“கலை நீ ஸ்கூல்க்கு போ. வதனா நீ இவங்களை அதோ அங்க இருக்கு பாரு அந்த கிளினிக் கூட்டிட்டு போ. நான் பஸ்ஸை டிப்போல விட்டுட்டு வரேன்”, என்றான் தாமரை.

“சரி அண்ணா”, என்றவள் “வாங்க அக்கா”, என்று சொல்லி அவளை அங்கே அழைத்துச்  சென்றாள்,.

இவனும் வேகமாக பேருந்தை டிப்போவுக்கு கொண்டு சென்றான். அங்கே அவசரமாக எல்லாம் முடித்தவன் உடனே கிளினிக் நோக்கிச் சென்றான். அங்கே அவளுக்கு பர்ஸ்ட் எய்டு முடிந்திருந்தது.

டாக்டர் பீஸ் இருநூறு, மருந்து மாத்திரை முன்னூறு என மொத்தம் ஐநூறு வந்திருந்தது. இருவரிடமும் இருநூறு மட்டுமே கையில் இருந்தது. அழகு மீனா அக்கவுண்டில் இருக்கிறது தான். ஆனால் அவள் விழுந்ததில் ஃபோன் வேறு ஆப் ஆகி விட்டது. ஜிபே பண்ண அவளும் ஆன் செய்து பார்த்தும் அது அப்படியே இருந்தது. அவளுக்கு தெரிந்த ராஜனுக்கு கூட அழைக்க முடிய வில்லை.

அதனால் தான் வேறு வழி இல்லாமல் தாமரைக்காக காத்திருந்தார்கள். அவசரமாக வந்தவன் “என்ன ஆச்சு வதனா? டாக்டர் என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாலும் அவன் பார்வை அவள் காயத்தை வருடியது. அவளுக்கோ தர்மசங்கடமாக இருந்தது.

“காயம் ஆழம் தான் அண்ணா. ரெண்டு தையல் போட்டாங்க. கொஞ்சம் ரத்தம் போச்சு. ஊசியும் போட்டுருக்குறதுனால கொஞ்சம் மயக்கம் வர மாதிரி இருக்கும்ன்னு சொன்னாங்க,. நல்ல தூங்கணுமாம். அப்புறம் காயத்துல தண்ணி படக் கூடாதுன்னு சொன்னாங்க. பில் மட்டும் கட்டிருவியா?”

“நான் கொடுத்துறேன்”, என்றவன் கட்ட செல்ல “நான் நாளைக்கு உன் கிட்ட கொடுத்துறேன் வதனா”, என்றாள் அழகு மீனா,

“உங்க கிட்ட எப்ப இருக்கோ அப்ப கொடுங்க அக்கா”, என்று சொன்னாள் அவள்.

    அவன் வந்ததும் “அண்ணா இவங்களை வீட்ல விடணும்”, என்றாள் வதனா.

    “இல்லை, நான் போயிருவேன். ரொம்ப தேங்க்ஸ். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க”, என்றாள். அதற்கு மேல் அவர்களை தொல்லை செய்ய கஷ்டமாக இருந்தது.

    “எனக்கு வேலை முடிஞ்சிருச்சு. ஊருக்கு தான் போறேன். வரீங்களா? நான் உங்களை வீட்ல விட்டுறேன்”, என்றான் தாமரை.

    அவனுடன் வண்டியில் சென்று இறங்கினால் வீட்டில் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவள் அடுத்த நொடி தலையை உதறிக் கொண்டு “அதெல்லாம் வேண்டாங்க”, என்றாள்.

    “அவன் கூட மட்டும் போனா”, என்ற எண்ணம் லேசாக வந்தது தாமரைக்கு. அவன் மனசாட்சியோ “அவங்க ரெண்டு பேரும் ஒரே ஊர். அவன் அவளுக்கு தெரிஞ்சவன், நீ அப்படியா?”, என்று இடித்துரைத்தது.

