அந்த களமே போராட்டமான யுத்த களமானது. இரண்டு பக்கமும் சண்டை வலுத்தது.

எதிரிகளும் வீரமாக போரிட்டார்கள். ஒரு பக்கம் குதிரை படையும், மறு பக்கம் யானை படையும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன.

மேடையில் இருந்து பாய்ந்து ஓடும் நீரை விட வேகமாக செல்லும் குதிரைகளும், பெரிய மலைகளை போன்ற இருந்த கரிய யானைகளும் கதறி கொண்டிருந்தன. அந்த வாயில்லா பிராணிகளின் கூக்குரல் வானை பிளப்பது போல ஒலித்தது.

என்ன நடந்தாலும் யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. அங்கே ரத்த ஆறு ஓடியது. வீரர்களின் மரண ஓலம் கேட்போர் இதயத்தை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது. ஆங்காங்கே  வீரர்களின் சடலங்கள் மற்ற  வீரர்களின் கால்களில் மிதி பட்டன.

வானத்து சூரியன் உச்சிக்கு வந்து வெயிலை கொடுத்த போது கூட கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் முகத்தில் வடிவது ரத்தமா வியர்வையா என்று அறியாது போரிட்டார்கள்.

அன்று மாலை சூரியன் மறையும் வரை போர் நீண்டது. பின் முரசறைய பட்டு யுத்தம் நிறுத்த பட்டது.  இனி அடுத்த நாள் யுத்தம் தொடரும்.

இரண்டு பக்க வீரர்களும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு அவரவர்  படை இருக்கும் பக்கம் சென்றார்கள்.

வாசுதேவசக்கரவர்த்தியை கண்டு கொண்டிருந்த  செங்கல்வராயன் முகத்தில் சினம் தெரிந்தது. அவரை எரித்து விடுவது போல பார்த்து விட்டு திரும்பி சென்று விட்டான்.

வாசுதேவச்சக்கரவர்த்தியோ சுற்றி கிடந்த பிணக்குவியலை பார்த்தார். அவர் முகத்தில் வருத்தம் தெரிந்தது. இறந்து கிடந்தவர்கள் சடலம் எதுவோ மறைப்பாச்சி பொம்மை போல் அசையாமல் கிடந்தது. யுத்தத்துக்கு முன் காய்ந்திருந்த மண் இப்போது ரத்தத்தில் நனைந்திருந்தது.

“ஈசனே இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டி வருமோ?”, என்று கவலையோடு ரதத்தை திருப்பினார் சக்கரவர்த்தி.

நரேந்திரவர்மனும் சுற்றி கிடந்த அவலங்களை தான் பார்வை இட்டு கொண்டிருந்தான். பின் கவலை பட இது தருணம் இல்லை என்று சிந்தித்து குற்றுயிரும் குலையுயிருமாக கிடைந்தவர்களை அப்புற படுத்த எண்ணினான். காயம் பட்டவர்களுக்கு முதலுதவி செய்ய கட்டளை இட்டான்.

செத்து கிடந்த சடலங்களை ஒரு பக்கமாக எடுத்து போட சொன்னான். அதே முறைகள் தான் செங்கல்வராயன் படைக்கும் நடந்தது.

ஆனால் அவன் செத்த வீரர்களை பற்றி கவலை இல்லாமல்  கோபத்துடன் கூடாரத்தில் உலவி கொண்டிருந்தான். அவன் பக்கம் இருந்து தான் அதிக வீரர்கள் பலி கொடுக்க பட்டனர். அவனால் அதை சகித்து கொள்ள முடிய வில்லை.

“வல்லவரையா?”, என்று கர்ச்சித்தான் செங்கல்வராயன்.

“மகாராஜா”, என்று கூறி கொண்டே அங்கு வந்தான் வல்லவரையன்.

“எதனால் இப்படி நிகழ்ந்தது? நம் பக்கம் தான் சேதம் அதிகம். இது தொடர்ந்தால் நாம் தோற்பது நிச்சயம். எதிரியின் திறமை நான் அறிந்ததே. ஆனால் இத்தனை அதிகமான வீரர்களை நான் எதிர்பார்க்க வில்லை. வாசுதேவர் இவ்வளவு வீரர்களை வைத்துள்ளாரா?”

