“ஒரு யோசனை உள்ளது மகாராஜா”, என்றார் அமைச்சர்.

“என்ன அமைச்சரே?”

“செங்கல்வராயன் ஏற்கனவே நம் இளவரசியை பெண் கேட்டான். இப்போது அதை பற்றி நீங்கள் அவனிடம் பேசினால், போரை தவிர்க்கலாம். எனக்கு தெரிந்து இது ஒன்று தான் வழி”

மகாராஜா கண்ணில் ஒளி வந்தது. அவர் யாசித்த கண்களுடன் வான்மதியை பார்த்தார். வான்மதியோ அமைச்சரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரண்மனையில் இருந்த அனைவரின் கண்களும் அவளை தான் நோக்கின.

அதைக் கண்டு தர்மசங்கடத்துடன் நிலம் பார்த்து குனிந்து கொண்டாள். மகாராஜாவுக்கு ஒரு பெருமூச்சு வந்தது.

வான்மதிக்கோ அங்கு இருந்து ஓடி விட வேண்டும் போல கால்கள் பரபரத்தது.

அனைவரும் நம் தேசத்தை அழிவில் இருந்து காப்பாற்று என்னும் விதமாய் அவளை  பார்ப்பதையும், தன் அன்னை கண்களால் தன்னை எரிப்பது போல பார்ப்பதையும், இந்த தேசத்தின் மகாராஜா தன்னை கண்டிக்க முடியாமல் திணறுவதையும் பார்த்தவளுக்கு மூச்சடைத்து.

அவள் கை கால் விரல்கள் எல்லாம் நடுங்கின. தமக்கையின் உணர்வுகளை படித்தவன் அவள் கையை இறுக பற்றி கொண்டான்.

அந்த தொடுகையில் கொஞ்சம் தைரியமாக உணர்ந்தாள் வான்மதிதேவி.

முள் மீது இருப்பது போல தவிப்புடன் அமர்ந்திருந்தாள் வான்மதி தேவி.

அனைவரும் இன்னமும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அமைச்சர் மேலும் பேசினார். “இது ஒன்று தான் இப்போதைக்கு வழி மகாராஜா. அப்படி இல்லை என்றால் நாம் போருக்கு ஆயத்தமாக வேண்டியது தான். போர் நடக்கும். நம் படை வெல்லும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இப்போது செங்கல்வராயன் படை பல புதிய உத்திகளை உருவாக்கி இருக்கிறார்களாம். அதனால் நம் படை வெற்றி பெறாமலும் போகலாம். செங்கல்வராயன் படை அப்படி பட்டது மகாராஜா. இப்படி சொல்வதற்கு தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நம் இளவரசி மனது வைத்தால் இந்த மலை போல வந்த இன்னல் கூட மடு போல மறைந்து விடும். தாங்கள் சொன்னால் நம் இளவரசி கேட்பார்கள் மகாராஜா”, என்று முடித்தார்.

தன் சகோதரனின் கைகளை இறுக்கி பிடித்தாள் வான்மதி. அவனுக்கு புரிந்தது, தன் சகோதரியின் தவிப்பு.

அவள் மனநிலையை உணர்ந்தவன் தன்னுடைய ஆசனத்தில் இருந்து எழுந்து “தாங்கள் அனைவரும் ஏன் என் தமக்கையை இவ்வாறு துன்புறுத்துகிறீர்கள்? மகாராஜா அனைவரும் இவ்வாறு செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை. இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும். என் சகோதரியின் மனது. அவ்வாறு இருக்கும் போது, அவளை தினமும் இப்படி கண்ணீர் சிந்த விடுகீறீர்களே. இது தங்களுக்கு தவறாக தோன்றவில்லையா மகாராஜா”, என்று கம்பீரமாக தன் வாதத்தை முன்னிறுத்தினான் மேகவேந்தன்.

இந்த சிறு வயதில் அவனுடைய ஆளுமையான உரையை அனைவருமே ரசித்தார்கள். அவனுக்கு தமக்கையின் மீது இருந்த அதிக அன்பும் புரிந்தது. சில மக்கள் “இளவரசர் வாழ்க”, என்று கோஷமும் இட்டார்கள்.

அடுத்த அரசனின் தைரியத்தை, மஹாராஜாவே வியக்க தான் செய்தார். இந்த சிறு வயதில் அவனுடைய ஆளுமையான குரல் அனைவரையும் கட்டித் தான் போட்டது. தங்களின் புதல்வன்  இந்த சிம்மாசனத்திற்கு  பொருத்தமானவன் என்று அவர் மனது ஆனந்த கூக்குரல் இட்டது.

ஆனால் இந்த சிம்மாசனத்துக்கே, பாதிப்பு வந்து விட்டால் அவரால் என்ன செய்ய இயலும். அதை இந்த சிறுவன் அறிவானா என்று எண்ணி அவர் மனது வருந்தியது.  சிம்மாசனம் கைவிட்டு சென்றாள் கூட கவலை இல்லை. ஆனால் மக்களின் நிலை. அந்நிய அரசனுக்கு அடிமை பட்டால் அவர்களின் வாழ்வு சீர்குலைந்து விடுமே.

