“சங்கை ஊதி விட்டார்கள் மகாராஜா. நாமும் யுத்தத்தை துடங்க வீரர்களுக்கு கட்டளை இட வேண்டும்”, என்றான் நரேந்திரவர்மன்.
“அப்படியே ஆகட்டும் இளவரசே. நாமும் யுத்தத்தை துடங்குவோம். வெற்றி நமக்கே”, என்றார் மகாராஜா.
“தாங்கள் சொல்வது சரியே மகாராஜா. நிச்சயமாக வெற்றி நம் பக்கம் தான். நான் வலது பக்கம் படையை பார்த்து கொள்கிறேன். சுதமன் இடது பக்கம் போர் புரிவான். தாங்கள் மத்தியில் நின்று செங்கல்வராயனுடன் போர் புரியுங்கள். அப்போது தான் நான் இந்த யுத்தத்தில் உதவுதை அவன் அறிய மாட்டான். செங்கல்வராயன் மிகுந்த தந்திர காரன். இப்போதே என்ன செய்து வைத்திருக்கிறான் என்று எனக்கு கலக்கமாக இருக்கிறது. நேரடியாக மோதினால் எதிரியை தோற்கடிக்கலாம். முதுகில் குத்தினால் யாது செய்வது? எதற்கும் கவனமாக இருங்கள். தங்கள் கவசத்துக்கு மேல் இதை அணிந்து கொள்ளுங்கள்”, என்று கூறி ஒரு உடையை மகாராஜா கையில் கொடுத்தான் நரேந்திரவர்மன்.
“அது தான் கவசம் இருக்கிறதே இளவரசே. பிறகு எதற்காக இது?”
“தாங்கள் தான் நம் வீரர்களின் உற்சாகம் மகாராஜா. தாங்கள் சொல்வதே வீரர்களுக்கு வேத வாக்கு. தங்களுக்காக தான் அவர்கள் தங்கள் உயிரையே பணையம் வைத்து போரிடுகிறார்கள். அப்படி பட்ட வீரர்களையும், அவர்கள் குடும்பத்தையும், நாட்டின் செல்வ வளங்களையும், பாரம்பரியங்களையும் காப்பது அரசரின் தலையாய கடமை. அப்படி பட்ட அரசரின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரிட கூடாது என்பதற்காக எங்கள் நாட்டில் புது விதமாக செய்த உடை தான் இது. எந்த ஆயுதங்களை வைத்தும் இந்த உடையை தாண்டி தங்களை தாக்க முடியாது. அதற்காக தான் இது. அணிந்து கொள்ளுங்கள்”
“அப்படியே ஆகட்டும் இளவரசே”, என்று கூறி கொண்டே அதை வாங்கி கொண்டார். பின் நரேந்திரவர்மன் முகம் நோக்கி “எனக்கு ஒரு சந்தேகம் இளவரசே”, என்று கூறினார் மகாராஜா.
“கூறுங்கள் மகாராஜா”
“இல்லை, செங்கல்வராயன் படையை வனத்துக்கு வெளியேவே நிறுத்தி விட்டானே. உள்ளே புகுந்து வனத்துக்கு உள் பக்கம் தானே படையை நிறுத்துவான் என்று நாம் ஊகித்து வனத்துக்குள்ளே படையை இறக்கி விட்டோம். அவன் இப்படி செய்கிறான் என்றால் எதாவது காரணம் இருக்குமா?”
“அல்ல இளவரசே. அவன் அறியாமல் செய்து விட்டான். அவசர பட்டு தான் வனத்துக்கு வெளியேவே நிறுத்தி விட்டான். அவன் இப்போது தானே முரசறைந்து இருக்கிறான். என் கணிப்பு சரி என்றால் நாம் நம் படையை கோட்டைக்குள் இருந்து வெளியே வரவைப்பதற்குள் அவன் வனத்துக்குள்ளே புகுந்து படையை நிறுத்த தான் முயற்சிப்பான். அதுக்குள் நம் படையை நிறுத்தியது அறிந்து அவனுக்கு அதிர்ச்சி தான் வரும். சரி நாம் நம் வேலையை செய்வோம். வெற்றி நமதே. மகாராஜா மிகுந்த கவனம் தேவை. சுதமன் உனக்கும் தான். வெற்றி நமதே”, என்று சொல்லி விட்டு ஒரு பக்கம் புரவியை தட்டி விட்டு சென்று விட்டான்.