“நானும் அதே குழப்பத்தில் தான் உளவறிந்தேன் மகாராஜா. ஆனால் அதில் நான் அறிந்த உண்மை அவ்வளவு மகிழ்ச்சிகரமானது அல்ல”

“என்ன கூறுகிறாய் வல்லவரையா?”

“வந்திருக்கும் சேனை பாதிக்கு மேல் இந்திரவர்மருடையது”

“என்ன?”

“ஆம் மகாராஜா. நாம் படையை நிறுத்தும் போதே இந்திரவர்மரின் புதல்வன் நரேந்திரவர்மன், வாசுதேவரின் தேசத்தின் பின் பக்கமாக வந்து படையை நிறுத்தி விட்டான். ஒரு பகுதி வீரர்கள் கோட்டைக்கு அரணாக இருக்கிறார்களாம். ஒரு பகுதி வீரர்கள் வாசுதேவர் படையுடன் கலந்து விட்டார்கள்”

“எப்படி நடந்தது இது? என்னால் இதை சிறிதும் நம்ப முடிய வில்லை”

“அது மட்டும் அல்ல மகாராஜா. ஒரு பக்கம் அந்த நரேந்திரவர்மனும் நம்மை எதிர்த்து இன்று போர் புரிந்திருக்கிறான். அவனை பார்த்த நம் வீரர்களும் இருக்கிறார்கள்”

“என்ன? நரேந்திரவர்மன் என் படையை எதிர்த்து போர் புரிந்தானா? அந்த இந்திரவர்மன் எனக்கு மாமன் முறை. அவன் எனக்கு எதிராக படை அனுப்பி இருக்கிறானா?”

“ஆம் மகாராஜா. அந்த ஆள் இப்படி செய்வான் என்று நானும் எதிர்பார்க்க வில்லை”

“அவனை பிறகு கவனித்து கொள்ளலாம். இப்போது நமக்கு பிரச்சனை அதிகம் வந்து விட்டது வல்லவரையா? நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இரண்டு படையை எதிர்ப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த போரில் வெல்லும் யுக்தியை முதலில்  சிந்திக்க வேண்டும்”

“இதில் சிந்திக்க என்ன இருக்கிறது தமையனே? நாம் ஏற்கனவே முடிவு செய்த செயலை செய்ய வேண்டியது தான்”

“ஆம் அப்படி செய்தால் தான் நம்மால் வெல்ல இயலும். அந்த வான்மதி இல்லாமல் தோற்று திரும்பினால் அது அவமானம்”

“அப்படி எதுவும் நடவாது. தாங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்”

“ஹ்ம், அந்த செயலை செய்ய ஆள் ஏற்கனவே கிடைத்து விட்டான் தானே?”

“கிடைத்த பிறகு தானே போரை புரியவே திட்டமிட்டோம். கர்ச்சிதமாக முடித்து விடுவான். தாங்கள் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நாளை யுத்தம் நடப்பதே ஐயம் தான். நான் சென்று அந்த வேலைக்கு கட்டளை இட்டு வருகிறேன்”

“ஹ்ம்ம் செல். சென்று முடித்து விட்டு வா”

“உத்தரவு மகாராஜா”, என்று கூறி சென்றான்  வல்லவரையன்.

செங்கல்வராயனால் கீறி இருந்த மகாராஜாவின் கைகளுக்கு மருந்திட்டு கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். இருவர் முகத்திலும் சோகம் நிரம்பி இருந்தது.

“கவலை கொள்ள வேண்டாம் மகாராஜா. அனைத்தும் விதி படி தான் நடக்கும். செங்கல்வராயன் படை தோற்று தான் போகும். இன்றே அதிக வீரர்களை அவன் இழந்து விட்டான். நாளையே கூட போர் முடிந்து விடலாம் மகாராஜா”, என்றான் நரேந்திரவர்மன்.

“என்ன தான் முடிந்தாலும் நம் பக்கமும் இழப்பு தானே? இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒரு மகாராஜாவாக நான் என்ன ஆறுதல் கூற இயலும்?”, என்று சோகத்துடன் உரைத்தார் மகாராஜா.

