“அதை பற்றி பேசினாலும் உன்னை கொண்டு விடுவேன் சுதமன். உன் காதலி  யாரென்று என்னிடம் கூட உரைக்க மறுக்கிறாய். ஆனால் அவள் நினைவாய் இந்த சலங்கையை மட்டும் கையில் கட்டி கொண்டு திரிகிறாய். போ. உன் மீது எனக்கு கோபம்”, என்று போய் கோபம் கொண்டான் நரேந்திரவர்மன்.

“கோபம்  கொள்ளாதே  நண்பா. என் காதலை அவளிடம் முதலில் உரைக்க வேண்டும் என்று தான் உன்னிடம் கூற வில்லை”

“அவளிடமாவது கூறினால் சரி தான். சரி சரி. நாளை படையை

தயார் செய்ய வேண்டும். இப்போது போய் உறங்கு சுதமன்”

“அப்படியே ஆகட்டும் இளவரசே”, என்று கூறி நரேந்திரவர்மனின் கோப பார்வையை பெற்று கொண்டே அங்கிருந்து அகன்றான் சுதமன்.

கையில் கிடைத்த ஓலையை கண்டு பரபரப்பானார் வாசுதேவச்சக்கரவர்த்தி. அருகில் மஞ்சத்தில் உறங்கி கொண்டிருந்த அருந்ததியை எழுப்பியவர், அவளிடம் விசயத்தை கூறி விட்டு  அப்போதே போர் முரசு கொட்ட சொன்னார்.

நரேந்திரவர்மன் கூறிய படி படைகளை நிறுத்த உத்தரவிட்டார். இரவோடு இரவாக அனைத்தும் நடந்தது.

அடுத்த நாள் காலை விடியும் போது  ஒரு படையை வனத்துக்குள் நிறுத்தி விட்டு தான் நிம்மதியானார் வாசுதேவச்சக்கரவர்த்தி.

அதே நேரம் நமக்கு தான் வெற்றி என்று கொக்கரித்து கொண்டிருந்தான் செங்கல்வராயன். அவனை அரசன் என்று சொல்வதை விட அரக்கன் என்று கூறினால் சரியாக இருக்கும். அப்படி கொடூரமான புத்தி கொண்டவன்.

அவனுடைய பட்டது ராணியான வசுமதி தேவிக்கே அவனை பிடிக்காது. ஆனால் அவனையும் பிடித்தவன் ஒருவன் உண்டு. அவனுக்காக தன் உயிரையும் கொடுக்கும் ஒருவன் இருக்கிறான். செங்கல்வராயன் “தீயில் குதித்து உயிர்விடு”, என்று கூறினால் கூட அவன் உயிரை விட்டு விடுவான். அவன் வேறு யாரும் அல்ல. செங்கல்வராயனின் சகோதரன் வீரவல்லவரையன். அவனுக்கு அண்ணன் என்றால் பித்து.

தமக்கே வெற்றி கிட்டும் என்று மமதையில் கொக்கரித்து கொண்டிருந்த தன்  தமையனை ரசித்து கொண்டிருந்தான் வல்லவரையன்.

“அண்ணா, தங்களுக்கு எதற்காக இத்தனை மகிழ்ச்சி?”, என்று கேட்டான் வல்லவரையன்.

“மகிழ்ச்சி அல்ல வல்லவரையா? வெறி. அந்த வான்மதியை அடைய வேண்டும் என்ற வெறி”, என்று எக்களிப்புடன் கூறினான் செங்கல்வராயன்.

அவன் கூறுவதை அருகே இருந்து கேட்டு கொண்டிருந்த வசுமதி எரிச்சலுடன் “மனதுக்கு  பிடிக்காத பெண்ணை மணக்க நினைப்பது தவறு என்று தெரியாதா மகாராஜா? வல்லவரையா  நீயாவது உன் தமையனுக்கு எடுத்து சொல்”, என்றாள்.

“மகாராணியாக தங்கள் கோபம் சரியானது தான் அண்ணியாரே. ஆனால் எனக்கு என் தமையன் விருப்பமே உயர்ந்தது”, என்று சிரித்தான் வல்லவரையன்.

அதன் பின் அமைதியாகி விட்டாள் வசுமதி.

“நீங்கள் கூறுங்கள் தமையனே? எதனால் அந்த பெண் மீது அவ்வளவு காதல்?”

“காதலா? அது சுத்த பிதற்றல்? அவள் மீது எனக்கு காதல் வராது. நான் காதல் கொண்டு மணந்த பெண் இதோ இருக்கிறாளே உன் அண்ணி வசுமதி மட்டுமே”, என்றான் செங்கல்வராயன்.

