அவரை நிமிர்ந்து பார்த்தவன் பதில் சொல்ல முயலாமல் அருணை வீட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்க, அண்ணனின் இடுப்போடு கைகொடுக்க முயன்றபடி, “ரொம்ப நன்றி, இனிமே நாங்க பாத்துக்குறோம்” என்று வந்தாள் துளசி.

அவளை நேரடியாகவே நன்றாக முறைத்த குமரன், “எதையும் அரைகுறையா விடுறது உனக்கு வேணும்னா பழக்கமா இருக்கலாம். எனக்கு அப்பிடி பழக்கமில்லை.” என்றவன் அருணின் இடுப்பில் கை வைக்க வந்தவளின் கையை பிடித்து வேகமாக விலக்கி விட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

சுலோச்சனாவுமே கோபாலனின் பேச்சில் முகம் சுணங்கிப் போய்தான் நின்றிருந்தார். குமரனின் கோபம் ஒருவிதத்தில் ஆறுதலாக இருக்க, ஓடிப்போய் மகனின் அறைக்கதவை திறந்துவைத்து, படுக்கையை வேகவேகமாக நேராக்கிப் போட்டார்.

இத்தனை நேரத்தில் ஒன்றுமில்லாமல் ஓய்ந்து போயிருந்தான் அருண். அவனை படுக்க வைத்து சில வினாடிகள் அமைதியாக நின்று பார்த்த குமரன், கிளம்பினான்.

“ரொம்ப நன்றி குமரன். நீ மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பேன்.” ஆழ்மனதிலிருந்து நன்றி வந்திருந்தது சுலோச்சனாவுக்கு.

“மொதல்ல இந்த பழக்கத்துலயிருந்து இவனை வெளியக்கொண்டு வர்ற வழியைப் பாருங்க காவேரி ம்மா.” என்றவன் அதற்குமேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான்.

காலையில் வாசுகி வந்து இறங்கி விட்டார். அவரோடு மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்த மகனும் சேர்ந்து கொண்டான். சம்மந்தப்பட்டவனோ காலை பதினோருமணி ஆனபிறகும் கவலையின்றி அசந்து தூங்க, அவனைப்பற்றி கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள் அவன் குடும்பத்தார்கள். எத்தனை நேரம் தான் அவனைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது. பேச்சு மெதுவாக திரும்பி துளசியின் திருமண விஷயத்தில் வந்து நின்றது.

“நீ சொன்னது உண்மையாவா சுலோ, அந்த பையன் உங்கிட்டயே துளசியை பொண்ணு கேட்டானா?” ஆச்சர்யமாக கேட்டார் வாசுகி.

“ஆமா அண்ணி, ஆனா எனக்கு அது சரிவருமான்னு இப்போ தோனுது.” கவலையாகச் சொன்னார் சுலோச்சனா.

“ஏன்?” வாசுகி கேட்டிருந்தாலும், அந்த அறையிலிருந்த எல்லோருக்கும் அந்த கேள்வியிருக்க, சுலோச்சனாவையே பார்த்தார்கள்.

“குமரனோட பெரியப்பா, அவரோட பேச்சும் நடவடிக்கையும் சரியில்லை.” என்ற சுலோச்சனா இரவு கோபாலன் நடந்து கொண்ட முறையைச் சொல்ல, சுருக்கென்று கோபம் வந்தது வாசுகிக்கு.

“இப்போ தம்பி மகன் மேல இருக்கிற அக்கறை, அவன் சின்னப்பையனா இருக்கும் போது எங்க போச்சுதுன்னு மொகத்துல அடிச்சாப்போல நீ கேட்டுருக்க வேண்டியது தானே. அன்னைக்கு தாய் தகப்பன் இல்லாத சின்னப்பையனுக்கு ஒருவாய் சோறு குடுக்க மனசில்ல, இப்போ அவன் வசதியா வந்து இறங்குன உடனே பாசம் பொத்துக்கிட்டு வருதோ.” கோபத்தில் குதித்தார் வாசுகி.

