“காவேரி ம்மா…” அந்த ஒற்றை அழைப்பில் துளசிக்கு முகமெங்கும் முத்து முத்தாக வியர்த்துவிட, வேகமாக மாடிப்படி இறங்கி கீழே வந்தாள்.
அவளுடைய நினைப்பை பொய்யாக்காமல் குமரன் தான் அங்கே நின்று கொண்டிருந்தான். கடைசி சில படிகள் இறங்கும் முன்னரே ஹாலில் நிற்கும் குமரன் அவள் பார்வையில் விழுந்துவிட, கால்கள் வேகத்தடையில் சிக்கிக் கொண்டது போல மீதிப்படிகளில் மெதுவாகவே இறங்கி வந்தன.
தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கித்தவித்தவனை, கைக்கெட்டும் தூரத்தில், தன் வீட்டுக்குள்ளேயே பார்த்த பிறகும், நேருக்கு நேராக நிமிர்ந்து பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சி மீதூற நிலம் பார்த்து நின்றாள். அவள் கைகளோ அணிந்திருந்த புடவை முந்தானையின் ஓரத்தை பதட்டத்தில் கசக்கி விடுவித்தபடி இருந்தது.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகும் குமரனிடமிருந்து எதிர்வினை எதுவும் இல்லாமல் போகவே மெதுவாக தலையை நிமிர்த்தி குமரனின் முகத்தில் தன் பார்வையை பதித்தவள், அவன் கண்களோடு தன் பார்வையை பொருத்த முயன்றாள்.
ஆனால் அதற்கு அவளை அனுமதிக்காமல் தன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்ட குமரனோ, தன் விழிகளால் அவளைத் துளைத்தெடுத்துவிடுவது போல கூர்மையாக பார்த்தான். அந்த பார்வையின் வீச்சு தாங்காமல் துளசியின் கண்கள் மறுபடியும் தாமாகவே நிலம் பார்த்தன.
“ஹ்ம்ம், பரவாயில்லயே… என்னைக் கண்டதும் ஓடி ஒளிஞ்சுக்குவன்னுல்ல நினைச்சேன்… அப்படி ஒளிஞ்சிக்கிறது உனக்கு ஒன்னும் புதுசும் இல்லையே!” குமரனின் வார்த்தைகள் துளசியை சரேலென்று அவனை நிமிர்ந்து பார்க்க வைத்திருந்தது. இதழ்க்கடையோரம் ஏளனமாக நெளிய அவன் நக்கலடித்த விதத்திலேயே, அவன் கையசைக்கும்போது ஜன்னலில் இருந்து தான் பின்வாங்கியிருந்ததை கண்டுகொண்டிருக்கிறான் என்பது புரிந்தது துளசிக்கு.
ஆனால் அதைமட்டுமா சொல்கிறான்? இவர்கள் காதலிக்கும் விஷயம் வீட்டுக்கு தெரிந்து பிரச்சினையான சமயம், துளசி தன்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று அத்தை அழைத்துக்கொண்டு போய் வைத்திருந்தாரே, அதையும் அல்லவா இப்போது சேர்த்திழுக்கிறான்.
“இல்ல… நான்…” அதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாமல், துளசி மெதுவாக பேசத்தொடங்க, வார்த்தைகள் அவளுக்கு ஒத்துழைக்காமல் தந்தியடித்தது. லேசாக தொண்டையை செறுமிக்கொண்டு மறுபடியும் பேச முயற்சி செய்தாள். ஆனால் அவளிடமிருந்து விளக்கம் எதுவும் கேட்க விரும்பாதவன் போல, தன் வலது கையை லேசாக உயர்த்தி நிறுத்து என்று சொல்லிய குமரன்,
“உங்க அம்மாவையும் காவேரியையும் கூப்பிடுறியா, அவங்களைப் பார்த்து பேசிட்டு நான் போயிடுறேன்.” முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளாமல் சொன்னான்.
உணர்ச்சிகளற்ற அவன் முகம் இவளை ஏதோ செய்ய, “குமரன்…” என்றாள் மெதுவாக.
“அடடே… பெரிய வீட்டு அம்மணிக்கு எம்பேர் எல்லாம் ஞாபகம் இருக்குதேப்பா…
அப்போ நான் யாருங்குறதும் உங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கத்தானே செய்யும்?” ஆச்சர்யமாக கண்களை விரித்த குமரனின் குரலில் இப்போது நக்கல் துள்ளிவிளையாடியது.
