அத்தியாயம் 02

தங்கையின் கேள்விக்கு ஆமாம் என்று தலையசைத்த துளசியின் கைகள் எதிர்பாராத விதமாக குமரனைக் கண்ட அதிர்ச்சியில் ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பற்றிக் கொண்டன. அவள் பார்வையோ அங்கும் இங்கும் நகராமல் பரவசமாக அவன் மீதே மையம் கொண்டிருந்தது.

கடந்திருந்த வருடங்கள் பெண்ணவளின் தோற்றத்தில் அழகான பருவமாற்றங்களை கொண்டு வந்திருந்தது போல, குமரனின் தோற்றத்திலும் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது.

ஆமாம்… ஊரைவிட்டு செல்லும் போது வாலிப வயதின் ஆரம்பத்தில் இருந்த குமரனின் உருவத்தோற்றம், இப்போது முழு ஆண்மகனாக கம்பீரமாக மாறியிருந்தது.

“வீடு ரொம்ப நல்லாயிருக்கு குமரன்.“ அவனோடு காரிலிருந்து இறங்கி நின்றிருந்தவர்கள் சொன்ன வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்து இவளுடைய காதுகளிலும் விழ, ‘ஏ கே’ என்ற ஆங்கில எழுத்துக்களுக்கு இப்போது அர்த்தம் விளங்கியது.

‘அருள் குமரன் இல்லம்.’ மெல்ல முணுமுணுத்து கொண்டவளின் உள்ளம் நொடியில் குமரனுக்காக மகிழ்ந்து போனது. எந்த இடத்தில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு ஊரைவிட்டே சென்றானோ அந்த இடத்திலேயே தன்னை நிரூபிக்க முயன்றிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது துளசியால்.

கிட்டத்தட்ட ஒருவருட காலமாக குமரனுக்காக வீடு கட்டும் பணி தன் கண்முன்னரே நடந்திருக்கிறது. ஆனால் அவனைப்பற்றி எதுவும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. கழிவிரக்கத்தில் கரைந்து போனவள் கண்சிமிட்டாமல் குமரனையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் கண்களோ தன்னையறியாமல் கசிந்தபடி இருந்தன.

குமரனாகப்பட்டவனோ காரிலிருந்து இறங்கி நின்றதும் துளசியின் வீட்டு தலைவாசலைத் தான் பார்த்தான். அங்கே சிலவினாடிகள் தூழாவியவனின் பார்வை சட்டென்று மாடிக்கு, அதுவும் துளசியின் அறைக்கு தாவியது.

அவனின் அசைவுகளை அங்குலம் அங்குலமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு குமரனின் பார்வையும் தேடலும் சொல்லொன்னா ஆசுவாசத்தைக் கொடுத்தது. மனம் ஏதோவொரு விதத்தில் ஆறுதலடைய அப்படியே அந்த இடத்திலேயே அவனுடைய பார்வையை சந்தித்தபடி நின்றிருந்தாள்.

துளசியை ஜன்னலுக்கு பின்னால் கண்டுகொண்ட குமரனோ, சட்டென்று இவளை நோக்கி கையை அசைத்தான்.

எதிர்பாராத அவனுடைய இந்த செயலில் திடுக்கிட்டு போன துளசியின் கைகள் பதட்டத்தில் ஜன்னல் கம்பிகளை விடுவித்தன. கால்களோ தன்னியல்பாக ஒரடி பின்னால் நகர்ந்திருந்தன.

ஆனால் அவளுக்கு பின்னால் நின்றிருந்த காவேரி முன்னால் வந்து, “ஹாய் குமரன்” என்று சத்தமாக அவனைப் பெயரைச்சொல்லி அழைத்தபடி கையசைத்தாள்.

பதிலுக்கு உற்சாகமாக கையாட்டிய குமரன், இறங்கி வா என்பது போல சைகை செய்தான். இதோ வர்றேன் என்று பதிலுக்கு சைகை செய்த காவேரி, குதித்தபடி உற்சாகமாக அங்கிருந்து நகர முயல, தங்கையின் கையை எட்டிப்பிடித்துக் கொண்டாள் துளசி.

“கையை விடு க்கா, நான் போய் குமரனைப் பார்த்து பேசிட்டு வரேன்.” அக்காவின் கையிலிருந்து தன்னுடைய கையை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்த காவேரி,

“நீ ஏன் க்கா குமரனுக்கு கை அசைக்கல? எவ்வளவு ஆசையா உன்னைப் பார்த்து கை அசைச்சாங்க, ஏங்கா இப்பிடி பண்ணுற?” கோபத்தில் படபடவென்று பொரிந்தாள்.

