அவன் சொன்னதைக் கேட்டு சிறு சிரிப்பு தான் அவளுக்கு. ஏனோ இருவருக்குள்ளும் காதல் உணர்வு அதிகம் மலர்வதற்கு முன் கணவன் மனைவி என்ற நெருக்கம் அதிகரித்தது போல உணர்வு.
அவன் விரல்கள் அவள் இடையில் கோலமிட அதைத் தாங்க முடியாமல் அவள் ஒரு மாதிரி சங்கடமும் தவிப்புமாக அவனைப் பார்த்தாள். அந்த அழகு அவனை கொள்ளை கொண்டது.
அவளுடைய இதழில் முத்தமிடுவான் என்று அவள் எதிர் பார்க்க அவனோ அவளை விட்டு விலகி சோபாவில் அமர்ந்தவன் “இங்க வா”, என்று சொல்லி அருகில் அவளையும் அமர வைத்தான்.
அவள் ஆவலுடன் அவனைப் பார்க்க அவனோ “சரி நாளைக்கு என்ன பிளான்?”, என்று கேட்டான்.
“நாளைக்கு முழுக்க பாப்பா கூட மட்டும் தான் இருக்க போறேன். அதை விடுங்க, உங்க கிட்ட நிறைய கேக்கணும். என்ன நடந்துச்சு அவங்க வீட்ல? எப்படி பிள்ளையைக் கொடுத்தாங்க?”
“கால்ல பண்ணுறப்ப சொல்றேன் டி அழகி”
“நாளைக்கு ஹாஸ்டல் வேற காலி பண்ணனும் என்ன பண்ண?”
“நாளைக்கு எங்கயும் போகாத? நாளான்னைக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறேன். அப்ப உன் திங்க்ஸ் எடுத்துக்கலாம். ரெண்டு நாள் லீவ் மட்டும் போடு சரியா?”
“அத்தை மாமா எதுவும் சொல்ல மாட்டாங்களா எங்க பின்னாடியே அலையுறதுக்கு?”
“சொல்ல மாட்டாங்க டி. சொன்னாலும் நீ என்னைப் பத்தி மட்டும் யோசி. நான் மட்டும் தான் உனக்கு முக்கியம்”
“அப்படி சுயநலமா என்னால இருக்க முடியாது. உங்க வீட்ல உள்ளவங்க எல்லாரோட உணர்வுகளும் எனக்கு முக்கியம்”
“கண்டிப்பா அவங்க உன்னை வெறுக்குற மாதிரி என்னோட செய்கை இருக்காது சரியா?”, என்று கேட்க ம்ம் என்று முணுமுணுத்தாள்.
“நான் கிளம்பின அப்புறம் என்ன பண்ண போற?”
“போய்க் குளிச்சிட்டு பிள்ளை கூட தான் இருக்கணும். என்னால இன்னைக்கு தூங்க முடியுமானு கூட தெரியலை. நெஞ்சு முழுக்க சந்தோஷமா இருக்கு”
“சரி குளிக்க கஷ்டமா இருக்கும். நான் வேணா வரவா?”, என்று கேட்டவன் நமட்டு சிரிப்பு சிரிக்க “என்னது?”, என்று அதிர்வாக கேட்டவளுக்கு இவன் இப்படி எல்லாம் பேசுவானா என்று இருந்தது. இந்த மாதிரி பேச்சுக்கள் அவளுக்கும் புதியது என்பதால் அடிவயிற்றில் சில மின்னல்கள்.
“குளிக்க வைக்க தான் டி கேட்டேன். வேற எதுக்கும் இல்லை”, என்று வேறு சொல்ல அவள் ஆ என்று பார்த்தாள் அவனை.
“சரி விடு வரலை. நீயே குளிச்சிக்க. ஒரு நிமிஷம் உன் கையையாவது தரியா? கொஞ்ச நேரம் பிடிச்சிக்கிறேன்”, என்று சொல்ல வலது கையை நீட்டினாள்.
அவள் கையை பற்றிக் கொண்டவன் அவளைப் பார்க்க அவன் தொடுகையில் அவளோ தவிப்பாக அவனைப் பார்த்தாள்.
“உங்க அம்மா அப்பா வந்ததும் போக சொல்லிருவல்ல? எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு டி அழகி”
“ஆனா போய் தான் ஆகணும்? போக சொன்னா போய்ருவீங்களான்னு எனக்கு கேக்கணும் போல இருக்கு”
“நீ தானே டி உன் அம்மா அப்பா வந்த அப்புறம் போக சொன்ன?”
“அதான் கேக்குறேன்? போக சொன்னா போவீங்களா?”, என்று கோபமாக கேட்க அவள் தன்னை தேடுவது புரிந்தது.
“நீ தானே போக சொன்ன? வேண்டாம்னு நினைக்கிறது எனக்கு எப்படி தெரியுமாம்?”, என்று சிரித்த படி கேட்டான்.
“ஆமா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. நான் இதை நம்பனும்”, என்று அவள் வெடுக்கென்று சொன்னாள். அதை ரசித்துப் பார்த்தான் தாமரை.
