அத்தியாயம் 12

பக்கத்தில் நீ

இல்லாத போதும்

வெட்கத்தில் தடுமாறுகிறேன்

உன் நினைவை எண்ணி!!!

 

குதிரையில் இருந்து குதித்து இறங்கிய நரேந்திரவர்மனும், சுதமனும் அரண்மனைக்கு  உள்ளே பிரவேசித்தார்கள். மகாராஜா அவர்களை அன்புடன் வரவேற்றார்.

வான்மதி தேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே தான் உள்ளே சென்றான் நரேந்திரவர்மன். அவன் பார்வையில்  தடுமாறி போனாள் வான்மதி.

“நண்பா நீ இப்படியே இளவரசியை காதல்  பார்வை பார்த்து கொண்டிருந்தால் மகாராஜா மட்டும் அல்ல. இங்கு இருக்கும் அனைத்து பிரஜைகளும் உன் காதலை கண்டு கொள்வார்கள். அதனால் கொஞ்சம் பார்வையை இளவரசியை விட்டு திருப்பு”, என்றான் சுதமன்.

அதன் பின்னர் தான் கொஞ்சம் பார்வையை திருப்பினான்  நரேந்திரவர்மன். அதன் பின் விருந்து ஆரம்பமானது. பல விதமான உணவு பண்டங்கள் அணிவகுத்திருந்தன. போரில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களுக்கும் புத்தாடையும், ஆபரணங்களும், பொற்காசுகளும் மகாராஜாவால் வழங்க பட்டன.

போரில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார் மகாராஜா.

நரேந்திரவர்மனின் படையில் இருந்த வீரர்களுக்கும் நரேந்திரவர்மன் மறுக்க மறுக்க அவ்வாறே செய்தார் மகாராஜா.

அதன் பின் நரேந்திரவர்மன் கிளம்பும் தருணம் வந்தது. பயணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய பட்டன.

அனைவரிடமும் விடை பெற்று கிளம்பும் தருவாயில் வான்மதியை மட்டும் நரேந்திரவர்மனால் காண இயல வில்லை. அதில் அவன் முகம் கூம்பி போனது.

“இன்று போனால் இனி எப்போது அவளை காண்பேன் நான்? என்னை காண அவளுக்கு ஆசை இல்லையா? என் கண் முன் வராமல் எங்கு சென்றாள்? இத்தனை பேர் முன்னால் அவளிடம் பேச முடியாமல் கண்ணாலாவது பார்த்து கொண்டிருந்தேன். இப்போது நான் இங்கிருந்து செல்ல போகிறேன் என்று அறிந்தும் என்னை காண வராமல் எங்கு சென்றாள்?”, என்ற கோபமும் வந்தது அவனுக்கு.

வேறு வழி இல்லாமல் படை வீரர்களை கிளம்பி செல்ல உத்தரவிட்டுவிட்டு சுதமனும் நரேந்திரவர்மனும் புரவியில் ஏறி கிளம்பினார்கள்.

அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு மனம் முழுவதும் நிம்மதியுடன் மகாராஜா அரண்மனைக்குள் சென்றார்.

புரவியை அதன் போக்கில் விட்டுவிட்டு எங்கோ மனதை அலைபாய விட்டுவிட்டு வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நரேந்திரவர்மனை பார்த்து உள்ளுக்குள் சிரித்து கொண்டான் சுதமன்.

அவனுடைய மன நிலையை மாற்ற எண்ணி “இங்கிருந்து செல்ல உனக்கு மனதில்லையா நண்பா?”, என்று பேச்சு கொடுத்தான் சுதமன்.

அவன் குரலில் நடப்புக்கு வந்தவன் “மனதுக்கு இனியவளை  பிரிந்து செல்ல எவருக்கு தான் மனது வரும் சுதமன்?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“அப்படி என்றால் இப்போதே நீ மகாராஜாவிடம் தங்கள் மகளை மணம் முடித்து தர சொல்லி கேட்டிருக்கலாம் அல்லவா?”

“அது எப்படி முடியும் சுதமன்? அது  என்னுடைய தந்தையை நான் அவமதிப்பது போல் ஆகி விடாதா? என் காதலை அறிந்து அதற்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள் என் பெற்றோர். அவர்களே வந்து முறைப்படி வான்மதியை எனக்கு கேட்பது தானே சரியாகும். அதற்கு முன்னால் நானே  அவசர பட்டு சொல்வது முறையாகாது நண்பா”

“அதுவும் சரி தான். எப்படியும் நாம் நம்முடைய நாட்டிற்கு சென்றவுடன் உன்னுடைய திருமணத்தை மகாராஜா நடத்த தான் செய்வார். அதற்கு சிறிது நாள்கள் தான் ஆகும். பின் ஏன் நீ கவலையில் இருக்கிறாய்?”

