காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம். சங்ககாலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகும். அத்தகைய மாவட்டத்தில் அழகாக வீற்றிருந்தது பொன்மலை என்ற அழகான கிராமம்.
தனக்கு சொந்தமான நிலம், தான் விதைத்த விதைகள் இன்று பயிராகி செழித்து பச்சை பசேலென்று காட்சி அழித்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ அந்த நெற்க்கதிர்கள் கூட அவனைத் தொட்டு தடவி இளைப்பாறிக் கொண்டது போல இருந்தது.
அந்த ஜில்லிப்பில் அவன் மனமும் குளிரத் தான் செய்தது. தன்னுடைய பயிர்களை ஏதோ குழந்தைகளைப் போல ரசித்து தடவிப் பார்த்தான். ஒவ்வொரு நெல் மணியும் யார் வயிற்றுக்குள் உணவாகச் செல்லும் என்று தெரியாது. ஆனாலும் அதை ரசிப்பவன் விவசாயி. இவனும் அப்படிப் பட்ட விவசாயி தான். பெயர் செந்தாமரை.
மடித்துக் கட்டிய வேட்டியை தொடை வரை ஏற்றிக் கட்டி இருந்தான். அணிந்திருந்த சட்டையை அங்கே இருந்த ஒரு வேப்ப மரத்தில் தொங்கப் போட்டிருந்ததால் கையில்லாத வெள்ளை பனியனும் வெள்ளை வேட்டியும் தான் அணிந்திருந்தான்.
வேலை இருந்திருந்தால் சாரம் அணிந்திருப்பான். இன்று ஒரு பார்வை மட்டுமே பார்க்க வந்திருந்ததால் தான் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்தான்.
அங்கு நேற்று மிச்சம் வைத்திருந்த சிறுசிறு வேலைகளை முடித்தவன் அன்றைய சமையலுக்கு என சில காய்கறிகளை பறித்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவனது ஹீரோ வண்டி வேப்பமரத்தடியில் வீற்றிருக்க அதில் காய்கறிப் பையை தொங்க விட்டவன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி பயணித்தான்.
செந்தாமரை படித்தது என்னவோ ஐ.டி.ஐ தான். ஆனால் சிறு வயதில் இருந்தே டிரைவிங் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். படித்து முடித்ததும் ஒரு மினி பஸ்சில் தான் வேலைக்குச் சேர்ந்தான். சில பல வருடங்கள் அதிலே தான் வேலை பார்த்தான்.
இப்போது கடந்த இரண்டு வருடமாக தான் அரசு பேருந்தில் வேலை கிடைத்திருக்கிறது. அதுவும் அவன் பொன்மலையில் இருந்து திருச்சி சந்திப்பு வரை செல்லும் பேருந்தில் தான் ஓடிக் கொண்டிருந்தான். மதியம் பன்னிரெண்டு மணிக்கு பஸ் ஏறினால் அடுத்த நாள் காலை பத்து மணிக்கு தான் அவன் இறங்க முடியும்.
அன்றைய நாள் விடுமுறை எடுத்து விட்டு அடுத்த நாள் மதியம் வேலைக்கு வரும் படி தான் அவனது தினசரி வேலை நேரம் இருந்தது. வீட்டில் இருக்கும் நேரங்களில் தோட்டத்துக்கு சென்று பார்த்துக் கொள்வான்.
செந்தாமரையின் தந்தை வேலாயுதம். அவனது தாய் வசந்தா. செந்தாமரைக்கு இரண்டு தங்கைகள். மூத்தவள் வதனா திருச்சியில் இருந்த கலைக் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறாள். இளையவள் கலையரசி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
செந்தாமரை தான் குடும்பத்துக்கு மூத்தவன் என்பதால் கொஞ்சம் பொறுப்பாகவே இருப்பான். அவனது அன்னையும் தந்தையும் நல்ல உழைப்பாளிகள். வேலாயுதம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் செல்கிறார். அவனது தாய் காட்டு வேலைக்கு செல்கிறாள். வெளியே வேலை இல்லாத நேரம் மூவருமே அவர்கள் தோட்டத்தை பார்த்துக் கொள்வார்கள். அறுவடை நேரம் அவனுமே லீவ் போட்டு விட்டு தோட்டத்துக்குச் செல்வான்.
சொந்த வீடு என்பதால் அவர்களுக்கு செலவும் அதிகம் ஆவதில்லை. ஓரு சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆடம்பரம் இல்லாத குடும்பம். அதனால் கடன் எதுவும் இல்லாமல் தொடரும் இயல்பான வாழ்க்கை, நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் அழகான குடும்பம்.
வயலில் இருந்து வீட்டுக்கு வந்தவன் அன்னையிடம் காய்கறியைக் கொடுக்க அவன் கையில் காபி டம்ளரைக் கொடுத்தாள் வசந்தா.
“பாப்பாங்க கிளம்பிட்டாங்களா மா?”, என்று கேட்டவன் அன்னை தந்த காபியை ரசித்து குடித்தான்.
