“எதுக்கு இவ்வளவு அவஸ்தை..?” கண்ணம்மாவிற்கு மகனின் வலி புரிந்தது. வீம்பு புடிச்சவன், நாம தான் ஏதாவது செய்யணும்..? மனதில் என்ன செய்ய என்ற யோசனை.
“ரொம்ப நேரம் ஆயிடுச்சு, வா உள்ள போலாம்..” மகனுடன் உள்ளே வந்தவர், அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தார்.
“எனக்கு காபி கொடுங்க..” என்றான் அவன்.
“தூங்க முடியாது, பாலே குடி..” கையில் கொடுக்க,
“எனக்கு காபி தான் வேணும்..” என்றான் வாங்காமல்.
“அப்போ நீயே போட்டு குடி, இந்நேரத்துக்கு அடுப்பை பத்த வைச்சிட்டிருக்க முடியாது.. நான் தூங்க போறேன்..”
“ம்ஹூம்.. எங்க போறீங்க, வாங்க காபி குடிக்கலாம்..” அவரையும் இழுத்து சென்று காபி போட்டு குடிக்க வைத்தவன், அமேசான் ப்ரைம்மில் படமும் பார்க்க வைத்து, மூன்றாம் ஜாமத்தில் தான் தூங்கவே விட்டான் அவரை.
“மனுஷனாடா நீ..?” திட்டி கொண்டே தூங்க செல்ல, உதய் சிரித்தபடியே சோபாவில் தூங்கி போனான். மறுநாள் இருவருமே மதியம் போல தான் எழுந்தனர்.
“அம்மா எழுந்துட்டாங்களா வள்ளிக்கா..?” இவன் தூங்குகிறான் என்று மிகவும் அமைதியாக வேலை பார்த்து கொண்டிருந்த வள்ளியிடம் கேட்டான்.
“இப்போ தான் காபி கேட்டாங்கன்னு கொடுத்துட்டு வந்தேன் தம்பி, குளிச்சிட்டு வருவாங்க..” என, இவனும் மேலே சென்று குளித்து வர, கண்ணம்மா மதிய சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
“தெரியாத மாதிரி கேட்காதடா, உன் ஆபிஸ்க்கும், கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிஸ்க்கும் தான் போயிருக்கார்.. நீ சீக்கிரம் சாப்பிட்டு போய் அவரை அனுப்பிவிடு..” பரிமாற, சாப்பிட்டு உடனே கிளம்பினான். முகம் தெளிந்திருந்தது.
“இவனுக்கு ஒரு கஷ்டம்ன்னா என்னை படுத்திடுறான்.. இன்னும் சின்ன பிள்ளைன்னு நினைப்பு..” மகனை செல்லமாக திட்டி கொண்டே சாப்பிட்டவர் மனம் முழுதும் என்ன செய்ய என்று தீவிர சிந்தனை தான்.
அதற்கேற்றாற் போல அந்த வார கடைசியில் ஜின்னா அவனின் பெற்றோருடன் இவர்களின் வீட்டிற்கே வந்தான். உதய்க்கு முன்னமே போன் செய்து கேட்டிருக்க, அவனும் வீட்டில் இருந்தான்.
“டீ.. ஸ்னாக்ஸ் எடுத்துக்கோங்க..” கண்ணம்மா உபசரிக்க, மூவரும் மறுப்பு சொல்லாமல் எடுத்து கொண்டனர்.
“உங்களுக்கு ஒரு பையனா..?” கண்ணம்மா எப்போதும் போல விசாரணையை ஆரம்பித்தார்.
“நல்லா இருக்கார்..” என்றார் தியாகு. அடுத்த சில நிமிடங்கள் பொதுவாக பேசி கொண்டிருந்துவிட்டு, ஒரு வெள்ளி தாம்பூலத்தில் ஜின்னாவின் கல்யாண பத்திரிக்கை வைத்து மூவருக்கும் கொடுத்தனர்.
