பிரமாண்ட அலங்காரங்களுக்கு நடுவே ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.

வாசலில் சாணக்கியன் வெட்ஸ் மதிவதனி என்ற பெயர் பலகை பொறிக்கப்பட்டிருக்க, வாசலில் நின்று வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர் விஸ்வநாதனும் வேதவள்ளியும்.

ரங்கராஜன் – பானுமதி தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் விஸ்வநாதன், இரண்டாவது மகன் சந்திரசேகர், மூன்றாவது மகன் சக்திவேல்.

சந்திரசேகர் பிறந்து பல ஆண்டுகளின் பின்னரே சக்திவேல் பிறந்தான். சக்திவேல் பிறக்கும்போது விஸ்வநாதனுக்கு வாலிப வயது. அதனாலேயே சாணக்கியனுக்கும் சக்திவேலுக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லை.

விஸ்வநாதனும் சந்திரசேகரனும் காளியுக ராமலக்ஷ்மணன்தான்; ஆனால், அவர்களின் மனைவிகளோ முற்றிலும் எதிரெதிர் துருவங்கள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டாலே அது பஞ்சாயத்தில்தான் சென்று முடியும். அதனாலேயே கடந்த சில வருடங்களாக அவர்கள் பேசிக்கொள்வதில்லை.

விஸ்வநாதனுக்கு சாணக்கியன், அர்ஜுன் என இரு புதல்வர்கள். சந்திரசேகரருக்கு சாம்பவி, நித்யா என இரு புதல்விகள். சக்திவேலுக்குச் சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருந்தது.

இன்று அவர்கள் வீட்டின் மூத்த வாரிசின் திருமணம். அதனால், அவர்கள் குடும்பமே சந்தோஷத்தில் திளைத்திருக்க, அதற்கு முற்றிலும் எதிர்மாறாகப் பதட்டத்துடன் தன் மகளின் அறையிலிருந்து வெளியே வந்தார் கௌரி.

அவர் முகம் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, பதட்டத்துடன் தன் கணவரின் அருகில் வந்தவர், “என்னங்க…” என மெதுவாக அழைத்தார். அவர் பக்கம் திரும்பிய சண்முகம், “என்ன கௌரி, என்ன ஆச்சு? எதுக்கு இப்படிப் பதட்டமா இருக்க?” எனக் கேட்க, சுற்றமும் முற்றமும் பார்த்தவர் அவரைத் தனியாக அழைத்துச் சென்று “என்னங்க, மதுவைக் காணலை! நான் மண்டபம் முழுக்கத் தேடிட்டேன்” என்று அவர் சொல்ல, சண்முகம் அவரை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

மணமகன் அறையில் பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டையில் ஆறடி உயரத்தில் ஆண்மையின் இலக்கணமாய்த் தயாராகிக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

காண்போரை எளிதில் கவர்ந்திழுக்கும் லேசர் விழிகள், கூர்மையான நாசி, தாடிக்குள் மறைந்து கிடந்த உதடுகள், முறுக்கேறிய புஜங்கள், படிக்கட்டு தேகம் என ஆணழகனாக நின்றவனை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவன் பார்வைக் கண்ட சக்திவேல், “டேய் அர்ஜுன், அவன் உன் அண்ணன்டா அவனைப் போய் சைட் அடிக்கிற, வெட்கமா இல்ல?” என்று அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர்ப் பாட்டிலால் அவன் மேல் எறிய, அதிலிருந்து லாவகமாகத் தப்பிய அர்ஜுன்
“இல்ல சித்தப்பு, கொஞ்ச நேரம் அவனைப் பாருங்களேன். பார்க்க எவ்வளவு ஹேண்ட்சமா, பாலிவுட் ஹீரோ மாதிரி அழகா இருக்கான்! கொஞ்சம் சிரிச்சாதான் என்ன?” என்று கேட்க,
“டேய், அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு; இதுல நீ வேற எதையாவது பேசி அவன் மூட்-ஆஃப் பண்ணாத!” என்று சொன்னவன், அவனை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல அவர்கள் கண்ணில் பட்டது என்னமோ பதற்றத்துடன் மணமகள் அறைக்குள் நுழைந்த மதிவதனியின் பெற்றோர்தான்!

