அடுத்து மகன் வளர்ந்து நிக்கிறான். அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமே.. அதிலும் அவன் பிஸினஸில் வளர வளர அம்மாவாக மகிழ்ச்சி கொண்டாலும் அவனின் பழக்க வழக்கத்தில் முன்னை விட அதிக கண்காணிப்பு

கையில் பணமும், சுதந்தரமும் தாராளமாக இருக்க, பயம். எங்கே மகன் தவறிவிடுவேனோ என்று. ஒரு நாளில் ஓராயிரம் ஆட்களுடன் பழகுகிறான், அவர்கள் எல்லோரும் எப்படி, என்ன ஏதென்று பிரித்தறிய முடியாது என்பதால் அதிக கண்டிப்பு மகனுக்கு தான்.   

நீ என்னதான் தன்னிச்சையா இருந்தாலும் என் மகங்கிறது மாறாது, நானும் மாறமாட்டேன்.. இப்படித்தான் உன்கிட்ட இருப்பேன்.. நீ என் பொறுப்பு..”  இப்படி மகனிடம் பொறுமையாக உட்கார்ந்து பேசும் ரகம் இல்லை கண்ணம்மா

தன் அடாவடி செயலால் உணர்த்திவிடுபவர். உதய்யும் அவனின் அம்மாவிடம் மோதி கொண்டாலும் அவரின் குணம் முழுதும் தெரிந்தவன் என்பதால் முரண்டு பிடித்து சண்டை போட்டாலும், அவரின் அந்த பயத்தை, அக்கறையை சரியான விதத்தில் புரிந்து கொள்வான். அவரின் செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பான். முக்கியமாக அலட்சிய படுத்த மாட்டான்

இதோ இப்போதும் அவரின் முகத்தை வைத்தே அவரின் கவலையை, சோர்வை  புரிந்து கொண்டவன், கிளம்பும் முன் தந்தைக்கு கண் காட்டியே கிளம்பி சென்றான். அவனுக்கு தெரியுமே எப்படியும் தந்தை அவரை கவனித்து கொள்வார் என்று

அதன்படி கணபதியின் கண்டிப்பில் தூங்க முயற்சி செய்த கண்ணம்மா, சில நொடிகளில் தூங்கியும் இருந்தார். உதய் தந்தையிடம் போன் செய்து கேட்டு கொண்டவன், “ப்பா.. அந்த xxx மாலுக்கு நீங்களும், அம்மாவும் ஈவினிங் 6 போல வந்துடுங்க..”  என

அவரோ, நான் எதுக்குப்பா.. உன் அம்மா மட்டும் போதும்..”  என்றுவிட்டார்

உங்க மருமகளை நீங்க பார்க்க வேண்டாமாப்பா..”  உதய் கேட்க

நீயும், உன் அம்மாவும் மட்டும் பார்த்தா போதும்.. எனக்கு உங்கமேல நம்பிக்கை இருக்கு..”  என்றுவிட்டார் அவர் எப்போதும் போல

அவரின் அந்த வார்த்தைகள்  கண்ணம்மாவிற்கு மட்டுமில்லை உதய்க்குமே மிகப்பெரிய பலம். அவரின் அந்த நம்பிக்கை தானே அவனை ஓடவும் வைத்து கொண்டிருக்கிறது. சில நொடி மௌனம் மகனிடம்

ரொம்ப நன்றிப்பா..”  என்றான் ஆத்மார்த்தமாக

எதற்கான நன்றி அது என்று புரிந்து கொண்ட கணபதி, முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் அவனின் நன்றியை கண்டு கொள்ளாதது போல, “சரி.. நீ பாருப்பா, வேலை இருக்கும்..”  என்று வைத்துவிட்டார்.

“உதய் போன் பண்ணானா..?”  கண்ணம்மா எழும் போதே கேட்டு கொண்டு எழ, ம்ம்.. என்று தகவல் சொன்னார் கணவர். கேட்டு கொண்ட கண்ணம்மாவோ  ஐந்து மணிக்கே அந்த மாலுக்கு சென்றுவிட்டார். “எப்போடா வர..”  என்று மகனுக்கு போன் வேற

அவன் அங்கு நேரம் பார்த்தவன், “நான் உங்களை ஆறு மணிக்கு தானே வர சொன்னேன்..” என

ஏன் எனக்கு இங்க எதுவும் வாங்க இருக்காதா..?” என்றார். 

வாங்குங்க.. எனக்கு ஏன் போன் போடுறீங்க..?”