அதில் வசுமதி உள்ளம் பூரிக்க தான் செய்தது. ஆனால் அந்த காதல் அவளை பொறுத்த வரை கசப்பானது. காதலி என்று அவளை கை காட்டும் செங்கல்வராயனுக்கு மாதத்துக்கு ஒரு ராணி வேண்டும்.

அப்படி பட்ட காம பேய் காதலை பற்றி பேசுவது விந்தை தான், என்று நினைத்து கொண்டு அவர்கள் உரையாடலை செவிமடுத்தாள் வசுமதி.

“தாங்கள் அப்படி கட்டாய படுத்தி அவளை அடைய ஏன் நினைக்கிறீர்கள் தமையனே?”

“காமம் வல்லவரையா காமம். அவளை கண்டாலே காமம் சொட்டும். அத்தனை அழகு அவள். அவளை போன்ற அழகியையும், அவளிடம் கண்ட நளினத்தையும் நான் இதுவரை வேறு எவரிடமும் கண்டது இல்லை”, என்று சொன்ன செங்கல்வராயன் விழிகளில் காமம் கொப்பளித்தது.

“அத்தனை அழகா அவள்?”

“ஆம் வல்லவரையா. மரியாதையாக என் ராணிகளில் ஒருத்தியாக அவளை மணம் முடிக்க தூது அனுப்பினேன். ஆனால் அவளோ அந்த ராமனை போல் மணாளன் வேண்டும் என்று கூறி என்னை  மறுத்து விட்டாளாம்? என்ன திமிர் அவளுக்கு? இந்த செங்கல்வராயனை அவமதித்தவள் எனக்கே வேண்டும். அவள் தந்தையை வென்று அவளை சிறை பிடித்து இழுத்து வர வேண்டும். கைகளில் சங்கிலியிட்டு, இந்த அரண்மனைக்கு இழுத்து வர வேண்டும். பார்த்தாயா என் வீரத்தை என்று அவளிடம் பெருமை பேச வேண்டும். என் அந்த புரத்துக்கு அவளை அழைத்து சென்று அவளை ஆண்டு அனுபவிக்க வேண்டும். அதை நிறைவேற்றியே ஆக வேண்டும்”

“நிச்சயமாக தங்கள் எண்ணம் ஈடேறும் தமையனே. அந்த வாசுதேவச்சக்கரவர்த்தி நம் படையை எதிர்க்கவே முடியாது. விரைவிலே தோற்று போவார்”, என்று கூறினான் வல்லவரையன்.

“நீ தான் தமையன் மெச்சிய சகோதரன் வல்லவரையா? சரி நாளை  நம் படை புறப்பட வேண்டும். அதற்கான ஆயத்தங்களை செய் வல்லவரையா?”

“அப்படியே ஆகட்டும். சென்று வருகிறேன் தமையானாரே. வருகிறேன் மகாராணி”, என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றான் வல்லவரையன்.

“அடுத்த பெண்களின் மீது இச்சை கொள்வது தவறு மகாராஜா.  தாங்கள் அதை செய்ய கூடாது”, என்றாள் வசுமதி தேவி.

“உன் மகாராணி பதவிக்கு அந்த வான்மதி தேவி போட்டிக்கு வந்து விடுவாள் என்று அச்சம் கொள்கிறாயா மகாராணி? ஹா ஹா, நீ கவலை கொள்ளாதே. நான் தான் கூறினேனே? உன்னை தான் முதன்முதலில் காதலித்து மணந்தேன் என்று? அந்த வான்மதி இளையராணி மட்டுமே. ஆனால் உன்னை காணும் முன் அவளை நான் கண்டிருந்தால் அவளை தான் நான் காதலித்திருப்பேன். தேவை இல்லாமல் எதையும் உரைக்காமல் உன் வேலையை மட்டும் செய்வது தான் மகாராணிக்கு அழகு. புரிந்ததா?”, என்று கர்ச்சித்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான் செங்கல்வராயன்.

“இவருக்கும், காதலுக்கும் வெகு தூரம். ஈசனே அந்த புண்ணியவதி வான்மதியை இந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்றுவாயாக?”, என்று தனக்குள் சொல்லி கொண்டு நகன்று விட்டாள் வசுமதி.

அடுத்த நாள்  மாலை சூரியன் அஸ்தமித்த பிறகு படையை கிளப்பி விட்டான் செங்கல்வராயன்.

அதே நேரம்  நரேந்திரவர்மனும் அவன் தேசத்தில் போர் முரசை ஒலிக்க விட்டான். அனைத்து வீரர்களும் தங்கள் மனைவிகளிடமும் ஆசி பெற்று விட்டு ஓரிடத்தில் குவிந்தார்கள்.

