“வணக்கம் மேடம். ரொம்ப நல்லா இருக்கேன். இவர் தான் என்னோட கணவர்”, என்று அவள் சொன்னதும் அவர் அவளை குழப்பமாகப் பார்க்க பழைய வாழ்க்கைல இருந்து வெளிய வந்த பிறகு எனக்கு உயிரும் சரி வாழ்க்கையும் சரி இவர் தான் கொடுத்தார். என்னோட குழந்தையையும் என் கிட்ட வாங்கிக் கொடுத்துட்டார்”, என்று அவருக்கு புரியும் படி சொன்னாள். கணவன் என்றதும் மகேஷ் என்று நினைத்து விடக் கூடாதே?
“நல்ல முடிவு எடுத்திருக்க மா?”, என்று அவளிடம் சொல்லி விட்டு அவனிடம் “நீயும் தெளிவான முடிவு எடுத்திருக்க தம்பி. உன் மனசு எல்லாருக்கும் வராது. சரி என்ன விஷயமா வந்தீங்க? எதுவும் குட் நியூசா?”, என்று கேட்டார்.
“ஒரு வாரம் நாள் தள்ளி போயிருக்கு டாக்டர். காலைல கார்ட் செக் பண்ணுனோம். ரெண்டு கோடு தான் வந்துச்சு. அதான் உங்க கிட்ட காட்டிறலாம்ன்னு வந்தோம்”
“சந்தோஷம் மா. உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப. சரி தம்பி நீ கொஞ்ச நேரம் வெளிய இரு பா. நான் பாத்துட்டு சொல்றேன்”, என்று சொல்லி அவனை வெளியே இருக்க சொன்ன மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு அவர்கள் எதிர் பார்த்த நல்ல முடிவையே சொல்ல இருவர் முகமும் மலர்ந்து தான் போனது.
அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்த இருவரும் அங்கே அட்மிட் ஆகி இருந்த கல்யாணியை மறந்து பில் கொடுத்து விட்டு சந்தோஷமாக வெளியே சென்றார்கள்.
தன்னுடைய அன்னையைக் காண வந்த மகேஷ் கண்ணில் அவர்கள் விழ “சிஸ்டர் அவங்க எதுக்கு வந்துட்டு போறாங்க?”, என்று கேட்டான்.
“ரங்கநாயகி மேடமை பாக்க வந்துருக்காங்க. அந்த பொண்ணு கன்சீவா இருக்காங்க. அப்புறம் உங்க அம்மாவுக்கு தையல் போட்டுட்டு இருக்காங்க. செகண்ட் புளோர்ல இன்னும் கொஞ்ச நேரத்துல அட்மிட் பண்ணிருவாங்க”, என்று சொல்லி விட்டு அந்த பெண் வேறு வேலையைப் பார்க்க அன்னையைப் பார்க்கச் செல்லாமல் அப்படியே வெளியே வந்தான்.
“பைக்ல வந்துருவியா டி அழகி? ஆட்டோ இல்லைன்னா கார் பிடிக்கவா?”, என்று கவலையாக கேட்டுக் கொண்டிருந்தான் தாமரை. அவன் முகத்தில் அவ்வளவு அக்கறையும் பதட்டமும் மட்டும் நிறைந்து இருக்க அவனைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள் மீனா.
“உள்ள இருக்குறது தி கிரேட் செந்தாமரை வீட்டு வாரிசாக்கும்? வண்டில போனா அப்படி ஒண்ணும் ஆகிறாது? அது மட்டும் இல்லாம உங்க கூட வரது மட்டும் தான் எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு. சரி உங்க பொண்ணு தேடுவா. வண்டியை எடுங்க. கழுதை உங்களைப் பாக்கலைனா அத்தையையும் மாமாவையும் ஒரு வழி பண்ணும். ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க?”, என்று சொன்னவள் முகத்தில் அவ்வளவு காதல் சொட்டியது.
“என் பொண்ணு எப்பவும் அப்பா செல்லம் தான். செல்லம் கொடுத்தாலும் சரியா வளருவா டி. எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை ஏறு. சரி நீ கவனமா ஏறு”, என்று சொன்னவன் அவள் அமர்ந்ததும் வண்டியைக் கிளப்பினான்.
அவர்கள் வண்டி கிளம்பிச் சென்ற பிறகும் அவர்களையே பார்த்த படி இருந்தான் மகேஷ். இது அவன் பார்த்த மீனாவா என்று இருந்தது அவனுக்கு.
சரியான, அதே நேரம் சத்தான உணவு, அதுவும் சரியான நேரத்துக்கு வசந்தாவின் கவனிப்பில் எடுத்துக் கொள்வதால் லேசாக சதை போட்டு அதீத சந்தோஷத்தில் பல மடங்கு அழகு கூடிப் போய் இருந்தாள். அதுவும் அவள் சிரிப்பு. இது வரை அவன் பார்த்தே இராதது. ஏனோ முதல் முறையாக நல்ல வாழ்க்கையை கை நழுவ விட்டுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் அன்னையைக் காணச் சென்றான்.
அங்கே தலையில் பெரிய கட்டுப் போட்டு அமர்ந்திருந்தாள் கல்யாணி. அவள் அருகே அமர்ந்து அவளுக்கு டீ ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார் சோமசுந்தரம்.
அவன் உள்ளே சென்றதும் “அந்த பைத்தியத்தை கூட்டிட்டு வரலைல டா?”, என்று கேட்டாள் கல்யாணி.
“அம்மா”, என்று அரட்டினான். “அவ சொல்றதுல என்ன டா தப்பு இருக்கு? அவ பைத்தியத்துக்கு மாத்திரை போட்டுட்டு இருக்கா. அதை மறைச்சு உனக்கு கட்டிக் கொடுத்துருக்காங்க”, என்றார் சோமசுந்தரம்.
