யுகம் சுகம் தானே 4

“இப்படி பார்க்காதப்பா..” உதய் மென் குரலில் சொன்னான். ஷாவின் நேர் பார்வை அவனை மிகவும் டிஸ்டர்ப் செய்வதே அதற்கு காரணம்

நாலு வருஷத்துக்கு முன்ன கடைசியா என்னை இப்படி தான் பார்த்த.. ஸ்டில் பெல்ட் பேட்.. ம்ம்.. எப்படி சொல்ல.. பிடிக்கல, ஒரு மாதிரி இருக்கு..”  என்றான் அவளிடமே நேராக

சரி பார்க்கல.. விடுங்க..”  ஷா அமைதியாகவே சொன்னாள்

அவ்வளவு தானா..?”   உதய் கண் சுருக்கி கேட்டான்

வேறென்ன சொல்லணும் எதிர்பார்க்குறீங்க..?” ஷா கை கட்டி கேட்டாள்

ஒரு எஸ் மட்டும்..”  உதய் கேட்க

எதுக்கு..?”  அவர்களின் திருமணத்திற்கு என்று தெரிந்தும் வேண்டுமென்றே கேட்கிறாள் புரிந்தது

ச்சு.. என்னப்பா..?” அவளையே பார்த்தான்.   

RK விடம் உங்க பொண்ணை கொடுங்க என்று தைரியமாக கேட்க தெரிந்தவனுக்கு, ஷாவிடம் கேட்க முடியவில்லை

நான் என்ன செய்யட்டும்..?”  அவளிடமே கேட்டான். ஷா பதிலேதும் சொல்லவில்லை. அதே மௌன பார்வை

அவளின் அந்த  பார்வை அவனை மிகவும் தள்ளி நிறுத்தியது. உரிமை எடுத்து கேட்க முடியவில்லை. யாரோ போல பேசும் பெண்ணிடம் எப்படி நெருங்க..? 

சரி.. நான் கிளம்புறேன்..”  என்றுவிட்டான். ஷா சரி என்று அவனுக்கு முன் வாசலுக்கு நடக்க, உதய் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் அவமான சாயல்

எப்போ கிளம்புவேன்னு இருந்திருப்பா போல..”  கோபத்தையும் கொடுத்தது. வேக நடையுடன் அவளை கடந்து அவனின் காருக்கு சென்றுவிட்டான். ஷா போர்டிகா வாசலிலே நின்று பார்த்தாள்

காரை ஸ்ட்ராட் செய்து கிளம்பியவன், அவளை பார்க்க கூடாது என்ற வைராக்யத்தில் அவளை கடந்தாலும் கண்கள் தன்னையே மீறி அவளை உரசிவிட்டு தான் சென்றது

ஷா முகத்தில் லேசான புன்னகை. அதை பக்க கண்ணாடி வழியே உதய்யும் பார்த்துவிட்டான். கார் அப்படியே நின்று ரிவர்ஸ் வந்தது. ஷா உஷாராகிவிட்டாள். அவளின் முன் கார் நிறுத்தியவன், கண்ணாடி இறக்கி

ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் உன் சிரிப்பை பார்க்கிறேன்.. ரொம்ப அழகா இருக்க..”  சொல்லஅவளின் கண்கள்  லேசாக ஆச்சரியத்தில் விரிய, கை காட்டி கிளம்பிவிட்டான்.

“ஒத்தை சிரிப்புல என் கோவத்தை சாய்ச்சுட்டாளே..”  உதய் புன்னகை முகமாகவே வீட்டிற்குள் செல்ல, கண்ணம்மா.. மாரியம்மாவாக அமர்ந்திருந்தார்

உங்களை தூங்க தானே சொன்னேன்..” உள்ளே வர

நீ முதல்ல கொஞ்சம் கிட்ட வா மேன்..”  அதட்டி கூப்பிட்டார்

ம்ப்ச்.. ஆரம்பிச்சிட்டிங்களா..?” உதய் சென்று அவர் முன் குனிய, மூக்கால் முழுதும் அவனை தேய்த்தவர்

இந்த காலத்து பிள்ளைங்களை நம்ப கூடாது.. நீ இதுல ஊதுடா..”  ட்ரிங்க் செக் செய்யும் மெஷினை எடுத்து ஊத சொன்னார். அவனும் இது பழகி போன ஒன்னு தானே என்று ஊதி ரிலாக்ஸாக சோபாவில் விழுந்தான்

ஏன் லேட்..?” அடுத்து விசாரணையை ஆரம்பித்தார்

உங்க மருமகளை வீட்ல டிராப் பண்ணிட்டு வந்தேன்..” என்றான்

ம்ம்.. என்ன..?”  அதிர்ந்தவர், “உண்மையை சொல்லுடா.. எங்கேயாவது ப்ரண்ட்ஸ்கூட ஊர் சுத்திட்டு வந்தியா..?”

இதுக்கு தான் உங்களை மாதிரி அம்மாகிட்ட உண்மையை சொல்ல கூடாதுங்கிறது.. உண்மையை சொன்னா நம்புறதே இல்லை..”  கேலியாக சொன்னான் மகன்

டேய்.. அப்போ உண்மையாவா..? யார்டா அது..?” கோபத்துடன் கேட்டார்

என்ன கோவப்படுறீங்க..? நீங்க தான் என்னால உனக்கு பொண்ணு பார்க்க முடியல, நீயே யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, எனக்கு கல்யாண செலவு மிச்சம்ன்னு நொடிச்சிட்டே இருப்பீங்க, இப்போ என்ன கோவம்..?”