அவர்கள் இருவரையும் கவனித்த சக்திவேல், “அர்ஜுன், பொண்ணு வீட்ல ஏதோ பிரச்சனை போல!” என்றவன் மணமகள் அறைக் கதவைத் தட்ட
கௌரிக்கு உடல் உதற ஆரம்பித்தது. ஒரு நீண்ட மூச்சு எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சண்முகம் வந்து கதவைத் திறக்க வாசலில் சக்திவேலும் அர்ஜுனும் நின்றிருந்தனர்.

“என்ன மாமா, எதுவும் பிரச்சனையா?” என அர்ஜுன் கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றிருந்தார் சண்முகம்.

அவரது பதட்டத்திலிருந்து ஏதோ யூகித்தவனாக சக்திவேல், “பொண்ணு எங்க?” என்று கேட்க, ஒரு நிமிடம் தடுமாறியவர், இனி மறைத்துப் பயனில்லை என எண்ணியவராக, “மதுவைக் காணல!” என்று சொல்ல, அவ்வளவுதான், அர்ஜுன் பொங்கியே விட்டான்.

“என்ன விளையாடுறீங்களா? இப்ப வந்து பொண்ணைக் காணும், பன்னைக் காணும்னா என்ன அர்த்தம்?” என கிட்டத்தட்ட கர்ஜித்தவனை அடக்கினான் சக்திவேல்.

“அர்ஜுன், கத்தாத! இந்த விஷயம் வெளியே போனா சாணக்கியனுக்குத்தான் அசிங்கம்” என சக்திவேல் அவனை அடக்க

“என்ன பேசுறீங்க சித்தப்பா? இதை எப்படி மறைக்க முடியும்?” என அர்ஜுன் கொந்தளிக்க, அர்ஜுன் என அவனை அடக்கியவன் உடனே தன் மூத்த அண்ணனுக்கு அழைத்தான்.

வாசலில் நின்றிருந்த விஸ்வநாதனின் தொலைபேசி அலற, அதை எடுத்துப் பார்த்தவர் அதில் ‘சக்திவேல்’ எண் தெரியப் புருவ முடிச்சுடன் அதை ஆன் செய்து காதில் வைத்தார்.

“அண்ணா, பொண்ணு ரூமுக்கு வாங்க!” என்றவாறு போனை சக்திவேல் அணைத்து விட அவனின் குரலில் இருந்த இறுக்கத்தை உணர்ந்த விஸ்வநாதனுக்கு ஏதோ தவறாய்த் தோன்ற, தன் மனைவியுடன் மணமகள் அறை நோக்கிச் சென்றார்.

விஸ்வநாதனும் வேதவள்ளியும் மணமகள் அறைக்குள் நுழைந்ததைக் கண்ட விசாலட்சியும் அந்த அறைக்குள் நுழைய, இவர்களைக் கவனித்தாலும் கவலைப்படாமல் காதில் ப்ளூடூத் போட்டுப் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் ருத்ரா.

அறைக்குள் நுழைந்த விஸ்வநாதனுக்கும் வேதவள்ளிக்கும் விஷயம் சொல்லப்பட, வேதவள்ளி அங்கிருந்த கட்டிலில் பொத்தென தளர்ந்து அமர்ந்துவிட்டார்.

விஸ்வநாதனின் முகம் யோசனையில் சுருங்க, அறைக்குள் இருந்த சாணக்கியனுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான் அர்ஜுன்.

அதைள் கேள்வியுற்றவன் உடல் இறுக, கை முஷ்டியை முறுக்கித் தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன் ஏதோ சொல்ல வர, “உங்களுக்குப் பொருத்தமான இன்னொரு மூத்த பொண்ணு இருக்கா இல்லையா?” என விஸ்வநாதன் கேட்டது தெளிவாக அவன் காதில் விழுந்தது.

