“அப்படியே ஆகட்டும் இளவரசே. ஆனால் தாங்கள் சரியான நேரத்தில் வந்து விடுங்கள். நாம் பயணம் செய்ய வேண்டும்”, என்று புன்னகைத்தான் சுதமன்.
இளவரசே என்று அழைத்ததால் சுதமனை முறைத்து விட்டு “விரைவில் வந்து விடுவேன் சேனாதிபதியாரே”, என்று கூறி விட்டு சென்று விட்டான் நரேந்திரவர்மன்.
கண்களில் கண்ணீருடன் நரேந்திரவர்மனின் நினைவுகளுடன் ராமர், சீதை சிலையையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் வான்மதி தேவி.
“அவர் சென்றிருப்பார். என்னை அவர் கண்கள் தேடி இருக்கும். நான் இல்லை என்று கோபம் கொண்டிருப்பாரா? அவர் என்னை பிரிந்து செல்வதை என்னால் காண இயலுமா? அவருடனே செல்ல என் பாதம் துடிக்கிறதே. அதனால் தானே அவர் நினைவில் இங்கு வந்து அமர்ந்தேன். எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது ராமா. ஏன் என் மனதில் காதலை விதைத்தார். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல எனக்கு தெரிகிறது. அவர் என் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்கும் நாள் எப்போது வரும்?”, என்று வாய் விட்டே புலம்பினாள் வான்மதி.
“கூடிய விரைவிலே அந்த நாள் வரும் தேவி”, என்று கூறினான் நரேந்திரவர்மன்.
காதில் விழுந்த குரலில் ஆனந்தமாக திரும்பி பார்த்தாள் வான்மதி.
திரும்பிய வான்மதிக்கு வியப்பாக இருந்தது. “இது எப்படி சாத்தியம்? அவருடைய நினைவில் இருப்பதால் அவர் பிம்பம் எனக்கு தெரிகிறதா? அவர் தான் சென்று விட்டாரே? இப்போது நான் கனவு தான் கண்டு கொண்டிருக்கிறேன்”, என்று வாய் விட்டு கூறி கொண்டே அவனுடைய பிம்பத்தையே பார்த்தாள்.
அவள் பிம்பம் என்று நினைத்து கொண்டிருக்கும் அவன் உருவம் அவளை நோக்கி சென்றது.
விழி எடுக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்ற அவனோ அவள் எதிரே புல்லில் அமர்ந்தான்.
அவன் கரங்கள் உயர்ந்து அவள் கண்ணீரை துடைத்து விட்டது.
அவன் தொடுகையில் உயிர்ப்புடன் அவனை பார்த்தாள் வான்மதி.
“இது கனவல்ல தேவி. நான் உன் நரேந்திரவர்மன் தான்”, என்று உச்சரித்தான் நரேந்திரவர்மன்.
“இளவரசே”, என்று கதறி கொண்டு அவன் நெஞ்சில் அடைக்கலமானாள் வான்மதி. அவன் கரங்களும் அவளை இறுக்கி கொண்டது.
“சுதமன் கூறிய படி நான் பிரிந்து செல்வதை தாங்க முடியாமல் தான் இங்கு வந்திருக்கிறாள். நான் தான் தவறாக எண்ணி விட்டேன்”, என்று நினைத்து கொண்டு “சிறு குழந்தை போல் அழுகிறாயே வான்மதி. உன் கண்ணீர் எனக்கு மனவருத்தத்தை தருகிறது”, என்றான்.
“தங்களை இனி எப்போது காண்பேன் என்று நினைத்து கொண்டிருந்தேன் தெரியுமா? இப்போது கண்டதும் எனக்கு என்ன செய்யவென்றே தெரியவில்லை. இது கனவு என்று தான் எனக்கு தோன்றுகிறது”
“கனவு அல்ல தேவி. உன்னை காணாமல் என்னாலும் செல்ல இயல வில்லை. நீ இங்கு இருப்பாய் என்று எண்ணிக் கொண்டு உன்னை பார்க்க வந்தேன். நீயானால் இங்கே அழுது கொண்டிருக்கிறாய்”
அவன் நெஞ்சில் இருந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இப்போது என்னை நீங்கி சென்று விடுவீர்களா இளவரசே?”, என்று கேட்டாள்.
“ஆம், ஆனால் கூடிய விரைவில் சுப செய்தியோடு வருவேன் தேவி. அப்போது உன்னை என்னோடே அழைத்து சென்று விடுவேன்”
“தாங்கள் மெய் தான் உரைக்கிறீர்களா?”
“ஆம் நான் என்றும் பொய் கூறியது இல்லை தேவி. உன்னை என் ராணியாக்கி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கு அச்சாரமாக இது”, என்று கூறி கொண்டே சிலை அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் திலக மிட்டான்.