பாண்டிமாதேவி நரேந்திரவர்மனுக்கும், சுதமனுக்கும் திலகமிட்டு “வெற்றியோடு திரும்பி வாருங்கள்”, என்று ஆசி கூறினாள்.

இருவரும் மகாராஜா இந்திரவர்மர் மற்றும் வராக சித்தரின் பாதம் பணிந்தார்கள். படை கிளம்பியது. அதே நேரம் எதிரி செங்கல்வராயன் படையை எதிர் கொள்ள வாசுதேவச்சக்கரவர்தியின் சேனை அந்த வனத்துக்குள் தயாராக இருந்தது.

அடுத்த நாள் இரவு பொழுதில் செங்கல்வராயன் படையை அந்த வனத்தில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தி விட்டான். அங்கே கூடாரங்கள் அடிக்க பட்டன. அவர்கள் கொண்டு வந்த அனைத்து பொருள்களும் அங்கே இறக்க பட்டன.

அதே நேரம் நரேந்திரவர்மன் மற்றும் சுதமன் தலைமை ஏற்று நடத்தி வந்த படைகள் பின் பக்கமாக வந்து இரண்டு பாகமாக பிரிக்க பட்டு ஒரு பகுதி கோட்டைக்கு பாதுகாவலாகவும் மற்றொரு பகுதி வீரர்கள் வாசுதேவச்சக்கரவர்த்தி படையுடன் வனத்தின் உள்ளே புகுந்து ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

போருக்கு தயாராக முன் வரிசையில் நின்றிருந்த வாசுதேவச்சக்கரவர்த்தியை நரேந்திரவர்மனும், சுதமனும் சந்திக்க முன்னேறினார்கள்.

புரவியின் குளம்படி சத்தத்தில் அனைத்து வீரர்களும் திரும்பி பார்த்தார்கள். வாசுதேவச்சக்கரவர்த்தியும் திரும்பி பார்த்தார்.

அங்கே கம்பீரமாக போர் கவசம் இட்டு, அவனுடைய வெண்ணிற புரவியில் சீறி பாய்ந்து வந்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.

அவனை கண்டதும் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்ட வாசுதேவச்சக்கரவர்த்தி “வாருங்கள் இளவரசே. தங்களின் தூதை கண்டதும் உடனே படையை இங்கே நிறுத்தி விட்டேன். நீங்கள் வந்தது எனக்கு யானை பலம் வந்தது போல இருக்கிறது”, என்றார்.

“சரியான வேலை செய்தீர்கள் மகாராஜா. நானும் கோட்டைக்கு காவல் வைத்து விட்டேன். என் படையும் தங்கள் படையுடன் இணைந்து விட்டது. ஒரு நாள் கூட செங்கல்வராயனால் தொடர்ந்து போரிட முடியாது. வெற்றி நமதே”, என்றான் நரேந்திரவர்மன்.

“நல்லது இளவரசே. தங்கள் அருகில் இருப்பவர் யார்? தங்களுடைய படைக்கு சேனாதிபதி தாங்கள் தானே? ஆனால் அவரும் தங்களை போலவே உடை அணிந்திருக்கிறார்”, என்று கேட்டார் மகாராஜா.

“அறிமுக படுத்த மறந்து போனேன் மகாராஜா. என் படைக்கு நான் தான் படைத்தலைவன். என்னுடன் இவனும் மற்றொரு படைத்தலைவனே. இவன் பெயர் சுதமன். என் உயிர் நண்பன். அதை விட என்னுடைய உடன் பிறவா சகோதரன் எனலாம்”

“நல்லது. வணங்குறேன் வீரரே”, என்றார் மகாராஜா.

“வணக்கம் மகாராஜா. தங்களை கண்டது எனக்கும் மகிழ்ச்சியே”, என்று புன்னகைத்தான் சுதமன். அன்று இரவு அமைதியுடன் கழிந்தது.

அடுத்த நாள் சூரியன் உதித்ததும்  செங்கல்வராயன் முழங்கிய சங்கு எட்டு திக்கும் ஒலித்து எதிரொலித்தது. அந்த சத்தத்தை கேட்டு அரண்மனை வாசிகள் திகில் கொண்டார்கள். வான்மதி தேவியோ தந்தைக்கும், தன்னவனுக்கும் எதுவும் நேர கூடாது என்ற வேண்டுதலோடு  கடவுளிடம் சரணடைந்து விட்டாள்.

போர் அறிவிப்பை கேட்டு மகாராஜா மற்றும் நரேந்திரவர்மன் உடன் இருந்த வீரர்கள் அனைவரும் பரபரப்பானார்கள்.