    “உங்களை தனியா விட முடியாதுங்க”, என்று அவளிடம் சொன்னவன் “வதனா நீ அவங்களை மெதுவா கூட்டிட்டு வா. நான் ஆட்டோ பிடிக்கிறேன். ரெண்டு பேரும் அவங்களை வீட்ல விட்டுட்டு வந்துறலாம். அப்புறம் நீ காலேஜ்கக்கு போ. நான் வீட்டுக்கு போறேன்”, என்று சொல்ல அவளும் சரி என்று சொன்னாள்.

    அவனுடன் தனியே வீட்டுக்கு செல்வதற்கு வதனா இருந்தால் நல்லது தான் என்று எண்ணிக் கொண்டாள் அழகு மீனா.

    அவன் ஆட்டோவுடன் வந்ததும் இருவரும் ஏறினார்கள். கிளம்பும் முன் ஜூஸ் வாங்கி இருவருக்குமே கொடுத்தான்.

    முதலில் அழகு மீனா, நடுவே வதனா அடுத்து தாமரை மூவரும் அமர்ந்திருந்தார்கள். அழகு மீனாவுக்கு மருந்தின் வீரியத்தால் தூக்கம் வர அப்படியே பின்னால் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

    அவர்கள் ஊர் வந்ததும் “பாப்பா அவங்களை எழுப்பி விடு. வீடு எங்கன்னு கேக்கணும்”, என்று சொன்னதும் வதனா தான் எழுப்பி “அக்கா உங்க வீட்டுக்கு எப்படி போகணும்?”, என்று கேட்டாள்.

    “இன்னும் உள்ள தள்ளி போகணும். இதே ரோட்ல போங்க அண்ணா”, என்றாள் சோர்வாக.

    “தினமும் பஸ்ல இருந்து இறங்கி இவ்வளவு தூரம் நடக்கிறாளா?”, என்று எண்ணிக் கொண்டான் தாமரை.

    அவர்கள் வீட்டருகே சென்றதும் “அதோ அந்த வீடு தான்”, என்றாள்.

    வீட்டின் முன் ஆட்டோ சென்று நிற்க மூவரும் இறங்கினார்கள். வதனா அவளை கைத் தாங்கலாக பிடித்துக் கொள்ள “இருங்க நான் பணம் எடுத்துட்டு வரேன்”, என்றாள்.

    “அவங்களை மெதுவா கொடுக்க சொல்லு வதனா. இப்ப அவங்களை உள்ள கூட்டிட்டு போய் படுக்க வை”, என்றான்.

    வதனாவும் அவளை உள்ளே அழைத்துச் செல்ல அவர்களை  முறைத்த படி வாசலில் நின்றிருந்தாள் அவளது அன்னை வடிவு.

    அவள் கண்கள் வதனாவையும் பின்னால் நின்ற தாமரையையும் அளவிட்டது. என்ன நினைத்தாளோ மகளை தீயாக முறைத்தாள்.

    “கடவுளே இந்தக் அம்மா பார்வையே சரி இல்லை. இவங்க முன்னாடி எதுவும் பேசிறக் கூடாது”, என்று எண்ணிக் கொண்டு “வதனா நான் உள்ள போய்க்கிறேன். நீ கிளம்பு”, என்றாள்.

    அதற்கு மேல் என்ன செய்ய என்று தெரியாமல் “சரிக்கா பாத்துக்கோங்க”, என்றவள் அவள் அன்னையை கண்டு புன்னகைக்க அவளோ பேருக்கு கூட சிரிக்க வில்லை என்றதும் ஏதோ நிலைமை சரி இல்லை என்று உணர்ந்து அப்படியே சென்று விட்டாள்.

    தாமரை ஏதோ சொல்ல வர “அண்ணா நம்ம கிளம்பலாம். இங்க ஏதோ சரி இல்லைன்னு நினைக்கிறேன்”, என்று அவசரமாக சொல்லி விட்டு ஏறிக் கொள்ள அவனும் ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு ஏறிக் கொண்டான்.

