சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.. ஆனால், அவளாள் ஆசையாக அழைக்கவே முடிந்ததில்லை இதுவரை.
ஒவ்வொருநாளும் காலையில் மித்ரன் பள்ளிக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு, கெளரிதான் அழைத்து பேசுவான்.. சஹாவிடம் “சாப்பிட்டியா.. “ என முதல் கேள்வி அவனாகத்தான் கேட்ப்பான். சஹா, தயங்கிக் கொண்டே பேசுவாள். பலநேரம் ‘அம்மா கூப்பிடுறாங்க செகண்ட் காலில்.. இல்லை, அத்தையும் நானும் வெளியே போறோம்..’ என ஏதேனும் காரணம் சொல்லி.. வைத்தும் விடுவாள், என்ன பேசுவது என தெரியாமல்.
மாலையில் மித்ரன் அழைப்பான் “சித்தப்பா..” என சொல்லி. ம்.. தனபால் சொல்லி கொடுத்தார்.. “இப்டி சங்கர் அப்படின்னு மரியாதை இல்லாமல் சொல்ல கூடாது. சஹாவை பேர் சொல்லி கூப்பிடு, இல்ல மாம்’ன்னு கூப்பிடு. ஆனால், கெளரியை சித்தப்பான்னுதான் கூப்பிடனும்..” என சொல்லி கொடுத்தார் பேரனுக்கு.
மித்ரன் “ம்.. ஏன் சித்தப்பான்ன்னு கூப்பிடனும்..” என்றான்.
தனபால் “சஹா, உன்னோட சித்தி.. அவளை கல்யாணம் செய்துக் கொண்டதால்.. அவர் சித்தப்பா” என்றார்.
குழந்தை “ம்.. இப்போதான் சஹா மாம் ஆகிட்டாளே..” என்றான்.
தனபால் “உன் அம்மா யாரு” என்றார்..
மித்ரன் “அக்ஷயா தினகரன்” என்றான்.
தனபால் “அதுதான், சஹா சித்தி.. டா” என்றார்.. மீண்டும் ஒருமுறை உறவு முறையை விளக்கி.
மித்ரன் இப்போது அடுத்த கேள்வியாக “கல்யாணத்துக்கு அப்புறம்தான் சித்தப்பாவா.. அப்போ, சஹா என்னான்னு சொல்லுவா, சங்கரை.. இல்ல சித்தப்பாவை” என்றான் யோசித்து யோசித்து மழலையில்.
தனபால் ஓய்ந்து போனார், பேரனின் கேள்வியில்.
பிருந்தா சிரித்தார் தன் கணவர் படும்பாட்டை பார்த்து, பின் “நான் தாத்தாவை கூப்பிடுவது போல கூப்பிடுவா.. ம்..” என்றார் பின்னும் அவன் எதோ கேட்க்க வர.. அவனின் பாட்டி “இப்படி நிறைய பேசணும்ன்னா.. நிறைய சாப்பிடனும்.. வா, சாப்பிட்டு தூங்கு” என சொல்லி பேரனிடமிருந்து தன் கணவருக்கு விடுதலை வாங்கி தந்தார் பாட்டி.
மித்ரனும் சஹாவும் இங்கேதான் இரவு தங்கினர்.. தங்கள் வீட்டில். மித்ரனை அனுப்பிவிட்டு, சஹா, தன் வீடு செல்லுவாள். மாலையிலும் மித்ரனோடு நேரே அங்கேதான் செல்லுவார்கள்.. பின் இரவு உறங்க இங்கே தாய் வீடு வந்திடுவார் இருவரும்.
ஆகிற்று, மித்ரனுக்கு ஆனுவல் எக்ஸாம்.. இரண்டு வாரம் சென்று தொடங்குகிறது. எனவே, அவனுக்கு லீவ் எப்போது என தேதி சொல்லிவிட்டனர்.
அதனால் பெரியவர்கள், சாஹாவை எப்போது பெங்களூரில் குடியேற்றுவது என நாள் பார்த்தனர். அடுத்த வாரத்தில் ஒருநாள் நன்றாக இருப்பதாக வருகிறது அதன்பின் பங்குனி.. மாதம் பிறந்துவிடுவதால் நாள் இல்லை என்றனர்.
எனவே, சஹாவையும் மித்ரனையும் நல்ல நாளில் அங்கே கூட்டி சென்றுவிடுவோம்.. பின் வந்து எக்ஸாம் எழுதட்டும் என பெரியவர்கள் முடிவு செய்தனர்.
