• அத்தியாயம் 05

“எல்லாம் நீ வச்சிகிட்டது தான் சுலோ, ஆரம்பத்திலேயே அருணை கண்டிச்சு வளத்திருந்தா, இன்னைக்கு இந்த அளவுக்கு போயிருக்காது.” தம்பி மனைவியிடம் கோபமும் வருத்தமும் கலந்து சொல்லிக் கொண்டிருந்தார் வாசுகி. வேதாச்சலத்தின் அக்கா தான் இந்த வாசுகி.

“துளசியும் காவேரியும் கூட அத்தை வளர்ப்பு தானே ம்மா. அவங்க என்ன பார் வாசல்லயா விழுந்து கிடக்குறாங்க? சும்மா பேசணும்ங்குறதுக்காக பேசக்கூடாது.” அம்மாவின் வார்த்தைகளை கண்டித்தான் அவருடைய மகன் அரவிந்தன். ஆமாம்… துளசியோடு திருமண பேச்சு நடந்த அதே அரவிந்தன் தான்.

“ம்ப்ச்… அம்மாவை எதுவும் சொல்லாத அரவிந்தா, அவங்க சொல்லுறது சரிதான். எனக்கு புருஷனை எப்பிடி கைக்குள்ள வச்சிக்கணும்னு தெரியல, பிள்ளையை எப்பிடி கண்டிச்சு வளக்கணும்னு தெரியல. நானெல்லாம் என்ன பொண்ணு? கடைசியில என் குடும்பம் நிலைகுலைஞ்சு போனது தான் மிச்சம்.” வீட்டு ஆண்களால் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் நான் தான் என்று ஆற்றாமை மீதூற பழியை தன்மீதே தூக்கிப் போட்டுக்கொண்டார் சுலோச்சனா. அந்த அளவுக்கு ஒரேநாளில் அவரை மனதளவில் சோர்ந்து போக வைத்திருந்தான் அவருடைய மகன்.

“ஆமா, கண்மண் தெரியாம குடிச்சிகிட்டு பார்ல அவனை விழுந்துகிடக்க சொன்னது நீங்க தானே? சும்மா உங்கமேல பழியைத் தூக்கிப் போடாதீங்க ம்மா.” அதட்டினாள் காவேரி.

ஆமாம்… இரவு அம்மாவின் அழைப்புகளை எடுக்காமல் அலட்சியப்படுத்திய அருண், சிறிதுநேரத்திலேயே போதை அதிகமாகி மேஜையில் சாய்ந்து விட்டான். இப்போது அவன் நினைத்தால்கூட போனை எடுத்து பேசமுடியாத நிலைமை.

குழறலான மகனின் பேச்சு கிலியை உண்டாக்க இடைவிடாமல் மகனுக்கு அழைத்துக்கொண்டே இருந்தார் சுலோச்சனா. மேஜையில் தனியாகக்கிடந்து கதறிக்கொண்டிருந்த போனையும் அருணையும் பார்த்த பேரர் என்ன நினைத்தாரோ தெரியாது அலைபேசியை எடுத்து பேசிவிட்டார். அருணின் நிலைமையும் இடத்தையும் சொல்லி, அவரால தனியா எல்லாம் வரமுடியாது, சீக்கிரமா வந்து கூட்டிட்டு போங்க என்றும் சொல்லிவிட்டார்.

தகவல் அறிந்ததும் துடித்துப்போனார் சுலோச்சனா. அவருடைய கணவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது தான். ஆனால் பார் வரைக்கும் செல்லும் பழக்கம் எல்லாம் கிடையாது. வீட்டோடு நின்றுகொள்வார். ஆனால் இந்த பையன்? நான் எப்படி அங்கிருந்து அவனை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவேன்? நினைக்கும்போது நெஞ்சுக்கூடு காலியாகிப்போனது.