“என்னங்க, என்ன பேசுறீங்க?” என வேதவள்ளி கேட்க, “வேற வழி இல்லை வள்ளி, மண்டபம் வரைக்கும் வந்துட்டுக் கல்யாணம் நின்னா அது நம்ம பையனுக்குத்தான் அவமானம்!” எனத் தன் மனைவியிடம் சொன்னவர், “உங்க மூத்த பொண்ணை ரெடியாகி மணவ அறைக்கு வரச் சொல்லுங்க!” எனக் கட்டளையாகச் சொல்லிவிட்டு
வெளியே வந்தவர் பார்வை நிலைத்தது என்னமோ, கால்மேல் கால் போட்டு அமர்ந்தவாறு பாட்டு கேட்டுக்கொண்டிருந்த ருத்ராவின் மீதுதான்!

ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தவர் சாணக்கியனின் அறைக்குள் நுழைய, அவருக்குப் பின்னாலேயே அந்த அறைக்குள் நுழைந்தார் வேதவள்ளி.

தன் தாயையும் தந்தையையும் பார்த்து முறைத்தவன், “சோ, இப்ப எனக்கு அந்தப் பொண்ணோட அக்காவைக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க, அதான?” என இறுக்கமான முகத்துடன் கேட்டான் சாணக்கியன்.

2

“ஏதே கல்யாணம் பண்ணிக்கனுமா என்னால முடியாது ஏதோ கூப்பிட்டீங்களேன்னு கல்யாணத்துக்கு வந்தா என்னையே கல்யாணம் பொண்ணா மாத்திருவீங்க போல நான்சென்ஸ்!” எனப் பொறிந்து கொண்டிருந்த ருத்ராவின் கைகளைப் பற்றிக் கொண்ட கௌரி அம்மாடி, “ப்ளீஸ் புரிஞ்சுக்கோமா இந்த கல்யாணம் நடக்கலன்னா நம்ம குடும்ப மானமே போயிரும் என்று சொல்ல, ‘ஓ… நான் உங்க குடும்பமா?’ என ஆச்சரியமாகக் கேட்டாள் ருத்ரா.

‘இங்க பாருமா, நான் என்னைக்கும் நீ வேற, மதி வேறன்னு நினைச்சது இல்லை. எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னுதான்’ என்னச் சொல்ல, அவரை அலட்சியமாகப் பார்த்தாள் வஞ்சியவள்.

இங்க பாரு ருத்ரா, இந்த கல்யாணம் நடக்கலன்னா அவங்க நம்ம கூட சைன் பண்ணிருந்த எல்லா கான்ட்ராக்ட்டையும் கேன்சல் பண்ணிருவாங்க. அப்புறம் நாங்க பெரிய லாஸ் ஃபேஸ் பண்ண வேண்டி இருக்கும். இந்த கல்யாணம் நடக்கலன்னா மானமும் போயிரும்,  பிசினஸும் போயிரும் என சண்முகம் சொல்ல,’தட்ஸ் நாட் மை ப்ராப்ளம்!’ என கேஷுவலாக தோளை உலுக்கிச் சொன்னாள் ருத்ரா

“ருத்ரா, இந்த கல்யாணம் நடக்கலன்னா நாங்க தூக்குலதான் தொங்கணும்!” என கௌரி சொல்ல, கயிறு எதுவும் வேனுமா? எனச் சாதாரணமாகக் கேட்டவளைக் கண்டு, இதுவரை மௌனமாவே இருந்த செண்பகவள்ளி  ருத்ரா, போய் அந்த பட்டுப்புடையைக் கட்டிக்கிட்டு ரெடியாகு!” என உத்தரவிட,
அவரை முறைத்தவாறு அந்தப் பட்டுப்புடையை எடுத்துக்கொண்டவள்
எல்லாரும் வெளியே போங்க, நான் ரெடியாகணும்!” எனச் சொல்ல, அவளைப் பெற்றவர்களுக்கோ உச்சகட்ட அதிர்ச்சி! அனைவரும் வெளியே சென்று விட, அடுத்த பத்தாவது நிமிடம் திருமணப் பட்டுப்புடவைக்கு மாறியிருந்தாள் பெண்ணவள்.

அவள் புடவை மாற்றி வந்ததும் அங்கிருந்த அலங்கார நிபுணர்கள் அவளைத் தயார் செய்ய, பொம்மை போல அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் அந்த அறைக்குள் நுழைந்த செண்பகவள்ளி, மணமகள்  அலங்காரத்தில் இருந்தவள் அருகே சென்று அமர, அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடிப் பக்கம் திரும்பிக் கொண்டாள் ருத்ரா.