கெளரிசங்கர், பணிக்கு சென்ற முதல் வாரம்.. ஊருக்கு வரவில்லை வேலை காரணமாக. அடுத்த வாரம்தான் வந்தான். அதுவும் அவனின் சித்தப்பா வீட்டில் விருந்து என அழைத்தனர்.. ஒருநாள் பயணமாக வந்து சேர்ந்தான் இரவில்.
சஹாவும் மித்ரனும் தன் அறையில் நித்திரையில் இருந்தனர். கௌரி, விளக்கை போட்டான் பழக்க தோஷத்தில். சஹா, எழுந்து அமர்ந்தாள்.
கெளரிக்கு, என்னமோ இதமாக இருந்தது.. முகம் சற்று இளகியது “ஹேய்.. குழந்தையை போய் கண் முழிக்க வைச்சிகிட்டு..” என்றான்.
சஹா “சாப்பிட்டீங்களா” என்றாள்.
கௌரி “ம்.. பிரெஷ்ஷாகி வந்துடுறேன்” என்றவன் ரெஸ்ட் ரூமில் புகுந்துக் கொண்டான். என்னமோ சட்டென உரையாட வரவில்லை அவனுக்கு.. இந்த ஒருவாரம் சரியாக பேசாதது.. அவளாக அழைக்காதது.. எல்லாம் அவன் மனதிலிருக்க.. அந்த உரையாடலை தொடர முடியவில்லை அவனால்.
சஹா, போன் பார்த்துக் கொண்டு அமர்ந்தாள்.
கெளரியின் போன் வைப்ரேட் ஆகிக் கொண்டே இருந்தது.
கௌரி அரைமணி நேரம் சென்று வெளியே வந்தான்.. குளித்து, டவலோடு வர.. சஹா அப்படியே அமர்ந்திருந்தாள். கௌரி, எதிர்பார்க்கவில்லை, அவள் அமர்ந்திருப்பாள் என அதிர்ந்து பார்த்தவன்.. போன் பார்த்தான்.. பார்த்தவனுக்கு மீண்டும் முகம் இறுகி போனது. உடை மாற்ற தொடங்கினான்.
சஹா, அவன் உடைமாற்றி வரவும் “நான் உங்களுக்கு பால் எடுத்துட்டு வரேன்” என்றாள்.
கௌரி “இல்ல, இப்போ எதுக்கு.. நான் சாப்பிட்டுதான் வந்தேன்.. எனக்கு பசியில்லை” என்றான்.
சஹா “அத்தை கொடுக்க சொல்லி எடுத்து வைச்சிருக்காங்க” என்றாள்.
கௌரி சலிப்பாக “அதனால் நான் குடிக்கனுமா” என்றான் எரிச்சலாக. பின் “அதான் வேண்டாம்ன்னு சொல்றேன்னில்ல
சஹா அமைதியாகினாள்.
சஹா.. தன்னுடைய லாப் எடுத்து வெளியே வைத்தான். சார்ஜ் ப்ளக்கின் செய்தான். விளக்கை அணைத்துவிட்டு.. தன் லாப்டாப் உடன் வெளியே ஹாலுக்கு சென்றுவிட்டான்.
சஹாவிற்கு, என்ன செய்வது என தெரியவில்லை.. அமைதியாக மித்ரனை தன் பக்கம் திருப்பிக் கொண்டு.. கெளரிக்கு இடம் இருக்கிறதா என பார்த்துக் கொண்டு உறங்க முற்பட்டாள்.
அவ்வளவு சீக்கிரம் உறக்கம் அவளை தழுவவில்லை.. சற்று நேரம் கெளரியின் யோசனை அவளை ஆக்கிரமித்தது.. ‘எதுமே பேசவில்லை.. வேலையாக இருக்குமோ..’ என ஏதேதோ மனதை உறுத்தியது. ‘எதுவாக இருந்தாலும் நீ சரி செய்ய போறியா..’ என அவளின் மனமே கேள்வி கேட்க்க.. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
மறுநாள், காலையில் சஹா நேரமாக எழுந்துக் கொண்டாள். மித்ரனின் அருகில் கௌரி இல்லை என எழுந்ததும்.. கண்டுக் கொண்டாள். நேரே ஹாலுக்கு சென்று பார்த்தாள்.. கீழே தரையில், குஷனை தலைக்கு வைத்து லாப்டோப்போடு உறங்கிக் கொண்டிருந்தான், கௌரி.
சஹாவிற்கு சங்கடமாக இருந்தது. ஒன்றும் செல்ல முடியாமல்.. அறைக்கு வந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு கீழே சென்றாள்.
சுகுமாரியும் ரத்தினமும்.. காபி பேப்பரோடு.. வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் தோட்டத்தில்.. அமர்ந்துக் கொண்டிருந்தனர்.
