“இதை அவனோட வீடுன்னு யாருடா சொன்னது? இது நான் பிறந்து வளர்ந்த வீடு, என்வீடு. இந்த வீட்டுமேல இருந்த என்னோட உரிமையை நான் விட்டுக்குடுத்ததால தான், வீடு அவனோட அப்பாவுக்கு போச்சுது. இன்னைக்கு அவங்கூட பிறந்த இரண்டு அப்பாவி பொட்டப்பிள்ளைங்களும், அவனோட அம்மாவும் இந்த வீட்டு மேல இருந்த அவங்க உரிமையை விட்டுக் கொடுத்ததால தான் வீடு அவனோட பெயர்ல இருக்கு. சட்டப்படி இந்த வீட்டுமேல இருந்த என்னோட உரிமையை விட்டுக் கொடுத்ததால இதை என்வீடு இல்லைன்னும், என்னை இங்க வரக்கூடாதுன்னும் சொல்ல அவனுக்கு உரிமைக் கிடையாது. வேணும்னா அவனோட சுயசம்பாத்தியத்துல ஒரு வீட்டை கட்டிட்டு, அங்க என்னை வராதன்னு சொல்லட்டும். அப்போ அவன் வார்த்தைக்கு நான் கட்டுப்படுறேன்.” தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து அமர்ந்தபடி அழுத்தம் திருத்தமாக சொன்னார் வாசுகி.
ஆமாம்… தற்சமயம் வீடு அருணின் பெயரில் தான் இருக்கிறது. தகப்பன் இறந்த பிறகு, தொழில் தொடங்குவதற்காக இருந்த ஒரே பெரிய சொத்தான வீட்டை வங்கியில் அடமானம் வைக்க முயன்றான் அருண். வேதாச்சலம் இறந்து போனதால் சொத்தின் உரிமையாளர்களாக அம்மாவும் அவனுடைய இரண்டு தங்கைகளும் அவனோடு சேர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லியது வங்கியின் சட்டதிட்டங்கள்.
“உங்களையெல்லாம் பேங்குக்கு எங்கூட கூட்டிட்டு அலைய முடியாது. என் பெயருக்கே வீட்டை எழுதிக்கொடுத்துடுங்க.” அருண் சொல்ல, எப்போதும் போல முரண்டு பிடித்தாள் காவேரி. அவளை சமாதானப்படுத்தி தங்களோடு சேர்த்து கையெழுத்து போட வைத்திருந்தார்கள் துளசியும் சுலோச்சனாவும்.
வாசுகியின் வார்த்தைகளில் அருணின் தன்மானம் பெரிதாக அடிவாங்கியது. இருக்காதா பின்னே! நேற்று குமரன் இது உன் வீடு இல்லை என்று சொல்லியிருக்க, அதே வார்த்தைகளை இன்று அத்தையும் சொல்லிவிட்டாரே. என்றாலும், தன் உணர்வுகளை சாமார்த்தியமாக மறைத்தவன்,
“உங்களை இங்கே வரக்கூடாதுன்னு நான் சொல்லலை. என்விஷயத்துல அவசியம் இல்லாம தலையை நுழைக்காதீங்கன்னு தான் சொல்லுறேன்.” உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.
“அதாவது, உன்னை யாரும் கேள்விகேட்கக் கூடாதுன்னு சொல்லுற, அப்படித்தானே? என்னால அது முடியாது டா, உன் அப்பா ஸ்தானத்தில இருந்து நான் கேள்வி கேட்பேன்.” என்ற வாசுகி,
“ம்ஹும்… அவனும் ஒழுங்கா இருந்து, உன்னையும் கேள்விகேட்டு வளர்த்திருந்தா தான் இன்னைக்கு பிரச்சினையே இல்லையே.” பெருமூச்சு விட்டபடி சலித்துக்கொண்டார்.
அதற்கு மேலும் அங்கேயிருந்து அவரோடு வார்த்தையாட விரும்பாத அருண், “சாப்பாடு எடுத்து வைங்க” என்று அம்மாவுக்கு உத்தரவு போட்டபடியே எழும்பினான்.