இதுவரையிலும் தனக்கு அறிமுகமே இல்லாத இப்படி ஒரு குமரனை பார்த்த துளசியின் விழி இமைகள் பதட்டத்தில் படபடவென்று அடித்துக் கொண்டன. “பரவாயில்ல, ரொம்ப யோசிக்காதீங்க, நான் உங்க வீட்டுல வேலை செய்த மாணிக்கத்தோட பேரன் குமரன் தான்.” மாணிக்கத்தின் பேரன் குமரன் என்பதை கூடுதலாக அழுத்திச் சொல்லியவன்,
“இதோ உங்க வீட்டுக்கு எதிர்ல புதுசா வீடு கட்டியிருக்குறது நான்தான். நாளைக்கு மறுநாள் வீடு கிரகப்பிரவேசம் பண்ணுறேன். என் வாழ்க்கையில ஒரு நல்லது நடந்துருக்குது, என் தாத்தாவோட முதலாளி வீட்டுல சொல்லாம இருந்தா எப்படி? அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். கொஞ்சம் உங்க அம்மாவையும் தங்கச்சியையும் கூப்பிடுறீங்களா? அவங்களை என் வீட்டு விஷேசத்துக்கு அழைச்சிட்டு போய்டுறேன்.” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.
துளசி தன்னையும், தன்னுடைய காதலையும் விட்டுக்கொடுத்துவிட்டாள் என்ற கோபத்தின் வீரியமே இன்னும் குமரனிடம் மிச்சமிருந்தது. என்றாலும் பலவருடங்களுப் பிறகு நேரில் அவளைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் தன்னை மறந்து கையசைத்தால், இல்லை நான் கொஞ்சமும் மாறாமல் அப்படியே பழைய துளசியாகத்தான் இருக்கிறேன் என்று அவள் சொல்லாமல் சொல்லிவிட, மிச்சமிருந்த கோபம் இப்போது தன் வேலையைக்காட்ட ஆரம்பித்திருந்தது.
துளசிக்கோ யாரோப்போல மரியாதையாகப் பேசி அவன் தன்னை தள்ளிநிறுத்துவது உயிர்வலியைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல், அம்மாவையும் தங்கையையும் கிரகப்பிரவேசத்திற்கு அழைக்க வந்தானா? அப்படியென்றால் நான்? எனக்கு அழைப்பில்லையா? என்னை ஒதுக்கி வைத்துவிட்டானா? முடியுமா அவனால்?’ அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்து உள்ளும் புறமும் அவளை அலைக்கழித்தது.
‘ஏன்? நீ அவனை தள்ளி நிறுத்தவில்லையா? உனக்கொரு நியாயம், அவனுக்கு ஒரு நியாயமா?’ மனசாட்சி தலையில் ஓங்கிகொட்டியது. ‘இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் எல்லாம் தவறாகிப்போய்விடும்.’ முடிவெடுத்துக் கொண்டவள்,
“குமரன், நாம பேசணும்.” என்று விட்டாள் தைரியமாக.
“உங்களுக்கும் எனக்கும் நடுவுல என்ன இருக்குது மேடம் நாம பேசுறதுக்கு, ஹாங்…” புருவத்தை கேள்வியாக உயர்த்தியவனின் குரலில் ஒரு சதவீதம் கூட இளக்கமில்லை.
“என்னை நீங்க தப்பா புரிஞ்சிருக்கீங்க, அப்போ என்னோட சூழ்நிலை…” பேசத் தொடங்கிவிட்டவளுக்கு, வீட்டிற்குள் இருக்கும் அண்ணன் இப்போது இங்கே வந்துவிட்டால், சூழ்நிலை எப்படி மாறிப்போகும் என்ற எண்ணம் வர, அதற்குப்பிறகு எப்படி பேச்சு வரும்? பேச்சை விடுத்து அவள் பார்வை பதட்டமாக வீட்டிற்குள் பார்த்தது.
