ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் கை கழுவி விட்டு உண்ண அமர்ந்தான். அவன் தம்பி வேலையில் இருந்து வர வில்லை. மற்ற படி அனைவரும் அங்கு தான் இருந்தார்கள். அப்போது அங்கு வந்த அவனுடைய தம்பி மனைவி அவளுக்கான பார்சல் மட்டும் எடுத்துக் கொண்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள். மற்ற அனைவரும் எந்த கவலையும் இல்லாமல் சிரித்து பேசி படி உணவு அருந்த மகேஷ்க்கு தான் உணவு தொண்டையில் அடைத்த உணர்வு. ஆர்த்தியிடம் நாளை பேச வேண்டும் என்றும் என்ன ஆனாலும் அவளை விட்டுவிடக் கூடாது என்றும் அவன் மனது எண்ணிக் கொண்டது.
ஒரு வழியாக மீனாவும் தாமரையும் குழந்தையுடன் வீட்டுக்கு வரும் போது இரவு எட்டு மணி ஆகி இருந்தது. அவர்கள் வந்த போது அவளது தாயும் தந்தையும் வீட்டில் இல்லை. வீடு பூட்டி இருந்தது. எப்போதும் சாவி வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து அவனை உள்ளே அழைத்தவள் உள்ளே வந்ததும் அன்னைக்கு அழைத்தாள்.
“இங்க பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்கு வந்தோம் நானும் உன் அப்பாவும். நீங்க வந்துட்டீங்களா? தக்காளி சட்டினி வச்சிருக்கேன். தோசை ஊத்தி சாப்பிடுங்க”
“இல்லை வெளிய சாப்பிட்டோம்”
“சரி, அந்த தம்பி கிளம்பிருச்சா?”
“இல்லை, இருக்காங்க”
“ஒரு அரை மணி நேரம் இருக்க சொல்லு. நாங்க வந்துதுறோம்”, என்று சொல்லி போனை வைத்தாள் வடிவு.
குழந்தை அவன் தோளிலே தூங்கி வழிய “என்ன ஆச்சு? உன் அம்மா அப்பா எங்க?”, என்று கேட்டான்.
“கோவிலுக்கு போயிருக்காங்களாம். எல்லாம் அதிசயமா தான் நடக்கு”
“சரி பாப்பாவை தூங்க வை. வண்டில வரும் போதே தூக்கம் வந்துட்டு போல. சரி நீ கதவை பூட்டிக்கோ. நான் கிளம்புறேன்”
பிள்ளையை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டவள் “நான் அவளை படுக்க போட்டுட்டு வரேன். நீங்க அம்மா அப்பா வர வரைக்கும் இருப்பீங்களாம். அம்மா சொல்ல சொன்னாங்க”, என்றாள்.
“உன் அம்மா சொல்ல சொன்னது இருக்கட்டும். நீ சொல்லு நான் இருக்கணுமா? அவங்க பேச்சைக் கேட்டு எல்லாம் இருக்க மாட்டேன். உனக்காக வேணா இருக்கலாம்”, என்று சொல்லி சிரிக்க வெட்கத்துடன் அவனைப் பார்த்தவள் “எனக்கும் இருக்கணும்ன்னு தான் இருக்கு”, என்றாள்.
“மேடம் சொன்னதுக்கு அப்புறம் அப்பீல் ஏது? இருந்துட்டா போச்சு. சரி பிள்ளையை படுக்க வச்சிட்டு வா”, என்று சொல்லி லேசாக சிரிக்க அவளும் மென் சிரிப்புடன் உள்ளே சென்றாள்.
அடுத்த மூன்று நிமிடத்தில் வெளிய வந்தவள் “டீ ஏதாவது போடவா?”, என்று கேட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம். பாப்பா தூங்கிட்டாளா?”
“தூங்கிட்டா”
“சரி இங்க வா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னதும் அவன் அருகே வந்தவள் “அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும். கொஞ்சம் எந்திரிச்சு நில்லுங்க”, என்றாள்.
“என்ன டி ?”, என்றவன் எழுந்து நிற்க அடுத்த நொடி அவன் காலிலே விழுந்து விட்டாள். அவளுடைய இந்த செய்கையை அவன் எதிர் பார்க்க வில்லை.
இரண்டு எட்டு பின்னால் எடுத்து வைத்தவன் “ஏய் என்ன டி பண்ணுற? பைத்தியமா நீ?”, என்று பதட்டத்துடன் கேட்டான்.
“நீங்க எனக்கு என்ன பண்ணிருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியலை. ரொம்ப நன்றி”, என்றவள் அவனை அண்ணாந்து பார்க்க “ஏய் அழகி முதல்ல எந்திரி டி. ஒரு மாறி கஷ்டமா இருக்கு”, என்றவன் அவளை நெருங்கி தோள் தொட்டு எழுப்பி இமைக்காமல் பார்த்தான்.