அவள் செய்கையில் அவர் உதடுகள்  மென்மையாக முறுவலிக்க அங்கிருந்த மேக்கப் ஆர்டிஸ்ட்டைப் பார்த்தவர், கிளம்பும் படி சைகை காட்ட, அந்தப் பெண்ணும் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

அந்த பெண் சென்றதும் ருத்ராவின் கைகளைப் பற்றிக்கொண்ட செண்பகவள்ளி, “உனக்கு இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு கோவமா என்னை கேட்க படக்கென்று தன் கையை அவர் கையிலிருந்து விடுவித்துக்கொண்டே அவரை முறைத்தாள் ருத்ரா.

“அத்தை…  எதுக்கு இப்படி எல்லாம் பேசுற? யாரையும் அவங்க குறையை வச்சு ஜட்ஜ் பண்ணவோ ஹர்ட் பண்ணவோ கூடாதுன்னு நீதானே சொல்லி இருக்க?” என ருத்ரா வெடுக்கெனக் கேட்க,

“இல்ல ருத்ரா…” என அவர் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்குள், “என்ன நொல்ல ருத்ரா, சாணக்கியனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். கொஞ்சம் அரகென்ட், பட் ஜென்டில்மேன்! எங்க அப்பா பார்த்த பையன்… அதுவும் மதிக்குப் இப்போ அவ இல்லன்னு என்னை ரீப்ளேஸ்மெண்ட்டா யூஸ் பண்றாங்களேன்னுதான் சாணக்கியனை வேணான்னு சொன்னேன். மத்தபடி வேற ஒன்னும் இல்ல. சரி, சித்தப்பா, மாமா, அத்தை எல்லாம் வந்துட்டாங்களா?” என ருத்ரா பேச்சை மாற்ற
அதை உணர்ந்தவரும், “ஆமா, வந்துட்டாங்க, வெளியதான் இருக்காங்க. கூட்டிட்டு வரவா?” என எழ போகப் அவர் கையைப் பிடித்து அமர வைத்தவள், தொலைபேசியில் தன் மாமா அத்தையை அழைத்து உள்ளே வரச் சொல்ல… எக்ஸ்ட்ரா லக்கேஜாக அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வந்தனர் கிஷோரும் அனன்யாவும்!

உள்ளே வந்த கிஷோரை அனல் தெறிக்கப் பார்த்தவள், ஏனையவர் பக்கம் பார்வையைத் திருப்ப, கிஷோருக்கு இப்போழுதே வயிறு கலக்க ஆரம்பித்திருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஸ்டைலாக நிற்க, “கிஷோர், கால் நடுங்குது, வைப்ரேஷன் மோட்ல இருந்து நார்மல் மோடுக்கு வா!” என அவன் காதருகில் கிசுகிசுத்தாள் அனன்யா.

தன் முன் நின்றவர்களை ஒரு பெருமூச்சுடன் பார்த்த ருத்ரா பேச ஆரம்பிக்கும் முன், அந்த அறைக்குள் நுழைந்தனர் ஷண்முகமும் கௌரியும். அவர்களை ஒரு நிமிடம் ஏறிட்டுப் பார்த்தவள், “ஓகே, நான் எதுக்கு உங்களை வரச் சொன்னேன்னா…” எனப் பேச்சை ஆரம்பித்தாள்.

அவள் ஆரம்பித்த விதமே ஏதோ வில்லங்கமாகப் பேசப் போகிறாள் என யூகித்த கிஷோர், “ரைட்டு, சைத்தான் வேலை ஆரம்பிச்சிருச்சு!” என மனதிற்குள் நினைத்துக் கொள்ள, அவன் எண்ணத்தை மெய்ப்பிக்கும் வகையில்
“எனக்கு கல்யாணத்துல அம்மா அப்பா செய்ய வேண்டிய சடங்கு எல்லாம் நீங்கதான் செய்யணும்!” என ருத்ரா தன் மாமா பார்த்திபனைப் பார்த்துச் சொல்ல, அவளை அதிர்ச்சியாகப் பார்த்தது அவளது பெற்றோரின் விழிகள்.

