அவள் நெகிழ்ந்து போய் இருந்தாலும் அதை கவனிக்காமல் “அதோ அங்க எனக்கு சாஞ்சிகக்கணும் போல இருக்கு”, என்றாள் அவன் மார்பை கை காட்டி.

            “இந்த இடம் உனக்கு தான் டி. கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வந்துறேன். கொஞ்சம் பொறு”, என்று சொல்ல “ம்ம்”, என்று சொன்னாள்.

            “ரெண்டாவது முறையா ரொம்ப நம்புறேன். ஏமாற மாட்டேன் தானே?”, என்று அவள் குரல் கலங்கிப் போய் வந்தது.

            “இதுக்கு எனக்கு பதில் சொல்ல முடியாது டி அழகி. நீ வாழ்ந்து பாத்து தான் சொல்ல முடியும். நான் சொல்ற பதில் பொய்யா கூட உனக்கு தோணலாம்ல? என் கூட வாழ்ந்து பாரு டி. ஏமாந்துட்டியா இல்லையானு கொஞ்ச வருஷம் கழிச்சு சொல்லு”, என்று சொல்லி முடித்து விட அவளும் எதுவும் கேட்க வில்லை.

            எப்போது கல்யாணம், அடுத்து என்ன செய்ய போகிறாய் என்று அவள் எதுவுமே கேட்க வில்லை. ஏனோ அவனே எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வந்தது அவளுக்கு.

அடுத்த நாள் காலையிலே குழந்தையைக் காண சென்று விட்டான் தாமரை. போகும் முன் “எல்லாரும் கிளம்பி இருங்க. குழந்தையை வாங்கிட்டு வந்ததும் கையோட மீனா அப்பா அம்மா கிட்ட பேசிறனும்”, என்று சொல்லி விட்டு தான் சென்றான். அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் மகேஷ் அவனை அமர வைத்து விட்டு “அம்மா பாப்பாவை கூட்டிட்டு வாங்க”, என்றான்.

கல்யாணி முறைத்துப் பார்க்க “நீங்க வேற படுத்தாதீங்க மா, கூட்டிட்டு வாங்க”, என்றான்.

அந்த அறையை ஒரு எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் தாமரை. அவளை புகைப்படத்தில் கூட அவன் பார்த்தது இல்லை. கல்யாணி அவளை அழைத்து வர துருதுரு கண்களுடன் அங்கே வந்தாள் மகிஷா.

குழந்தையைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி தான் தாமரைக்கு. அவள் அச்சு அசல் மீனாவை உரித்து வைத்திருந்தாள். அந்த குண்டு கண்களும் குட்டி இதழ்களும் அவளைத் தூக்கி அணைக்க ஆசையாக தான் இருந்தது அவனுக்கு. ஆனால் தான் அவளுக்கு புதிது என்னும் போது அவள் தன்னைப் பார்த்து மிரண்டு போவாளோ என்று பயமாக இருந்தது. அவளை நெருங்க அவ்வளவு தயக்கம் அவனுக்கு.

ஆனாலும் அவளைப் பார்த்து சிரித்தான். அவளும் அவனைக் கண்டு புன்னகைக்க “வா”, என்னும் விதமாய் இரு கரம் நீட்டி அழைத்தான். அவளும் அவனை நோக்கி சிறு தயக்கத்துடன் என்றாலும் எட்டு வைத்தாள்.

            அவள் அவன் அருகே வந்ததும் மண்டியிட்டு அமர்ந்து விட்டான் தாமரை. “பாப்பா”, என்றவன் அவள் கன்னத்தை வருட “அப்பா”, என்றாள். ஏனோ அந்த அழைப்பு உயிர் வரை தீண்டியது அவனை. இதை அவன் எதிர் பார்க்க வில்லை. சொல்லிக் கொடுக்கச் சொல்லி சொன்னான் தான். ஆனால் அது சாத்தியமில்லை என்று தான் எண்ணி இருந்தான்.

            அவன் ஆச்சர்யமாக மகேஷைப் பார்க்க “மகி அப்பா உன்னைக் கூப்பிட தான் வந்துருக்காங்க. போய் உன் பொம்மை எல்லாம் எடுத்து வை, அம்மா உனக்காக வெயிட் பண்ணுறாங்களாம். கிளம்பனும்”, என்றான் மகேஷ்.

            “சரி டேடி”, என்று சொன்ன மகிஷா தாமரை புறம் திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு உள்ளே ஓடி விட்டாள்.

            சிறு ரசனை கலந்த சிரிப்போடு, போன அவளைப் பார்த்துக் கொண்டிருந்த தாமரை மகேஷின் குரலில் தான் கலைந்தான்.