“நீ வேலை பாத்த மினி பஸ் தான் சரியா எட்டு மணிக்கு வந்துருமே? அதனால போய்ட்டாங்க”
“அப்பா எங்க மா?”
“பஞ்சப்பூர்ல ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும்னு சொல்லுச்சுல? அதுக்கு என்ன என்ன வாங்கணும்னு அவங்க வீட்டுக்கு கேக்க போயிருக்கு. முடிஞ்சா இன்னைக்கு வேலையை ஆரம்பிச்சிரும். நீ குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்”
“சரி மா”, என்று சொன்னவன் காபியை குடித்து விட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான். அந்த வீட்டில் மூன்று அறைகள் உண்டு. ஒன்று அவனுக்கு மற்றொன்று அவனது அன்னை தந்தைக்கு. மீதி இருந்த அறையில் அக்கா தங்கை இருவரும் தங்கிக் கொண்டார்கள்.
இரண்டு தங்கைகள் மீது அவனும் அன்பாக இருந்தான். அவர்களுக்கும் அண்ணன் என்றால் உயிர் தான். எந்த பிரச்சனையும் இல்லாத நிறைவான குடும்பம் தான் அவனது குடும்பம்.
அவன் குளித்து முடித்தது வந்ததும் அன்னை கொடுத்த இட்லியை உண்டவன் அப்படியே அறைக்குச் சென்று உறங்க ஆரம்பித்தான்.
ஒரு ஒரு மணி நேரம் நிம்மதியாக தூங்கியவன் பின் மீண்டும் எழுந்து குளித்து விட்டு வேலைக்கு கிளம்பினான். அன்னையிடம் சொல்லி விட்டு கிளம்ப “சாப்பாடு கொண்டு போயேன் டா”, என்றாள் வசந்தா.
“காலைல சாப்பிட்டதே கம்முன்னு இருக்கு மா. இப்ப வேண்டாம். நான் வரேன்”, என்றவன் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு சென்றது அவனது டிப்போவுக்கு தான்.
அவனது நண்பன் கதிர் நடத்துனர் பையுடன் அங்கே தயாராக இருந்தான். இருவரும் வேறு வேறு ஊர் தான். ஆனால் ஒரே பேருந்தில் ஓட்டுநர் நடத்துநராக இருவரும் பணி புரிந்ததில் இருந்து அழகான நட்பு இருவருக்கும் மலர்ந்தது.
“சாப்பிட்டியா டா?”, என்று கேட்டான் தாமரை,
“அதெல்லாம் ஒரு பிடி பிடிச்சாச்சு. சரி கையெழுத்தை போட்டுட்டு யூனிபார்ம் மாத்திட்டு வா, கிளம்பலாம்”, என்றான்.
சரி என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவன் அங்கே இருக்கும் புரசிஜர் எல்லாம் முடித்து விட்டு திருச்சி மட்டும் அல்லாமல் உலகத்துக்கே முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கி விட்டு பேருந்தை எடுத்தான்.
அவன் பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை என்பதால் அதிக கவனத்துடன் இருப்பான். இப்போதைய உலகில் நாம் சரியாக சென்றாலும் ஆபத்து நம்மை நோக்கி வரத் தானே செய்கிறது? அதுவும் டிரைவர் என்னும் போது அத்தனை பயணிகளின் உயிரும் அவனை நம்பி இருக்கிறதே.
வெயில் வாட்டி வதைத்தாலும் அவன் முகம் புன்னகையுடன் தான் இருந்தது. பிடித்த வேலை பார்த்தால் வருமே அப்படி ஒரு நிறைவு. மனதில் அப்படி ஒரு திருப்தியும் அமைதியும் இருந்தது அவனுக்கு.
தமிழ் நாட்டுக்கே உரிய கோதுமை நிறம் தான். ஆனால் கருமையான சிகையும் திருத்தமான முகமும் அடர்ந்த புருவமும் லேசாக சிவந்த உதடுகளும் என அழகாக இருந்தான். பேருந்தில் இருந்த கண்ணாடியில் பார்த்து தன்னுடைய முகத்தையும் தலை முடியையும் சற்று திருத்திக் கொண்டான்.
வயது பெண்களை சைட் அடிக்க வைக்கும் ஆணழகன் தான். அவனை சைட் அடிப்பவர்களும் உண்டு. ஆனால் அவன் இது வரை யாரையும் நிமிர்ந்து பார்த்தது இல்லை. பார்க்கும் படியான சூழ்நிலையும் வர வில்லை. அவன் பேருந்தில் வருபவர்களை பெரியவர்களாக இருந்தால் அக்கா என்பான், சிரியவர்களாக இருந்தால் பாப்பா என்பான்.
அதுவும் அவனது பேருந்தின் பேனட்டில் அமரலாமா என்று கேட்பதற்கு தான் பெண்கள் அவனிடம் பேசுவார்கள். மற்ற படி அமைதியாக தான் வண்டியை செலுத்துவான். அவனுக்கு கவனம் சிதறக் கூடாது என்று நினைப்பான்.
டிப்போவில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்று நிறுத்தினான்.