ஆமாம், மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு அறைக்குள் செல்லும் அருணாச்சலம், மாலைநேர காப்பிக்கு தான் அறையை விட்டு வெளியே வருவான். அவனுடைய அறை ஏசி அறையாக இருப்பதால் சிக்கென்று அறைக்கதவு பூட்டப்பட்டு வெளியே நடப்பது எதுவும் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான். ஆனால் எப்போது வேண்டுமானாலும் அவன் அறையை விட்டு வெளியே வரும் அபாயம் இருக்கத்தான் செய்தது.
“சொல்லுங்க மேடம்… சூழ்நிலை, மண்ணாங்கட்டின்னு எதுவோ சொல்ல வந்தீங்களே, அதைப்பற்றி சொல்லுங்க.” உன்னை நான் கண்டுகொண்டேன் என்ற ரீதியில் குமரனின் குரலில் கேலி இழையோடியது.
“இல்ல, நாம இதைப்பத்தி அப்புறமா பேசலாம்.” அவசரமாக வந்தது பதில்.
“ஏன்? வீட்டுக்குள்ள இருக்குற உன் அண்ணன் வந்துடுவான்னு பயமா இருக்கா?” நக்கலாகக் கேட்டான்.
அவன் கேள்வியில் திக்கென்றாகிப்போனது துளசிக்கு. ‘அப்படியானால் அண்ணன் வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்டு தான் வந்திருக்கிறானா?’
“பரவாயில்ல, அவன் வந்தா வரட்டும். நீ இப்பவேச் சொல்லு. சொல்லப்போனா, அவன் முன்னாடி தான் எனக்கு நீ விளக்கமே குடுக்கணும்.” குமரனின் குரலில் இப்போது பிடிவாதம்.
“கண்டிப்பா என்னோட பக்கத்து நியாயத்தை நான் சொல்லுவேன். ஆனா இப்போ வேண்டாம். ப்ளீஸ்… நீங்க… நீங்க இப்போ கிளம்புங்க.” துளசி கெஞ்ச, குமரனின் கோபம் உச்சாணிக் கொம்பில் போய் அமர்ந்து கொண்டது.
“உன் பக்கத்து நியாயத்தை கேட்டுத்தான் ஆகணுங்குற சூழ்நிலையில் நான் இப்போ இல்லை ம்மா. எப்போ நீ அப்பா, அண்ணன், கௌரவம், அந்தஸ்து லொட்டு லொசுக்கு எல்லாம் தான் பெருசு, உன்னோட அன்பு எல்லாம் ஒன்னுமே இல்லைன்னு சொல்லி எங்கூட வரமாட்டேன்னு சொன்னியோ, அப்பவே என் வாழ்க்கைக்கு நீ தேவையில்லைன்னு முடிவெடுத்துட்டேன். அப்போ எதுக்குடா இந்த ஊருக்கே திரும்பி வந்தன்னு நீ கேட்கலாம். என்னை வக்கத்தவன்னு சொன்ன உன் அண்ணனுக்கு, நான் யாருன்னு காட்ட வேண்டாமா? இல்லைன்னா நான் மனுஷனா பிறந்ததுக்கு அர்த்தமே இல்லாமப் போகுமே. அதுக்காக மட்டும்தான் குமரன் இந்த மண்ணை திரும்பவும் மிதிச்சது. நீ என்னவோ உன்மேல உள்ள அமரக்காதலை மறக்க முடியாமத்தான் திரும்பவும் வந்திருக்குறேன்னு தப்பா நினைச்சிடாத.”
சீற்றத்தோடு குமரன் சொல்ல, மனதிற்குள் நொறுக்கிப்போன துளசி அப்படியே தொய்ந்துபோய் மாடிப்படியில் அமர்ந்தநேரம், “குமரன்…” என்று சத்தமிட்டபடியே உற்சாகப்பந்தாக மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கி வந்து கொண்டிருந்தாள் காவேரி.
“ஹேய் காவேரி… பாத்து, மெதுவா, கீழ விழுந்துடப்போற பேபி.” சட்டென்று பழைய பாசக்கார குமரன் அவனுள் இருந்து வெளியே வந்திருக்க, நின்றிருந்த இடத்திலிருந்து பதட்டமாக மாடிப்படி அருகே வேகமாக வந்தான்.