    அவர்கள் ஆட்டோ சென்றதும் “புதுசா எவனையோ பிடிச்சிட்ட போல?”, என்று கேட்ட அன்னையை அரக்கியா இவள் என்று எண்ணி ஒரு பார்வை பார்த்தாள்.

    “என் நெத்தில இவ்வளவு பெரிய காயம் இருக்கு. அது உனக்கு பெருசா தெரியலை. இப்ப அவங்க வந்து விட்டுட்டு போனது தான் தப்பா தெரியுதா? உன் கிட்ட பேச எனக்கு ஒரு சதவீதம் கூட ஆவி இல்லை. நான் தூங்கணும்”, என்று சொன்னவள் அறைக்குள் சென்று பாய் விரித்து படுத்து விட்டாள். உடனடியாக தூங்கியும் விட்டாள்.

    ஆட்டோ மீண்டும் பேருந்து நிலையம் வர தன்னுடைய வண்டியை எடுத்து வந்தவன் தங்கையை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்று அவளது வகுப்பறையில் இருந்த ஆசிரியரிடம் சொல்லி அவளை விட்டு விட்டு ஊருக்கு கிளம்பினான்.

போகும் வழி எல்லாம் அழகுமீனா நினைவு தான். அவளைப் பற்றி தான் ஏதேதோ எண்ணினான். ஆனால் என்ன என்று கேட்டால் அவனுக்கே தெரிய வில்லை.

மதியம் போல வீட்டுக்கு சென்றவன் அன்னை கொடுத்த உணவை உண்ட படி நடந்ததை அப்படியே சொன்னான். அதற்கு பிறகு சிறிது நேரம் தூங்கி விட்டான். மாலை ஐந்து ஆனதும் அன்னை கொடுத்த டீயை குடித்தவனுக்கு மீண்டும் அவள் நினைவு வர ராஜனை அழைத்து விட்டான்.

    அன்றே அவனுக்கு அழைத்து அவளைப் பற்றி கேட்க நினைத்தான் தான். ஆனால் திடீரென்று ஒரு பெண்ணைப் பற்றி விசாரித்தால் தவறாக போகும் என்று எண்ணி தான் விட்டுவிட்டான்.

    ஆனால் இன்று அவனிடம் அவளைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறதே, அதனால் தைரியமாக அழைத்து விட்டான்.

    “ஏய் தாமரை எப்படி டா இருக்க? என்ன திடீர்னு கால் பண்ணிருக்க? அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?”, என்று ஆர்வமாக கேட்டான்

    “எல்லாரும் நல்லா இருக்காங்க டா, நானும் கால் பண்ணணும்னு நினைப்பேன். என் வேலையை பத்தி தான் உனக்கு தெரியுமே?”

    “சரி டா பரவால்ல சொல்லு, ஏதும் பிரச்சனையா?”, என்று கேட்டான்.

    “இல்ல நீ ரெண்டு நாள் முன்னாடி ஒரு பொண்ணை சாயங்காலம் வண்டில ஏத்திட்டு போன தானே? அந்த பொண்ணு..”

    “ஆமா டா, அவர் பேர் மீனா, என் எதிர் வீட்டு பொண்ணு தான். அவளுக்கு என்ன?”, என்று சிறிது அவசரமாகவே கேட்டான்.

    “இன்னைக்கு காலைல என் பஸ்ல தான் வந்தா. பஸ் ஸ்டாண்ட்ல இறங்கும் போது கீழே விழுந்துட்டா டா”

“ஐயோ, என்ன ஆச்சு?”

“வதனா தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா. ரெண்டு தையல் போட்டாங்க. அப்புறம் நானும் வதனாவும் அவளை வீட்ல கொண்டு போய் விட்டோம்”, என்று அவன் சொன்னதும் “ஐயோ நீயும் வந்தியா இங்க? உன்னை அவளோட அம்மா பாத்தாளா?”, என்று கேட்டான்.

    “ஆமா”, என்று தாமரை சொன்னது தான் தாமதம் “ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட”, என்றான் ராஜன். அதைக் கேட்டு அதிர்ந்து போனான் தாமரை.

தொடரும்..