“நம்மளையும் அப்படித்தானே அண்ணி சொல்லுவாங்க.” தயக்கமாக சொன்னார் சுலோச்சனா.

“குமரனைத் தவிர வேற யாருக்கும் நம்மளைக் கேள்வி கேட்குற அதிகாரம் கிடையாது. அவனே எல்லாத்தையும் மறந்துட்டு பொண்ணு கேட்கும் போது, உனக்கென்ன வந்தது. ஜாம் ஜாம்னு கல்யாணத்தை முடிப்போம்.” தம்பி மனைவியை தேற்றினார் வாசுகி.

துளசிக்குமே குமரனின் பெரியப்பா இந்த திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வந்திருந்தது. கூடவே, ‘அண்ணன் ஒருவன் போதாதென்று இவருமா?’ என்ற ஆயாசமும் வந்திருந்தது.

“அப்பிடியெல்லாம் ஈசியா இந்த கல்யாணம் நடக்க உங்க மருமகன் விடமாட்டான் அண்ணி.” ஒரு பெருமூச்சோடு சொன்னார் சுலோச்சனா.

“அருண்கிட்ட நான் பேசுறேன். எடுத்துச் சொன்னா அவன் புரிஞ்சிப்பான்.” பதிலுக்கு நம்பிக்கையோடு வாசுகி பேசிக்கொண்டிருந்த நேரம்,

“நேத்து ராத்திரி என்னை யாரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது.” காட்டுக்கத்தலாக கத்தியபடி ஹாலுக்குள் வந்தான் அருணாச்சலம். அவன் கண்கள் இரண்டும் கொவ்வைப்பழமாக சிவந்து போய் கிடக்க, குளித்திருந்த தலை சரியாக துவட்டாததால் ஈரம் சொட்டியபடி இருந்தது.

என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க, “சொல்லுங்க…” என்று மறுபடியும் உறுமினான் அவன். அத்தையையும் அவருடைய மகனையும் அங்கே பார்த்த பிறகும், மரியாதை நிமித்தமாக கூட அவர்களை வரவேற்காமல் அவனுடைய காரியத்திலேயே கண்ணாக நின்றான்.

“ம்ஹும்… வேற யாரு? குமரன் தான் வந்தான்.” மாமன் மகனுடைய திமிர் எரிச்சல் மூட்ட, விஷயத்தை போட்டு உடைத்துவிட்டான் அரவிந்தன்.

அருணுக்குமே இரவு நடந்தது புகைமூட்டமாக லேசாக நினைவில் நின்றது. அதை உறுதிப் படுத்திக்கொள்ள தான் கேட்டான். அப்படியானால் என்னை அவன் கன்னத்தில் அடித்ததும் உண்மை தானா?’ எரிமலையாக கொதித்தவன், “நீங்கதான் அவனை அனுப்பி வச்சதா?” என்று தாயிடம் எகிறினான்.

“அத்தைக்கிட்ட எதுக்குடா கத்துற? நீ மூடிகிட்டு வீட்டுல இருந்திருந்தா அவங்க ஏன் குமரனை அனுப்புறாங்க.” பதிலுக்கு அரவிந்தனும் சத்தமிட்டான்.

“அரவிந்த்… எதுக்குப்பா இப்போ குமரனைப்பத்தி சொன்ன? நமக்கு மட்டும் அது தெரிஞ்சா போதாதா?” மகனின் கோபத்துக்கு பயந்து சுலோச்சனா சொல்ல,

“அப்பிடியாவது வெட்கப்பட்டுகிட்டு இந்த கருமம் பிடிச்ச பழக்கத்தை உங்க பிள்ளை விடுறானான்னு பாப்போம் அத்த.” என்றான் அரவிந்தன்.