அவன் சென்றதும் சுதமனும் மகாராஜாவிடம் கூறி விட்டு மற்றொரு பக்கம் சென்று விட்டான்.
நடு மத்தியில் வீரர்களுக்கு முன்னே செல்வதற்காக ஆயத்தமானார் மகாராஜா.
நரேந்திரவர்மன் யூகத்தின் படியே தான் செங்கல்வராயன் சிந்தித்து கொண்டிருந்தான். “படையை நகர்த்தலாமா?”, என்று அவன் யோசிக்கும் போதே “இங்கு இருந்தே யுத்தம் புரிய வேண்டுமா மகாராஜா? நான் முன்னேறி செல்லலாமே”, என்றான் வல்லவரையன்.
“ஆம் நீ கூறுவது சரியானது தான் வல்லவரையா. அதை தான் நானும் சிந்தித்து கொண்டிருந்தேன். இங்கு இருந்தே முரசு கொட்டியது தவறு தான். வா நம் படையை அந்த வனத்தின் வழியாக செலுத்தி அங்கே நிறுத்தி போரிடலாம். பின் கோட்டையை தகர்ப்போம்”, என்றான் செங்கல்வராயன்.
“அப்படியே ஆகட்டும் மகாராஜா. வீரர்களே எதிரிகளை வீழ்த்துவோம். முன்னேறி தங்கள் புரவியை செலுத்துங்கள்”, என்று ஆணையிட்டான் வல்லவரையன்.
ஆனால் அப்போது கேட்ட தட தட என்ற சத்தத்தில் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள்.
செங்கல்வராயன் கண் சிமிட்டும் நேரத்துக்குள் அனைத்து வீரர்களையும் அவர்களுக்கு எதிராக நிறுத்தி விட்டார்கள் நரேந்திரவர்மனும், வாசுதேவச்சக்கரவர்த்தியும், சுதமனும்.
இவர்களுக்கு சரி சமமாக சிறிது தொலைவில் வனத்தின் உள்ளே இருந்து வந்த அனைத்து வீரர்களும் வரிசையாக நின்று விட்டார்கள். போருக்கு அவர்களும் ஆயத்தம் என்னும் விதமாய் ஒரு கையில் ஈட்டியும், மறு கையில் கேடையமுமாக போர் கவசம் அணிந்து வாசுதேவச்சக்கரவர்த்தி படை நின்றது.
இந்த அணிவகுப்பை இவ்வளவு விரைவாக எதிர்பார்க்காத செங்கல்வராயன் அதிர்ந்து போனான். வல்லவரையன் முகத்திலும் திகைப்பு தெரிந்தது. வீரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
“வல்லவரையா, என்ன இது? நாம் முன்னேறி சென்று கோட்டைக்கு வெளியே போர் புரியலாம் என்று நினைத்தால் அவர்கள் படையை இங்கே கொண்டு வந்து விட்டார்களே. இது எப்படி சாத்தியமானது?”
“எனக்கும் அந்த ஐயம் தான் மகாராஜா. நாம் போர் புரிய போவது அவன் ஒற்றர் மூலம் அறிந்திருப்பான் தான். ஆனால் இத்தனை விரைவாக படை நிறுத்தியது, அதுவும் கோட்டைக்கு வெகு தொலைவில் நிறுத்தியது என்னக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது?”
“கலங்க வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல் வல்லவரையா? அவன் படை சிறிது தான். சற்று நேரத்திலே இந்த வீரர்களை கொன்று குவித்து கோட்டையை முற்றுகை இட்டு விடலாம். அந்த கிழவன் வேகமாக தான் செயல் புரிகிறான். அவன் இந்த போரில் மரிக்க தான் வேண்டும்”, என்று உக்கிரத்துடன் கூறினான் செங்கல்வராயன்.
