அவர்கள் வரவில்லை என்றால் இவர்கள் மூவருக்கும் சேர்த்து சமைப்பாள். இப்போது வேறு வழி இல்லாததால் கிடந்த பாத்திரங்களை கழுவி போட்டாள். அப்போது அங்கே வந்த அவளது அத்தை “எனக்கு காலைல இடியாப்பம் செஞ்சு தரியா?”, என்று கேட்டாள். நலம் விசாரிப்பு கூட இல்லாமல் மெனு சொன்ன அத்தையை வெறித்துப் பார்த்தவள் கழுவுற மீனில் நழுவ தான் வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

    “ஆன்  அது, வீட்ல மாவு இல்லை. எனக்கு நேரமும் ஆகிருச்சு. மதியம் உங்களுக்கு ஸ்பெஷலா வேற ஏதாவது எடுப்பாங்க. அதனால நான் இன்னைக்கு சமைக்கலை. அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க. இடியாப்பம் கடைல வாங்கிக் கொடுப்பாங்க”, என்று சொல்லி விட்டு அப்படியே அறைக்குள் சென்று மாற்று உடை எடுத்தவள் குளிக்க சென்று விட்டாள்.

வனஜா வரவில்லை என்றால் ஏதாவது சமைத்து மதியத்துக்கு எடுத்துக் கொண்டு காலைக்கும் நான்கு வாய் வயிற்றுக்குள் போட்டு விட்டு தான் செல்வாள். ஆனால் இன்று காலை பட்டினி தான். மதியம் கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி கொண்டு கிளம்பி விட்டாள்.

    எப்போதும் செல்லும் பேருந்தில் தான் ஏறினாள். கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது அன்று நடந்ததை நினைத்து. ஆனால் அவமானம் அவளுக்கு புதிது இல்லையே.

    ஆனால் வேறு டிரைவர் அங்கே இருக்க கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டவள் ஏறி அமர்ந்தாள். அவள் ஏறி அமர்ந்ததும் வதனா அவள் பக்கத்தில் சென்று அமர அவளை ஒரு நொடி திரும்பி பார்த்த அழகு மீனா சிரித்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

    “அக்கா”, என்றாள் வதனா.

    “ஹான்”

    “சாரி கா, நேத்தே உங்க கிட்ட சாரி கேக்கணும்னு நினைச்சேன். ஆனா நீங்க வரலை”, என்று சொல்ல அவளை திகைப்புடன் பார்த்தவள் “நீங்க எதுக்கு சாரி கேக்குறீங்க?”, என்று கேட்டாள்.

    “முந்தா நேத்து அண்ணன் கொஞ்சம் அதிகமா சத்தம் போட்டுருச்சு”

    “அவங்க உங்க அண்ணனா?”

    “ஆமா, அவன் எப்பவும் இவ்வளவு கோபப் படுறவன் கிடையாது. அன்னைக்கு தான் அப்படி. ஏன்னு தெரியலை. அப்புறம் ரொம்ப வருத்தப் பட்டாங்க”

    “எனக்கு தெரியும் ஏன்னு”, என்று அழகு மீனா சொல்ல இப்போது வதனா அவளை திகைப்புடன் பார்த்தாள்.

    “அவங்க கோபப் பட்டதுக்கு காரணம் எனக்கு தெரியும், டிரைவர் வேலைன்னு நம்ம ஈஸியா சொல்லிருவோம். ஆனா நம்ம அத்தனை பேர் உயிரும் அவங்க கிட்ட தானே இருக்கு. அதுல கவனமா அவங்க இருக்கும் போது நான் அப்படி பண்ணினது தப்பு தான். ஆனா எல்லாரும் ஒரு மாறி பாக்கவும் கஷ்டமா போச்சு. ஆனா உங்க அண்ணா பேசினது எனக்கு பெருசாவே தெரியலை”, என்று சொன்னவள் மனதுக்குள் “நான் வாங்காத திட்டா? இதெல்லாம் ஒண்ணுமே இல்லை”, என்று எண்ணிக் கொண்டாள்.

    இருவரும் படிப்பு மற்றும் வேலையைப் பற்றி பேசிக் கொண்டே வர இருவருக்கும் நேரம் நன்கு சென்றது. அவளுடைய தங்கையையும் அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்.

    அன்று இரவு அனைவரும் வீட்டில் இருக்கும் போது வதனா அழகு மீனா பேசியதைப் பற்றிச் சொல்ல அவள் மேல் ஒரு மரியாதை உருவானது தாமரைக்கு.

    “நல்ல பொண்ணா தான் இருக்கு”, என்று அவன் அன்னையும் சொல்ல அவனும் அதை அத்துடன் விட்டுவிட்டான்.

    அடுத்த இரண்டு நாள் கழித்து சாயங்காலம் தான் அவன் அவளைப் பார்த்தான். அதுவும் அவள் அவனுடைய பேருந்தில் வரவில்லை. பேருந்தை தவற விட்டதால் என்ன செய்ய என்று விழித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது பார்த்து அவளது பக்கத்து வீட்டில் இருந்த ராஜன் அவனது அன்னையை பஸ் ஏற்றி விட வந்தான்.