“போரில் உயிர் இழந்த வீரர்களின் நிலையை அவர்களுடைய குடும்பத்தினர் அறிந்தால் கவலை இருந்தாலும் அதை காட்டாமல் பெருமை தான் படுவார்கள் மகாராஜா. அது மட்டும் அல்ல இறந்த வீரர்களுக்கு நடுகல் வைத்தே வணங்குவார்கள். இழந்தது இழந்தது தான். அதையே நினைத்து வருந்தி பயன் என்ன? தங்களின் காயம் ஆழமாக பட்டிருக்கிறது மகாராஜா. தங்களுக்கு ஓய்வு அதிகம் தேவை. சிறிது படுத்து கொள்ளுங்கள். நான் வீரர்களின் நிலையை அறிந்து கொண்டு வருகிறேன். அது வரை சுதமன் தங்களுக்கு துணையாக இருப்பான்”, என்று அவரிடம் கூறி விட்டு “சுதமன் சுதமன்”, என்று அழைத்தான் நரேந்திரவர்மன்.

“சேனை தலைவர் சுதமன் இன்னும் கூடாரத்துக்கு திரும்பவில்லை இளவரசே”, என்று கூறினான் ஒரு வீரன்.

“என்ன?”, என்று அதிர்ச்சி குரல் எழுப்பியவன் அடுத்த நொடி அங்கிருந்த பந்தத்தை எடுத்து கொண்டு ஓடினான்.

நரேந்திரவர்மன் முகத்தில் கலவரம் வந்திருந்தது. தன்னுடைய நண்பன் உயிருடன் இல்லை என்ற உண்மையை அவனால் தாங்கி கொள்ள இயல வில்லை. சிறு வயதில் இருந்து தனக்கு நிழலாக இருந்த ஒரு சகோதரனை போன்றவனை இழந்து கண்ணீர் சிந்தினான் நரேந்திரவர்மன்.

இன்னும் களத்தில் இருந்து சடலங்களை அப்புற படுத்தும் பணி தான் நடந்து கொண்டிருந்தது. அவரச அவரசமாக ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்தான் நரேந்திரவர்மன். சுதமனின் முகம் எங்குமே காணவில்லை. மகாராஜாவுக்கு சொன்ன ஆறுதல் மொழியை கூட மறந்து “ஐயோ இந்த பிணக்குவியலில் இருந்து என் நண்பனை எவ்வாறு கண்டறிவேன்?”, என்று அங்கே மண்டி இட்டு கதறினான்.

வானத்தை பார்த்தும், பூமியை பார்த்தும் அழுது கொண்டிருந்த இளவரசரை பார்த்து அனைவருக்கும் கவலையாக இருந்தது.

அப்போது எங்கிருந்தோ அவன் காதில் அந்த சலங்கை சத்தம் கேட்டது. காதுகளை கூர்மையாக்கினான் நரேந்திரவர்மன். அந்த சலங்கை சத்தம் கேட்டு அவன் கண்களில் ஒரு ஒளி வந்தது. அடுத்த நொடி சத்தம் வந்த திசை நோக்கி ஓடினான்.

சத்தம் வரும் இடத்தில நின்று கொண்டு பந்தத்தை தூக்கி பிடித்து பார்த்தவனுக்கு நெஞ்சே வெடிப்பது போல இருந்தது.

அங்கே கழுத்தில் ஈட்டி பாய்ந்து குருதி கொட்ட கிடந்தான் சுதமன். அதை பார்த்ததும் கதறிய படியே அவன் அருகில் சென்ற நரேந்திரவர்மன், சுதமன் அருகில் நெருங்கினான்.

அங்கே கையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தான் சுதமன். அவன் கண்கள் மூடி இருந்தது. அவன் அருகில் சென்று “சுதமன்”, என்று கூறி கொண்டே அவன் தலையை தூக்கி தன் மடியில் வைத்து கொண்டான் நரேந்திரவர்மன்.

நரேந்திரவர்மனின் குரலில்  கண்களை திறந்து பார்த்த சுதமன் புன்னகைக்க முயன்று தோற்றான். அதை பார்த்த நரேந்திரவர்மனின் இதயத்தில் ரத்தம் வடிந்தது. “உனக்கு ஒன்னும் ஆகாது நண்பா. உன்னை சாக விட மாட்டேன்”, என்று கூறி கொண்டே அவன் கழுத்தில் பாய்ந்திருந்த ஈட்டியை பிடுங்கினான்.