“அப்பா அது பைத்தியம் இல்லை, சும்மா மன அழுத்தம் தான். சுகர் பிரஷர் மாதிரி”
“இல்லை பைத்தியம் தான். என்னை எப்படி அடிச்சான்னு பாத்த தானே?”, என்று கேட்டாள் கல்யாணி.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க? ஏதோ ஒண்ணு விடுங்க”
“விடணுமா? அதை எப்படி விட முடியும்? நான் இந்த விஷயத்தை சும்மா விட மாட்டேன்”
“என்ன பண்ண போறீங்க? மறுபடியும் சண்டை போட்டு பஞ்சாயத்து அது இதுன்னு போகனுமா? இவளையும் அத்து விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனுமா?”
“ஏன், அதுல என்ன தப்பு இருக்கு?”
“தப்பு இருக்கா? ஊரே காரி துப்பும். போதும் இதோட எல்லாம் விட்டுறலாம். நான் அப்பவே கல்யாணம் முடிஞ்சதும் அந்த வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். நீங்க தான் பத்து நாள் கழிச்சு போன்னு சொன்னீங்க? அதான் இப்படி ஆகிருச்சு. இனி என் வாழ்க்கையை நான் பாத்துக்குறேன். நான் நாளைக்கே ஆர்த்தியை கூட்டிட்டு அந்த வீட்டுக்கு போறேன்”, என்று சொல்ல அவர்களுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
“அப்பா, அம்மாவை பாத்துக்கோங்க. நான் நைட் சாப்பாடு கொண்டு வரேன். அப்படியே தங்கச்சியையும் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி வெளியே வந்தான்.
அவன் வீட்டுக்கு வந்த போது அவன் தம்பி மனைவி போனைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் தங்கை டீவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா அம்மா எங்க அண்ணா?”, என்று கேட்டாள் அவன் தங்கை.
“அவங்க ஆஸ்பத்திரில இருக்காங்க? கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அட்மிட் பண்ணிருக்காங்க. ஆமா ஆர்த்தி எங்க?”
“அண்ணி உங்க ரூம்ல தான் இருக்காங்க போல?”
“சரி, நைட் ஆஸ்பத்திரிக்கு கிளம்பனும். நீ நைட் அம்மா கூட இரு. அப்படியே ஏதாவது சமைச்சிருங்க”
“சமைக்கணுமா? கடைல வாங்கிக்கலாம் அண்ணா?”, என்று சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தவன் “அப்ப வீட்டுல இருக்குற பொம்பளைங்க எதுக்கு இருக்கீங்க? ஏதாவது அவசரத்துக்கு வாங்கினா சரி? மத்த நேரம் செஞ்சா தான் என்னவாம்? எப்பவும் கடைல தான் திங்கணுமா? ஆர்த்திக்கு உடம்பு சரி இல்லை. நீங்க ரெண்டு பேரும் சேந்து தான் இன்னைக்கு நைட்க்கு சமைக்கிறீங்க? வெறும் ரசம் வச்சாலும் சரி தான்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சமைக்க சென்றார்கள். மகேஷ் அறைக்குள் சென்ற போது சோர்வாக அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.
“நீ ஓகே வா ஆர்த்தி?”, என்று கேட்டான்.
“ம்ம், அத்தைக்கு எப்படி இருக்கு?”
“அவங்களுக்கு பரவால்ல?”
“நாம நம்ம வீட்டுக்கு போகலாமா?”
“நாளைக்கே போகலாம் டா. எதுவும் யோசிக்காத. உன் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கும். உனக்கு பிடிக்காம இங்க இருக்க சொல்லி சொல்ல மாட்டேன்”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது. மகேஷ்க்கு இப்போதைக்கு இதுவே போதும் என்ற எண்ணம் தான் வந்தது. ஆனாலும் காலம் முழுக்க அன்னை மற்றும் மனைவி இடையே போராடுவது தான் அவன் வாழ்க்கை என்று புரிந்தது.
வீட்டுக்கு வந்த மீனாவும் தாமரையும் விஷயத்தை அனைவரிடமும் சொல்ல கேட்ட அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம்.
“அப்பா, எனக்கு தம்பி பாப்பா வரப் போகுதா?”, என்று கேட்டாள் மகிஷா.
ஆண் குழந்தை என்ற ஆசை அவனுக்கும் இருந்தாலும் எதிர்பார்ப்பை வளர்க்க கூடாது என்று எண்ணியவன் “தெரியலை டா, கடவுள் தம்பி பாப்பாவையோ இல்லை தங்கச்சி பாப்பாவையோ ரெண்டுல எதை உனக்கு தரப் போறாருன்னு. எதுவா இருந்தாலும் நீ தான் பாத்துக்கணும் சரியா?”, என்று சொன்னான்.
“நான் சாப்பாடு ஊட்டுவேன் சரியா?”
“பாப்பா கொஞ்சம் வளந்ததும் தான் எல்லாம் சாப்பிடும். அம்மா ஊட்டும் போது நீயே வாங்கி ஊட்டு சரியா?”, என்று கேட்க சரி என்று சொன்னவள் அவன் மடியில் ஏறி அமர்ந்து கொள்ள அவன் மனைவியும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளை வளைத்துப் பிடித்தவனின் விரல்கள் அவல இடையைப் பற்றியது. அப்படியே அவள் வயிற்றின் உள்ளே இருக்கும் அவன் குழந்தையை மெல்ல வருடியது. இனி வரும் நாட்களில் அவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் சில பிரச்சனைகள் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் எப்போதும் மீனா மீது வைத்த தாமரையின் காதல் மட்டும் மாறவே மாறாது. அந்த நம்பிக்கை அவளுக்குமே இருந்தது.