“உன்னை அப்படியே கண் காணாத உலகத்துக்கு தூக்கிட்டு போயிரணும் போல இருக்கு டி அழகி”, என்று கிசுகிசுப்பாக கேட்க கேட்ட அவளுக்கு எப்படி இருக்குமாம்?
“யார் வேணாம்னு சொன்னதாம்?”, என்று அவளும் சீண்டலாக பதில் சொல்ல “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் டி”, என்றான்.
அவன் என்னவோ சாதாரணமாக தான் சொன்னான். ஆனால் அவளுக்கு தான் நினைவுகள் எங்கெங்கோ செல்ல அவள் முகம் சிவந்து போனது.
அவள் சிவந்த முகத்தை தன்னுடைய விரலால் அவன் வருடி அவளை சிலிர்க்க வைத்து ரசித்துக் கொண்டிருக்க பூஜை வேளை கரடியாக அவனை அழைத்தான் ராஜன்.
“சொல்லு டா கரடி, என்ன இந்த நேரத்துல?”
“கரடியா? புதுசா இருக்கு. சரி நீ எங்க இருக்க? மீனா வீட்டுக்கு போனியா? நான் இப்ப தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். அதான் என்ன நடந்துச்சுன்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன்”
“இரு வெளிய வரேன். மீனா வீட்ல தான் இருக்கேன்”, என்று சொன்னவன் “ராஜன் கிட்ட பேசிட்டு வரேன்”, என்றான்.
“நானும் வருவேன்”, என்று சொன்னவள் அவனைப் பார்க்க அவன் மறுப்பானா என்ன?
“வெளியே சென்றதும் “நீ இந்த நேரத்துல இங்க என்ன டா பண்ணுற?”, என்று ராஜன் கேட்க அப்போது தான் அவன் பின்னே வந்த மீனாவும் அவன் கண்களில் பட்டாள்.
நண்பன் தன்னை கரடி என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது ராஜனுக்கு. “நீ எப்ப மா வந்த?”, என்று கேட்டான்.
“மதியமே வந்துட்டேன், அண்ணா உங்களுக்கு தெரியுமா? பாப்பா என் கூட தான் இருக்கா. உள்ள தூங்குறா. இவங்க குழந்தையையும் வாங்கிட்டு வந்துட்டாங்க”, என்றாள்.
“ஏய் சொன்ன மாதிரி வாங்கிட்டு வந்துட்டியா? எப்படி டா கொடுத்தாங்க?”, என்று ஆராய்ச்சியாக கேட்டான். மீனாவும் அவன் பதிலுக்காக காத்திருக்க இருவருக்கும் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
அவன் சொல்லி முடிக்கும் போது மீனாவின் பெற்றோரும் வந்து விட அனைவரிடமும் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினான். அவன் போன பின்னும் அவன் போன பார்வையை பார்த்த படி நின்றாள் இப்போது விடையிருக்கும் அந்த விடுகதை. அவளது விடுகதைக்கு விடையானவன் தாமரை மட்டுமே?
அன்று இரவு அவளுக்கு அழைத்தான் தாமரை. “வீட்டுக்கு போய்ட்டீங்களா?”
“வந்துட்டேன் டி அழகி. நீ சாப்ட்டியா?”
“ஹம்”
“தூங்கலையா மா?”
“தூக்கம் வரலை”
“என்ன ஆச்சு?”
“உங்களை தேடுது”, என்று வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டாள்.
“ஏய் உசுப்பேத்தாத டி. நானே என்னை அப்ப கண்ட்ரோல் பண்ண முடியாம தான் விலகி வந்தேன். உன்னை விட்டு விலகி இருக்கவே தோணலை டி”
“யார் விலகிப் போக சொன்னதாம்??”, என்று அவள் பேச்சு நீள வெகு நேரம் பேசினார்கள் இருவரும்.
அடுத்த நாள் அவன் வேலைக்கு சென்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் பேசினான். அதற்கு அடுத்த நாள் மதியம் வேலை முடிந்ததும் மனைவி பிள்ளையை பார்க்க அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டான்.
இருவரும் அவன் வரவுக்காக காத்திருக்க மூவரும் அவளுடைய ஹாஸ்டலுக்கு கிளம்பினார்கள். அவனும் பிள்ளையும் வெளியே நிற்க அவள் மட்டும் உள்ளே செல்லும் படி இருந்தது.
எல்லா பொருளையும் எடுத்து வைத்தவள் அங்கிருந்த நோட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்க “புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாம் பெருசு இல்லை மா. டக்குன்னு சரியாகிரும். அன்பான புருஷன், அழகான குழந்தை இருந்தும் இப்படி நீ கோச்சிகிட்டு ஹாஸ்டல்க்கு வரணுமா? உன் புருஷன் கூட சமாதானம் ஆகி வாழ பாரு”, என்று அவர்களை கணவன் மனைவியாக எண்ணி ஹாஸ்டல் வார்டன் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“எங்களுக்கு கல்யாணம் ஆகலை இனி தான் ஆக போகுது”, என்ற விளக்கம் எல்லாம் அவளுக்கு கொடுக்க மனதில்லை. ஏன் கொடுக்க வேண்டும்? அவளைப் பொறுத்த வரை அவன் அவள் கணவன் தான். அது அவள் குழந்தை தான். அவர்கள் ஒரே குடும்பம் தான்.