“என்ன மீனா பஸ் விட்டுட்டியா?”, என்று கேட்டாள் ராஜனின் அன்னை.

“ஆமா அத்தை, கொஞ்சம் சென்டர்ல வேலை இருந்துச்சு. லேட்டா வந்துட்டேன் போல? பஸ் போயிருச்சு”

“அடுத்த பஸ்க்கு இன்னும் ஒண்ணறை மணி நேரம் ஆகுமே? என்ன பண்ண போற? வீட்டுக்கு போகவும் ரொம்ப நேரம் ஆகிரும்ல?”, என்று கேட்டாள்.

“ஆமா அத்தை வேற வழி இல்லை, நீங்க ஊருக்கா? மதி அக்காவை பாக்கப் போறீங்களா?”

“ஆமா மா, அவளுக்கு பிள்ளை பிறந்து ஆறு மாசத்துல போய் அவளை அங்க விட்டது. அப்புறம் அவ வரவே இல்லை. நமக்கு தான் அந்த சின்ன குட்டியை பாக்காம இருக்க முடியலை. அதான் போறேன். நீ ஒண்ணு பண்ணு ராஜன் கூட வண்டில போயிரு”, என்றாள்.

“ஆமா மீனா, வா போகலாம். நான் ஊருக்கு தான் போறேன்”, என்று அவனும் சொல்ல “சரி”, என்றாள். அவளுக்கும் வேறு வழி இல்லையே.

அன்னையை நினைத்து பயம் தான். ஆனால் ராஜன் என்பதால் கொஞ்சம் தைரியத்துடன் சென்றாள். பாதி தூரம் சென்ற பின்னர் தான் அவர்கள் பைக் தாமரை சென்ற பேருந்தை முந்தியது.

அப்போதும் “அண்ணா நான் வேணா பஸ்ல போயிறவா?”, என்று கேட்டாள்.

“எனக்கு வேற வேலை இருந்தா உன்னை பஸ்ல ஏத்தி விட்டுருவேன். வீட்டுக்கு தானே போக போறேன்”, என்று சொன்னவன் வண்டியை செலுத்த அவர்கள் போவது தாமரை கண்களில் விழுந்தது.

ராஜனும் அவனும் பள்ளியில் படித்த நண்பர்கள் என்பதால் “இந்த பொண்ணு என்ன ராஜன் கூட போகுது? அவனுக்கு தெரிஞ்ச பொண்ணா? விசாரிக்கணுமே”, என்று எண்ணிக் கொண்டான். அவர்கள் பைக் முந்தி வேறு செல்ல அவனும் பேருந்தை ஓட்டுவதில் கவனம் வைத்தான்.

அடுத்த நாள் காலை அழகு மீனா அவன் பேருந்தில் தான் வந்தாள். அவனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். அவனும் அப்படி தான்.

அவனது தங்கைகள் இருவரும் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் அவளுக்கு ஒரு சீட் கிடைத்தது. அதில் அமர்ந்ததும் வதனா அவளிடம் பேச ஆரம்பித்தாள்.

மூவரும் பேசிய படியே சென்றார்கள். ஆனால் சத்தமாக எல்லாம் பேச வில்லை. தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் அவர்கள் பேசுவதைக் கவனித்த தாமரை வேறு எதுவும் யோசிக்க வில்லை.

பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சீட்டில் அமர்ந்திருந்தான் தாமரை. அனைவரும் இறங்கியதும் பேருந்தை டிப்போவில் சென்று விட வேண்டும்.

தங்கைகள் இறங்குவதை அவன் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுடன் அழகு மீனாவும் இறங்கினாள்.

அப்போது பார்த்து பின்னால் இருந்த ஒரு குண்டான பெண் அழகு மீனாவின் செருப்பை மிதித்து விட பேலன்ஸ் இல்லாமல் அப்படியே முன்னால் விழுந்த அழகுமீனாவின் நெற்றியில் அங்கே கிடந்த கல்  மோதியது.

அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். ஒரு நொடியில் கூட்டம் கூடி விட “என்ன ஆச்சு?”, என்று பதறிய படி அவனும் வேறு ஒரு கண்டக்டரும் சென்று பார்த்தார்கள்.

நெற்றியில் இருந்து ரத்தம் கொட்ட அவளுக்கோ அதை விட அனைவரின் முன்னிலையில் இப்படி தரையில் கிடக்கிறோமே என்று தான் ஒரு மாதிரி இருந்தது.

அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு வதனா இருக்க கலை அழகுமீனாவை தன்னுடைய பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தாள்,

எல்லாரும் கொஞ்ச நகருங்க காத்து வரட்டும் என்று கண்டக்டர் சொன்னதும் அனைவரும் சற்று நகர இவர்களை தவிர வேறு யாரும் அங்கே இல்லை.