“தேங்க் காட்… எத்தனை வருஷம் ஆகிப்போச்சு நாம பார்த்து? திரும்பவும் உங்களை பார்ப்பேனான்னு ஆகிப்போச்சே! ஆனா உண்மையிலேயே உங்களை பார்த்துட்டேன். இது உண்மை தானா? என்னால நம்பவே முடியலையே!” குமரனின் கரங்களைப் பிடித்து குதித்த காவேரி, அவன் கைச்சதையில் வேகமாக கிள்ளியும் வைத்தாள்.
“ஷ்ஷ்…ஆ…” வலியில் அவன் முகத்தைச் சுருக்குவதைப் பார்த்து, “உண்மைதான்…” கலகலவென்று சிரித்தாள். உடன் சிரித்தவன்,
“ஆனா, இது என்னோட காவேரி பேபியா? சந்தேகமா இருக்கே…” காவேரியின் தலையை மென்மையாக பிடித்து ஆட்டியபடியேச் சொன்னான்.
“ஏன்? ஏன்? என்ன சந்தேகம் உங்களுக்கு?” குமரனை அருகில் கண்டுவிட்ட உற்சாகத்தில் தரையில் கால் பாவவில்லை காவேரிக்கு.
“நீங்க, வாங்க, போங்க, இப்பிடியெல்லாம் காவேரி பேபிக்கு என்னைப் பார்த்து பேச வராதே… அதான்.” கேலி இழையோடியது குமரனின் குரலில்.
“அது… அப்போ உங்களுக்கு சின்ன வயசு. ஆனா, இப்போ அப்பிடி இல்லையே… பெரிய மனுஷ தோரணை வந்தாச்சு. நாளைக்கே உங்களுக்கு கல்யாணம் ஆகி, உங்க மனைவி வந்து, எம்புருஷனை பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எனக்கு தடை உத்தரவு போடுறதுக்கு முன்னாடி, நானே மாத்திக்கிறது நல்லதுல்ல, அதான் ரெஸ்பெட் குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.” அங்கே துளசி என்ற அப்பாவி ஜீவன் மனமுடைந்து போய் இருக்கிறது என்ற எண்ணம் துளியும் இல்லாமல் சரளமாக பேச்சு நடந்தது இருவருக்குள்ளும்.
“என் காவேரி பேபியை யாரும் அப்படி சொல்லிட முடியுமா? அப்படிச் சொல்லத்தான் விட்டுருவானா இந்த குமரன்? என்னை, என்னோட நட்பை சரியா புரிஞ்சிக்காத யாருக்கும் என் வாழ்க்கையில் இடம் இல்லை.” கொஞ்சம் தீவிரமான குரலில் சொன்னான் குமரன்.
“ம்ம்… இப்போ சொல்லுங்க. எப்பிடி இருக்கீங்க? இத்தனை வருஷமா எங்க இருந்தீங்க? என்னப் பண்ணுறீங்க? உங்களைப் பற்றி எல்லாம் சொல்லுங்க.” ஆவலாக கேட்டாள்.
குமரனின் வார்த்தைகள் தந்த வலியோடும், அண்ணன் இப்போது இங்கே வந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தோடும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த துளசியின் காதுகள் கூட குமரன் சொல்லப்போகும் பதிலுக்காக கொஞ்சம் ஆவலாக தான் காத்திருந்தது.
“அதெல்லாம் சாவகாசமாக பேசிக்கலாம். என் குட்டிம்மா என்ன பண்ணுறீங்க? ப்ளஸ் ட்டூவா?” என்று கேட்டு துளசியின் ஆசைக்கு வேட்டு வைத்தான் குமரன்.
“ம்ஹும்… என்னைப் பாத்தா, ப்ளஸ்ட்டூ பொண்ணு மாதிரியா பாஸ் இருக்குறேன். காலேஜ் செகண்ட் இயர் போறேன் தெரியுமா?” முகத்தைச் சுருக்கி சிணுங்கினாள் காவேரி. பேச்சுக்கு நடுவே குமரனின் கையைப் பற்றி அழைத்து வந்து ஹாலில் கிடந்த இருக்கையில் அமர வைத்து தானும் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
இத்தனை வருடங்களில் காவேரி கல்லூரிக்கு சென்றிருப்பாள் என்று அவனுக்கு தெரியாதா என்ன? வேண்டுமென்றே தான் கேட்டிருந்தான். அவனுக்கு காவேரியோடு வார்த்தையாடுவது பிடிக்கும். இப்போது என்றில்லை, சிறு வயதிலிருந்தே.