“எல்லோருமே கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துரனும்..” என்ற அழைப்புடன் அவர்கள் விடைபெற, கண்ணம்மா ஜோதியை நிறுத்தி வைத்து அவருக்கு பூ, குங்குமம் அடங்கிய தாம்பூலம் கொடுத்தார்.
ஆண்கள் வெளியே வந்து நின்று பொதுவாக பேசி கொண்டிக்க, உதய் யாரை பற்றியும் கேட்காமல் அமைதியாகவே நின்றிருந்தான். இறுதியில் ஜின்னாவே, “இந்த வாரம் தான் போர்ட் மீட்டிங்க சார்..” என்றான். உதய்க்கு முன்னமே தெரியும், அவனின் ஆட்கள் தான் அங்கும் இருக்கின்றனரே, அதுவும் ராமிற்கு தெரிந்தே தான்.
“மேடம் எதோ செய்ய பார்க்கிறாங்க..” என்றான் அவனே திரும்பவும். உதய்க்கும் நேற்று தான் தெரியும். மனதில் குடைச்சல் எப்படி தனியா சமாளிப்பா என்று. அவர்கள் விடைபெற, இவன் ஆபிஸ் கிளம்பிவிட்டான்.
“என்னை ரொம்ப படுத்துறா..?” நேற்றில் இருந்து எந்த வேலையும் ஓடவில்லை. இரவு போல அவனே RK விற்கு அழைத்துவிட்டான்.
“சொல்லுங்க உதய்..” அவர் எடுத்து பேச,
“நீங்க போர்ட் மீட்டிங் போக வாய்ப்பிருக்கா..?” கேட்டான்.
“ஷா வேணாம் சொல்லிட்டா..” என்றார் அவர்.
“நீங்க அவங்க பேச்சை ரொம்ப எடுத்துகிறீங்க சார்..”
“அப்படி இல்லை உதய், அவளை இன்னும் இன்னும் ஸ்ட்ராங் ஆக்க வாய்ப்பு கொடுக்கிறேன், இந்த சாம்ராஜ்யத்தை ஷா தனியா ஆளணும்ன்னா இதெல்லாம் அவ சமாளிச்சு தானே ஆகணும், இன்பேக்ட் என் பொண்ணுக்கு அவளே தானே துணை..” ராம் சொல்லிவிட, சில நொடி மௌனம்.
“நீங்க சொல்றது சரிதான் சார், அவங்களை அவங்க இன்னும் ஸ்ட்ராங் ஆக்க இதெல்லாம் எதிர் கொள்ள தான் வேணும்..” வைத்துவிட்டவன், குணாவிற்கு அழைத்து பேச, இங்கு ராம் முகத்தில் விரக்தியான சிரிப்பு.
என்றும் போல இன்றும் உதய் நினைத்து கோவம், ஆதங்கம். “இப்போவும் என் பொண்ணை விட்டுட்டான்.. போகட்டும், என் பொண்ணை பார்த்துக்க எனக்கு தெரியும், நான் பண்ண ஒரே தப்பு உதய்கிட்ட பேசாம ஷா மனசுல ஆசையை வளர்த்தது தான்..” வேதனையுடன் நினைத்து கொண்டார்.
அவரால் மகள் மனதை மாற்றவும் முடியவில்லை, உதய்யிடம் சென்று என் மகளை திருமணம் செய்து கோள் என்று கேட்கவும் முடியவில்லை. மனதிலே புழுங்கி கொண்டிருந்தார்.
அவருக்கு இருக்கும் கோவத்தில் உதய் சட்டையை பிடித்தவிடுவார். ஆனால் மகளுக்கு விருப்பமானவன் என்பதை விட அவருக்கும் விருப்பமானவன் ஆயிற்றே. அவனிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு ஏன் அவனிடம் கோவப்பட கூட முடியவில்லை. என்றைக்கு இருந்தாலும் என் மருமகன் இவன்தான் என்ற உண்மையும் காரணமாக இருக்கலாம்.