“ரொம்பதான் அக்கறை மாதிரி நடிக்காதடா. எல்லாம் உன்னால தான். நீ மட்டும் இந்த துளசியைக் கல்யாணம் செய்திருந்தா, எனக்கு சமம் இல்லாத பயல் எல்லாம் என் முன்ன வந்துநின்னு பேசுவானா? பெரிய இவன் மாதிரி அத்தை பொண்ணைக் கட்டிகிட்ட, கேட்டா லவ்வு… மண்ணாங்கட்டின்னு சமாளிப்பு.” குமரன் மீது உள்ள கோபத்தை எல்லாம் அரவிந்தன் மீது இறக்க முயன்றான்.

“அரவிந்துக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு பிள்ளையும் பிறந்தாச்சு. நடந்ததைப் பற்றி இனி எப்பவுமே பேசாத அருண், துளசியோட கல்யாணத்தை பற்றி பேசலாம்.” மருமகனை சமாதானப்படுத்த முயன்ற வாசுகி துளசியின் திருமணப்பேச்சையும்  மெதுவாக எடுத்தார்.

ஆனால் அவனோ, “எங்கப்பாவால உங்க எதிர்ப்பார்ப்புக்கு செய்ய முடியாதுன்னு நினைச்சு தானே, மகனுக்கு உங்க நாத்தனார் மகளைக் கல்யாணம் செய்து வச்சீங்க, இப்போ எதுக்கு நல்லவங்க வேஷம் போடுறீங்க?” என்று வாசுகி மீதே குற்றம்சாட்டினான்.

தம்பி மகனின் குற்றச்சாட்டில் கோபம் வந்தது வாசுகிக்கு. “எம்புள்ள உன் தங்கச்சியை வேண்டாம்னு சொல்லலை டா. உன் தங்கச்சி தான் எம்புள்ளையை வேண்டாம்னு சொல்லிட்டா.” மகனும் அவருமே அறிந்த ரகசியத்தை சொல்லிவிட்டார் வாசுகி.

இத்தனை வருடங்களாக கட்டிக்காத்த ரகசியத்தை அத்தை போட்டு உடைத்து விடவும், அதுவும் தமையன் முன்னாலேயே அது நடந்து விடவும் மிரண்டு போனாள் துளசி.

“என்ன சொல்லுறீங்க?” சுருங்கிய அருணாச்சலத்தின் கண்களிலும் கொஞ்சம் அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது.

“ஆமா, அதுக்கு துளசி சொன்ன காரணம் காதல், குமரன் மேல உள்ள காதல். இன்னொருத்தனை மனசுல வச்சிருக்கிறேன்னு சொல்லுற பொண்ணை எப்பிடி டா எம்புள்ளைக்கு கல்யாணம் செய்துவைக்க முடியும்? அதனாலத்தான் எம்புள்ள அவனோட அத்தைப் பொண்ணைக் கட்டிக்கிட்டானே தவிர, நீ சொல்லுற எந்த காரணமும் கிடையாது.” என்றார் வாசுகி தெளிவாக.

“அப்போ எங்க கண்ணுல மண்ணை அள்ளி தட்டிட்டு இவதான் ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி நடிச்சிருக்காளா?” துளசியை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு சென்றான் அருண்.

“கொஞ்சம் பொறுமையா இரு அருண், நடந்து முடிஞ்சதைப் பற்றி பேசி பிரயோஜனம் கிடையாது. இனிமே நடக்கப்போறதைப் பற்றி பேசு ப்பா.” மருமகனின் கையைப் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தபடி மென்மையாக பேசினார் வாசுகி.

“சரி, நடக்கப்போறதைப் பத்தியே பேசலாம். நான் கை காட்டுறவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க உங்க தம்பி மகளை.”

“அதெப்படி ப்பா முடியும்…”

“ஏன் முடியாது?”

