“பிறந்த நாள் வாழ்த்துகள் ம்மா துளசி.” மகளுக்கு பிறந்தநாள் என்று சொல்லி அர்ச்சனை தட்டை கோயில் அர்ச்சகரிடம் துளசியின் அம்மா சுலோச்சனா நீட்ட, பெற்றுக் கொண்டவர் புன்னகைமுகமாக துளசியை வாழ்த்தினார்.
பல வருடங்களாக தொடர்ந்து கோவிலுக்கு வருவதால் அவர்கள் அர்ச்சகருக்கு மிகவும் தெரிந்தவர்களாகவே இருந்தனர். இல்லை என்றாலும் கூட அந்த கிராமத்தில் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி தெரியாத நபர்களே கிடையாது என்றும் சொல்லலாம்.
“அர்ச்சனை துளசி பெயருக்கு தானே ம்மா?” அர்ச்சகரின் கேள்விக்கு “ஆமாம்” என்று சுலோச்சனா தலையசைக்க, மந்திரங்களை முணுமுணுத்தபடியே கர்ப்பகிரகத்திற்குள் நுழைந்தார் அர்ச்சகர். ஆனால் நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ரீதியில் அன்னைக்கு அருகே நின்றிருந்தாள் துளசி.
ஆமாம்… துளசிக்கு பிறந்தநாளை கொண்டாடுவதில் எல்லாம் விருப்பம் கிடையாது. அம்மாவுக்காகத் தான் இன்று கோயிலில் வந்து நிற்கிறாள். பிறந்தநாள் வாழ்த்தை கேட்டாலே, அவளுடைய பத்தொன்பதாவது பிறந்த நாளன்று ஒற்றை ரோஜாவை நீட்டியபடி பிறந்தநாள் வாழ்த்தோடு காதலையும் தைரியமாகச் சொன்ன முகம் தான் அவளுக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
ஏழெட்டு வருடங்களாக அந்த முகத்திற்கு சொந்தக்காரனைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை. அவன் நினைவுகளை மனதிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தாலும் கண்டிப்பாக பிறந்தநாளன்று கோவிலுக்கு அழைத்துக்கொண்டு வந்து அம்மா நியாபகப்படுத்தி விடுகிறார்.
‘அடடே… பிறந்தநாள் அன்று மட்டும் தான் உனக்கு அவனுடைய ஞாபகம் வருகிறதா?’ துளசியின் மனமே அவளை கேலி செய்ய, அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் அர்ச்சனை மணி ஒலித்தது.
‘எங்கயிருந்தாலும் குமரன் நல்லா இருக்கணும்.’ கைகள் இரண்டையும் கூப்பி மனதார வேண்டினாள் துளசி. ஆமாம்…துளசியின் மனதில் குடிகொண்டிருக்கும் முகத்துக்கு சொந்தக்காரனின் பெயர் குமரன் தான். அருள் குமரன் அவனுடைய முழுப்பெயர்.
“வேணும்னா பாருங்க ம்மா, இந்த வருஷம் துளசிக்கு கண்டிப்பா கல்யாண பிராப்தம் அமையும். அவ பிரமாதமா வாழப்போறா.” சொல்லியபடியே ஆரத்தி தட்டை துளசியின் அம்மா சுலோச்சனா முன்பாக நீட்டினார் அர்ச்சகர்.
“உங்க வாக்கு மட்டும் பலிச்சிட்டா, இந்த ஐயனுக்கு பட்டு அங்கவஸ்திரம் எடுத்து சாத்திடுறேன் சாமி.” உணர்ச்சிவசப்பட்டுப் போன சுலோச்சனா பயபக்தியோடு ஆரத்தியை தொட்டு வணங்க, அம்மாவை பின்பற்றினார்கள் துளசியும் அவளுடைய தங்கை காவேரியும்.
ஆமாம்… சுலோச்சனா தன்னுடைய இரண்டாவது பெண் காவேரியையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
மகன், இரண்டு பெண்பிள்ளைகள் என்று சுலோச்சனாவுக்கு மூன்று பிள்ளைகள். மகன் அருணாச்சலம் தான் மூத்தவன், அடுத்தது துளசி, கடைக்குட்டி தான் காவேரி.
சுலோச்சனாவின் கணவர் வேதாச்சலம் மூன்று வருடங்களுக்கு முன்னர் சிவலோக பதவி அடைந்திருந்தார். திருமண வயதில் முதலிரண்டு பிள்ளைகள் இருந்தும் அவர்களுக்கு ஒரு நல்லது செய்து பார்க்கும் கொடுப்பினை அந்த மனிதருக்கு இல்லை.