ரொம்ப குதிக்காத, உன்கிட்ட பணம் எதுவும் கேட்டுற மாட்டேன், என் புருஷன் சம்பாதிச்சதே எனக்கு போதும் போதும்ங்கிற அளவு இருக்கு.. வேணுமான்னா சொல்லு உனக்கு எதாவது வாங்கி தரேன்.. பாவம் நீ தான் எல்லா பணத்தையும் அந்த ப்ராஜெக்ல போட்டு ரொம்ப கஷ்டத்துல இருக்க..”  என்று நக்கலடிக்க, பல்லை கடித்த உதய்

இப்போ என்ன நான் அங்க வரணும்.. அதானே.. வரேன்..” என்றுவிட்டான். இல்லை என்றால் நிமிடத்திற்கு ஒரு போன். எடுக்கவில்லை என்றால் ஆபிஸில் இருக்கும் அத்தனை நம்பருக்கு போன் வரும்

நீங்க இந்த வொர்க் பாருங்க, நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுறேன்..” அவனின் டீம் ஆட்களுக்கு வேலை சொன்னவன், மாலுக்கு கிளம்பிவிட்டான். கண்ணம்மா எங்கு இருக்கிறார் என்று கேட்டு கொண்டவன் அவரிடம் சென்றான்

போலாமா..” கண்ணம்மா வர

வேலையில இருந்து அப்படியே வரேன், ஒரு காபியாவது குடிக்க விடுங்க..”  என்றான்

என்னடா பிள்ளை நீ எப்போ பாரு கொட்டிக்கிறதுலே இருக்க.. வந்து தொலை..”  புட் கோர்ட்டுக்கு சென்று காபி குடித்தவன், ஷா அங்கு எந்த இடத்தில இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான்

குடிச்சாச்சா.. இப்போவாவது போலாமா..” கேட்டவர் அவனுக்கு முன் நடக்க, தலை ஆட்டி கொண்ட உதய்

அங்க எங்க போறீங்க, மேல போகணும்.. வாங்க..”  என்று லிப்ட் அருகில் செல்ல

டேய்.. அங்க போர்டை பாரு, காமன் ஆளுங்க அங்க  போக அலோவ்ட் இல்லை.. படிக்க தெரியுதா இல்லையா, உன்னை வேற லட்சம் லட்சமா கொட்டி இங்கிலீஷ் மீடியத்தில வேற படிக்க வச்சேன்..” என்று புலம்ப, உதய்க்கு பிபி எகிறியது

என் மானத்தை வாங்குனது போதும், அங்க தான் உன் மருமக இருக்கா வா..” அவரின் கை பிடித்து லிப்டில் சென்றான். ஜின்னா லிப்ட் அருகில் நின்று  இவனை அழைத்து போக, “தம்பி.. உன் பேர் என்ன..? இங்க வேலை செய்றியா..? என் மகனை உனக்கு எப்படி தெரியும்..?”  என்று அவனிடம் பேச  ஆரம்பித்துவிட்டார்.

“சார்.. மேம் சிசிடிவி பார்த்துட்டு இருக்காங்க.. நீங்க உட்காருங்க..” அவர்களை அங்கு பால்கனி போல இருக்கும் கண்ணாடி ரூமில் அமரவைத்து சென்றான்

மேடம்.. மேடம்ன்னு சொல்றானே..  இங்க வேலை பார்க்கிற மேனேஜர் பொண்ணா..?”  கண்ணம்மா கேட்க, உதய்க்கு சிரிப்பும், யோசனையும் கலந்தே வந்தது

என்னடா.. பதில் சொல்லு..”  என்றவர் பார்வை அங்கு வந்து கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது

வொயிட் பேண்ட், லைம் யெல்லோ ஷார்ட், ஓவர் கோட்.. என்று தலை முடி முதல் காலில் இருக்கும் ஷூ வரை, பளபளப்பாக, ஜொலிப்பாக கம்பீரமாக நடந்து வந்த ஷா மீது பிரமிப்பாய் படிந்த அவரின் பார்வை, அடுத்து அவளுக்கு பின் வரும்  செகரட்டரி பெண் பக்கம் சென்றது

உதய்.. அந்த பொண்ணா..?” மகனிடம் கேட்க, பார்த்த உதய், ஷா என்று நினைத்து, “ஆமா.. அவதான்..”  என்றான் ரசனையுடன்

ம்ம்.. நல்லா தான் இருக்கா.. ஓகே..”  என்றார் செகரட்டரி பொண்ணை பார்த்தே. 

என்ன ஓகேவா.. ம்மா.. அவ உனக்கு ஓகேவா..?” உதய் ஷா என  நினைத்து கொஞ்சம் கோவத்துடனே கேட்டான்

என்னடா இப்போவே டோன்  மாறுது, இது சரியில்லை, பெட்டர் நீ கல்யாணத்துக்கு அப்பறம் தனி குடித்தனம் போயிக்கோ..” 

ம்மாமாமா..” 