சஹா, நேரே அங்கேதான் சென்றாள்.. “குட் மோர்னிங் அத்தை மாமா” என்றாள். தனக்கு ஒரு காபியை எடுத்துக் கொண்டு அவர்களோடு அமர்ந்தாள்.
சுகுமாரி மகன் லேட்டாக வந்தது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.. சஹா ம்.. என கேட்டுக் கொண்டாள் ஏதும் பேசாமல்.
அடுத்து காலை உணவுக்கு என்ன என பெண்கள் இருவரும் பேசினார். அடுத்து எப்போது ரத்தினத்தின் தம்பி வீட்டுக்கு செல்லுவது என பேசிக் கொண்டனர்.
சஹா “அத்த, அவரை கேட்க்கலாமே.. நைட்டும் வேலை பார்த்தாங்க போல.. எப்போ அவருக்கு முடியும்ன்னு கேட்டுக்கலாமே” என்றாள் சின்ன குரலில்.
ரத்தினம், மருமகளையும் மனைவியையும் பார்த்தார்.. “ம்..கேட்டுட்டு ம்மா” என்றார்.
மருமகள் தலையசைத்தாள்.
மித்ரன் “சித்தப்பா காபி வேணும் சொன்னாங்க” என்றபடி கீழே வந்தான்.
சஹா காபியும் பூஸ்ட்ம் கலந்தபடியே “மித்து, சுச்சு போனியா.. ப்ரஷ் பண்ணு” என சொல்லிக் கொண்டே இருந்தாள்.
மித்ரன், சஹாவின் அருகே வந்தான் “ம்மா.. நான் 1st ஸ்டான்ட் போக போறேன்.. இப்படி கேட்க்காத மாம்” என்றான்.. சுகுமாரி நிற்பதையும் ரத்தினம் தாத்தா ஹாலில் அமர்ந்திருப்பதையும் பார்த்து.. சின்ன குரலில்.
சுகுமாரி பெரிதாக சிரித்தார்.. சாகம்பரிக்கு முகம் பெருமையில் மின்னியது.. ‘கிட்ட வந்த எவ்வளோ அழகாக சொல்றான் என் தங்கம்’ என பெருமையில் முகம் விகாசிக்க.. “சரி, நீயும் இனி பிரெஷ் செய்துட்டுதான் கீழே வரனும்” என்றாள்.
மித்ரன் “நானும் சித்தப்பாவும் பிரெஷ் பண்ணிட்டோம்.. நீ ட்ரிங்க்ஸ் கொடு” என்றான் வேகமாக.. அருகில் இருந்த மிக்சியின் ஸ்விச்சை திருப்பிக் கொண்டே.
சுகுமாரி, மித்ரன் பேசியதை தன் கணவரிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் இப்போது.
சஹா, காபி பூஸ்ட் எடுத்துக் கொண்டு மேலே வந்தாள் மித்ரனோடு.
கௌரி, பதிலே சொல்லாமல் போனில் எதோ டைப் செய்துக் கொண்டிருந்தான். பின் இரண்டு நிமிடம் சென்றுதான் நிமிர்ந்தான் “இன்னிக்கு முடியுமா தெரியாது.. நான் இந்த வீக்.. க்ளைன்ட் பார்க்க போயிருக்க வேண்டியது. நெக்ஸ்ட் வீக் வரேன்னு ரிக்வஸ்ட் போட்டிருக்கேன். வேலை இருக்கு.. என்னை இப்படி அலைகழிக்காத. இதுவே ஒன்னும் செய்ய முடியாமல் வந்திருக்கேன்.. ம்.. நான் ஈவ்னிங் கிளம்பிடுவேன்.” என்றான் தன் தலையை கோதிக் கொண்டே.
சஹா அமைதியாகிவிட்டாள்.
கெளரியே “நீங்க எப்போ வரீங்க” என்றான்.
சஹா “இன்னும் இரேண்டுநாளில்.. நீங்க இருப்பீங்களா, இல்லை, நாங்களே வந்துட்டு கிளம்பிடனுமா” என்றாள் கொஞ்சம் கடுப்பான குரலில்.
கெளரிக்கு அவளின் பேச்சில் கொஞ்சம் எரிச்சல் வந்தாலும்.. தழைந்தான் “அதுக்குதானே.. ட்ரிப்’பை.. தள்ளி போட்டிருக்கேன். நானாக கேட்டதும்தான் சொல்ற, அங்க வருவதை பற்றி. நீயாக சொல்லவில்லை இதுவரை” என்றான்.. போனில் கவனம் போல காட்டிக் கொண்டு தழைந்த குரலில் சொல்லி காட்டினான்.
சஹா தலையை குனிந்துக் கொண்டாள். என்ன சொல்லுவது என தெரியவில்லை.