வசந்தா மற்றும் வேலாயுதம் இருவரும் இந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. ஆனாலும் மீனாவின் அன்னை தந்தை மீது அவர்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை தான். அவளுக்காக தான் வந்தார்கள். எல்லாம் முறைப்படி நடக்க வேண்டுமே?
அனைவரும் அமர்ந்த பிறகு “நான் போய் டீ போடுறேன்”, என்றாள் மீனா.
“நீ இரு நான் போடுறேன்”, என்று சொன்ன வடிவு உள்ளே செல்லப் போக “கொஞ்சம் இருங்க மா. இப்ப எதுவும் வேண்டாம். கொஞ்சம் நேரம் ஆகட்டும். நீங்க வாங்க கொஞ்சம் பேசணும்”, என்றாள் வசந்தா.
மீனாவின் கண்கள் தாமரையைத் தேடியது. அத்தனை பேரையும் அனுப்பி வைத்து விட்டு அவன் எங்கே போனான் என்று லேசாக கோபமும் வந்தது.
“நேத்து எங்க பையன் வந்து பேசிருப்பான். அவன் எல்லா விஷயமும் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். உங்க சின்ன பொண்ணு மீனாவை எங்க பையனுக்கு கல்யாணம் பண்ண தான் கேக்க வந்துருக்கோம். எந்த தேவையில்லாத விஷயங்களையும் பேச வேண்டாம். சின்ன பிள்ளைக வாழ்ந்து பாக்கட்டுமே?”, என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தைச் சொன்னாள்வசந்தா.
“ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை முடிஞ்சு போச்சுனா அவ அப்படியே தேங்கி நிக்கணும்னு அவசியம் இல்லை தானே? நீங்களும் பழைய ஆளுங்க மாதிரி இருக்காம நம்ம பிள்ளைங்க வாழட்டும்ன்னு நினைச்சு கல்யாணத்துக்கு சம்மதிக்கலாமே? இனி இவளை எங்க பொண்ணு மாதிரி நாங்க பாத்துக்குவோம்”, என்று சொன்னாள் சீதா.
“எங்களுக்கு சம்மதம் தான். நாங்களும் ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம் உங்க மகனுக்கு கொடுக்கணும்னு. எங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை தேடி வரும் போது நாங்க எப்படி வேண்டாம்னு சொல்லுவோம்? கல்யாணத்தை உடனே கூட வச்சிக்கலாம்”, என்று வடிவு தன்னுடைய முடிவைச் சொல்ல அனைவருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம். மீனாவோ வடிவு மீதிருந்து கண்ணை எடுக்க முடியாமல் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவள் கண்கள் லேசாக கலங்கிப் போனது. நிச்சயம் ஆனந்தத்தில் மட்டுமே.
தாமரை வீட்டினருக்கும் வடிவு பேச்சில் திகைப்பு தான். கண்டிப்பாக அவர்கள் வீட்டில் மறுப்பார்கள். ஒரு பிரச்சனை வெடிக்கும் என்று அவர்கள் நினைக்க இவ்வளவு எளிதில் வடிவு சரி என்று சொல்லுவாள் என்று அவர்கள் எதிர் பார்க்க வில்லை.
அவர்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க “எங்களுக்கு அப்புறம் மீனா வாழ்க்கை என்ன ஆகுமோன்னு இப்ப தான் எங்களுக்கு தோணுச்சு. அவ உங்க வீட்ல சந்தோஷமா இருப்பான்னு நம்புறோம். உங்க இஷ்ட படி எப்படி வேணும்னாலும் கல்யாணத்தை வச்சிக்கலாம்”, என்று வடிவு மீண்டும் சொல்ல அனைவருக்கும் மனதில் நிம்மதி வந்தது. முக்கியமாக மீனாவுக்கு. அவள் இந்த சம்பந்தம் இப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் முடியும் என்று கனவில் கூட நினைக்க வில்லை.
ஆனால் இந்த மாற்றம் அவள் மருத்துவமனையில் அவர்களைப் பார்த்துக் கொண்டதும் நேற்று தாமரை அவர்களிடம் அவளுக்காக பேசியதும் தான் காரணம் என்று அவளுக்கு தெரியாதே.
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் அமைதியாக இருக்க “அண்ணி உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கு”, என்றாள் கலை.
அனைவரும் அவள் பக்கம் திரும்ப “ஆமா மா, உனக்காக என் மகன் ஒரு விஷயம் கொண்டு வந்துருக்கான். அதைப் பாத்தா நீ ரொம்ப சந்தோஷப் படுவ”, என்றாள் வசந்தா.
“என்னது அத்தை? அவர் வந்திருக்காரா?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் மீனா. மற்றவர்கள் ஆட்டோவில் வர அவன் வண்டியில் தான் வந்திருந்தான்.
“வதனா அண்ணாவுக்கு கால் பண்ணி வரச் சொல்லு”, என்று வசந்தா சொன்னதும் “சரி மா”, என்றவள் தாமரைக்கு அழைத்தாள்.
“சொல்லு வதனா உள்ள வரவா?”, என்று கேட்டான்.
“வா அண்ணா”, என்று சொன்னதும் போனை வைத்தவன் “குட்டி மா, அம்மா உள்ள தான் இருக்கா. பாக்க போகலாமா?”, என்று கேட்டான்.
“சரிப்பா”, என்று மகிஷா சொன்னதும் அவளைத் தூக்கிக் கொண்டான்.
“அம்மா என்னை தூக்குவாளா பா?”
“கண்டிப்பா டா”
“சாமி அம்மாவை எனக்காக திருப்பி கொடுத்துட்டாரா பா?”