சரி.. இது பத்தி அப்பறம் பேசிக்கலாம்.. அவங்க வந்துட்டாங்க..”  கண்ணம்மா அருகில் வந்த செகரட்டரி பெண்ணை உத்து உத்து பார்த்தார்

ஷா கண்ணாடி ரூம் அருகில் வர வர தான் உதய், கண்ணம்மாவை கவனித்தவள், திரும்பி ஜின்னாவை தான் பார்த்தாள். “நான் இல்ல, அவர் நேரா RK சார்கிட்ட கேட்டுக்கிட்டார்..”  என்றான்  வேகமாக

கண்ணம்மா வந்திருப்பதால், ஷா அமைதியாக அவரிடம் வர, கண்ணம்மா தான் செகரட்டரியை பார்த்து கொண்டிருந்தாரே

வணக்கம்மா..”  ஷா அவரின் பார்வையை கவனித்து குழப்பமான முகத்துடன் வணக்கம் வைக்க

வணக்கம்மா..” என்ற கண்ணம்மா, அவளை கடந்து செகரட்டரியிடம் சென்றார்

ஷா உதய்யை புரியாமல் பார்க்க, அவனும், “ம்மா.. எங்க போற..?” கேட்டான்

இருடா.. பொண்ணுகிட்ட நான் பேச வேண்டாமா..?” என்றவர், “சொல்லும்மா.. உன் பேர் என்ன..?”   என்று அவளிடம் விசாரிக்க, புரிந்து, உதய் தலையில் கை வைத்தான் என்றால் ஷா உதய்யை தான் முறைத்து பார்த்தாள்

ம்மா.. அவங்க இல்லை..”  உதய் வேகமாக கண்ணம்மாவிடம் சென்று சொல்ல, அந்த செகரட்டரி பெண்ணோ அங்கிருந்து ஓடி போனாள் ஷா பார்வையில்

இவங்க இல்லையா..? நீ தானே நான் கேட்டதுக்கு கேட்டதுக்கு ஆமா சொன்ன..”  கண்ணம்மா கேட்க

ம்மா.. நான் ஆமா சொன்னது இந்த மேடத்துக்கு..”  ஷாவை கை காட்ட, கண்ணம்மா நம்பாமல் அவளுக்கு பின்னால் தேடினார்

ம்மா.. என்னம்மா பண்ற..?” உதய்  பல்லை கடித்து கேட்க

இல்லைடா.. எனக்கு தான் சரியா கண் தெரிய மாட்டேங்குது போல.. யாரடா சொல்ற..?”  நம்பிக்கை இல்லாமல் கண் தேய்த்து திரும்ப கேட்டார்

ம்மா.. இவ தான்..”  ஷா கை பிடித்து பக்கத்திலே நிறுத்திவிட்டான்

இந்த பொண்ணா..? உதய் அம்மாக்கு கொஞ்சம் கிறு கிறுன்னு வருது, பிடிடா..”  அவனின் கையை பிடித்து கொள்ள, சோபாவில் அமரவைத்தான் உதய்

இருங்க சார் ஜுஸ் எடுத்து வரேன்..”  ஜின்னா போக, ஷா முகம் சுருங்கி போயிருந்தது

உதய் அம்மாக்கு  என்னை பிடிக்கலையோ..?”  உண்மை நிலவரம் தெரியாமல் கவலை பட்டாள்.  

சார் ஜுஸ்..”  ஜின்னா கொடுத்து வெளியே செல்ல, கண்ணம்மா வாங்கி குடித்தவாறே, ஷா வையும், உதய்யையும் மாறி மாறி பார்த்தார்

ம்மா..”  உதய் புரிந்து கடுப்பாக கூப்பிட

கண்ணம்மாவோ, “இது தான் காதலுக்கு கண் இல்லைன்னு சொல்றாங்களோ..?” என்று சத்தமாக கேட்டு வைத்தார்

உதய்யின் அம்மா எனும் இடத்தில் அவரிடம் எதையோ எதிர்பார்த்தவளுக்கு, இது வருத்தம் கொடுத்தது. நான் அவருக்கு பொருத்தம் இல்லை நினைக்கிறாங்களோ.. நினைக்க, ஷாவிற்கு மேலும் முகம் வாடிவிட்டது.  

காதல் முன் தன்னம்பிக்கை இருந்த இடம் காணாமல் போனதுதன்னை தானே குனிந்து பார்த்தாள். ஒருவேளை பேண்ட், ஷார்ட் போட்டிருக்கிறதாலோ இப்படியா.. தெரிஞ்சிருந்தா சேரி கட்டியிருக்கலாம்.. மனதில் நினைத்தவள், திரும்பவும் உதய்யை தான் முறைத்தாள்

இவ வேற..”  உதய் திரும்பி கண்ணம்மாவை முறைத்தான்.