கண்களை மூடி அவன் செய்கையை ரசித்தவளுக்கு ஆனந்தமாக இருந்தது.
அவளை எழுப்பி கை தாங்களாக அழைத்து வந்தவன் அங்கிருந்த பொதிகையில் அருகில் உள்ள பாறையில் அமர வைத்தான். பின் குதித்தேறி அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
“இப்போது தாங்கள் இங்கே வந்ததை என் தந்தை அறிந்திருப்பாரே?”, என்று அவள் கேட்ட கேள்விக்கு தங்கள் திட்டத்தையும் சுதமன் பற்றியும் கூறினான் நரேந்திரவர்மன்.
“அவரை நிற்க வைத்து விட்டு தான் வந்துருக்கிறீர்களா? பாவம் அவர்”
“கவலை வேண்டாம் இளவரசி. இப்போது நான் சென்று விடுவேன்”,
“அவர் ஏன் கையில் சலங்கையை கட்டி இருக்கிறார்?”
“அது அவனுடைய காதலியோடதாம். நம்முடைய திருமணத்துக்கு பிறகு அவளை அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும்”, என்று கூறி கொண்டே அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான்.
அவன் தோளில் தலை சாய்த்தவள் அவன் முதுகில் கைகளை போட்டாள். ஆனால் அவள் கை பட்டதும் அவன் வலியில் “ஆ”, என்று முகத்தை சுருக்கினான்.
“என்னவாயிற்று இளவரசே?”, என்று கேட்டு கொண்டே அவன் முதுகை திருப்பினாள். பின் அவன் ஆடையை சற்று மேலேற்றி பார்க்கும் போது பதறி போனாள். அங்கே ஆழமாக வெட்டு காயம் இருந்தது.
அதை பார்த்து அவள் கண்ணில் மீண்டும் நீர் கோர்த்தது.
“போரில் காயம் ஏற்படாமல் இருக்குமா தேவி? சிறிது நாளில் சரியாகி விடும். நம் திருமண நாள் அன்று உன்னை நெருங்கும் போது காயம் வடுவாகி விடும்”, என்று கூறி கண் சிமிட்டினான்.
“ச்சி”, என்று கூறி சிரித்தவள் “வலி அதிகமாக இருக்கிறதா?”, என்று கவலையாக கேட்டாள்.
“நீ ஒரு அச்சாரம் கொடுத்தால் வலி மறைந்து விடுமே. அதை செய்ய உனக்கு மனது தான் வராது”, என்று போலியான சோகத்துடன் கூறினான் நரேந்திரவர்மன்.
கண்களை மூடி கொண்டு முகத்தை மட்டும் அவன் முகம் நோக்கி அவன் கன்னத்தில் முத்தமிட கொண்டு சென்றாள்.
அவளை சிரிப்புடன் பார்த்தவன் தன் முகத்தை அவள் முகம் அளவுக்கு கீழிறக்கி தன் கன்னத்தை அவனாகவே அவள் உதட்டில் பதித்தான்.
அவள் உதடு ஆழமாக பதிந்தது அவன் கன்னத்தில். கண்களை திறந்து அவனை பார்த்தவள் வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
“யானை பசிக்கு சோலை பொறியா தேவி?”, என்று கேட்டு கொண்டே அவள் பதில் கூறும் முன் அவள் இதழ்களில் தன் இதழை பதித்தான்.
வெகு நேரம் அவள் இதழ்களை சுவைத்தவன் அவளுடைய இடுப்பில் கை போட்டு தன்னுடன் அணைத்து கொண்டான்.
அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவளின் குங்குமம் அவன் சட்டையில் அப்படியே ஒட்டி கொண்டது. அவள் முகம் அவன் நெஞ்சில் இழைந்தது. அதை கண்களை மூடி அனுபவித்தவனின் கைகள் அவளுடைய வெற்றிடையில் அழுந்தியது.
அப்படியே அவளை அந்த பாறையில் படுக்க வைத்தவன் அவள் மீது படர்ந்தான்.
அவளுடைய கழுத்து வளைவில் அவன் முகம் புதைக்கும் போது அவள் கைகள் மீண்டும் அவன் முதுகுக்கு சென்று அவனை இறுக்க நினைத்தது. ஆனால் அவனுடைய காயத்தை நினைத்து பார்த்தவள் அவன் இடுப்பில் மட்டும் கை வைத்து கொண்டாள்.
கண்களை மூடி அவன் தொடுகையில் சிலிர்த்திருந்தவளை ஆசையாக பார்த்து கொண்டிருந்தவன் அவள் நெற்றி, கன்னம், காது என்று முத்தமிட்டு கொண்டே வந்து கடைசியில் இதழில் இளைப்பாறினான்.