மகனின் வார்த்தைகளை கேட்டவுடன், அடித்து பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பினார் சுலோச்சனா.
“நீ உக்காரு சுலோ, அவன் சொன்ன உடனே அடிமைமாதிரி அவன் பின்னாடி ஓடுறதை மொதல்ல நிறுத்து.” தம்பி மனைவியை அதட்டினார் வாசுகி.
“அண்ணி, அருண் சாப்டுட்டு வந்துடட்டுமே.” மெதுவாக சொன்னார் சுலோச்சனா.
“மொதல்ல உன்னைத்தான் கொல்லுவேன். இன்னைக்கு ஒருநாளு ஒருநேரம் உன் பிள்ளை சாப்பிடலைன்னா ஒன்னும் ஆகிடாது. மரியாதையா உக்காருங்க ரெண்டு பேரும்.” வாசுகி அதட்ட மறுபேச்சில்லாம் உக்கார்ந்து விட்டார் சுலோச்சனா. அவர் மகனோ மரம் போல அப்படியே நின்றிருந்தான்.
“உக்காரு டா, உங்கிட்ட நான் பேசணும்.” கிடைத்த சந்தர்ப்பத்தை விட வாசுகி தயாராக இல்லை.
“எனக்கு உங்ககூட பேச விருப்பமில்லை.” முகத்திலடித்தார் போலச் சொன்னான் அருண்.
“ஏன்? உன் பம்மாத்து வேலை எல்லாம் வெட்டவெளிச்சமாகிடும்னு பயப்படுறியா?” நக்கல் அடித்தார் வாசுகி.
“பயமா? அது இந்த அருண் இரத்தத்திலயே கிடையாது. என்ன கேட்கணுமோ கேளுங்க.” அத்தையின் நக்கல் உசுப்பேற்ற எனக்கென்ன பயம் என்ற ரீதியில் உட்கார்ந்து விட்டான்.
“வீட்டை பேங்க்லயிருந்து திருப்பி எடுக்க என்ன பண்ணப்போற? இதோ கல்யாணத்துக்கு தயாரா இரண்டு பொட்டப்பிள்ளைங்க இருக்காங்களே, அவங்களுக்கு என்ன பண்ணப்போற? உன் எதிர்கால பிழைப்புக்கு என்னப் பண்ணப்போற?” ஒன்றன்பின் ஒன்றாக கேள்விகளை அடுக்கினார் வாசுகி.
“வீட்டையும், என்னோட எதிர்காலத்தையும் நான் பாத்துக்கிறேன். பொம்பிள்ளை பிள்ளைங்க வாழ்க்கைக்கு அவங்களை பெத்த அம்மா இருக்கும் போது நான் ஏன் பொறுப்பேத்துக்கணும்?” அலட்சியமாக சொன்னான்.
“அதாவது தங்கச்சிங்களோட பொறுப்பை நீ ஏத்துக்க மாட்ட, ஆனா மாப்பிள்ளை மட்டும் நீ கை காட்டுறவனா தான் இருக்கணும். அப்படித்தான?”
“ஆமா.” கொஞ்சம் கூட குற்றஉணர்ச்சி இன்றி வந்தது பதில்.
‘மகனா இப்படி பேசுவது?’ சுலோச்சனாவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. மகனின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் அந்த பெண்மணி அப்படியே உறைந்து போய்விட்டார் என்று சொன்னால் கூட மிகையாகாது. துளசிக்கும் அதிர்ச்சியே. காவேரியோ இந்த வார்த்தைகள் உன்னிடமிருந்து வரவில்லை என்றால் தான் அதிசயம் என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள்.
“ஹா…உம்பிள்ளை சொன்னதை கேட்டியா சுலோ? இதுலயிருந்தே தெரிஞ்சுக்கோ உம்பிள்ளையோட லட்சணத்தை.” கேலி போலச் சொன்னாலும் இந்த பையன் இத்தனை சுயநலமாக இருக்கிறானே என்ற கவலை தான் வாசுகியிடமும்.