அவர் நினைத்தால் ஏதாவது செய்து இருவரையும் சேர்த்து வைத்து விட முடியும் தான். ஆனால் அப்படி செய்ய முடியவில்லை. இருவரையும் மதித்து, இவருக்கான விருப்பங்களை முன் நிறுத்தி விலகி நிற்கிறார். இப்போதைக்கு அவருக்கு இருக்கும் ஆசை, வேண்டுதல் எல்லாம் ஏதாவது நடந்து இருவரும் சேர்ந்து விட வேண்டும் என்பதே. பார்ப்போம்.
……………………………….
“சார்.. இன்னிக்கு நைட் பினான்ஸ் மினிஸ்டர் சன் வெட்டிங் பார்ட்டி இருக்கு..” உதய்யின் PA ஞாபகபடுத்த, உதய் முகத்தில் சலிப்பு தான்.
அங்கு செல்ல விருப்பமில்லை. ஆனால் சென்று தான் ஆக வேண்டும். இல்லை தேவையில்லாத தொல்லை, முக்கிய நேரத்தில் தடைக்கற்களாய் வந்து நிற்பார்கள்.
“ம்ம்..” என்று தலை ஆட்டி கொண்டவனுக்கு ஷாவும் வருவாள் என்று தெரியும். அவளுக்கும் இதே தானே. முன் எல்லாம் ராமே பார்த்து கொள்வார். இப்போது அவர் எங்கும் செல்வதில்லை. எல்லாம் ஷாரா தான். அவள் அங்கு எந்த நேரத்திற்கு வருகிறாள் என்று கேட்டு கொண்டான்.
இது இப்போது மட்டுமில்லை. அவள் பிஸ்னஸிற்குள் நுழைந்ததில் இருந்து இது போல முக்கிய பார்ட்டிகளில் அவள் வரும் நேரங்களில் எல்லாம் அவனும் அங்கு இருப்பது போல பார்த்து கொள்வான். ஆனால் பக்கத்தில் செல்வதில்லை.
இன்றும் அதே போல இருந்துவிட்டு வர வேண்டியது தான். முகிலுக்கு போன் செய்து அவனையும் பிக் அப் செய்து அந்த நேரத்திற்கு கிளம்பிவிட்டான். சென்னையின் மிக பெரிய ஹோட்டலில் பார்ட்டி அரேஞ் செய்ய பட்டிருக்க, இருவரும் எதிர்பட்டவர்களிடம் பேசி கொண்டே ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர்.
“டேய்.. அந்த மினிஸ்டர் பார்க்கிறார், கிப்ட் கொடுத்திட்டு வந்துடலாம், வா..” முகில் கூப்பிட,
“போலாம் இருடா, போனா அந்த ஆள் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார், வளவளன்னு தற்பெருமை பேசி கொள்வார்..” உதய் வாசலை பார்த்து அமர்ந்திருந்தான்.
மணமக்கள் ஓரிடத்தில் பொம்மையாக நிற்க வைக்க பட்டிருக்க, மினிஸ்டர் ரவுசு தான் பெருசாக இருந்தது. அவரை சுற்றிலும் வெள்ளை வேட்டி ஒரு படை போல இருக்க, அவர்களுடனே அங்கும் இங்கும் சுத்தி கொண்டிருந்தார்.
“உதய்.. வா போய்ட்டு வந்துடலாம்.. அந்தாள் பார்த்துட்டே இருக்கார்..” முகில் அவனை இழுத்து கொண்டு சென்றான்.
“வாங்க வாங்க..” அந்த மினிஸ்டர் இருவரையும் வரவேற்று மணமக்களிடம் அழைத்து செல்ல, கிப்ட் கொடுத்து வாழ்த்தினர்.
“அப்பறம் உதய்.. ஏதோ பெரிய ப்ராஜெக்ட் முடித்து கொடுத்தீங்கன்னு கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள், இப்படி தான் அடுத்த கட்டத்துக்கு போயிட்டே இருக்கனும்..” என்று பெரிதாக சிரித்து சொல்ல, “போச்சுடா..” முகில் முணுமுணுத்தான்.