“என் கவலை அதுவல்ல சுதமன். அரண்மனையில்  விருந்து நடக்கும் வரை என் கண் முன் இருந்தவள் அதன் பின் எங்கோ சென்று மறைந்து விட்டாள். நான் இப்போது சென்று விடுவேன் என்று அவளுக்கு தெரியும் தானே? எதனால் என்னை வழி அனுப்ப வர வில்லை. எதற்காக எனக்கு தரிசனம் தர வில்லை? அவளுக்கு என்னை காண விருப்பம் இல்லையோ என்ற வினா எனக்கு தோன்றி விட்டது. அதனால் தான்”

“காதல் வந்தால் மனம் பேதலித்து போகும் என்பதை நீ உணர்த்தி விட்டாய் நரேந்திரா”

“என் மனம் பேதலித்து விட்டதா? என்ன உளறுகிறாய் சுதமன்?”

“நான் உளரவில்லை. உன் மனம் தான் நிலையாக இல்லாமல் அலைக்கழித்து கொண்டு ஒழுங்காக யோசனை செய்யாமல் இருக்கிறது. விருந்து முடியும் வரை இளவரசியாரும் உன் பார்வைக்கு பதில் பார்வை பார்த்ததையும் உன்னுடைய கண்ணசைவுக்காக தவம் இருந்ததையும் நானும் கண்டேன். அப்படி காதலை கண்ணால் காட்டிய இளவரசி நீ புறப்படும் தருணத்தில் அங்கில்லை என்றால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்”

“நானும் அதை தானே கூறினேன் சுதமன்”

“நீ கூறிய காரணம் தவறு நரேந்திரா. இளவரசி உன்னை பார்க்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து செல்ல வில்லை. உன்னுடைய பிரிவை தாங்க முடியாமல் தான் அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். இதுவே நான் கூறும் காரணம்”

“சுதமன்”

“என்ன இப்போது உன் முகம் பளிச்சென்று மின்னுகிறது?”

“நீ கூறியது சரி தான் சுதமன். நான் தான் குழப்பத்தில் மதி இழந்து விட்டேன். நிச்சயமாக என் வான்மதி என்னை நினைத்து தான் கவலை பட்டு கொண்டிருப்பாள்”

“இப்போதாவது உனக்கு புரிந்ததே”

“சுதமன் எனக்கு அவளை உடனே காண வேண்டும் போல் இருக்கிறது”

“எப்படி முடியும் நரேந்திரா? இளவரசியோ அரண்மனையில் இருக்கிறார். அவரை காண வேண்டும் என்றால் அரண்மனைக்கு செல்ல வேண்டும். அப்படியே சென்றாலும் என்ன காரணம் கூறி அவரை காண முடியும்?”

“இல்லை இளவரசி இந்நேரம் அரண்மனையில் இருக்க மாட்டாள்”

“பின் எங்கு இருப்பார்? சூரியன் அஸ்தமிக்க போகிறது நண்பா”

“ஆம், ஆனால் இன்னும் இருட்ட வில்லையே. என்னுடைய சந்தேகம் சரியாக இருந்தால் இளவரசி நாங்கள் சந்தித்து கொண்ட நந்தவனத்தில் தான் இருப்பாள்”

“அப்படியா? அப்படி என்றால் நீ அவளை கண்டு விடலாம். ஆனால் மகாராஜா வரை விசயம் போய் விடுமே”

“அதற்கு ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கு உன்னுடைய ஒத்துழைப்பு அவசியம்”

“என்ன செய்ய வேண்டும் கூறு நரேந்திரா”

“உனக்கு நந்தவனத்தை சுற்றி காட்டி இதே போல் நம் நாட்டிலும் ஒன்று அமைக்க வேண்டும் என்ற காரணத்தை காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே சென்று விடலாம். எனக்கு அங்கே செல்ல எப்போதும் அனுமதி உண்டு. மகாராஜா காதுக்கு நாம் நந்தவனம் சென்ற விசயம் தெரிந்தால் கூட இந்த காரணத்தை தான் காவலர்கள் கூறுவார்கள்”