“சரி, வீட்டு விஷயத்துக்கு வா. அதை எப்படி திருப்பி எடுப்ப?” இன்று ஒரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில், விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கினார் வாசுகி.
“நீங்கதான் முடியாதுன்னு சொல்லிட்டீங்க இல்ல. நான் எப்படியோ எடுத்துக்குறேன். அதைப்பத்தி உங்களுக்கு என்ன?” திமிராக வந்தது பதில்.
“எப்படியாவதுன்னா எப்பிடி? அதை எனக்கு சொல்லு. உனக்கு ஏதாவது வெளியே இருந்து பணம் வரவேண்டி இருக்கா?” அவனுடைய பதிலை அலட்சியபடுத்தியபடி கேள்வியைத் தொடர்ந்தார் வாசுகி.
“இல்ல.” வேண்டாவெறுப்பாக வந்தது பதில்.
“அப்புறம் எப்படி?”
“அதுதான், பத்துகாடு கிடக்குதுல்ல, அதை வித்துட வேண்டியது தான்.” அலட்சியமாக சொன்னான்.
“எது… உங்கம்மாவுக்கு அவ பிறந்த வீட்டுலயிருந்து சீதனமா நிலம் குடுத்தாங்களே, அதையா?” அதிர்ச்சியில் கண்களை விரித்தார் வாசுகி.
“ஆமா.”
“ஆனா, அதுவும் காணாதேடா நீ பேங்ல வச்சிருக்குற கடனுக்கு.”
“மிச்சமீதிக்கு அவங்க மூனு பேருகிட்டயும் இருக்குற நகைகளை வாங்க வேண்டியது தான்.” இன்னும் சிறிதுநாட்களில் வீட்டிலுள்ள பெண்களிடம் இந்த விஷயமாக பேசித்தான் ஆகவேண்டும். அது இந்த பொழுதாக இருந்து விட்டு போகட்டுமே என்ற எண்ணம் அருணுக்கு. எனவே தயக்கமின்றி சொன்னான்.
“அதுக்கு என்ன செய்ய முடியும்? வீட்டைத் திருப்பணும்னா எல்லாத்தையும் எனக்கு தந்தா தான் முடியும். இல்லைன்னா பேங்க்காரன் ஏலம் விட்டுட்டு போயிடுவான். ரொம்ப அசிங்கமா போயிடும்.” கொஞ்சம் கூட கூச்சமே இல்லை அருணின் வார்த்தைகளில்.
“அதாவது அப்பாவழி தாத்தன் சொத்துலயும் இந்த பிள்ளைங்களுக்கு எதுவும் கிடையாது. அம்மாவழி சொத்துலயும் இந்த பிள்ளைங்களைக்கு எதுவும் கிடையாது. அது போதாதுன்னு அவங்க மாடு வளர்த்து, பால் கறந்து சீட்டுநாட்டைப் போட்டு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சிருக்குற நகைகளையும் உங்கிட்ட தந்துடணும், அப்படித்தானே?” கோபமாக வாசுகி கேட்க, பதிலில்லை அருணிடம்.
“சரி, போகட்டும். வீடு கைக்கு வந்துடும். அப்புறம் புவ்வாவுக்கு என்ன பண்ணுறதா ஐடியா. அதையும் கிரிஸ்டல் கிளியரா திட்டம் போட்டு வச்சிருப்பியே. சொல்லு கேட்போம்.” அப்படியே எதிரில் இருப்பவனை கன்னம் கன்னமாக அறைந்து தள்ளும் ஆத்திரம் வந்தாலும், எதுவரை தான் போகிறான் பார்ப்போம் என்று தன்னையும் தன் கைகளையும் கட்டுப்படுத்திக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் வாசுகி.
