“அந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம். தோனுறப்ப நாங்க வரப் போறோம்? இங்க பக்கத்துல தானே?”, என்று அந்த அழைப்பை அப்படியே தவிர்த்து விட்டான் தாமரை. வடிவும் அதற்கு பிறகு கட்டாயப் படுத்த வில்லை.

சிறிது நேரத்தில் மீனாவின் பெற்றோர் கிளம்பிச் சென்றனர். குழந்தை உறக்கத்திற்கு சிணுங்க அவளை தூங்க வைத்து விட்டு மற்றவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மீனாவும் அங்கே தான் இருந்தாள். அவளையும் ஒரு குடும்ப உறுப்பினராக அமர வைத்து பேசிக் கொண்டிருப்பதே அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

கலையும் வதனாவும் அண்ணி அண்ணி என்று அழைப்பது வேறு அவளுக்கு தனி சந்தோஷத்தை தந்தது. “சரி காலைல சீக்கிரம் எந்திச்சிட்டோம்.  எல்லாரும் கொஞ்ச நேரம் தூங்குங்க”, என்று சொல்லி விட்டு சென்றாள் வசந்தா.

கலை மற்றும் வதனா அவர்கள் அறைக்குச் சென்று விட வேலாயுதம் ஹாலிலே படுத்து விட்டார். மீனாவும் அவனும் மட்டும் அங்கே இருக்க “உள்ள வா மீனா”, என்று முணுமுணுத்து விட்டு அவனது அறைக்குச் சென்றான்.

தயக்கம் மற்றும் சிறு கூச்சத்துடன் தான் அறைக்குச் சென்றாள்.  அவர்கள் மட்டும் அங்கே உறங்கிக் கொண்டிருக்க கட்டில் அருகே தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தான்.

உள்ளே வந்த மீனா “என்ன கீழ உக்காந்துட்டீங்க?”, என்று கேட்டாள்.

“பாப்பா தூங்குறா. அங்க உக்காந்து எழுப்பிற கூடாது. இங்க வா”, என்றான்.

அவளும் அவன் அருகே வந்து அமர அடுத்த நொடி சிறிதும் யோசிக்காமல் அவள் மடியில் படுத்து விட்டாள். அவள் திகைத்துப் பார்க்க அவள் வலது கையை எடுத்து பிடித்துக் கொண்டு அவள் விரல்களை நீவி விட்டான்.

அவன் செய்கையில் அவள் கட்டுண்டு இருக்க “காலைல எதுக்கு என்னோட அழகி அழுதாங்களாம்?”, என்று கேட்டான்.

“அது.. அது வந்து..”

“கண்டிப்பா யாராவது நம்ம கல்யாணத்தை விமர்சனம் தான் பண்ணிருப்பாங்க? அதானே?”

“ம்ம்”

“இங்க பாரு மீனா, நமக்கு கிடைச்சிருக்குறது ஒரு வாழ்க்கை தான். அதை இப்படி மாத்தி அமைச்சிகிட்டதும் நாம தான். இந்த வாழ்க்கை எப்படி இருக்கணும், சரியா தப்பா எல்லாம் முடிவு பண்ணுறது நம்ம கையில தான் இருக்கு. அடுத்தவங்க ஆயிரம் விமர்சனம் கொடுக்க தான் செய்வாங்க. அது எல்லாம் நம்ம காதுலே விழாத படி எல்லாம் நம்மால வாழ முடியாது. ஆனா அதை பெருசா கண்டுக்காம இருக்கலாமே? அவங்க சொல்றதுக்கு எல்லாம் நாம அழுதோம்னா நம்ம கல்யாணமே தப்பா ஆகிரும் டா”

“புரியுது. ஆனா டக்குன்னு அப்படி கேட்டதும் கஷ்டமா போச்சு. நான் பல்லைக் காட்டி உங்களை மயக்கிட்டேனாம்?”

“அவங்க பாதி சரியா தான் சொல்லிருக்காங்க?”

“என்னது?”

“நீ மயக்கினது உண்மை தான். ஆனா பல்லைக் காட்டி மயக்கல. அழுது தான் மயக்கிட்ட”, என்று சிரித்தவன் அவள் விரல்களில் முத்தமிட்டான்.

“என்ன பண்ணுறீங்க விடுங்க”, என்று சிறு கூச்சத்துடன் முணுமுணுத்தாள்.

“விடுறதுக்கா போராடி கல்யாணம் பண்ணிருக்கேன்?”, என்று சொன்னவன் கணவனுக்கே உரிய செல்ல சீண்டலில் ஈடுபட வெட்கத்துடன் அவனுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் உறங்கி விட அவன் தலையை வருடி விட்டுக் கொண்டிருந்தவளும் அப்படியே அமர்ந்த வாக்கிலே தூங்கிப் போனாள்.

ஐந்து மணி போல தான் இருவருக்கும் விழிப்பு வந்தது. அதற்கு பிறகு அனைவருக்கும் டீ குடிக்க என்று நேரம் நகர்ந்தது.

அன்றைய இரவில் அனைவருக்கும் கொஞ்சம் தடுமாற்றமாக தான் இருந்தது. என்ன தான் திருமணம் நடந்து விட்டாலும் வீட்டில் இரண்டு வயது பெண்களை வைத்துக் கொண்டு சங்கடம் தானே?