“ஆம் மகாராஜா. நாம் நினைத்ததை விட எதிரி புத்தி கூர்மை உடையவன் தான்”
“புத்தி கூர்மை உடையவனாக இல்லாவிட்டால் இத்தனை தேசங்களை வென்றிருக்க மாட்டான். ஆனால் இந்த செங்கல்வராயனின் தந்திரத்துக்கு முன்னர் அனைத்தும் வீணே வல்லவரையா”
“ஆம் ஆம். தங்களின் அருமை நான் அறியாததா? வெற்றி நமக்கே மகாராஜா”
“ஆம். இன்று காலை முரசறைந்து விட்டோம். இன்று மாலை போர் நிறுத்த முரசறைவதுக்குள்ளாக அவனை வென்று விட வேண்டும். வீரர்களை உக்கிரமாக செயல் பட சொல் வல்லவரையா”
“அப்படியே ஆகட்டும் மகாராஜா”, என்று செங்கல்வராயனிடம் கூறிய வல்லவரையன் வீரர்களை நோக்கி “எதிரிகளை பார பட்சம் இன்றி கொன்று புதையுங்கள். அவர்களின் தேசம் இனி நம் தேசத்துடன் இணைய வேண்டும். அதற்காக தங்கள் இன்னுயிரையும் கொடுக்க ஆயத்தமாக இருங்கள் வீரர்களே. வெற்றி நமதே. யுத்தம் தொடங்க ஆயத்தமாயிருங்கள்”, என்று உத்தரவிட்டான்.
ஆனால் வாசுதேவச்சக்கரவர்த்தியோ “வீரர்களே நாம் தர்ம படி தான் யுத்தம் புரிய வேண்டும். எதிரிகளை அழிப்பதை விட உங்களை தற்காத்து கொல்வதே சிறந்த செயல் ஆகும். ஏன் என்றால் தங்களை நம்பி தங்களுடைய குடும்பம் காத்து கொண்டிருக்கிறது. அதற்காக எதிரிகளுக்கு நம் தேசத்தையும் விட்டு கொடுக்க கூடாது. அப்படி விட்டு கொடுத்தால் நம் கதி என்னவாகும் என்று தாங்கள் அறிந்ததே. எதிரிகள் நம் நாட்டை சூறையாடி நம்மை அடிமைகளாக்கி நம் இனத்தையே குலைத்து விடுவார்கள். அதன் பின் நம் மனைவி மக்களின் நிலையை எண்ணி பார்த்து வீரத்துடன் போரிடுங்கள். எதிரிகள் நம்மை விட பலசாலியா என்று தெரியாது. ஆனால் தந்திர காரர்கள். எச்சரிக்கையாய் இருங்கள். வெற்றி நமதே. யுத்தம் தொடங்கட்டும். முரசரையுங்கள்”, என்று உத்தரவிட்டார்.
“உமது புத்தி கூர்மையை மெச்சினோம் வாசுதேவச்சக்கரவர்த்தி”, என்று ரதத்தின் மீது அமர்ந்து கூக்குரலிட்டான் செங்கல்வராயன்.
“உமது பாராட்டு எனக்கு என்றுமே தேவை இல்லை செங்கல்வராயா. தேவை இல்லாமல் யுத்தத்தை உண்டாக்கி இருபக்கமும் பல்லாயிர கணக்கான வீரர்களை பலி கொடுத்து என்ன சாதிக்க போகிறாய். தேவை தானா இந்த யுத்தம்?”, என்று பதிலுக்கு குரல் கொடுத்தார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“ஹா ஹா இந்த யுத்தத்தின் காரணமே தாங்கள் தான் வாசுதேவரே”
“என்ன? நானா? நான் என்ன செய்தேன்?”
“உம் மகளை எனக்கு மணம் முடித்து கொடுக்காதது தான் காரணம். உம் மகள் வான்மதியை மணக்க தானே கேட்டேன். அதை செய்யாமல் என்னை அவமதித்து விட்டீர்கள். அதனால் தான் இந்த யுத்தம். இந்த யுத்தத்தில் வெற்றி கண்டு அந்த வான்மதியை தர தரவென்று என் நாட்டிற்கு இழுத்து செல்வேன்”, என்று செங்கல்வராயன் உரைத்ததும் வெறி கொண்டவன் போல புரவியின் கடிவாளத்தை இறுக்கினான் நரேந்திரவர்மன். அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது. கை முஷ்டிகள் இருகின.
“என்ன திமிர் இருந்தால் என் வான்மதியை இழுத்து செல்வேன் என்று கூறுவான். இவன் தலை என்னால் மட்டுமே கொய்ய பட வேண்டும்”, என்று மனதுக்குள் சூளுரைத்து கொண்டான் நரேந்திரவர்மன்.