“மேகவேந்தா சபையில் பெரியவர்கள் இருக்கும் போது சிறுவன் அவ்வாறு பேசாலாகாது. அது மரியாதை இல்லை புதல்வனே. நான் உனக்கு அதை கற்று தரவில்லையா?”, என்று கண்டிப்புடன் கடிந்து கொண்டாள் அருந்ததி தேவி.

“மன்னித்து விடுங்கள்  மகாராணி. என் தமக்கையின் மனநிலையை எடுத்துரைக்கவே அவ்வாறு கூறினேன். சபையை அவமதிக்க அல்ல. அவ்வாறு ஏதாவது இந்த சிறுவன் செய்திருந்தால் மகாராஜா என்னை மன்னித்தருள வேண்டும். சபையோரும் மன்னியுங்கள்”, என்று கூறி விட்டு பாவமாக வான்மதியை பார்த்தான் மேகவேந்தன்.

சகோதரனின் அன்பில் வான்மதியின் கண்களும் பணித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில்  முடிவு எடுக்க முடியாமல் திணறினாள். “என்னால்… என்னால் எவ்வாறு இவர்கள் கூறுவதை செய்ய இயலும்?  ஏன் பெண்ணாக இப்பூமிதனில் பிறந்தேன்? இந்த சூழ்நிலையை கடக்க எனக்கு பலன் கொடு இறைவா.  உன்னையன்றி ஒருவராலும் எனக்கு உதவ இயலாது. உன்னையே சரண் அடைகிறேன்”, என்று மனதில் ராமனுடன் உரையாடினாள்.

“வான்மதி  நாங்கள் அனைவரும் விவாதிப்பது  உன்னை பற்றியது தான் என்று தெரிகிறதல்லவா? இன்னும் எனக்கென்று அமர்ந்திருப்பது சரியாது. அவையோர் முன்பு வா”, என்று கட்டளையிட்டாள் அருந்தததிதேவி.

தயக்கத்துடன் எழுந்து அனைவர் முன்னேயும் வந்து நின்றாள் வான்மதி. தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டாள். என்ன பேச வேண்டும் என்று அவள் மனது சங்கல்பம் எடுத்து கொண்டது. ஒரு முடிவுடன் அவையோர் அனைவரையும் நோக்கினாள்.

“மகளே வான்மதி”, என்று அழைத்தார் வாசுதேவ சக்கரவர்த்தி.

“மகாராஜா”, என்று தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் வான்மதி.

“நம் தேசத்தின் நிலையை நீ அறிவாய் தானே மகளே?”

“ஆம் மகாராஜா, ஒற்றர் தலைவர் உரைத்ததை தாமும் செவி மடுத்தோம்”

“அதனால் வரும் அபத்தங்களை உணருவாயா மகளே?”

…..

“செங்கல்வாராயன் நாட்டை முற்றுகையிட்டால் நாட்டில் பெருத்த அவலங்கள் அனைத்தும் நேரிட கூடும். பல்லாயிர கணக்கான வீரர்கள் அனைவரும் மடிந்து தரையில் விழுவார்கள். அவ்வீரர்களின் குடும்பம் கதறி அழும். ரத்த ஆறு ஓடும். எல்லார் வீட்டிலும் மரணம் நிகழ்ந்து துடித்து கதறுவார்கள். நம் நாட்டின் பெண்களை சிறை எடுத்து சென்று மானபங்க படுத்துவார்கள் மகளே. என் மகள் இந்த

நாட்டின் இளவரசி அல்லவா? நம் நாட்டு மக்களின் கண்ணீர் குரல் கேட்டு உன்னால் தாங்க இயலுமா? நீயும் தான் அதை விரும்புவாயா?”

….

“என் மகள், நம் தேசத்தின் கண்ணீருக்கு காரணமாக ஒருபோதும் இருக்க மாட்டாள் என்பது என் எண்ணம். சுற்றி உன் கருவிழியை சுழற்றி பாரம்மா. மக்களின் கண்களில் இருக்கும் இறைஞ்சல் உனக்கு தெரிய வில்லையா? நீ இன்னும் சிறு பெண் இல்லை மகளே. என் மகள் அதிக காருண்யம் கொண்டவள். வறியவர்க்கு வாரி வழங்கும்  வள்ளல் தன்மை கொண்டவள். சிறு பூச்சிகளுக்கு கூட தீங்கு எண்ணாத தயை குணம் கொண்டவள். உன்னை வைத்து நான்கு பேர் வாழ்ந்ததாக தான் இருக்க வேண்டும். வீழ்ந்ததாக இருக்க கூடாது மகளே”

“ஆனாலும் மகாராஜா.. என்னால்.. என்னால்.. இது இயலாது”

“எதுவாக இருந்தாலும் சுற்றி, உன் முகத்தையே நோக்கி இருக்கும் மக்களை பார்த்து விட்டு கூறு மகளே”

அவள் கண்கள் அவருடைய கட்டளைக்கு பணிந்து அந்த அவையையே சுற்றி வந்தது. அனைவரும் இறைஞ்சுதலுடன் அவளையே பார்த்தார்கள்.