  எதிர்பாராத விதமாக குமரனை அங்கே கண்டதே துளசிக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றால், அவன் மிகவும் இயல்பாக தன்னை நோக்கி கையை அசைத்தது பேரதிர்ச்சியாக இருந்தது. அதன் வெளிப்பாடுதான் துளசியின் செயல். மற்றபடி வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை.

“அண்ணா வீட்டுல இருக்குறான், நீ இப்போ அங்கப்போனா பிரச்சினை ஆகிப்போகும் காவேரி. ப்ளீஸ், போகாத.” தங்கையின் கேள்விக்கு பதில் சொல்ல முயலாமல், அவள் போவதை தடுக்க முற்பட்ட துளசியின் குரல் அப்பட்டமாக பயத்தில் குளித்திருந்தது.

“நீ வேணும்னா உங்க நொண்ணனுக்கு பயப்படு, என்னால முடியாது.” அக்காவின் கையை வேகமாக உதறி தன்னுடய கையை விடுவித்துக்கொண்ட காவேரி புள்ளிமானாக குதித்து மாடிப்படி இறங்கி கீழே வந்தாள். எதிர்ப்பட்ட அம்மாவிடம்,

“நம்ம குமரன் வந்துருக்காப்ல ம்மா, எதுத்தாப்ல இருக்கிற வீடு அவனோடது தானாம். என்னைக் குமரன் கூப்பிடுறாப்ல, நான் போய்ட்டு வந்துடுறேன்.” கால் தரையில் பாவாமல் படபடவென்று பேசினாள்.

“ம்ம்… நானும் இப்போ தான் குமரனைப் பார்த்தேன் காவேரி, அவனை இப்பிடியொரு நிலமையில பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நீ அங்க போறதை அண்ணன் பாத்தா பெரிய பிரச்சினை ஆகிடும். வந்த அன்னைக்கே நம்மால குமரனோட சந்தோஷம் கெடவேண்டாம். சொல்லுறதை புரிஞ்சுக்கோ.” என்றார் கெஞ்சலாக.

“இப்பிடி தேவையில்லாம உங்க மகனுக்கு பயந்து பயந்து தான் அவனைக் குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்கன்னு உங்களுக்கு புரியுதா ம்மா? நீங்களும், உங்க மூத்த மகளும் வேணும்னா உங்க மகனுக்கு பயப்படுங்க. ஆனா எங்கிட்ட அதையே எதிர்பாக்காதீங்க.” திட்டவட்டமாக சொல்லிவிட்டு வீட்டுப் படிகளில் காவேரி இறங்க, அவள் முன்னால் பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் அருண்.

சற்றுமுன்னர் வெளியே சென்றிருந்த மகன் திரும்பி வந்துவிட்டதில் சுலோச்சனாவுக்கு நடுக்கம்.

“எங்கடி போற?” பார்வையை வெளியே பதித்தபடியே தன்னைத் தாண்டி செல்ல முயன்ற தங்கையை அதட்டினான் அருண்.

“கு… குமரன் வந்துருக்காப்ல, போய் பாத்துட்டு வந்துடுறேன்.” தாயிடமும் தமக்கையிடமும் வீராவேசம் பேசியவளின் குரல் அண்ணனைக் கண்டதும் லேசாக தந்தியடிக்கத்தான் செய்தது.

“குமரனா?!” புருவத்தை அசூசையாக நெறித்தான் அண்ணன்காரன்.

“ம்ம்… நம்ம அருள் குமரன், எதிர்வீடு குமரன் வீடுதான் போல, இப்போதான் வந்து இறங்குனாப்ல, நான் போய் பாத்துட்டு வந்துடுறேன்.” இப்போது கொஞ்சம் பயம் தெளிந்திருக்க, தைரியமாகச் சொன்னாள் காவேரி.

தங்கையின் வார்த்தைகளில் தனக்கு பின்னால் திரும்பி பார்த்தான் அருண். இத்தனை நேரத்தில் விஷயம் தெரிந்து வந்திருந்த ஒன்றிரண்டு உள்ளூர்வாசிகளுக்கு நடுவே நின்றிருந்த குமரன் கண்களில் விழுந்தான்.

‘இவனா? இங்கேயா? எப்படி?’ கண்கள் இரண்டும் தெறித்து விடுவது போல விழிகளை விரித்து பார்த்தவனைக் கண்டுகொண்ட குமரன் அவனையும் பார்த்து கையசைத்து வைக்க, வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டான் அருண்.

 தங்கையின் பின்னோடு கைகளைப் பிசைந்தபடி வந்து நின்றிருந்த அம்மாவிடம், “இங்க என்ன நடக்குது? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அதட்டினான்.