“சரியான யோசனை. சிறிது நேரம் முன்பு மழுங்கி இருந்த உன் மதி இப்போது கூர்மையாக வேலை செய்கிறதே”

“கேலி செய்யாதே சுதமன். சரி புரவியை திருப்பு. நந்தவனம் செல்லலாம்”

“ஹ்ம்ம் செல்லலாம்”, என்று கூறி கொண்டே புரவியை திருப்பிய சுதமன் “நீ இளவரசியிடம் பேச செல்லும் போது உனக்கு இடையூறாக நான் எப்படி வருவது நரேந்திரா?”, என்று கேட்டான்.

“உனக்கு இந்த விருப்பம் எல்லாம் இருக்கிறதா? உன்னை யார் கூட்டி செல்ல போவது? அது பறந்து விரிந்த நந்தவனம். உள்ளே காலடி எடுத்து வைத்த உடன் நீ அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளை பார்வை இடு. நான் அதற்குள் என் தேவதையை தரிசித்து விட்டு வந்து விடுவேன்”

“நம் படையில் சேனை தலைவன் நான். என்னை உன் காதலுக்கு காவலனாக நிறுத்தி விட்டு செல்லும் உன் புத்தி கூர்மையை கண்டு நான் வியக்கிறேன் நரேந்திரா”, என்று சிரித்தான் சுதமன்.

“ஹா ஹா சரி தான். ஆனால் இப்போது இந்த வேலையை நீ செய்தாயானால் நாளை நீ உன் காதலியுடன் பேசும் போது நான் உனக்கு உதவுவேன்”, என்றான் நரேந்திரவர்மன்.

அவன் சொன்ன காதலி என்ற வார்த்தையில் சுதமன் ஊமையாகி போனான். புரவியின் கடிவாளத்தை பிடித்திருந்த கையை கண் அருகே கொண்டு சென்றான். அவன் கையில் அந்த வெள்ளி சலங்கை பள பளத்தது.

“எட்டி பிடிக்க முடியாத சிகரம் என்று தெரிந்தும் அப்படி பட்டவன் மேல் காதல் கொண்டிருக்கும் காதலியை அல்லவா நான் காதலிக்கிறேன் நண்பா. அவள் மனதில் எப்போது என் மீது காதல் வரும்? அவளுடைய காதலும் ஒரு தலையானது தான். அவளையே நினைத்து கொண்டிருக்கும் என் காதலும் ஒருதலையாக தான் இருக்க போகிறது”, என்று நினைத்து கொண்டான்.

அப்போது “கனவு காணாமல் இறங்கு சுதமன். நந்தவனம் வந்து விட்டது”, என்று குதிரையில் இருந்து குதித்து இறங்கிய நரேந்திரவர்மன் அங்கிருந்த காவலர் அவனை பார்த்து வணங்கியதும் “நண்பனுக்கு நந்தவனத்தை காட்ட அழைத்து வந்திருக்கிறேன்”, என்று காரணம் சொல்லி உள்ளே செல்ல முயன்றான்.

“தங்களுக்கு எப்போதும் உள்ளே செல்ல அனுமதி உண்டு இளவரசே”, என்றான் அந்த காவலன்.

“சுற்றி காட்ட நீ வருகிறாயா?”, என்று கேட்ட நரேந்தரவர்மனுக்கு “உள்ளே வான்மதி இருக்கிறாளா?”, என்ற உண்மை தெரிய வேண்டியது உள்ளது.

“உள்ளே தான் இளவரசி இருக்கிறார்கள் இளவரசே. அவர்கள் தங்களுக்கு சுற்றி காட்டுவார்கள். அது மட்டும் அல்லாமல் தாங்கள் தான் இந்த நந்தவனத்துக்கு வேலியிட்டீர்கள். தங்களுக்கு ஒரு ஆள் சுற்றி காட்ட வேண்டுமா? உள்ளே செல்லுங்கள்”, என்று கூறி கதவை திறந்தான்.

தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த சுதமனும் குதிரையில் இருந்து இறங்கி நரேந்திரவர்மன் பின் சென்றான்.

இருவரும் நந்தவனத்துக்குள் பிரவேசித்ததும் “நீ எங்கு வேணாலும் சுற்றி பார்த்து கொள். நான் வான்மதியை பார்த்து விட்டு வருகிறேன்”, என்றான் நரேந்திரவர்மன்.