“ரொம்ப நன்றி சார், உங்களை பார்க்க ஆபிஸ்ல டைம் கேட்டிருக்கேன், வரேன்..” என்றுவிட்டான்.
“கொடுக்க வேண்டியதை நீங்களே கொடுத்தா நாங்க ஏன் இப்படி கேட்க போறோம்..” பார்வை பார்த்த மினிஸ்டர், “அப்பறம் இந்த வாரம் நியூஸ் பார்த்தீங்க தானே, எதிர் கட்சி தலைவரை பிச்சி உதறிட்டேன், யாருகிட்ட, விடுவேனா நான்.. பாயிண்டா பாயிண்ட்டா பேச வாய் அடைக்க வச்சிட்டேன் இல்லை..” தற்பெருமையை ஆரம்பித்துவிட, உதய் முகில் இருவரும் வெளியே சிரித்து வைத்தனர்.
“ஹலோ சார்..” என்று அந்நேரம் பிரசாத், கலாதரனுடன் வர, “அடடே வாங்க..” மினிஸ்டர் இருவரையும் கை குலுக்கி வரவேற்றார்.
“வரேன் சார்.. ஹலோ உதய் எப்படி இருக்கீங்க..?” பிரசாத் கை நீட்ட, “பைன்..” உதய் கை குலுக்கிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.
“அவன் பார்வையே சரியில்லை உதய்..” முகில் பிரசாத்தின் பார்வை வைத்து சொல்ல,
“ப்ராஜெக்ட்ல எதுவும் செய்ய முடியாத கோவமாக இருக்கும்.. விட்றா..” கையில் ஜுஸுடன் அமர்ந்து கொண்டான்.
“இவ ஏன் இன்னும் வரல..?” ஷாவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். அவள் வந்து சென்றுவிட்டாள் இவனும் கிளம்பிவிடுவான். இன்னும் கொஞ்ச நேரத்தில் ட்ரிங்க்ஸ் பார்ட்டி வேற ஆர்மபித்துவிடும்.
போன் எடுத்து ஜின்னாவிற்கு அழைக்க, அவன் டிராபிக்கில் மாட்டிகிட்டோம் என்றான். அவர்கள் வருவதிற்குள் இங்கு ட்ரிங்ஸ் பார்ட்டியே ஆரம்பித்துவிட்டது. கலாதரன் எப்போதும் போல முதல் ஆளாக அவர் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
“வந்துட்டா..” ஷா வரவும் உதய் பார்வை முழுதும் அவள் மேலே. கோல்டன் கலர் டிஸைனர் சேரியில், கழுத்தில், காதில் வைரம் மின்ன, ஹை ஹீல்ஸில் கம்பீரமாக நடந்து வந்தவளின் அழகை பார்ட்டியின் வண்ண விளக்குகள் இன்னும் தூக்கி காட்ட, கண்ணை பறித்தாள்.
அவளுடன் ஜித்தன், ஜின்னா, மேலும் இரு கார்ட்ஸ்ஸும் இருந்தனர். வந்தவள் ஒர கண்ணால் உதய்யை பார்த்துவிட்டு, நேரே மணமக்களுக்கு கிப்ட் கொடுக்க சென்றாள். மினிஸ்டர் அவளை வரவேற்று அவளிடமும் அடித்து விட்டு கொண்டிருந்தார்.
“உதய்.. உதய் கிருஷ்ணா.. UK கன்சல்டன்சி.. ம்ம்.. இப்போ தான் முளைக்கவே ஆரம்பிச்சிருக்க செடி, லேசா ஒரு மிதி மிதிச்சா திரும்ப மண்ணுக்குள்ளே போயிடும் இல்லை..” நக்கலாக சொல்ல, பிரசாத் தள்ளி நின்று கண்களில் கேலியுடன் பார்த்து கொண்டிருந்தான்.
புரிந்து கொண்ட உதய் கைகளை கட்டி, கால்களை விலக்கி இருவரையும் தீவிரமாக பார்த்து நின்றான்.