மகனின் அதட்டலில் நடுங்கிப்போன சுலோச்சனா, “சின்னவயசுல அவளோட விளையாட்டு தோழன் குமரன் தானே, அதான் அவனைக் கண்டதும் ஒரு ஆர்வத்துல கிளம்பிட்டா.” மெல்லிய குரலில் முணுமுணுத்தவர்,

“வீட்டுக்குள்ள வாடீ” என்று மகளின் கையைப் பிடித்து இழுத்தார்.

இங்கே ஒரு கண்ணை வைத்தபடியே பேசிக்கொண்டு நின்றிருந்த குமரன், “நீ போ, நானே பிறகு வருகிறேன்.” என்பது போல இப்போது காவேரியைப் பார்த்து சைகை செய்ய, உற்சாகமாக தலையை ஆட்டி சம்மதித்தவள் அம்மாவுடன் வீட்டுக்குள் சென்றாள்.

தன்னை ஒருபொருட்டாக மதிக்காமல், குமரனைப் பார்த்து தலை அசைத்தபடி வீட்டுக்குள் சென்ற இளையத் தங்கை மீது கொலைவெறியே வந்தது அருணுக்கு.

இருசக்கர வாகனத்தை அப்படியே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன், வேகமாக வீட்டுக்குள் வந்து கதவை ஓங்கி அடித்து சாத்தி தன்னுடைய கோபத்தைக் காட்டினான்.

கதவை அடைத்து சாத்தும் போது மறுபடியும் அருணின் கண்கள் குமரன் மீது விழ, குமரனின் பெரியப்பா குடும்பம் இப்போது அங்கே நிற்பது தெரிந்தது.

‘இப்போ எதுக்கு இந்த பரதேசி மறுபடியும் இங்க திரும்பி வந்துருக்கான்? ஊரைவிட்டு போனவன் போனவனாகவே இருந்து தொலைய வேண்டியது தானே?’ வலது கையால் கேசத்தை அழுத்தமாக பின்னோக்கி கோதி விட்டுக் கொண்டவனின் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறியது.

“நடந்தது எல்லாம் மறந்து போச்சா ம்மா உங்களுக்கு? எந்த தைரியத்துல விளையாட்டு தோழன், அவனை பாக்கப் போறான்னு எங்கிட்டவே சொல்லுறீங்க? ம்ம்…” அருண் கோபத்தில் வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

என்ன சொன்னாலும் தன் வார்த்தைகள் அங்கே எடுபடப்போவதில்லை என்பதால் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தார் சுலோச்சனா.

“அந்த ராஸ்கல் எத்தனை நாளு வக்கணையா நம்ம வீட்டுல தின்னுருப்பான். அந்த நன்றி விசுவாசம் அவன் உடம்புல கொஞ்சமாவது இருந்ததா? சாப்பாடு போட்ட வீட்டுலயே கை வைக்க துணிஞ்சவன் தானே அவன்.” குமரனை மறுபடியும் பார்த்ததை, அதுவும் அவ்வளவு பெரிய வீட்டுக்கு சொந்தக்காரனாக பார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், வன்மத்தை வார்த்தைகளாக கொட்டினான்.

“குமரன் ஒன்னும் ஓசிக்கு நம்ம வீட்டுல சாப்பிடல, அவர் செய்த வேலைக்கு ஈடாதான் சாப்பிட்டிருப்பார். உங்களுக்கு சம்பளம் கொடுக்க வக்கில்லாம சோத்தை போட்டு அனுப்பிட்டு, அதைச் சொல்லியும் காட்டுவீங்களா?” காவேரி சொல்லி முடிக்கவில்லை பளாரென்று அவளை அறைந்திருந்தான் அருண்.

“ராஸ்கல், கூடக்கூட பேசுற நீ. யாராவது எனக்குத் தெரியாம அவங்கூட தொடர்பு வச்சிக்கிட்டீங்களோ, அம்மா தங்கச்சின்னு எல்லாம் பாக்க மாட்டேன். வெட்டி பொலி போட்டுருவேன். உங்க மூத்த மககிட்டயும் சொல்லி வைங்க.” ஆள்காட்டி விரலை நீட்டி பத்திரம் சொல்லியபடியே தாயிடம் மிரட்டலாக சொல்லியவன்,

“சாப்பாடு எடுத்து வைங்க, போங்க” என்று அம்மாவுக்கு உத்தரவு போட்டுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

“எதுக்குடி இப்பிடி அநியாயத்துக்கு அவங்கிட்ட அடிபட்டு சாகுற?” ஒற்றைக் கையால் அடிபட்ட கன்னத்தை தாங்கியபடி நின்றிருந்த மகளிடம், குரல் தழுதழுக்க கேட்டார் சுலோச்சனா. அவரை பார்வையால் வெட்டியவள்,