அது தென்காசிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். கிராமம் என்றால் இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய திரைப்படங்களில் காட்டும் அக்மார்க் கிராமம் இல்லை. கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இரண்டிற்கும் இடைபட்டிருந்தது அந்த ஊர்.
இதோ இவர்கள் நிற்பது பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோயில். சமீபத்தில் புணரமைக்கப்பட்டு பளிச்சென்று கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
சுவாமிக்கு அணிவித்திருந்த மாலை ஒன்றை எடுத்து துளசியின் கைகளில் கொடுத்த அர்ச்சகர், “உங்க பாட்டன் பூட்டன் செய்த புண்ணியங்கள் எல்லாம் கண்டிப்பா உங்க கூட வரும் கண்ணு. தைரியமா வீட்டுக்கு போங்க.” என்று சொல்ல,
‘அப்போ பாவமும் எங்ககூட தானே வரும்.’ லேசாக முணுமுணுத்தது துளசியின் மனது.
பெண்கள் மூவரும் அமைதியாக கோவில் பிரகாரத்தை சுற்றிவந்து, ஓரிடத்தில் அமர்ந்தார்கள்.
“ம்மா, பிரசாத ஸ்டால்ல ரவா லட்டு நல்லா இருக்கும், வாங்கிக் குடுங்க.” மெதுவாக தாயின் கையைச் சுரண்டினாள் காவேரி.
“இங்கதானே வர்றோம்னு காசு எடுத்துட்டு வரல டி.” மெல்லிய குரலில் முணுமுணுத்தார் சுலோச்சனா. அந்த முணுமுணுப்பில் தன்னுடைய இயலாமையை முழுங்க முயன்றார் அந்த பெண்மணி.
“இல்லைன்னா மட்டும் அள்ளிட்டு வந்திடப் போறீங்க.” கேட்டது கிடைக்கவில்லை என்றதும் ஏமாற்றத்தால் வார்த்தைகள் வெடித்திருந்தது காவேரியிடமிருந்து.
“ச்சு… என்ன பழக்கம் இது காவேரி?” தங்கையை துளசி அதட்ட,
“பின்ன என்ன க்கா? பெயருதான் பெத்த பேரு, ஆனா டப்பு லேது.” அதிருப்தியாக சிறுபிள்ளைபோல உதட்டைப் பிதுக்கிய இளையவள் இளங்கலை இரண்டாம் வருட படிப்பில் இருக்கிறாள். இங்கே குற்றாலத்தில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் தான் படிக்கிறாள்.
துளசியும் பொறியியல் பட்டதாரி தான். ஆனால் வேலைக்கு செல்ல அவளுக்கு அனுமதி இல்லை. வேறுயார், அவளுடைய அண்ணன் தான். “நீ சம்பாதிச்சு இங்க யாரும் சாப்பிடணும்னு அவசியம் கிடையாது. ஒழுங்கா வீட்டோட அடங்கி கிடக்குற வழியைப் பாரு.” இப்படி கட்டளையாக அண்ணன்காரன் சொல்லிவிட, அதை மீறும் சக்தி அவளுக்கு இல்லாமல் போயிற்று. அண்ணன் மட்டுமா அப்படிச் சொன்னான், அப்பாவும் அப்படித்தானே சொல்லியிருந்தார்.
‘நான் மட்டும் இப்போது வேலைக்கு சென்றுகொண்டிருந்தால் இப்படி யோசித்து யோசித்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காதே.’ இப்படி யோசித்தவளை,
‘ம்ஹூம்… உன் அத்தை மட்டும் தலையிட்டு இருக்கவில்லை என்றால் படிப்பையே உன்னால் முடித்திருக்க முடியாது, இந்த அழகில் வேலைக்கு செல்வதைப்பற்றி நீ யோசிக்கிறாயா?’ மறுபடியும் மனது அவளை கேலி செய்தது.
ஒரு பெருமூச்சோடு தன் இயலாமையை வெளியேற்றியவள், “வீட்டுக்கு போய் இதைவிட சூப்பரா நானே லட்டு செய்து தரேன் டா.” என்று தங்கையை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.
“நெய் அதிகம் விட்டு செய்து தரணும், ஓகே யா?” சட்டென்று முகம் பிரகாசமாகிப் போக, தமக்கையின் வார்த்தையை ஒத்துக்கொண்ட விதமாக பேரம் பேசினாள் காவேரி.
“ம்ம்… நீ போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு ஊத்திடலாம்.” வீட்டில் நெய்க்கு பஞ்சமா என்ற ரீதியில் துளசியும் தலையை ஆட்டி வைத்தாள்.