“சரி, உன் வழிக்கே வர்றேன். நீ கைகாட்டுறவன் பொண்ணோடு சேர்த்து பணமும் நகையும் கொட்டிக் குடுக்கச் சொல்லுவானே, நம்ம வீடு இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு உன்னால அது முடியுமா?” முக்கியமான விஷயத்தை தொட்டார் வாசுகி.

“அதுக்காக?”

“நம்ம மாணிக்கம் ஒன்னும் அசல் ஆளில்லை. எங்கம்மாவோட தூரத்து சொந்தத்துல தான் பெண் எடுத்திருந்தாருன்னு அம்மா சொல்லுவாங்க. அவங்கள்ல வித்தியாசம் பார்க்காத, குமரனுக்கே துளசியை கல்யாணம் பண்ணி குடுத்திடலாம்.” மெதுவாக அருணை கரைக்க முயன்றார் வாசுகி.

“நம்ம தூரத்து சொந்தத்துல பெண் எடுத்திருந்தாலும் மாணிக்கத்தை பெயர் சொல்லித்தானே அத்தை நீங்க கூப்பிடுறீங்க? காரணம், நம்ம வீட்டுல அவர் வேலை செய்தது தானே. நம்ம வீட்டுல வேலை செய்தவனோட பேரனுக்கு எங்கூடப்பிறந்தவளை கண்டிப்பா கல்யாணம் செய்து குடுக்க மாட்டேன்.” பிடிவாதமாக சொன்னான்.

“ம்ப்ச்…இப்பிடி வறட்டு கௌரவம் பார்த்து பார்த்து எல்லாத்தையும் தொலைச்சது போதாதா? இப்போ துளசியோட வாழ்க்கையையும் வீணாக்கியேத் தீருவேன்னு என்ன பிடிவாதம் உனக்கு?” லேசாக கோபம் எட்டிப் பார்த்தது வாசுகியின் குரலில்.

“இது பிடிவாதம் இல்ல, சுயகௌரவம்.”

“மண்ணாங்கட்டி. உங்க சோம்பேறித்தனத்துக்கு நீயும் உங்க அப்பனும் வச்சிகிட்ட பெயர் தான் சுயகௌரவம். உன் சுயகௌரவத்தை காப்பாத்திக்க இந்த வீட்டை அடமானம் வச்சி தொழில் தொடங்கினியே, என்னாச்சு அது? தொழிலும் போச்சு, வீடும் இப்பவோ அப்பவோன்னு பேங்ல ஊசலாடிகிட்டு இருக்கு. அந்த பணத்தை கட்டி வீட்டையே உன்னால திருப்பியெடுக்க முடியல, இதுல தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிடுவானாம்.” தன்னுடைய மனக்குமுறலை கொட்டிவிட்டார் வாசுகி.

அவர்கள் இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் வீட்டைக் குறித்த சூழ்நிலை மிரட்டியது.

“இந்த வீட்டுல தானே நீங்களும் பிறந்தீங்க, உங்ககிட்ட கொட்டிக்கிடக்குற பணத்துல கொஞ்சம் கட்டி வீட்டைத் திருப்புறது.” நக்கலடித்தான் அருண்.

“அதெப்படி ப்பா என்னால முடியும்? உங்க மாமா அதுக்கு சம்மதிக்கணுமே.” எத்தனையோ தடவை கணக்கே இல்லாமல் தம்பிக்கு பணம் கொடுத்து உதவியவர் தான் வாசுகி. கொடுத்த பணம் எப்போதுமே திரும்பி வந்ததில்லை. ஒரு கட்டத்தில் சபாபதியும் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இப்போது கேட்டாலும் இல்லை என்று தான் சொல்லுவார். அதனால் தான் வாசுகி அவ்வாறு சொன்னது.

“முடியாதுல்ல… அப்போ அறிவுரை சொல்லுறேன் பேர்வழின்னு ஆளுக்கு முதலா இங்க வராதீங்க. “ வாசுகியின் முகத்திலடித்தார் போலச் சொன்னான் அருண்…