            “நீ சொன்ன படி அவளுக்கு சொல்லிக் கொடுத்துட்டேன் அதாவது நீ தான் அப்பானு. அவ அம்மாவும் உயிரோட இருக்கான்னு தான் சொல்லியிருக்கேன். அவளுக்கு இப்ப கொஞ்சம் புரியுற வயசு தான். அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததுனால கொஞ்ச நாள் அவளை இங்க தங்க வச்சிருக்காங்கன்னு தான் சொன்னேன். அவ அம்மா இருக்கான்னு சொன்னதுமே அவ சந்தோஷப் பட்டு இந்த பொய்யை ஏத்துகிட்டா. என்னை அவ டேடின்னு கூப்புடுறதுனால உன்னையும் அவளால ஈஸியா அப்பான்னு ஏத்துக்க முடியுது போல? கூட்டிட்டு போ. இனி அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”, என்று திமிராகவே சொன்னான் மகேஷ்.

            “இத்தனை வருஷம் அந்த குழந்தையை வளத்துருக்க. அதுவும் அவ உன்னோட சொந்த ரத்தம். அப்படி இருந்தும் எவ்வளவு ஈஸியா கூட்டிட்டு போன்னு சொல்ற? உனக்கு எல்லாம் அடி மனசுல வலிக்கல? அந்த அளவுக்கு ஈரம் இல்லாதவனா டா நீ? உன்னை எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கணும்னு தான் ஆசையா இருக்கு. ஆனா பெறாமலே என்னை அப்பாவா ஆக்கிருக்க. பாப்பா என்னை அப்படி கூப்பிட்டதும் அப்படியே சிலிர்த்துருச்சு. அதுக்காகவே உன்னை அப்படியே விட்டுட்டு போறேன். இனி எந்த காலத்துலயும் மீனா லைப்லயும் சரி குழந்தை விஷயத்துலயும் சரி நீ வரவே கூடாது. அவங்க ரெண்டு பேருமே இனி என்னோட சொத்து தான். உனக்கு புரியும்னு நினைக்கிறேன்”, என்று சொல்ல மகேஷ் தலையை மட்டும் அசைத்தான்.

            உள்ளே இருந்து பொம்மை பேகை தூக்கி கொண்டு வந்தாள் மகிஷா. கல்யாணி அவளது உடை அடங்கிய பையை தூக்கி கொண்டு வந்தாள்.

            “அப்பா இதை படி பா, வெயிட்டா இருக்கு”, என்று சொல்ல அனைவருக்குமே அவ்வளவு ஆச்சரியம். இவ்வளவு சீக்கிரம் அவனை அப்பாவாக ஏற்றுக் கொண்டது. முதல் முறை அவனைப் பார்க்கிறாள். ஆனாலும் எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் எப்படி அவனை தந்தையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது என்று வியப்பு தான்.

            “கொடு டா செல்லம் அப்பா, தூக்கிக்கிறேன்”, என்று சொன்னவன் அவளைக் தூக்கிக் கொள்ள தன்னுடைய சின்னக் கைகளை வைத்து தலையில் அடித்துக் கொண்டவள் அப்பா “பேக் தான் தூக்கணும், நீ என்னைத் தூக்குற?”, என்றாள்.

            அவள் செய்கையில் சிரித்தவன் “நான் உன்னையும் சேத்து தூக்குவேன் டா செல்லம்மா, அம்மா பாக்க போகலாமா?”, என்று கேட்டவன் அவள் குண்டு கன்னத்தில் முத்தமிட “மீசை குத்துது பா”, என்றாள்.

            “அப்பா நாளைக்கே மீசையை எடுத்துறேன் டா குட்டி”

            “வேண்டாம், அப்புறம் எப்படி நான் பிடிச்சு விளையாட?”, என்று சொல்ல “சரி டா அமுலு”, என்றான்.

            அவர்கள் இருவர் பேசிக் கொண்டிருப்பதை வீடே வேடிக்கை பார்த்தது. ஏனோ மகேஷ்க்கு முதல் முறை பொறாமை என்ற உணர்வு கூட வந்தது. ஆனால் அதைக் காட்ட கூட அவனுக்கு தகுதி இல்லையே?

            “அப்பா அந்த பேக்?”, என்று அவள் கேட்க “நாம புது டிரஸ் வாங்கலாம் டா குட்டி”, என்று சொன்னவன் அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் அவளைத் தூக்கி கொண்டு சென்று கொண்டே இருக்க அவளோ அவர்களை திரும்பி கூட பார்க்க வில்லை. அவள் திரும்பி பார்த்து டாட்டா சொல்ல கூட தாமரை விட வில்லை. அவளிடம் பேசிக் கொண்டே அழைத்துச் சென்று விட்டான்.

            “அம்மாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கா. எப்படி அவன் கூப்பிட்டதும் நம்மளைக் கண்டுக்காம போறா பாரு. நீ எதுக்கு டா அப்படி சொல்லிக் கொடுத்த? நீ தானே அவ அப்பா, அவனை எதுக்கு அப்பான்னு சொன்ன?”, என்று கோபமாக கேட்டாள் கல்யாணி.