“என்னம்மா பேசுற?” எனப் பார்த்திபன் ஏதோ சொல்ல வர, கை நீட்டி அவரைப் பேசவிடாமல் தடுத்தவள், “இல்லைன்னா நான் கல்யாணம் பண்ணிக்கல!” என அழுத்தமாகச் சொல்ல, அவள் அழுத்தம் அறிந்தவராக அவர் உடனே வாயைக் கப்பென மூடிக்கொண்டார்.

ருத்ராவை ஆழ்ந்து பார்த்த சண்முகமும், எப்படியும் இந்தத் திருமணம் நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் பார்த்திபனைப் பார்த்து, “சரி, அவ சொன்ன மாதிரியே பண்ணிருங்க!” எனக் கரகரத்த குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரப் போக,
“ஒரு நிமிடம்!” என அவரைத் தடுத்தவள், செண்பகவள்ளியிடம் திரும்பி, “தாலி கட்டும்போது நீங்க மேடையிலதான் இருக்கணும் கண்டவங்க பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு எங்கேயும் போகக்கூடாது!” என கௌரியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சொன்னவள், மீண்டும் பார்வையை செண்பகவள்ளியிடம் நிலைக்கவிட்டபடி, “நீங்க மணவரையில நிக்கலைன்னா நான் கண்டிப்பா எழுந்திருச்சுருவேன்!” என்று கட்டளையிட, கௌரியின் இதழ்களோ, ‘திமிரு புடிச்சவ!’ என முணுமுணுத்துக்கொண்டது.

பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டையில் மணமகனுக்குரிய சர்வ லட்சணத்துடன் ஹோமகுண்டத்தின் முன் சாணக்கியனும், அவனருகில் அழகு சிலையென ருத்ராவும் அமர்ந்திருந்தனர்.

திருமணச் சடங்குகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ஐயர் கன்னிகாதானம் செய்ய ருத்ராவின் தந்தையை அழைக்க, மணமேடைக்கு வந்தது என்னவோ அவள் மாமா பார்த்திபந்தான்!

பார்த்திபன் ருத்ராவுக்குக் கன்னிகாதானச் சடங்கை நிறைவேற்ற, ஒரு புன்முறுவலுடன் அவரைப் பார்த்திருந்தாள் ருத்ரா. அந்நேரம் அவளையும் மீறி அவள் விழிகள் கலங்கிவிட, அதைப் பார்த்த பார்த்திபனின் கண்களும் கலங்கியது. அதை யாரிடமும் அறியாவண்ணம் மறைத்தவர் சடங்குகளைத் தொடர்ந்து நிறைவேற்ற, அவர்கள் இருவரையும் பூரித்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தன பார்த்திபனின் மனைவி துளசியின் கண்கள்.

இவை அனைத்தையும் பார்த்த சிலர், “பார்த்தியாடி, அந்தப் பொண்ணுக்குக் கன்னிகாதானம் கூட அந்தப் பொண்ணோட மாமாதான் பண்றான்! இதுவே இப்போ வைதேகி உயிரோட இருந்திருந்தா இந்தப் பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என கிசுகிசுக்க, கௌரிக்குத்தான் என்னமோ போலானது.

முகூர்த்த நேரம் நெருங்க, “கெட்டி மேளம், கெட்டி மேளம்!” என ஐயர் தாலியைச் சாணக்கியனிடம் நீட்ட, அதை வாங்கியவன் ஒரு பெருமூச்சுடன் அவள் கழுத்தில் அணிவித்து அவளைத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான். அதன் பின் குங்குமத்தை அவள் நெற்றி வகிட்டிலும் தாலியிலும் வைத்துவிட, அவனை ஒரு நக்கல் கலந்த பார்வை பார்த்தாள் பெண்ணவள்.

அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவன் அவளை அனல் தெறிக்கப் பார்க்க, அவனைக் கண்டு ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி கண்ணடித்தவள், இதழ் குவித்து முத்தமிடுவது போல் செய்கை செய்ய, இவள் செய்கையில் அதிர்ந்து நின்றது என்னமோ அவளை கவனித்துக் கொண்டிருந்த கிஷோரும் அர்ஜுனனும்தான்!