ஆமாம்… வீட்டு செலவுகளுக்காக அம்மாவும் மகளும் சேர்ந்து நான்கு பால் மாடுகளை வளர்க்கிறார்கள். இப்போது என்றில்லை. கணவர் உயிரோடு இருக்கும் போதிலிருந்தே மாடுகளை வளர்த்து கொண்டுதான் வருகிறார் சுலோச்சனா.
“உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை சுலோ?” இப்படி முறைத்துக் கொண்டு நின்ற கணவரை,
“எனக்கும் நேரம் போகணும்ல ங்க, சும்மா வெட்டுவெட்டுன்னு இருக்க என்னவோ போல இருக்கு.” இப்படி சமாளித்திருந்தாலும், பெரும்பான்மையான நாட்கள் அந்த பால் விற்கும் காசில் தான் சுலோச்சனா குடும்ப செலவுகளை சமாளித்தார் என்பது என்னவோ நிதர்சனமான உண்மை.
பால் சார்ந்த பொருட்களுக்கு வீட்டில் தட்டுப்பாடு இல்லை என்பதால் தான் தங்கையிடம் துளசி தாராளமாக தலையாட்டியது.
“அப்போ இதுக்கு மேல இங்க உக்காந்து என்ன செய்யப்போறோம்? காலகாலத்துல வீட்டுக்கு போய் ரவா லட்டு செய்யலாம், வாங்க.” உற்சாகமாக காவேரி எழும்ப, அவளோடு மற்ற இருவரும் எழும்பினார்கள்.
“பெரிய மகளுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிடக்கூடாதா?” இப்படி ஏகப்பட்ட விசாரிப்புகள், அறிவுரைகள், அங்கலாய்ப்புகள். அத்தனைக்கும் புன்னகை முகமாகவே ஏற்ற பதில்களை சொல்லியபடி நகர்ந்து கொண்டிருந்தார் சுலோச்சனா.
எந்த இடத்திலும் அவர் தேங்கி நிற்கவும் இல்லை. யாருக்கும் பதில் சொல்லாமலும் இல்லை. அது எல்லாம் ஒரு கலை. அதுவும் கணவனை திருமணம் செய்து வந்தபிறகு இந்த கலை அழகாகவே கைவந்திருந்தது அந்த பெண்மணிக்கு.
“ம்ஹூம்… எப்பேர்ப்பட்ட குடும்பம்! பொதிகாச்சலம் ஐயா காலத்துல அவர் தெருவுல இறங்கி நடந்து வந்தா எதுத்தாப்ல நடந்து வர்றவங்க தலையில இருக்கிற துண்டை எடுத்து கக்கத்துல வச்சிப்பாங்களாம். எங்க தாத்தா சொல்லி கேள்விப்பட்டுருக்கேன். அவரோட மகன் வேதாச்சலம் காலத்துல அந்த மதிப்பும் மரியாதையும் ஓரளவுக்கு இருந்துச்சு. இப்போ வேதாச்சலமே பரவாயில்லன்னு சொல்லுற அளவுக்கு அவரோட மகன் இருக்குறான். அந்த பையனோட நடவடிக்கைகள் ஒன்னும் சரி கிடையாது. இந்த குடும்பத்தை எங்க கொண்டுபோய் நிறுத்தப் போறானோ தெரியல? அந்த வீட்டு பொம்பிள்ளைங்க தான் பாவம்.” டீக்கடையில் அமர்ந்துகொண்டு தங்கள் குடும்பத்தைப் பற்றி யாரோ ஒருவர் அங்கலாய்த்தபடி பேசிய வார்த்தைகள் சுலோச்சனாவின் காதுகளில் வந்து விழுந்து, தேய்ந்து மறைந்தது.
ஆமாம்… சுலோச்சனாவின் மாமனார் பொதிகாச்சலம் ஐயா காலத்தில் வசதிவாய்ப்புகளோடு செல்வாக்காக வாழ்ந்த குடும்பம் தான். இவ்வளவு ஏன்? மகன் திருமணத்துக்கு, அதாவது வேதாச்சலம், சுலோச்சனா திருமணத்தின் போது மூன்றுவேளைச் சாப்பாடு மூன்று நாட்களுக்கு ஊர் மக்களுக்கு போட்டாராம். இன்றுவரை அந்த வரலாறை உடைத்த நபர்கள் அந்த ஊரில் யாரும் இல்லை.
