“என்ன டா சொல்ற? உதவி தானே செஞ்சோம்? அதனால என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் தாமரை.
“அந்த லேடி கொஞ்சம் மோசம் டா. உன்னை பாத்திருந்தா அந்த பொண்ணை கண்டிப்பா வச்சு செய்யும்”
“என்ன டா சொல்ற?”
“ஆமா மீனா பாவம் டா. அவ படுற கஷ்டத்தைப் பாத்தா அந்த கடவுளுக்கே கண்ணீர் வரும். அதெல்லாம் ஒரு பெரிய கதை. நீ இன்னைக்கு வண்டி ஏறுவியா?”
“இல்லை நாளைக்கு தான்”
“அப்படின்னா நைட் வரியா? பேசலாம்”
“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவனுக்கு அவளுக்கு என்ன ஆகி இருக்குமோ என்று பயமாக இருந்தது.
அன்று இரவு ஏழு மணி போல நண்பனைப் பார்க்க கிளம்பி விட்டான். கதிரும் அவனுடன் வர மூவரும் ஒரு டீக்கடையில் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரம் தூங்கிக் கொண்டிருந்த அழகு மீனா முகத்தில் தண்ணீரை வாறி இரைத்தாள் வடிவு.
எந்த இடத்தில் தண்ணீர் படக் கூடாதோ அதே இடத்தில் தண்ணீர் பட அதிர்ந்து விழித்தாள்.
தனக்கு முன்னே சூனியாக காரி போல நின்றிருந்த அன்னையைப் பார்த்தவள் “உனக்கு என்ன பைத்தியமா மா?”, என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“மணி எத்தனை ஆகுது? இன்னும் தூங்கிட்டு கிடக்க? சமைக்க வேண்டாமா? விடியா மூஞ்சி”
“நான் விடியா மூஞ்சியாவே இருக்கேன். அதுக்கு எழுப்ப வேண்டியது தானே? தண்ணி ஊத்துவியா? சோறு தானே வேணும்? பொங்கித் தரேன், தின்னு தொலை”, என்றவள் எழுந்து செல்ல “என்ன பிச்சை போடுறியா?”, என்று கத்தினாள் வடிவு.
“இப்ப சமைக்க தான் போறேன். நீ எதுக்கு கத்துற? பதிலுக்கு பேசுற தெம்பு எனக்கு இல்லை. வெளியவும் கேக்கும். உனக்கு அசிங்கமா இருக்காது. எனக்கு அசிங்கமா இருக்கும்”, என்றவள் உலை வைத்து விட்டு அரிசியை கழுவ ஆரம்பித்தாள்.
ஆனால் அவள் சொன்னதும் கேட்பவளா வடிவு? துரைசாமியும் அங்கே வர அவர் ஏதாவது மனைவியை கண்டிப்பார் என்று பார்த்தாள். அவர் எப்போதும் போல அமைதியாக இருக்க மீனாவுக்கு எரிச்சலாக இருந்தது.
தலை வேறு விண்விண்ணென்று வலித்தது. மாத்திரை மற்றும் மருந்தின் வீரியம் குறைந்ததால் வலி உயிர் போனது. குழம்பு வைக்க எல்லாம் கஷ்டமாக இருக்கும் என்பதால் ரசம் வைத்து விடலாம் என்று எண்ணி தயார் செய்து கொண்டிருந்தாள்.
ஆனால் வடிவு பேசிக் கொண்டே இருந்தாள். இது வரை நடந்த அனைத்து விஷயத்தையும் எடுத்து பேசி அவளை அசிங்கப் படுத்த ஆரம்பித்தாள்.
எப்போதும் அப்படி பேசுவாள் தான். ஆனால் மீனா கண்டு கொள்ளாமல் போய் விடுவாள். இன்று உடலின் வலியா மனதின் வலியா எதுவோ ஒரு உணர்வு அவளை ஆட் கொண்டது.
தனக்கென்று யாருமே இல்லை என்ற உணர்வு அவளை பலவீனமாக்கியது. அப்படி இருக்கும் போது அன்னையின் பேச்சு அவளை உணர்ச்சிப் பிளம்பாக்கியது.
“இப்ப எதுக்கு பேய் மாதிரி கத்துற? நானே முடியாம இருக்கேன். உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எதுவும் நானா தேடிக்கிட்டது கிடையாது. எல்லாம் உன்னால தான்”, என்று எரிச்சலில் கத்தினாள்
“எது என்னாலாயா? உன்னால தான் குடும்ப மானம் சந்தி சிரிக்குது”, என்று வடிவு சொல்லும் போதே வாசலில் அரவம் கேட்க பக்கத்து வீட்டுப் பெண்மணி நின்றிருந்தாள்.
“என்ன கலா?”, என்று கேட்ட படி வெளியே சென்றாள் வடிவு.
மீனாவுக்கு கலாவை பிடிக்காது என்றாலும் “அப்பாடி ஆள் வந்துட்டாங்க. இனி நம்மளை ஒண்ணும் திட்ட மாட்டாங்க”, என்று எண்ணிக் கொண்டு மீனா உள்ளே சென்று விட்டாள்.