காவேரி எப்போதோ தூங்கப்போய் விட்டாள். துளசி தான் அவரோடு இருந்தது. தாயின் பதில்களை வைத்தே, எதிர்முனையில் என்ன பேசியிருப்பார்கள் என்பது புரிந்திருந்தது துளசிக்கு.

“என்னம்மா பண்ணப்போறோம்?” தவிப்பாக கேட்டாள் துளசி.

“அதான் எனக்கும் புரியல துளசி?” காற்றாகிப்போன குரலில் சொன்னவர்,

“மொதல்ல அத்தைக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுவோம். அவங்க ஏதாவது பண்ணுவாங்க.” என்றபடியே வாசுகியின் எண்ணுக்கு அழைத்தார்.

ஏதாவது பண்ணுவார்கள் என்றால் மகன் அரவிந்தனை அனுப்பி அழைத்து வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு தான்.

அரவிந்தனின் திருமணத்திற்கு பிறகு நேரடியாகவெல்லாம் அவனை எங்கேயும் அழைத்துவிட முடியாது. அதற்கு அவனுடைய மனைவி அனுமதிப்பதில்லை.

சொன்னதோடு நில்லாமல் கணவனின் அக்காவிற்கு அழைத்துவிட்டார் சுலோச்சனா. குமரன் கொடுத்திருந்த அவனுடைய கைபேசியிலிருந்து தான். வீட்டு லேண்ட்லைன் போன் வேலை செய்யாமல் போனதால் தான் குமரனின் அலைபேசியை உபயோகப்படுத்தியிருந்தார்.

போனின் அழைப்புமணி நிற்கப்போகும் நேரத்தில் தான் அழைப்பை ஏற்றிருந்தார் வாசுகி. இரவு பத்துமணி தாண்டிய பிறகு தெரியாத எண்ணிலிருந்து வந்த அழைப்பை எடுக்க அவருக்கு தயக்கம்.

“எடுத்து பேசு வாசுகி, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப்போகுது.” கணவர் சொல்லியபிறகும் யோசனையோடே எடுத்து காதுக்கு கொடுத்தவர், “யாரு?” என்றார் லேசான அதட்டல் தொனியில்.

“அண்ணி… நான் சுலோச்சனா.” வேகமாக வந்தது பதில்.

“சுலோ… நீயா? இது யாரோட நம்பர்? இந்த நேரத்துல ஏன் போன் பண்ணுற?” இப்போது பதற்றம் தொற்றிக்கொண்டது வாசுகியிடம்.

“அண்ணி, இது குமரனோட போன்…” என்றுத்தொடங்கி, குமரன் வீட்டுக்கு வந்தது, பெண் கேட்டது, மகனுக்கும் குமரனுக்குமிடையே நடந்த மோதல், இதோ இப்போது மகன் இருக்குமிடத்தையும், அவனுடைய நிலமையையும் ஒன்றுவிடாமல் சுருக்கமாக சொல்லிமுடித்தவர்,

“அண்ணி, அரவிந்தனை அனுப்பி அருணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாமா?” என்று தயக்கமாக கேட்டார்.

“அரவிந்த் வீட்டுல இல்லயே சுலோ, மாமியார் வீட்டுக்கு குடும்பமா போயி இரண்டு நாளாச்சு. அங்கயிருக்குறவனை இப்பிடின்னு விஷயத்தை சொல்லி கூப்பிடுறது நல்லா இருக்காது. நீ ஒன்னு செய், பேசாம அந்த குமரனையே அனுப்பி அருணைக் கூப்பிட்டுக்கோ.” தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவரை ஓரக்கண்ணால் பார்த்தபடியே மெதுவாக சொன்னார் வாசுகி.

“குமரனையா?!”

“இப்போ வேறவழி கிடையாது சுலோ. அவனையே அனுப்பி வை. லேட் பண்ணாத. அருண் வீட்டுக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணிச்சொல்லு.” என்றபடி அழைப்பை துண்டித்துக்கொண்டார்.