பெரியவர் காலம் வரை கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத வாழ்க்கை தான். எல்லாம் அவரோடு போயிற்று. அதன்பிறகு அந்த குடும்பத்திற்கு இறங்கு முகம் தான். அதற்கு காரணம் நிலையான ஒரு தொழிலோ, வேலையோ வேதாச்சலத்திற்கு இல்லாதது தான். அதைவிட முக்கியமான காரணம் அவரின் நிர்வாக திறமையின்மை.
கூடவே வெட்டி பந்தா, வறட்டு கௌரவம் எல்லாம் இருக்க, தகப்பன் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக கரைந்து போயின. குன்றித் தின்றால் குன்றே கரைந்து போகும் போது, சொத்துக்கள் எல்லாம் எம்மாத்திரம்?
ஆனால் சுலோச்சனாவால் மனைவியாக எதுவும் கேள்வி கேட்டுவிட முடியாது. உனக்கு என்ன தேவையோ, அது வரும். அதைத்தாண்டி நீ எதுவும் என்னைக் கேள்வி கேட்கக்கூடாது. எனக்கு எல்லாம் தெரியும். ஆரம்பகாலங்களில் சுலோச்சனா ஏதாவது சொன்னால் வேதாச்சலத்திடமிருந்து இதுதான் பதிலாக வரும். கணவனின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் பயந்து, அதைவிட வீட்டு சத்தம் வெளியே கேட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சுலோச்சனா வாயே திறப்பதில்லை.
அதுதான் இப்போது மகனிடமும் நடக்கிறது. தகப்பனைப் பார்த்து வளர்ந்திருந்த மகன், தாயையும் இரு தங்கைகளையும் அடிமைகளாகத்தான் நடத்துகிறான். அவ்வப்போது அவனை எதிர்த்து பேசி வாங்கிக்கட்டிக் கொள்கிறாள் இளையவள் காவேரி.
துளசி எதுவும் பேசிவிடவே முடியாது. குடும்பத்து பெருமையை கெடுக்க வந்த கோடாரி கொம்பு என்று தகப்பனாலும் தமையனாலும் அவளுடைய பேச்சுரிமை என்றோ பறிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு ஏன், அருணாசலம் தங்கையோடு பேசுவதுகூட இல்லை.
“ஆமா, பெரி…ய குடும்பம். அதுக்கு ஒரு பெருமை. காலி பெருங்காய டப்பா.” அண்ணனுக்கு தெரியாமல் அலட்சியமாக முணுமுணுப்பாள் காவேரி.
அவர்கள் வீடு இருக்கும் தெருவிற்கு வந்திருந்தார்கள் பெண்கள் மூவரும். ஒருபக்க தெருவின் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு நின்றிருந்தது அவர்களுடைய வீடு. அந்த காலத்தில் இதுமட்டும் தான் பெரிய மச்சு வீடு. இப்போது அதைவிட பெரிய வீடுகள் எல்லாம் ஊருக்குள் நிறைய வந்துவிட்டன. இதுவோ பராமரிப்பு இன்றி சோபையாக நின்றிருந்தது.
இவ்வளவு ஏன்? அவர்கள் வீட்டுக்கு நேர் எதிரில் கூட புதிதாக ஒரு மாடிவீடு ஆர்ப்பாட்டமாக எழும்பிக் கொண்டிருக்கிறதே! ஊரில் உள்ள யாருக்கும் அது யாருடைய வீடு என்ற தகவல் தெரியவில்லை. வீட்டைப் பொறுப்பெடுத்து கட்டிக்கொண்டிருக்கும் பொறியாளரிடமிருந்து அந்த தகவலை யாராலும் பெற்றுவிடவும் முடியவில்லை. வீட்டின் அமைப்போடு, உரிமையாளர் யார் என்ற மூடுமந்திரமும் சேர்ந்து கிராமமக்களின் ஆர்வமான பார்வைக்கு தீனியாகிக் கொண்டிருந்தது அந்த புத்தம் புதிய வீடு.
தங்கள் வீட்டுக்கு அருகே வந்திருந்த பெண்கள் மூவரின் பார்வையும் தன்னியல்பாக புது வீட்டின் மீது ஆர்வமாக பதிந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் கட்டுமானத்தின் போது மறைவாக கட்டியிருந்த தட்டிகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
“ஏ கே இல்லம்.” புது வீட்டின் முகப்பில் பளிச்சென்று தெரிந்த பெயரை கொஞ்சம் சத்தமாக வாசித்த காவேரி,
“வீட்டு ஓனரோட பெயரா இருக்குமோ க்கா, என்ன பெயரா இருக்கலாம்? எனி கெஸ்ஸிங்ஸ்?” ஆர்வமாக கேட்க, எனக்கு எதுவும் தெரியாது என்பது போல உதட்டைப் பிதுக்கினாள் துளசி.