அனைவருக்கும் தனி அறை தான் என்றாலும் தாமரை மீனா இருவராலும் சாதாரணமாக பேச கூட முடிய வில்லை. யாரும் ஏதாவது நினைப்பார்களோ என்று பயமாக இருந்தது. அவளுக்கோ அவனிடம் பேசினால் தன்னை தவறாக நினைப்பார்களோ என்று நடுக்கமாக தான் இருந்தது. அதே நேரம் சந்தோஷமாகவும் இருந்தாள்.

ஏற்கனவே தாமரை அவள் வாழ்வில் வந்த பிறகு அது வரை இருந்த தனிமையும் நிராதரவான நிலையும் அவளை விட்டு அகன்றிருந்தது உண்மை.      இப்போது இத்தனை சொந்தங்கள் இருப்பது யானை பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் அவர்கள் பார்வையில் தவறாக எதுவும் செய்து விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள். அவன் சாதாரணமாக அழைத்தாலே அவள் விலகி விலகிச் செல்ல அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவன் உணர்வுகள் புரிய வில்லை என்றால் அவனுக்கும் கோபம் வந்திருக்குமோ என்னவோ?

            அன்றைய இரவில் வதனா மற்றும் கலை இருவரும் அறைக்குள் சென்று விட்டார்கள். போகும் போது குழந்தையி அழைக்க அவளோ அம்மா அப்பாவுடன் தான் தூங்க போறேன் என்று சொல்லி விட்டாள். “நீ போ வதனா பாப்பா எங்க கூட இருக்கட்டும்”, என்று சொன்னான் தாமரை. அதைக் கேட்டு மீனா அதிகமாகவே சந்தோஷப் பட்டாள். அதற்கு போலியாக அவளை முறைத்துப் பார்த்தான் தாமரை.

            சிறிது நேரத்தில் அவன் குழந்தையுடன் உள்ளே சென்று விட வசந்தாவுடன் கிடக்கும் மீதி வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

            “நீ போய் தூங்கு டா. நான் பாத்துக்குறேன்”

            “பரவால்ல அத்தை, பத்து நிமிஷம் ஆகுமா? முடிச்சிட்டு போறேன்”, என்று சொல்லி பாத்திரம் அனைத்தையும் கழுவிப் போட்டாள்.

முடிந்ததும் வசந்தா அவள் கையில் பாலைக் கொடுக்க “அத்தை இதெல்லாம்..”, என்று தடுமாறினாள்.

            “நீ இதை எதுவும் பெருசா எடுக்காத. வாழ்க்கைல நிறைய விஷயம் இயல்பா தான் இருக்கும். அதை தேவையில்லாததுன்னு யோசிக்க வேண்டாம். குட்டி கொஞ்ச நேரத்துல தூங்கிருவா. முதல் குழந்தை இருக்குற யாரும் இங்க வாழாம இல்லை. பாப்பாவுக்கு விளையாட ஒரு தம்பி வேணும்.  நீ அவனைப் பாரு”, என்று சொல்லி அனுப்ப சங்கடமாக தான் உள்ளே நுழைந்தாள்.

அவன் அவளுக்கு புதியவன் இல்லை தான். இரண்டு முறை முத்தம் கூட கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த தனிமை கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது. அறைக்குள் வந்த அவளைக் கண்டதும் அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

அதுவும் அவள் முகத்தில் இருந்த படபடப்பைக் கண்டவன் “குட்டி மா, உங்க அம்மாவ பாரேன். ஏதோ சிங்கத்து குகைக்குள்ள நுழையுற மாதிரியே பயந்துட்டு வாரா”, என்று சொல்லி சிரித்தான்.

குழந்தையும் சிரிக்க சிறிது நடப்புக்கு வந்த மீனா இருவருக்கும் சேர்த்தே பாலைக் கொடுத்தாள். இந்த பக்கம் தாய் அந்த பக்கம் தந்தை என முதல்முதலாக அழகான கூட்டுக்குள் படுத்திருந்த அந்த சின்ன குட்டியும் தாமரை சொன்ன கதையைக் கேட்ட படி தூங்கிப் போனாள்.

            அவள் தூங்கியதைக் கண்டவன் “அப்ப எதுக்கு டி அவ்வளவு சந்தோஷப் பட்ட?”, என்று கேட்டான்.

            “எப்ப?”, என்று கேட்டவளுக்கு சத்தியமாக எப்போது என்று தெரிய வில்லை.

            “அதான் பாப்பா நம்ம கூட படுக்க போறான்னு சொன்னதுக்கு? அவ இருந்தா உனக்கு பாதுகாப்பா? அப்படி உன்னை என்ன செஞ்சிறப் போறேனாம்?”

            “ஐயோ நான் அப்படி நினைக்கலை. எனக்கு உங்க கூட தனியா இருக்க பயம் இல்லை. ஆனா கலையும் வதனாவும் என்ன நினைப்பாங்களோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அதான்”

            “ஹம்”

            “கோபமா?”

            “இல்லை டி. ஆனா நீ பெருசா எதுவும் யோசிக்காத. எனக்கும் பொறுப்பு இருக்கு. சின்ன பிள்ளைங்க முன்னாடி உன் கிட்ட எந்த சில்மிஷமும் பண்ணிற மாட்டேன். ஆனா..”, என்றவன் அமைதியாக அவளைப் பார்க்க “ஆனா என்ன?”, என்று கேட்டாள்.

            “வெளிய தான் டிஸ்டன்ஸ் எல்லாம். இந்த ரூமுக்குள்ளே நீ என் கைக்குள்ள தான் இருக்கணும். வா கீழே போகலாம்”, என்று சொல்ல அவள் மறுப்பு எதுவும் சொல்ல வில்லை.