வாசுகி நல்லவர் தான். இதே அவர் ஒரு ஆண்பிள்ளையாக இருந்திருந்தால் தம்பியின் மகனைப் போய் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார். இப்போது கணவனின் அனுமதியில்லாமல் போக முடியாதே. அதுவும் இல்லாமல் ஒருபெண் போகக்கூடிய இடமா அது.

வாசுகியின் கணவர் சபாபதியும் நல்லவர் தான். அதற்காக பாருக்கு சென்று போதையில் இருக்கும் மைத்துனனின் மகனை அழைத்துக்கொண்டு வரும் அளவிற்கு நல்லவர் இல்லை.

“அரவிந்த் இல்லையாம், குமரனையே அனுப்பி கூப்டுக்கோன்னு அத்தை சொல்லுறாங்க.” தன் முகம் பார்த்து நின்ற மகளிடம் சொன்ன சுலோச்சனாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“குமரனையா? எப்பிடி ம்மா?” அவஸ்தையாக கேட்டாள் துளசி.

“நமக்கு வேற வழியில்ல துளசி.” சொன்னாலும் வேறு யாராவது தெருவில் தென்படுகிறார்களா, அவர்களை அனுப்பி மகனை அழைத்து கொள்ளலாமா என்று கேட்டை திறந்து கொண்டு தெருவைப் பார்த்தார் சுலோச்சனா. அவரோடு வந்து நின்றாள் துளசி.

ஆள் நடமாட்டம் இல்லாமல் தெருவே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. எதிரில் இருந்த குமரனின் வீடு மட்டும் ஒளி வெள்ளத்தில் மிதந்தபடி இருந்தது. அங்கே அலங்காரமும் ஷாமியானா பந்தல் அமைக்கும் வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

‘வீட்டுக்குள்ள குமரன் இருப்பானா? கூப்பிடுவோமா?’ தயங்கியபடியே இருவரும் நின்றிருந்த நேரம், அவர்கள் தெருவில் கார் ஒன்று வந்தது. அதில் இருந்தது குமரன் தான். அவனோடு வந்திருந்த நண்பர்களை தென்காசியில் லாட்ஜ் எடுத்து தங்கவைத்திருந்தான். அவர்களை சென்று பார்த்துவிட்டு, அவர்களோடு இரவு உணவையும் முடித்துவிட்டு வந்திருந்தான்.

ட்ரைவர் காரின் வேகத்தை குறைத்து காம்பௌண்டுக்குள் திருப்ப முயன்ற நேரம், காருக்குள் இருந்த குமரனின் கண்களில் தாயும் மகளும் விழுந்தார்கள். ‘இந்நேரத்தில் எதற்காக வெளியே நிற்கிறார்கள்?’ யோசனையோடு ட்ரைவரிடம் காரை நிறுத்தச்சொல்லி இறங்கி வந்தான்.

“என்னாச்சு காவேரி ம்மா? இந்நேரத்துல எதுக்காக வெளியே நிக்குறீங்க” துளசியை கண்டுகொள்ளாமல் சுலோச்சனாவிடமே கேட்டான்.

“அது…” சொல்லக்கூடிய விஷயத்தையா மகன் செய்து வைத்திருக்கிறான்? கொஞ்சம் அவமானமாக உணர்ந்தவருக்கு பளிச்சென்று விஷயத்தை சொல்ல முடியவில்லை.

“அண்ணன் பாருக்கு போயிருக்கான் போல, அளவுக்கு அதிகமா ட்ரிங்ஸ் எடுத்துகிட்டதால அவனால தனியா வீட்டுக்கு வரமுடியல. வந்து கூட்டிட்டு போங்கன்னு போன் பண்ணிச் சொன்னாங்க. அரவிந்த் அத்தான் வேற ஊர்ல இல்ல, அதான் எப்பிடி கூட்டிட்டு வரன்னு தெரியாம நிக்குறோம்.” அவனிடம் நேரடியாக உதவி கேட்க முடியாமல் சுற்றி வளைத்தாள் துளசி.

அவனோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “அரவிந்த்…” என்றான் ஒற்றைப் புருவத்தை தூக்கி.

“அத்தா…” வேகமாக சொல்ல வந்தவளுக்கு அவனுடைய புருவ அசைவும் பார்வையும் என்னவோ சரியில்லை என்று தோன்ற, வார்த்தையை முடிக்காமல் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.‌

“அரவிந்தன். துளசியோட அத்தைப் பையன் குமரா. அவன் ஊர்ல இல்லை. இல்லைன்னா அவனை அனுப்பி வச்சிடுவேன். நீ போய் கொஞ்சம் அருணை கூட்டிட்டு வந்துடுறியா ப்பா, ப்ளீஸ்.” தயங்கித் தயங்கி என்றாலும் கேட்டுவிட்டார் சுலோச்சனா.

“நான் போய் கூப்பிட்டா உங்க புள்ள வரணுமே ம்மா.” சலித்துக்கொண்டான் குமரன்.

“மறுக்குற அளவுக்கெல்லாம் அவன் இல்லை போல, இல்லைன்னா அவனோட போனை பேரரை தொடவிடுவானா?” கண்களில் நீர் தளுதளுக்க சொன்னவரின் பார்வை எனக்காக இதைச் செய்துவிடேன் என்று குமரனைக் கெஞ்சியது.

சிறுவயது முதலே அவருடைய அன்புக்கு கட்டுப்பட்டு அவர் சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்பவன், கண்கலங்கி நிற்கும் பெண்மணியிடமா மாட்டேன் என்று சொல்லிவிடப் போகிறான்.

“கரெக்டான லொக்கேஷன் சொல்லுங்க.” குமரன் கேட்க, சொல்லத் தெரியவில்லை சுலோச்சனாவுக்கு.

அருணின் போனுக்கு அழைப்பு விடுத்து அந்த பேரரிடம் விவரங்களைப் பெற்றுக்கொண்டு வந்தகாரிலேயே கிளம்ப தயாரானான் குமரன்.

“குமரா… வந்ததும் வராததுமா எங்கப்பா போற? உனக்காக நாங்க சாப்பிடாம காத்திருக்கோம். வா, நம்ம வீட்டுக்கு போய் சாப்பிடலாம்.” அங்கே நின்றிருந்த அவனுடைய பெரியப்பா கோபாலன் ஓடிவந்து அவனைத் தடுத்தார். குமரன் வந்த நேரத்திலிருந்து அவனுடைய பெரியப்பாவும் பெரியம்மாவும் அவன் மீது தங்களுடைய அதிகப்படியான உரிமையை காட்டிக்கொண்டேதான் இருந்தார்கள்.

“குமரன் ராத்திரிக்கு சாப்பிடுறதும் தூங்குறதும் நம்ம வீட்டுலயாதான் இருக்கணும். கூட்டிட்டு வந்து சேருங்க.” கணவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தார் கோபாலனின் மனைவி அழகுமணி.

“ஒரு சின்ன வேலை, அதை முடிச்சிட்டு வரேன் பெரியப்பா. ஃப்ரெண்ட்ஸ் கூட ஏற்கனவே நான் சாப்டாச்சு. நீங்க வீட்டுக்கு போய் சாப்டுட்டு தூங்குங்க. அப்புறம், இங்க வேலை எல்லாம் ஒப்பந்தம் எடுத்துருக்கவங்க பாத்துப்பாங்க, நீங்க இங்க நிக்கணும்னு அவசியம் கிடையாது.” என்று விட்டு கிளம்பிவிட்டான் குமரன்.

ஏற்கனவே பெரிய வீட்டு பெண்ணுக்கும் குமரனுக்கும் காதல் என்று சொல்லி நடந்த பிரச்சினை எல்லாம் கோபாலனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் இன்றும் அந்த வீட்டு பெண்களுக்காக எதுவோ உதவி செய்யப்போகிறான் என்ற அளவில் மட்டும் புரிந்தது கோபாலனுக்கு.