காவேரியின் சிணுங்கலில் மலர்ந்து சிரித்தவனின் கண்களில் அவள் கன்னத்தில் இருந்த கைத்தடம் விழுந்தது. ஆமாம், அருணாச்சலம் அறைந்திருந்ததில் அவள் கன்னத்தில் அவனுடைய கைத்தடம் பதிந்திருந்தது.
“கொஞ்சம் இரு காவேரி, அது என்ன கன்னத்துல கைத்தடம் மாதிரி தெரியுது?” பக்கத்தில் வந்து அவள் கன்னத்தைப் பற்றி ஆராய்ச்சியாக பார்த்தவன், “என்னை பார்க்கவரக்கூடாதுன்னு சொல்லி உங்க அண்ணன் அடிச்சானா?” முகம் கோபத்தில் கறுத்துப்போக ஒருமாதிரி குரலில் கேட்டான்.
காவேரி நடைபழகிய காலத்தில் இருந்து அவளைத் தூக்கி வளர்த்தவன் குமரன். பெற்றோர்கள் இன்றி, உடன்பிறந்தவர்களும் இல்லாமல் வளர்ந்தவனுக்கு காவேரியிடம் இயல்பாகவே ஒரு சகோதரபாசம் தோன்றியிருந்தது. எனவே அவள் காயப்பட்டு போயிருந்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குமரன் சொல்லிய பிறகு தான் காவேரிக்கு அண்ணணின் கைவண்ணத்தில் தன் கன்னத்தில் கைத்தடம் விழுந்திருக்கிறது என்பதே தெரியவந்தது. துளசிக்கும் அப்படியே. அவளும் கூட தங்கையின் கன்னத்தை அதிர்ச்சியோடு தான் பார்த்தாள்.
குமரனின் கோபத்தை காவேரியால் உணரமுடிந்தது. இப்போது உண்மையைச் சொன்னால் வேண்டத்தகாத சம்பவங்கள் எதுவும் நடந்தாலும் நடக்கலாம். அதை விரும்பாதவள், “கைத்தடமா? எப்பிடி?” எதுவும் தெரியாதது போல கண்களை விரித்தவள், இயல்பாக கன்னத்தை தடவி யோசிப்பது போல பாவனை செய்தாள்.
“ஹாங்… செயர்ல உக்கார்ந்து படிச்சிட்டு இருந்தேனா… நமக்கு தான் படிச்சா தூக்கம் வந்திடுமே, அப்பிடியே மேஜை மேல கவுந்தடிச்சு படுத்துட்டேன், டேபிள்ல கிடந்த புக்ஸ் கன்னத்துல அழுத்தி தடம் விழுந்திடிச்சி போல. உங்க சத்தம் கேட்டதும் முகம் கூட கழுவாம அப்பிடியே எழும்பி ஓடி வந்துட்டேன். அதுதான் அப்பிடி தெரியுமா இருக்கும்.” ஏற்ற இறங்கங்களோடு காவேரி சொல்ல, அப்பாடி என்று இருந்தது துளசிக்கு.
பின்னே, உண்மையை காவேரி சொல்லியிருந்தால் அறையில் இருக்கும் அருணாச்சலத்தை இழுத்து வந்து கன்னம் கன்னமாக குமரன் அறைந்திருப்பானாக இருக்கும். அப்படித்தான் அவன் உடல்மொழியும் இருந்தது.
“பின்ன, இந்த காவேரி மேல யாராவது கையை வச்சிர முடியுமா என்ன?” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு சவாலாக கேட்டவள், போலியாக குமரனை முறைத்தாள்.
“ம்ம்… நீ இவ்வளவு சொல்லுறதால நம்புறேன்.” வார்த்தையால் சொல்லிவிட்டால் கூட குமரனின் பார்வை அவளை சந்தேகமாகத் தான் பார்த்து வைத்தது.
“அச்சோ… இதைப்போய் ஒரு விஷயமாக்கி நேரத்தை வேஸ்ட் ஆக்கிட்டு இருக்கோம் பாருங்க. உங்க புது வீட்டைப்பத்தி சொல்லுங்க.” சாமார்த்தியமாக அவனுடைய கவனத்தை திசை திருப்பினாள். அவளுடைய யுக்தி வேலையும் செய்தது.