“இப்போது நீ உன் முடிவை கூறு மகளே. உன்னை இதை செய்து முடிக்க வேண்டும் என்று இந்த தந்தையால்  கட்டளை இட முடியாது. ஆனால் ஒரு நாட்டின் மகாராஜாவாக. எம் பிரஜைகளின் நல்வாழ்வுக்காக உன்னிடம் கெஞ்ச முடியும் மகளே. நான் வேண்டும் என்றால் உன் சிரம் தாழ்த்தி பணியவா மகளே?””

“மகாராஜா, தாங்கள் என்னிடம் கெஞ்சுவதா? என்னிடம் சிரம் தாழ்த்துவதா? அந்த பழி பாவத்துக்கு  என்னை ஆளாக்காதீர்கள். நீங்கள் இந்த சாம்ராஜ்யத்தின் மன்னர். ஒரு போதும் தங்கள் சிரம் தாழ கூடாது மகாராஜா”, என்று சொன்ன வான்மதியின்  கண்கள் கலங்கி சிவந்தது.

“அவ்வாறெனில் இந்த திருமணத்துக்கு உனக்கு சம்மதமா வான்மதி? நான் செங்கல்வராயனுக்கு தூது அனுப்பட்டுமா மகளே?”

தந்தையின் அன்பில் நெகிழ்ந்தவளுக்கு “என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள்”, என்று உதடு வரை வார்த்தை வந்து விட்டது.

அதை மனதினுள் புதைத்தவள் அடுத்த நிமிடம் கண்களை துடைத்து கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி “என்னை மன்னித்து விடுங்கள் மகாராஜா. உங்களை எதிர்த்து பேசும் இந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விட்ட இறைவனையே நான் சபிக்கிறேன். இந்த தருணத்தை அறவே வெறுக்கிறேன். ஆனாலும் என்னால் தங்கள்  விருப்பத்தை நிறைவேற்ற முடியாது அரசே. தங்கள்  இந்த சாம்ராஜ்யத்தின் மகாராஜாவாக இருந்தாலும் சரி, என் தந்தையாக இருந்தாலும் சரி. நான் இப்போது கூற போகும் முடிவே இறுதி முடிவு”, என்று கம்பீரமாக உரைத்தாள்.

“வான்மதி என்ன இது? பெரியவர்கள் என்று உணராமல் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளாதே. ஒரு பெண்ணுக்கு அது சரி அல்ல. நான் உன்னை அதிகம் செல்லம் கொடுத்து வளர்ந்து விட்டேன் போல?”, என்று கண்டிப்புடன் சொன்னாள் அருந்ததி தேவி.

“என்னை மன்னித்து விடுங்கள் மகாராணி. தங்கள் வளர்ப்பில் எவருமே குறை காண முடியாது. அனைத்து அன்னைகளின் மறுவடிவம் தாங்கள். நானும் என் சகோதரனும் உமது உதிரத்தில் உதித்ததில் பாக்கியம் பெற்றோம். ஆனால் இது எனது வாழ்க்கையை பற்றியது மகாராணி. நான் என்னுடைய எண்ணத்தை கூறி தான் ஆக வேண்டும்”

அந்த அவையே அமைதியில் உறைந்து இருந்தது.

“நீ மெளனமாக இரு தேவி. நம் மகளின் மனதில் உள்ளதை நமக்கும், இந்த அவையோருக்கும் அவள் உரைக்கட்டும்”, என்றார் மகாராஜா.

“பெண்கள் சபையில் பேச கூடாது என்று சொல்லாமல் என் மனதில் இருப்பதை உரைக்க எனக்கு அனுமதி அளித்த தங்களுக்கு எனது பணிவான வந்தனங்கள் மகாராஜா. இங்கு கூடியிருக்கும் அவையோரும், சுற்றி நம் நாட்டின் நிலையை கண்டு அச்சம் கொண்டிருக்கும் மக்களும் இந்த சுயநல காரியை மன்னித்தருள வேண்டும். ஆம் நான் இந்த நாட்டின் இளவரசி தான். எம் மக்களை காக்க எனக்கு கடமை இருக்கிறது தான். ஆனால் அதை வாளேந்தி போருக்கு சென்று  என் இன்னுயிரை ஈர்ப்பேனே ஒளிந்து பல பெண்களை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த ராஜாவுக்கும் மனைவியாக போய்  நம் தேசத்தை காத்தருள மாட்டேன்.  இது என் மனதில் இருக்கும் ராம பிரானின் மீது ஆணை”

….