புரிந்த வகையில் எரிச்சல் வர, “ஏம்மா… உங்களாலத்தானே இத்தனை வருஷமா அவனுக்கு ஊருன்னு ஒன்னு இல்லாமப் போச்சு. இப்போ அவன் வந்ததும் மறுபடியும் எதுக்காக தொந்தரவு பண்ணுறீங்க. அவனைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க.“ எரிச்சலோடு சொல்லிவிட்டு நகர்ந்தார்.

இதுநாள் வரையிலும் சுலோச்சனாவின் முகம் பார்த்து பேசியிராத மனிதர் தான் கோபாலன். குமரனைக் கண்ட நேரத்திலிருந்து அவர் மனைவி ஏதேதோ திட்டங்களை தீட்டியிருக்க, அது நிறைவேறுமா என்ற பயம் இப்போது வந்திருந்தது மனிதருக்கு. அதனாலேயே தைரியமாக பேசிவிட்டார்.

வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளை சுலோச்சனா சந்தித்து இருக்கிறார் தான். ஆனால் இதுவரையிலும் இப்படி அடுத்த மனிதர்கள் தன்னை முகத்துக்கு நேராக மரியாதைக்குறைவாகப் பேசி கேட்டிருக்கவில்லை. குமரனின் பெரியப்பா பேச்சில் ஒருமாதிரி வெலவெலத்து போனது சுலோச்சனாவுக்கு. அப்படியே ஓய்ந்து போய் வாசல் படிக்கட்டில் அமர்ந்து விட்டார். துளசிக்கும் கூட கோபாலனின் இந்த அவதாரம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எதுவும் பேசாமல் அம்மாவின் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு அருகில் அமர்ந்து கொண்டாள்.

கிளம்பிச் சென்றிருந்த ஒரு மணி நேரத்திற்குள் அருணோடு வந்து இறங்கிவிட்டான் குமரன். அவன் சொன்னது போல அத்தனை போதையிலும், “நீ எதுக்குடா இங்க வந்த, என்னைத் தொட்டா கொன்னுடுவேன்.” என்று நாக்கை துருத்தி குமரனை எச்சரிக்க முயன்றான் அருண். ஆனால் உள்ளிருந்த போதை எதையும் அவனை தெளிவாக செய்யவிடவில்லை.

அருணாச்சலத்தின் போதைப்பழக்கத்தில் ஏற்கனவே கோபமாக இருந்த குமரன் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து, அள்ளிக்கொண்டு காரில் போட்டிருந்தான். ட்ரைவரின் உதவியோடு தான். தகவல் சொன்ன மனிதருக்கு நன்றி சொல்லி அருணின் பைக்கில் இவன் வர, ஏற்கனவே வீட்டுக்கு வழி தெரிந்திருந்த ட்ரைவர் அருணோடு காரில் வந்து சேர்ந்திருந்தார்.

கார் வந்து நிற்கவும் குமரனுடைய பெரியப்பா ஓடிவந்தார். அவர் இன்னமும் வீட்டுக்கு சென்றிருக்கவில்லை. குமரன் வெளியே சென்ற விஷயத்தை மனைவியிடம் போனில் சொல்ல, அவன் திரும்பி வரும்வரை அங்கேயே நிற்கும்படி உத்தரவு அவருக்கு.

காருக்குள் அலங்கோலமாக கிடந்த மகனைப் பார்த்து அடிவயிறெல்லாம் கலங்கியது சுலோச்சனாவுக்கு. அதுவும் வேடிக்கை பார்ப்பது போல கோபாலன் வந்து நிற்க அவமானமாக இருந்தது.

“இதுதான் நீ சொன்ன வேலையா குமரா?” பைக்கில் வந்து இறங்கிய குமரன் ட்ரைவரின் உதவியோடு, அருணை காரிலிருந்து இறக்கவும் கோபாலன் நக்கலாக கேட்டுவிட்டார்.