அதனால் சுதமன் கழுத்தில் இருந்து ரத்தம் வடிந்தது. தன்னுடைய இடையில் கட்டி இருந்த துணியில் இருந்த ஒரு பொடியை எடுத்து அவன் கழுத்தில் தூவினான். அடுத்த நொடி அவனை அள்ளி தூக்கி கொண்டு கூடாரத்தை நோக்கி ஓடினான்.

நேராக வைத்தியர் முன்பு அவனை கிடத்தினான். “இவனை பிழைக்க வைக்க வேண்டும் வைத்தியரே”, என்றான் நரேந்திரவர்மன்.

“குருதி நின்று விட்டதே இளவரசே. அதனால் சேனாதிபதியை எளிதில் காப்பாற்றி விடலாம். காயம் ஆற தான் தாமதம் ஆகும். தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்”, என்று கூறி கொண்டே அவனுக்கு சிகிச்சை செய்தார் வைத்தியர்.

“அந்த சலங்கை இல்லாவிட்டால் அவனை என்னால் கண்டு கொண்டிருக்க முடியாது”, என்று நினைத்து கொண்டு மற்ற வீரர்களை பார்வை இட சென்றான்.

அதே நேரம் திருட்டு தனமாக இருட்டுக்குள் நடந்தான் வல்லவரையன். சுற்றி முற்றி திருட்டு தனமாக கண்களை சுழற்றினான். அவன் கண்களில் குள்ளநரித்தனம் தெரிந்தது. சிறிது தூரம் சென்றவுடன் கையில் இருந்த பந்தத்தை ஏற்றினான். பின் அந்த வெளிச்சத்தை வைத்து கொண்டு அங்கேயே உலாவினான்.

அப்போது அவன் எதிரே ஒரு உருவம் வந்து நின்றது. வந்து நின்ற அந்த மனிதனை  கண்டதும் வல்லவரையன் முகம் ஒளிர்ந்தது.

“வந்துவிடாயா காண்டவா? எங்கே நீ வராமல் போய் விடுவாயோ என்று பயந்து விட்டேன்”, என்று புன்னகைத்தான் வல்லவரையன்.

“தாங்கள் கொடுத்த மூட்டை தங்கத்தை வாங்கி கொண்டு வராமல் சென்று விடுவேனா? தாங்கள் வர சொன்ன நேரம் வந்து விட்டேனா?”, என்றான் காண்டவன்.

“சரி சரி. நான் செய்ய சொன்ன வேலை எல்லாம் நினைவு இருக்கிறது தானே?”

“ஆம் ஐயா. நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் எப்போது செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை”

“நாளை காலையிலே முடித்து விடு”

“காலையிலா? அன்று நாளை இரவு என்று கூறினீர்களே”

“ஆம் அன்று அவ்வாறு யோசித்தோம். ஆனால் இப்போது நரேந்திரவர்மன் படையும் இங்கே குவிந்திருக்கிறதே. இன்றே எங்கள் பக்கம் இழப்பு அதிகம். நாளை போர் தொடர்ந்தால்  எங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படும். அதனால் நாளைய போரை நிறுத்த வேண்டும். அதனால் தான் காலையிலே வேலையை முடி என்கிறேன்”

“அப்படியே செய்து விடுகிறேன் எஜமானே”

“நல்லது. உன் கூட இருப்பவர்களுக்கு சந்தேகம் வராதே”

“வராது ஐயா. யாருக்கும் தெரியாமல் கட்சிதமாய் வேலையை முடித்து விடுவேன்”

“சரி நல்லது. நீ இப்போது செல்”

அந்த காண்டவன் சென்றவுடன் செங்கல்வராயனை தேடி சென்றான் வல்லவரையன்.

“காண்டவன் கட்சிதமாக வேலையை முடித்து விடுவான் தமையனே. நாளை பொழுது புலர்ந்ததும் நாம் முரசறைவோம். ஆனால் எதிரி படை யுத்தம் புரியாது”, என்றான் வல்லவரையன்.

“நல்லது வல்லவரையா? நாளை இந்நேரம் நாம் இந்த வாசுதேவரின் தேசத்தையே சூறையாடி சென்று கொண்டிருப்போம்”, என்று கொக்கரித்து சிரித்தான் செங்கல்வராயன்.