“ஆமா டா”, என்று சொல்லும் போதே வீட்டு வாசல் வந்திருந்தது.
அவன் குழந்தையுடன் உள்ளே நுழைய ஆவலாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த மீனா அதிர்வாக அவர்களைப் பார்த்தாள். அவளால் நிற்க கூட முடிய வில்லை. அப்படியே தளர்ந்து அருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள். கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது. அவளுக்கு தான் அவள் குழந்தையை தெரியுமே? புகைப்படத்தில் அவளைப் பார்த்திருக்கிறாளே? ஆனால் சத்தியமாக அவள் கண்ணையே அவளால் நம்ப முடிய வில்லை.
“இங்க வா”, என்று கண்களால் அழைத்தான் தாமரை. தூணை விட்டவள் மிக மெதுவாக அவர்களை நெருங்கினாள். கண்களில் இருந்த கண்ணீர் அவர்களைக் கூட மறைத்தது.
“ஐயோ, என் பொண்ணு”, என்று கதறலுடன் அவர்களை நெருங்க “அம்மா கிட்ட போ டா குட்டி”, என்று சொன்னவன் குழந்தையை அவள் கரத்தில் கொடுக்க குழந்தையை மார்போடு அணைத்தவள் கதறிய கதறலில் அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கித் தான் போனது.
உலகில் எந்த பாசத்துக்கும் ஈடாக முடியாதது தாய் பாசம் என்று உணர்ந்த நொடி. மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடிக்க அன்னை அழுதாலும் மகிஷா அவளை விட்டு விலகவும் இல்லை. மீனாவைப் பார்த்து பயப்படவும் இல்லை. ஏனென்றால் அவளது அன்னையின் ஏக்கம் அவளுக்கு தானே தெரியும்?
அதனால் மகியைப் பொறுத்த வரைக்கும் அவள் அன்னை அவளுக்கு கிடைத்த பொக்கிஷம். அதனால் தாய் மார்பில் நிம்மதியாக இளைப்பாறினாள்.
குழந்தையை இறுக்கி அனைத்த மீனா “இந்த அம்மாவை மன்னிச்சிரு டா. உன்னை விட்டுக் கொடுத்துட்டேன்னு ஒவ்வொரு நாளும் எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தது. உன்னைப் பாக்க மாட்டோமான்னு ஏங்கிருக்கேன் டா செல்லம்”, என்றவள் அவள் முகம் முழுக்க முத்தமிட்டாள்,.
அதற்கு பின்னும் அவள் அழுது கொண்டே இருக்க அவர்களை நெருங்கிய தாமரை “என்ன மீனா இது? அழுதது போதும். இதுக்காக இல்லை. நீ எதுக்காகவும் அழக் கூடாது. அவ உன் பிள்ளை தான். இனி உன் கூட தான் இருப்பா. எங்கயும் போக மாட்டா. நீ அழுதா அவளுக்கு கஷ்டமா இருக்கும்”, என்று சமாதானம் செய்ய அடுத்த நொடி பிள்ளையோடே அவன் மார்பில் சாய்ந்தாள் மீனா. இரண்டு குடும்பமும் அங்கே இருக்கிறது என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
அவனும் அதிர்ச்சியின் உறைந்து தான் போனான். அவளது செய்கையை அவன் சத்தியமாக எதிர் பார்க்கவே இல்லை. ஏனோ கோடி ரூபாய் கொடுக்காத சந்தோஷத்தைக் கொடுத்தார்கள் அன்னையும் மகளும்.
அவன் கரங்களும் இருவரையும் அணைத்துக் கொண்டது. ஏனோ அவர்கள் மூவரையும் பார்க்கும் போது அனைவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். ஏனோ அவர்களை அவர்களுக்காகவே கடவுள் படைத்தது போல இருந்தது.
வடிவுக்கு தான் இன்னும் தன்னுடைய மகளை முழுதாக புரிந்து கொள்ள வில்லையோ என்று தோன்றியது. ஏனென்றால் அவள் வீட்டில் இருந்து வந்த போதும் சரி, டைவர்ஸ் கிடைத்த போதும் சரி, பிள்ளையை அவர்கள் தராத போதும் இப்படி கவலை இல்லாமல் இருக்கிறாளே என்று தான் நினைத்திருக்கிறாள். ஆனால் அவளுக்குள் இப்படி ஒரு சோகம் இருந்திருக்கிறது என்று யாருமே அறிய வில்லை.
அனைவரும் அவர்களை நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் அனைத்து பிடித்திருந்த தாமரைக்கு அவ்வளவு ஒரு நிறைவு. அதுவும் மீனா முகத்தில் இருக்கும் சந்தோஷத்தைப் பார்க்கும் போது அதை எப்போதும் வாட விடக் கூடாது என்று எண்ணம் வந்தது.
வதனா மூவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். “சரி சரி அழுதது போதும். பிள்ளை பயப்பட போகுது. அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடு மீனா”, என்றாள் வசந்தா.
அப்போது தான் இருக்கும் இடமும் சூழ்நிலையும் புரிய அவனை விட்டு விலகி நின்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க “தேங்க்ஸ் டி அழகி”, என்று சொல்லி கண்ணடித்தான். அவள் முகம் சிவந்து போனது.
அவனிடம் இருந்து பார்வையை திருப்பியவள் வசந்தாவிடம்“சரிங்க அத்தை”, என்று சொல்லி குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே வர “இங்க உக்காரு மீனா. நான் எல்லாருக்கும் சாப்பிட வாங்கிட்டு வந்துருக்கேன். இதை பாப்பாவுக்கு கொடு”, என்று ஒரு பையைக் கொடுத்தான் தாமரை.