“இது நியாயமே இல்லை செங்கல்வராயா. மண்ணாசையும் பெண்ணாசையும் அரசனுக்கும் வீரனுக்கும் அழகல்ல. உன்னை அவமதிக்க நாங்கள் ஒருபோதும் நினைக்க வில்லை. என் மகள் வான்மதி எங்கள் தேசத்தின் இளவரசி. அனைவருக்கும் செல்ல குழந்தை. அவள் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுப்பது தந்தையாக என் கடமை. அவளுக்கு விருப்பம் இல்லாததை செய்ய என்னால் இயலாது. அந்த காரணத்துக்காக நீ இப்படி படை திரட்டி இருப்பது கேவலமாக இருக்கிறது”, என்றார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“கேவலமா? எது கேவலம்? நான் படை திரட்டி இருப்பதா? உம் மகளின் அழகு இந்த போரை விட உயர்ந்தது தான் வாசுதேவரே. அவளுக்காக போரிடுவது, அந்த வானத்தின் தேவதைக்காக போரிடுவதை போல தான். அது எப்படி கேவலமாகும்? சரி வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்கள். இப்போதே வான்மதியை என்னுடைய இளையராணியாக்க வாக்கு கொடுங்கள். யுத்தத்தை நிறுத்தி விடுவோம். அதன் பின் அந்த கட்டழகியை, மாய மோகினியை நான் என்னுடன் அழைத்து சென்று விடுவேன்? எப்படி இருக்கிறது என் யோசனை?”, என்று ஏளனமாக சிரித்தான் செங்கல்வராயன்.
“செங்கல்வராயா”, என்று கர்ச்சித்த மகாராஜா “என் மகள் அந்த வானத்தின் இளவரசி தான். அவள் அந்த வானத்தில் இருக்கும் இறைவனுக்கு சூட்டும் மாலையை போன்றவள். அந்த மாலை அவள் உயர்ந்தவனாக என்னும் ராமனை போன்ற ஒருவனின் கழுத்தில் தான் சூட்ட படும். உன்னை போன்ற அரக்கனின் கையில் கூட அவள் பட மாட்டாள். என் மகளுக்காக என் இன்னுயிரையும் கொடுப்பேனே ஒழிய நீ அவளை ஒரு போதும் அடைய இயலாது”, என்று சூளுரைத்தார்.
“அதையும் காண்போம் வாசுதேவரே. அந்த மயக்கும் மோகினியின் கரம் பிடிக்க உமது உயிர் செல்ல வேண்டும் என்று விதி இருந்தால் அதை எவரால் மாற்ற இயலும். இன்றே உம்மை கொன்று அவளை சிறை பிடிப்பேன். வீரர்களே முன்னேறுங்கள்”, என்று உத்தரவிட்டு கொண்டே வாசு தேவரை நெருங்கினான்.
அவரும் ஆவேசமாக அவனை எதிர்த்து போரிட ஆரம்பித்தார். இரண்டு படை வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள்.
வேல் கேடயத்தில் பட்டு நங் நங்கென்று சத்தம் கேட்டது. ஆ ஐயோ என்று முனங்கி கொண்டே இருபக்கமும் வீரர்கள் கீழே விழுந்தார்கள். அவர்கள் மீதேறி மற்றவர்கள் அடுத்த வீரர்களை கொன்றார்கள். ஒருவர் குருதி மற்றவர்கள் முகத்தில் தெரிந்தது. அதை துடைக்க கூட அவகாசம் இல்லாமல் யுத்தம் நீண்டது.
ஒரு பக்கம் நரேந்திரவர்மன் எதிரிகளை வீழ்த்தி கொண்டிருந்தான். ஆனால் முயன்ற அளவு அவனுடைய வாள் எதிரிகளின் தலையை கொய்து விடாமல், எதிரிகளின் இதயத்தில் நுழைந்து விடாமல் பார்த்து கொண்டான். எதிரிகளின் கை, கால்களையே சேத படுத்தினான் நரேந்திரவர்மன். முன்பே இதை சொல்லி இருந்ததால் சுதமனும் இதையே தான் செய்து கொண்டிருந்தான்.
நடு மத்தியில் இரண்டு ரதத்தில் இருந்து வாசுதேவச்சக்கரவர்த்தியும், செங்கல்வராயனும் போரிட்டார்கள்.
வாசுதேவரின் இதயத்தை குத்த வந்த செங்கல்வராயனின் வில்லையும் வாளையும் எதிர்த்து கொண்டிருந்தார் வாசுதேவச்சக்கரவர்த்தி.