“உன் பேர் என்னம்மா..?” கண்ணம்மா ஷாவிடம் கேட்க, உதய் அவசரமாக பவ்யா.. என

ஷாரா..”  என்றாள் ஷா

கண்ணம்மா இருவரையும் பார்த்து, “ரெண்டு பேரா..?” என்றார்.  

பவ்யஷாரா..” என்றான் உதய்

ம்ம்.. ஏன்ம்மா.. உண்மையாவே உனக்கு இவனை பிடிச்சிருக்கா..?”  சந்தேகமாக கேட்க, ஷாரா அவரை அமைதியாக பார்த்தாள்

இல்லை என்னதான் என் மகனா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? பளபள ஜிலேபிக்கு.. கரடு முரடு முறுக்கு ஜோடியா..?”   கேட்டுவிட, உதய்க்கு பிபி உச்சத்தில் நின்றது

அதுவரை மிகவும் வருத்தத்தில் இருந்த ஷாராவிற்கு அப்போது தான் நடப்பது புரிய, அப்படியொரு சிரிப்பு. மலர்ந்து சிரிக்கும் அவளையே கண் எடுக்காமல் பார்த்தார் கண்ணம்மா

அக்மார்க் தமிழன் உதய். கலரில், குணத்தில், உருவத்தில். ஷா வோ பளிங்கு கல் போல மின்னி கொண்டிருந்தாள். பார்த்தாலே தெரிந்தது தங்களை விட அந்தஸ்திலும் மிகவும் உயர்ந்தவர்கள் என்று. இந்த மால் கூட இவர்களுது போல. மனதுக்குள் பல எண்ணம்

ஏய் என்னப்பா நீயும்..?”  உதய் கண்ணம்மாவை முறைத்து, ஷாவிடம் கேட்டான்

சாரி.. சாரி..”  அவளின் கவலை அகன்றதில் தானே  சிரிப்பு. மற்றபடி அவளுக்கு உதய் தானே அழகன்.

“ஏன்ம்மா..”  கண்ணம்மா மேலும் பேச வர

ம்மா.. போதும் நீ என்னை டேமேஜ் பண்ணது..” உதய் நறநறத்தான்

இல்லை உதய்.. என்னதான் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னாலும்..”

ம்மா.. இதுக்கு மேல பேசுன..”  உதய் ஏகத்துக்கும் கோவப்பட்டு பேச

சரி விடு.. எதுக்கு இவ்வளவு கோவம்.. நீ சொல்லும்மா.. எப்படி இருக்க..?” என்று ஷா விடம் பொதுவாக பேச, உதய் கடுப்புடனே அமர்ந்திருந்தான்

போதும் நீங்க பேசினது கிளம்புங்க.. எனக்கு ஆபிஸ் போகணும்..” அவரை கிளப்பினான்

சரிம்மா.. உன் போன் நம்பர் கொடு.. நாம அப்பறம் பேசலாம்..”  அவருக்கு அவளிடம் பேச, கேட்க நிறைய இருந்தது. ஷா அவளின் பர்சனல் நம்பர் கொடுக்க, அவளிடம் இருந்து விடைபெற்றனர்

வரேன்..”  உதய் முறைப்புடனே விடை பெற்றான் அவளிடம்

இருவரும் லிப்டில் வர, உதய் உர்ரென்றே இருந்தான். கண்ணம்மா மேலும் மகனை சீண்டும் பொருட்டு, “ஏன் உதய்.. இந்த காதல் வந்தால் குரங்கு கூட மனுஷனா தான் தெரியும் போல..” என, உதய் அவரை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தான்

சரி சரி வா போலாம்..”  லிப்ட் கீழே பார்க்கிங்கில் நிற்க, இருவரும் வெளியே வந்தனர். அப்போது அவனை வன்மத்துடன் பார்த்தபடி ஒருவன் கடந்தான். உதய் சாதரணமாக அவனை கடந்தவன், சட்டென மனதில் ரிவர்ஸ் சென்று பார்க்க, அது பிரசாத்.

ம்மா.. நீங்க கிளம்புங்க..”   அவரின் காரில் அவரை ஏற்றி அனுப்பியவன், திரும்ப ஷாவிடம் சென்றான். அங்கு ஷா முன் பிரசாத் நின்று எதோ எகிறி கொண்டிருந்தான்

பார்த்து கொண்டே சென்ற உதய்.. ஷா பக்கத்தில் உரிமையுடன் நின்று, “சார் யாரு..” கேட்டான் பிரசாத்தை பார்த்து.

உதய்யை  எதிர்பார்க்காமல் ஷா ஆச்சரியத்துடன் பார்த்தவள், பிரசாத்தை மிதப்பாக பார்த்தாள்இப்போது பேசித்தான் பாரேன்..”  என்று.