“இப்போ ஒரு பிரைவேட் பேங்க்ல தான் வீடு இருக்குது. அங்க ஏகப்பட்ட ரூல்ஸ் போடுறானுங்க, வட்டியும் அதிகம். அதே கவர்ண்மென்ட் பேங்க்ல வட்டியும் கம்மி, இவங்க அளவுக்கு பெருசா ரூல்ஸ்ஸும் இல்ல. அதனால வீட்டைத் திருப்பி, கவர்ண்மென்ட் பேங்க்ல மறுபடியும் லோன் எடுத்து பிஸினெஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். என்ன பிஸினெஸ் செய்யலாம்னு கூட முடிவு செய்தாச்சு. இந்த தடவை சொதப்பிடாது. கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்…” கண்கள் மின்ன அருணாச்சலம் சொல்லிக்கொண்டே செல்ல,
“அப்பவும் தொழிலதிபராத்தான் ஆகணும். அடிமட்டத்துலயிருந்து உழைச்சு மேல வரணும்னு எண்ணம் கொஞ்சம் கூட இல்லைல்ல…” இதழ்கள் வெறுப்பில் நெளிய கேலி செய்தார் வாசுகி.
“ஏன்? ஒருதடவை தோத்தா, எல்லா தடவையும் தோத்துதான் போவேனா? என்னை அண்டர்எஸ்டிமேட் பண்ணுற வேலையை எல்லாம் வச்சிக்காதீங்க.” சிலிர்த்துக் கொண்டு சண்டைக்கு வந்தான் அருண்.
ஒருதடவையா? பொறியியல் படிப்பில் தேர்ச்சியாகாமல், கல்லூரியை விட்டு வெளியே வந்தவன், பலதடவைகள் சொந்த தொழில் செய்கிறேன் பேர்வழி என்று கையில் இருந்த சொத்துக்களை எல்லாம் தொலைத்தது தானே மிச்சம். இப்போது மிஞ்சி இருப்பது அருண் பத்துக்காடு என்று சொல்லும் வயல்காடும், வீடும் தான். அதில் வீட்டை எடுத்தால் வயல் இல்லை. வயல் வேண்டும் என்றால் வீடு இல்லை. இந்த நிலைமையில் நின்று கொண்டு என்னைக் குறைவாக மதிப்பிடாதீர்கள் என்று குதிக்கிறான்.
தம்பி மகனின் மனநிலையைப் பார்க்கும் போது, அவன்மீது இப்போது பரிதாபம் தான் வந்தது வாசுகிக்கு. ‘இவன் புரிந்து பேசுகிறானா? புரியாமல் பேசுகிறானா? இத்தனை அனுபவங்களுக்கு பிறகுமா வாழ்க்கைப் பாடத்தை இவன் கற்றுக்கொள்ளவில்லை?” ஆதங்கத்தோடு வாசுகி அருணைப் பார்த்தபடி இருக்க,
“இல்ல… என்னோட சொத்தையும் நகைகளையும் என்னாலத் தரமுடியாது அருண். நீ வீட்டைத் திருப்ப வேற ஏதாவது வழி பாத்துக்கோ.” வேறு யார், சுலோச்சனா தான் ஆணித்தரமாக தன் மறுப்பை பதிவு செய்திருந்தார்.
மகன் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்த சுலோச்சனாவுக்கு முதன்முதலாக, ‘இவனெல்லாம் என்ன பிள்ளை’ என்று வெறுப்பு தோன்றியிருந்தது. இதற்குப் பிறகாவது நான் சுதாரிக்கவில்லை என்றால் என் பெண்பிள்ளைகளின் வாழ்க்கை, ஐயோ… நினைக்கவே பயமாக இருந்தது அந்த பெண்மணிக்கு. எனவே துணிந்து முடிவெடுத்து விட்டார்.
உண்மையில் நகை என்றால் பெரிய அளவில் எல்லாம் கிடையாது. வீட்டுப் பெண்களின் கையில் கழுத்தில் இல்லாமல் போனால் கௌரவம் பாதிக்கப்படுமே என்று வேதாச்சலத்தால் விட்டுவைக்கப்பட்டிருந்த நகைகள் தான். அதுதவிர, பால் விற்றக் காசை சேமித்து வைத்து தன்னுடைய பெண்பிள்ளைகளுக்காக சுலோச்சனா செய்த சின்னச்சின்ன நகைகள். அவ்வளவு தான். அதற்கும் இப்போது வேட்டு வைக்கப் பார்க்கிறான் மகன்.