“ம்ம்… அதுக்காகத் தான் வந்தேன். அம்மாவை எங்க காவேரி.” என்றான் குமரன்.
“இங்க தான் இருப்பாங்க.” என்றவள், “அம்மா…” என்று வீட்டுக்குள் பார்த்து சத்தமாக அழைத்தாள். பதிலில்லை.
“ஹ்ம்ம், இப்போதான் ஞாபகம் வருது குமரன். இன்னும் இரண்டு மூனு நாளுல ஒரு பசு கன்னுக்குட்டி போடும்னு சொல்லிட்டே இருந்தாங்க அம்மா. அதை அடிக்கடி போய் பார்க்கவும் செய்வாங்க. அதுக்கு தான் தொழுவுக்கு போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இருங்க, நான் போய் கூப்பிட்டுட்டு வந்துடுறேன்.” என்றபடி எழும்பினாள்.
கன்றுபோட இருக்கும் பசுவை எத்தனை சிரத்தையோடு பராமரிக்க வேண்டும் என்று குமரனுக்கும் தெரியுமே. எனவே, “வா, நானும் வரேன். மாடு, கன்னு எல்லாம் பாத்து எவ்ளோ நாளாகிடிச்சி” என்றபடி அவனும் இருக்கையிலிருந்து எழும்ப முயன்ற நேரம்,
“கூப்பிட்டியா காவேரி?” ஈரமான கைகளை டவலில் துடைத்தபடியே சுலோச்சனா அங்கே வந்து சேர்ந்தார்.
அவரைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக குமரன் இருக்கையிலிருந்து எழும்பி நின்றான். அவனை அங்கே எதிர்பாராத சுலோச்சனாவுக்கு அதிர்ச்சியே.
ஆனால் அதையும் மீறி, “வாப்பா குமரா, நல்லா இருக்கியா?” என்று வாஞ்சையாக விசாரித்தார்.
“எனக்கென்ன ப்பா, எப்பவும் போல திவ்யமா இருக்கேன்.” என்றவர், காவேரியிடம், “குமரன் வந்து ரொம்ப நேரமாச்சா? என்னை வந்து உடனே கூப்பிடுறதுக்கு என்ன?” என்று கேட்டார். அவர் கண்களில், முகம் வெளிற மாடிப்படியில் அமர்ந்திருந்த மூத்தமகளும் விழத் தவறவில்லை.
‘கண்டிப்பாக குமரனை முதலில் துளசி தான் எதிர்கொண்டிருக்க வேண்டும். இருவருக்குள் ஏதோ பேச்சுவார்த்தை போயிருக்கிறது. அது நல்லவிதமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் உலகமே இருண்டு போனது போல என்மகள் உட்கார்ந்திருக்கிறாள்.’ அனுபவம் சொல்ல, கவலையோடு மகளைப் பார்த்தார்.
ஆரம்பத்தில், மகள் காதலிக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது சுலோச்சனாவிற்கு. ஆனால் அந்த காதல் குமரன் மீது என்ற போது, அவருடைய அதிர்ச்சி காலாவதி ஆகியிருந்தது என்பது தான் உண்மை.
‘நான் பார்க்க வளர்ந்த பையன் குமரன். கெட்ட பழக்கவழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல படிப்பாளி, கூடவே உழைப்பாளி. முக்கியமாக, பெண்களை மதிக்கத் தெரிந்தவன். வருங்காலத்தில் கட்டாயம் நல்ல நிலமைக்கு வருவான். அவனோடு மகளின் வாழ்க்கை அமைந்தால், அவளுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். இப்போது துளசி படிப்பை முடிக்கட்டும் குமரன் வேலைக்கு செல்லட்டும். திருமண வயது வரும்போது இருவருக்கும் கல்யாணத்தை முடித்து வைக்கலாம்.’
இப்படித்தான் சுலோச்சனாவின் எண்ணம் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கணவரும் மகனும் சேர்ந்து ஒன்றுமில்லாமல் முடித்து வைத்துவிட்டார்கள். மனைவியின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வேதாச்சலத்திற்கு கிடையவே கிடையாது. அதையும் மீறி தன் எண்ணத்தை சொல்லி கணவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது தான் மிச்சம்.