“சமையல் வேலை முடிஞ்சிருச்சு வடிவக்கா. அதான் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு பாக்க வந்தேன். ஆனா செம கோபத்துல இருக்கீங்க போல?”, என்று கேட்ட படி திண்ணையில் அமர வடிவும் அமர்ந்து விட்டாள்.
“அதான் ஒரு தறுதலையை பெத்து வச்சிருக்கேனே? கத்தாம என்ன செய்ய? தினமும் ஏதாவது கூத்தா தான் இருக்கு”
“இன்னைக்கு என்ன பண்ணினா?”, என்று போட்டு வாங்கினாள்.
“எவன் கூடவோ ஆட்டோல வந்து இறங்கினா”, என்று சொன்னது தான் தாமதம் அடுத்த நொடி அங்கே வந்து விட்டாள் மீனா.
“நீயெல்லாம் ஒரு அம்மா வா? என்னை எந்த விதத்துல கேவல படுத்தன்னு பாத்துகிட்டு இருப்பியோ? என்னை யார் கூடவாது சேத்து வச்சு பேசணும்? அதானே? நீ பேசாம இருக்குற ஒரு ஆள் உன் புருஷன் தான்”
“ஏய்”, என்ற படி வடிவு அவளை அடிக்க வர “என்ன ஏய்? என்ன இல்லாததை சொல்லிட்டேன் நான்? பஸ்ல போனா டிரைவர் இல்லைன்னா கண்டக்டர், ஆட்டோல போனா அவன் கூட, வேலைக்கு போனா அங்க உள்ளங்க கூட. காலைல அடி பட்டுருச்சுன்னு உதவ வந்தவங்க கூட வச்சு பேசுற? கூட ஒரு பொண்ணும் தானே வந்துச்சு? அது உன் கண்ணுக்கு தெரியலை?”, என்று ஆத்திரம் தீர கத்தி விட்டாள்.
அவள் பேச்சில் கோபமான வடிவு “உன் லட்சணம் தெரிஞ்சு தானே விட்டுட்டு போனான்? பின்ன உன்னை எப்படி நம்புறது?”, என்று கேட்டாள்.
“அவன் விட்டுட்டு போனது என் நடத்தையை வச்சி இல்லை. உன்னை வச்சு. உன் நடத்தையை வச்சு. இந்த ஊரே பேசுதே உன்னைப் பத்தி. அதனால தான் உன்னை மாதிரி நான் இருப்பேனோன்னு நினைச்சு விட்டுட்டு போய்ட்டான்”, என்று சொல்ல அடுத்த நொடி வடிவு அவளை அடித்து விட்டாள்.
“என்னையா பேசுவ? எவ்வளவு தைரியம்?”, என்று கேட்ட படி அவள் தலையை சுவரில் வைத்து முட்ட அனைத்து அடியையும் வாங்கிக் கொண்ட மீனா அடுத்து எதுவும் பேசாமல் முறைத்த படி இருக்க அக்கம் பக்கம் எல்லாம் கூடி விட்டார்கள். அம்மா மகள் போல எல்லாம் இல்லாமல் ஏதோ எதிரியைப் போல வடிவு பேச அதற்கு மீனா பதில் பேச என ஒரே சண்டையாக தான் இருந்தது. நடப்பதை பார்த்துக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு கையாலாகாத தகப்பன் அப்படியே ஈசி சேரில் அமர்ந்திருந்தார்.
மீனாவுக்கு வெறுத்து போனது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்க்க அவர்கள் பரிதாபமாக பார்க்கிறார்களா இல்லை அசிங்கமாக பார்க்கிறார்களா என்று கூட அவளுக்கு தெரிய வில்லை.
இங்கே சண்டை நடக்கும் போது அங்கே ராஜனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள் இருவரும்.
“உண்மையிலே அந்த பொண்ணுக்கு நிறைய ரத்தம் போயிருச்சு மாப்பிள்ளை. ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொன்னேன். அதும் வதனா வேற கூட வந்தா டா. அப்புறமும் அவளை தப்பா பேசுவாங்களா?”, என்று கேட்டான் தாமரை.
“ஆம்பளைன்னு எவன் வந்தாலும் அவனை வச்சு பேசும் தாமரை அந்த பொம்பளை. என்ன கூட அவளோட சேத்து வச்சு பேசிருக்குனா பாத்துக்கோயேன். எங்க அம்மா ஒரு நாள் செமயா திட்டி விட்டுருச்சு. உன் பொண்ணை பத்தி பேசுறத நான் கேக்க மாட்டேன். ஆனா என் மகன் பேரை இழுத்த ஆஞ்சி விட்டுருவேன்னு சொன்னதுல இருந்து என் கூட வச்சு பேசாது. இன்னொரு நாள் அதுக சாக கிடந்தப்ப நானும் அம்மாவும் தான் ஆஸ்பத்திரில தூக்கி போட்டோம். அதுனால கூட எதுவும் சொல்லாது”, என்று ஆரம்பித்தான் ராஜன்.