“உங்க மகனுக்கு குமரன் மேல பொறாமை. இப்போன்னு இல்லை, படிக்கிற காலத்துலயிருந்தே. அதுக்கு தோதா அக்கா விஷயமும் வர, குமரனை பழிவாங்கிட்டான். இப்போ இவன் கண்முன்னே பந்தாவா வந்து நிக்குற குமரனைப் பார்த்து பொறுக்க முடியல. அதான் இப்பிடி ராட்சஷன் மாதிரி நடந்துக்குறான். போங்க, போய் உங்க மகனுக்கு வடிச்சு கொட்டுங்க, அவன் இன்னும் தெம்பா எங்களை அடிச்சு கொல்லட்டும்.” விசும்பல்களுக்கிடையே சொல்லியவள், தன் கோபத்தை எல்லாம் மாடிப்படி ஏறுவதில் காட்ட, அந்த பழையகாலத்து தேக்குமர படிக்கட்டு கதறத்தான் செய்தது.

அழுதபடியே செல்லும் மகளுக்கு பின்னால் சென்று அவளை ஆறதல்படுத்த தான் அந்த தாயுள்ளம் துடித்தது. ஆனால் மகனின் வார்த்தையை மீறும் தைரியம் இல்லாமல் போனதால் அவனுக்கு உணவு எடுத்து வைக்க சமையலறைக்குள் சென்றார் சுலோச்சனா.

அம்மா கொடுக்க நினைத்த ஆறுதலை தங்கைக்கு துளசி கொடுத்தாள். ஆமாம், மேலே மாடிப்படியின் அருகில் நின்று கீழே நடப்பதை பதட்டத்தோடு பார்த்தபடி நின்றிருந்தவள், தங்கை வந்ததும் அவளை இறுக அணைத்து முதுகை லேசாக தட்டிக்கொடுத்தாள்.

“இந்த அம்மா சரியில்லை க்கா, அதனாலத்தான் நமக்கு இந்த நிலமை.” தமக்கையின் தோள் வளைவில் முகத்தை புதைத்துக்கொண்டு தன் மனக்குமுறலைக் கொட்டினாள் காவேரி.

“தப்பு காவேரி, அம்மாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.” தங்கையை மென்மையாக அதட்டினாள் துளசி.

“பின்ன என்ன க்கா, நம்ம வீட்டுல உள்ளவனை முதல்லயே தட்டி வளத்திருந்தா இன்னைக்கு அம்மாவுக்கு இந்த நிலமை வந்திருக்குமா? நாமளும் அவனுக்கு இப்பிடி பயந்து பயந்து சாகணுமா?” அக்கா அதட்டியதில் ரோஷம் பொத்துக்கொண்டு வர பதிலுக்கு பேசினாள் தங்கை.

“இப்போ நீ மட்டும் என்ன பண்ணுறியாம் காவேரி, அண்ணனைப் போலத் தானே அம்மாவை அதட்டுற?” நிறுத்தி நிதானமாக துளசி கேட்க,

“என்ன க்கா சொல்லுற…” சட்டென்று தமக்கையின் தோளிலிருந்து விலகிய இளையவளின் குரல் காற்றாகிப்போய் வந்தது.

“ம்ம்… அம்மா பாவம். அப்பா, அண்ணா, இப்போ நீன்னு எல்லோர்கிட்டயும் உதைபடுறாங்க.” தாயைக் குறித்த நிஜமான கவலை இருந்தது அந்த மகளுடைய குரலில்.

“நான்… நான்…” அம்மாவை நோகடித்துவிட்டோமோ என்ற பதட்டத்தில் வார்த்தைகள் திணறியது காவேரிக்கு.

“எல்லா பிரச்சினையும் என்னால தான், ஆனா அல்லல் படுறது என்னவோ அம்மா தான். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு என்னையே பிடிக்கல தெரியுமா?” தங்கையிடமிருந்து சற்றே நகர்ந்து சென்ற துளசியின் குரல் இப்போது விரக்தியில் உடைந்து போய் வந்தது.

“நீயும் குமரனும் லவ் பண்ணுறீங்க தானே க்கா? பேசாம நீ குமரனை கல்யாணம் பண்ணிக்கோ. நான் வேணும்னா குமரனைப் பார்க்கும் போது அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லட்டுமா?” அக்காவின் துன்பத்தை போக்கிவிடும் வேகத்தில் தங்கை ஆவலாக கேட்க, அதிர்ந்து போனாள் துளசி.