‘இப்போதோ முடிந்ததை தொடர நினைக்கிறாள் மகள். அது முடியுமா? அதுவுமில்லாமல், வசதி வந்தவுடன், உங்கள் வீட்டு வேலைகாரனின் பேரன் என்ற பேதம் தெரியவில்லையா என்று குமரன் கேட்டுவிட்டால்? எல்லாவற்றையும் விட, மகன் இதற்கு சம்மதிக்க வேண்டுமே.’ அந்த தாயின் மனம் சிந்தனையின் பிடியில் சிக்கிக்கொண்டது.
“நாளைக்கு மறுநாள் வீடு கிரகப்பிரவேசம் பண்ணுறேன். நீங்க கண்டிப்பா வரணும் காவேரி ம்மா.” அழைப்பு விடுத்தான் குமரன்.
“ஹலோ… அம்மாவுக்கு மட்டும் தான் அழைப்பா? எங்களை எல்லாம் கூப்பிட மாட்டீங்களா?” சண்டைக்கு வந்தாள் காவேரி.
“அடடே! தனியா கூப்பிடுற அளவுக்கு பெரிய ஆளாகிட்டியா நீயி? மரியாதையா அம்மாகூட வந்துசேரு.” போலியாக மிரட்டினான் குமரன்.
“டீ குடிக்கிறியா குமரா?” சூழ்நிலை கொஞ்சம் இதமானதாக நகர, தன் சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு விருந்தோம்பலில் இறங்கினார் சுலோச்சனா.
“அம்மாடி… இந்த வார்த்தையை கேக்கவே மாட்டீங்களோன்னு பயந்துட்டேன் காவேரி ம்மா. நல்ல வேளையா கேட்டுட்டீங்க.” குமரன் சொல்லிய பாவனையில் அட்டகாசமாக சிரித்தாள் காவேரி.
“நான் ஒரு மடச்சி, மொதல்லயே கேட்டுருக்கணும். காவேரி, நீ குமரன் கூட பேசிட்டு இரு. துளசி நீ வா, நாம டீ போட்டுட்டு வரலாம்.” மூத்த மகளையும் அங்கிருந்து கிளப்பிக்கொண்டு பரபரப்பாக சமையலறைக்குள் வந்திருந்தார் சுலோச்சனா. இத்தனைக்கும் நடுவில் மகன் அறையை விட்டு வெளியே வந்துவிடக்கூடாதே என்ற பதட்டமும் அவரிடம் இல்லாமல் இல்லை.
“நான் டீ போடுறேன் ம்மா.” துளசி சொல்ல, மறுபேச்சில்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.
இஞ்சியும் ஏலமும் தட்டிப்போட்டு டீ போட சில நிமிடங்களை எடுத்துக்கொண்ட துளசி, பதமான சூட்டில் கப்பில் ஊற்றினாள். அதை தன்னுடைய கையில் எடுத்துக் கொண்ட சுலோச்சனா மறுபடியும் ஹாலுக்கு செல்ல, அவர் பின்னோடு வந்தாள்.
சரியாக மகனுடைய அறையை அவர் கடக்க முற்படும்போது, அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான் அருணாச்சலம். திடுக்கிட்டு போன சுலோச்சனா மகனையும் கையிலிருந்த டீயையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
“ஹப்பா… சரியான தலைவலி, டீ போட்டு குடுங்க.” கண்களை சுருக்கி நெற்றியை நீவிவிட்டவன், “டீ எனக்கா?” என்று கேட்டபடியே அம்மாவின் கையிலிருந்த டீயை வாங்கிக் கொண்டான்.
“இல்ல, குமரனுக்கு…” சட்டென்று வார்த்தைகள் வந்துவிட, அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்ட சுலோச்சனா ஹாலில் இருந்த குமரனை பரிதாபமாக பார்த்தார்.
அம்மாவின் பார்வையைப் பின்பற்றி அருணாச்சலமும் பார்க்க, அவனுடைய தலைவலி ஹால் சோபாவில் அமர்த்தலாக அமர்ந்துகொண்டு இளைய தங்கையோடு சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்தது.
“இவன் எதுக்காக இங்க வந்தான்? இவனுக்காகத்தான் இந்த டீயை போட்டீங்களா?” ஆங்காரமாக கேட்ட அருணாச்சலம் கையிலிருந்த டீ கப்பை எதிரே இருந்த சுவரில் ஓங்கி எறிந்திருந்தான்…