாக.

            “இந்த வாய்க்கு தான் பிள்ளையை பெத்தாலும் அதை இழந்துட்டு நிக்குற. நீயெல்லாம் அடங்கவே மாட்டியா டி? அம்மாவை ரோட்ல நின்னு எதுத்து பேசிட்டு இருக்க?”, என்று கேட்டாள் வசுந்தரா.

            “ஆமா ஆமா, நான் தான் உன் அம்மாவை எதிர்த்து பேசுறேன். அவ என்னை கம்மியா தான் பேசுறா?”

            “இங்க பாரு மீனா இப்ப உள்ள போய் சமைக்கிறியா இல்லையா?”, என்று கேட்டாள் வடிவு.

            “முடியாது”

            “அப்படின்னா வீட்டை விட்டு வெளிய போ. என் மகளுக்கு சமைச்சு கொடுக்க கூட முடியாத நீ இந்த வீட்ல இருக்க கூடாது”

            “இது நான் கட்டின வீடு. நான் எதுக்கு போகணும்?”

            “அது இப்ப என் பேர்ல இருக்கு. இது என் வீடு. எனக்கு அப்புறம் என் மூத்த மகளுக்கு தான். உனக்கு ஒரு செங்கல் கூட கிடையாது”, என்று சொல்ல ஏற்கனவே இது நடக்கும் என்று எண்ணியவள் தன்னை ஏமாற்றிய தந்தையை ஒரு பார்வை பயர்த்தாள்.