அவளை அப்படியே எடுத்துக் கொள்ளச் சொல்லி உடல் கெஞ்சினாலும் அவள் பெண்மைக்கு மதிப்பளித்து “சூரியன் இப்போது மறைந்து விடும் தேவி. நீ அரண்மனைக்கு செல். இதற்கு மேல் ஒரு நொடி நான் தாமதித்தாலும் உன் பெண்மையை களவாடி விடுவேன். என்னுடைய காதல் சாம்ராஜ்யத்தின் ராணியான நீ, என்னுடைய பட்டத்து ராணியாக அரியாசனத்தில் அமர்ந்த பின் என் பஞ்சணையில் வைத்து தான் உன்னை அடைவேன். எனக்கும் பயணத்துக்கு தாமதமாகி விட்டது. நாம் சந்திக்க வெகு நாட்கள் இல்லை தேவி. அதுவரை பொறுத்திரு. நான் வருகிறேன்”, என்று கூறி விட்டு அவளை பார்த்த படியே சென்று விட்டான்.
அவனையே பார்த்த படி எழுந்து அமர்ந்தவள் அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தாள்.
அவன் பிரிந்து சென்றது வருத்தம் அளித்தாலும், அவனை கண்டது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“சரி அரண்மனைக்கு செல்லலாம்”, என்று நினைத்து கீழே குதித்து இறங்கினாள். அவளோடு சேர்த்து அவள் மேலாடை மீது அணிந்திருந்த சீலை துணியும் கீழே விழுந்தது.
“இடுப்பில் இறுக்கமாக சொருகி இருந்த துணியை கூட இப்படி அவுர வைத்து விட்டானே. நல்ல வேளை அவன் இப்போது கண் முன் இல்லை”, என்று வெட்கத்துடன் நினைத்து கொண்டு அரண்மனைக்கு செல்ல கிளம்பினாள்.
இவள் நந்தவனத்தின் வாயிலுக்கு செல்லும் போது அங்கு நரேந்திரவர்மனும், சுதமனும் புரவி மீது ஏறி பயணத்துக்கு ஆயத்தமாக நின்றார்கள்.
அதை பார்த்ததும் கண்கள் ஜொலிக்க அவர்கள் அருகில் சென்றாள் வான்மதி.
அவளுக்காகவே காத்திருந்த நரேந்திரவர்மனும் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“வணங்குகிறேன் இளவரசி”, என்றான் சுதமன்.
“தாங்கள் எனக்கு சகோதரர். இனி என்னை இளவரசி என்று எல்லாம் அழைக்க கூடாது. வான்மதி என்றே அழையுங்கள்”, என்று கூறி அவனை பார்த்தும் புன்னகைத்தாள் வான்மதி.
“என்னை சகோதரன் என்று கூறியதுக்கு என் வந்தனங்கள் இளவரசி. என்னுடைய நண்பனுடைய மனைவி எனக்கு சகோதரி தான். ஆனால் பெயர் சொல்லி எல்லாம் என்னால் அழைக்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்”, என்றான் சுதமன்.
“அவன் அப்படி தான் தேவி. சரி உனக்காக தான் காத்திருக்கிறோம். நீ அரண்மனைக்கு செல். நாங்கள் கிளம்புகிறோம்”, என்றான் நரேந்திரவர்மன்.
“இருவரும் கவனமாக சென்று வாருங்கள்”, என்று கூறி விட்டு அவர்களை பார்த்த படி அரண்மனைக்கு சென்றாள் வான்மதி. அவள் சென்ற பின்னர் தான் இருவரும் புரவியை செலுத்தினார்கள்.
“இளவரசி அருமையானவர்கள்”, என்றான் சுதமன்.
“ஆம் சுதமன். எனக்கு ஒரு சந்தேகம் உன்னிடம் கேட்க வேண்டும். வான்மதி மனதளவில் என் மனைவி தான். ஆனால் எங்களுக்கு திருமணமே ஆக வில்லை. அதற்குள் என் மனைவி என்று எதனால் உரைத்தாய் சுதமன்?”
“ஹா ஹா உன் மேல் சட்டையில் தீட்டி இருக்கும் குங்குமத்தை கண்டே நான் அவ்வாறு உரைத்தேன்”, என்று சிரித்தான் சுதமன்.
“உன் கண்ணில் இது சிக்கி விட்டதா? இனி என்னை கேலி செய்ய ஆரம்பித்து விடுவாயே? சரி தாமதம் ஆகி விட்டது. நாம் விரைவாக சென்று நம் படையை பிடிக்க வேண்டும். புரவியை விரட்டு”, என்று சுதமனிடம் கூறிய நரேந்திரவர்மன் அவனுடைய புரவியை பார்த்து “வேகமாக செல் வர்மா”, என்று ஆணையிட்டான்.