அவளும் இரு கரம் கூப்பி லேசாக கண்ணீர் துளிர்க்க ஏக்கமாக அவனைப் பார்க்க அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் முகத்தை அவனுடைய மார்பில் புதைத்துக் கொண்டாள். அப்படியே தாய் பறவை குழந்தைகளை தன்னுடைய சிறகுகளுக்குள் காத்துக் கொள்வது போல அவளைச் சுற்றி அணைத்துக் கொண்டிருந்தவனின் மணம் நெகிழ்ந்து போய் இருந்தது.
அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவள் என்ன நினைத்தாளோ? இது வரை இருந்த சோகம் தீரும் படி கதறித் தீர்த்தாள். இத்தனை வருடங்களாக மனதுக்குள் தேங்கி இருந்த ஏக்கம், வலி, வேதனை மொத்தமும் கண்ணீராக அவன் மார்பில் வெடித்து சிதறியது. அவள் அழுவதை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. ஆனாலும் அழுதால் தான் அவள் மன பாரம் தீரும் என்னும் போது அவளை அழ விடுவது தானே சரியானதாக இருக்கும்.
ஆனாலும் அவன் விரல்கள் அவளை ஆறுதலாக வருடிய படியே இருந்தது. கூடவே “அழாத டி அழகி, உனக்கு நான் இருக்கேன். எப்பவும் உன் கூட உனக்காக இருப்பேன். மரணம் கூட உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது. நான் அந்த அளவுக்கு உனக்கு ஒண்ணும் செய்யலை டி. பஸ்ல உன்னைப் பாத்தேன். பிடிச்சிருந்தது. லவ் பண்ணுனேன். இப்ப கல்யாணம் பண்ண போறேன் அவ்வளவு தான். இதுக்கா இப்படி அழுவ? இன்னைக்கு அழுறது தான் உன் வாழ்க்கைல கடைசியா இருக்கணும். உன் கண்ணுல இனி கண்ணீரைப் பாத்தா என் நிம்மதி மொத்தமும் போயிரும் டி அழகி”, என்று அவன் உதடுகள் அவளுக்கான ஆறுதலையும் சேர்த்து சொல்லியது. அவன் என்ன தான் ஆறுதல் சொன்னாலும் அவள் மனதின் வலி தீரும் மட்டும் அழுதாள்.
“நீ என் உயிர் டி. எதுக்கு பிடிச்சதுன்னு தெரியலை, என் மொத்த சந்தோஷமும் உன் கிட்ட தான் இருக்குன்னு புரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் தீவிரமா முடிவு எடுத்தேன், அதுக்கு அப்புறம் நான் எதுவுமே யோசிக்கலை”, என்று சொன்னவன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவள் கண்ணீர் விட்டிருந்தது. ஆனால் அவனை விட்டு விலக வில்லை. அவனும் அவளை விலக்கி நிறுத்த வில்லை.
யாருமே இல்லாத அவர்களுக்கு கிடைத்த முதல் தனிமை மற்றும் முதல் தொடுகை சிறிது பனி சாரலாக தான் இருந்தது. சாதாரண அணைப்பு தான் என்றாலும் நேரம் செல்ல செல்ல இருவருக்குமே ஒரு தடுமாற்றம். அந்த நெருக்கம் இருவருக்கும் ஒவ்வாத உணர்வை எல்லாம் தர வில்லை. ஒரு ஜில்லிப்பைத் தந்தது மட்டும் நிஜம்.
தன்னுடைய மார்பில் இருந்த அவள் முகத்தை மட்டும் விலக்கிப் பார்த்தான். அந்த விளக்கு ஒளியில் அவள் முகத்தில் இருந்த வெட்கமும் பரவசமும் தெரிய அவனுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. அவன் உதடுகள் முதன்முதலாக அவள் நெற்றியில் பதிந்தது. அதற்கு அவள் கண்கள் மூடி கொண்டதே தவிர எந்த மறுப்பும் இல்லை என்றதும் அவளை ஆசையாக முத்தமிட ஆரம்பித்தான்.
நெற்றியில் பதிந்த உதடுகள் கன்னம் காது மூக்கு என பயணித்து அடுத்து எங்கே என்ற எதிர்பார்ப்பை அவளுக்குள் விதைத்தது. ஆனால் அடுத்த முத்தம் தராமல் அவன் அமைதியாக இருக்க கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.
அவனைக் கண்டு வெட்கத்துடன் சிரிக்க “ஏய் அழகி, உன்னை இப்பவே என் வீட்டுக்கு தூக்கிட்டு போயிறனும் போல இருக்கு டி”, என்றான் ஏக்கமாக.