அது.. அது.. அது சும்மா சொல்றது, அதுக்கு நீயே பொண்ணு பார்த்துப்பியா..? அப்போ உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த எனக்கென்ன மரியாதை..?  ஒழுங்கா நான் பார்க்கிற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோ..”  எகிறினார்

ம்மா.. நீங்க ரொம்ப லேட், உங்க பையனை மாப்பிள்ளை பார்க்கும் சடங்கு எல்லாம் முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு.. இப்போ வந்து குதிக்கிறீங்க..?”

என்னடா சொல்ற.. யாருடா  அது என் மகனை மாப்பிள்ளை பார்த்தது..”

நாளைக்கு வாங்க நேர்லே காட்டுறேன்..”

வரேன்.. வந்து என்ன பண்றேன் பாரு..” கருவி கொண்டே தூங்க செல்ல, உதய் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு

நாளைக்கு எங்க அம்மாக்கு என்ன பதில் சொல்ல போறன்னு நானும் பார்க்கிறேன்..”  ஷா வை நினைத்து குறும்பாக சிரித்து தானும் தூங்க சென்றான். மறுநாள் விடிந்து அவன் ஜிம், யோகா முடித்து குளித்து கீழிறங்கி வர, கண்ணம்மா தயாராக நின்றிருந்தார்

வந்துட்டியா.. வா போலாம்..”  என கிளம்ப தயாராக

இப்போ இல்லைம்மா.. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்..”  என்றான்  டிபன் சாப்பிட அமர்ந்தவாறே

ஏண்டா இப்போ கொட்டிக்கிறது தான் ரொம்ப முக்கியம் பாரு.. கிளம்புடான்னா..” கடுப்பாக சொல்ல

நீங்க சாப்பிட்டிங்க தானே.. அப்புறம் என்ன..?”  இட்லி எடுத்து வைத்து சாப்பிட செய்தான்

போதும் போதும்.. தொப்பை வச்சுடும்..”  மேலும் இட்லி வைக்க போனவனை தடுக்க, அவரை முறைத்தவன்

ப்பா.. எப்போ தான் உங்க திருவாயை திறந்து உங்க பொண்டாட்டியை அடக்குவீங்க..?” தந்தையிடம் பாய்ந்தான்

ஆனானபட்ட ஜில்லா ரவுடி ரங்கம்மா என் மாமியாராலே இவர்  வாயை திறக்க வைக்க முடியலையாம், நீ என்னடா பச்சா பையன்..”  கண்ணம்மா மிகவும் கேலியாக சொல்லி சிரித்து உதய் பிபியை எகிற வைத்தார்

ப்பாபாபா..”

சொல்லுடா மகனே..” கணபதி சாகவசமாக கேட்டார்.

இப்போதான் உங்க காது கேட்டுச்சாகும்..”

ஆமாம்..” சொன்னவர், ரசித்து ருசித்து காபியை குடித்தார்

அப்பப்போ பேசுங்கப்பா.. இல்லை வாய் துருபிடிச்சிரும்..”   கோவம் கலந்த கிண்டலாக சொன்னவன், மேலும் இட்லி வைத்து சாப்பிட்டே எழுந்தான்

முடிஞ்சுதா..? வா..”  அவனுக்கு முன் நடக்க

ம்மா.. நான் தான் சொன்னேன் இல்லை இப்போ முடியாதுன்னு..”   பல்லை கடித்தான்

நீ அட்ரஸ் மட்டும் கொடு, நான் பார்த்துகிறேன்..”

இப்படி எல்லாம் பண்ணீங்க நான் கூடிட்டே போக மாட்டேன்..”  உறுதியாக சொல்ல, தங்கு தங்குன்று நடந்து வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்

நான் செக் பண்ணிட்டு அட்ரஸ் சொல்றேன் வந்து சேருங்க..”  கிளம்பிவிட்டான்.

“ஏன் இவ்வளவு  டென்க்ஷன் கண்ணு..?”  மகன் கிளம்பவும் மனைவியிடம் வந்தார் கணபதி

“உதய் சொல்றதை பார்த்தா அந்த பொண்ணை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல, அதான் இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம் சொல்லிட்டு இருந்திருக்கான்..”

சரி.. அதுக்கு நீ ஏன் கவலைப்படுற..?”

இல்லைங்க.. பொண்ணு அவனுக்கு ஏத்த மாதிரி நல்ல பொண்ணா இருக்கணும்ன்னு தான்..”

உதய் மேல நம்பிக்கை வை கண்ணு.. அவன் சரியா தான் பார்த்திருப்பான்..”  ஆதரவாக சொன்னார்

ம்ம்..”  அவர் முகம் தெளியவில்லை

கண்ணு.. இந்த கவலையிலே நீ சாப்பிடல, தூங்கலை, முதல்ல ஏதாவது சாப்பிடு.. அப்பறம் பேசுவோம்..”  வள்ளி குரல் கொடுக்க, அவர் உணவுடன் வந்தார்

சாப்பிடுங்கம்மா.. எப்போவும் பிள்ளைங்க பிள்ளைங்கன்னு  கவலை தான் உங்களுக்கு..”  நீண்ட வருடமாக அங்கேயே இருக்கும் வள்ளியும் உரிமையுடன் கடிந்து பக்கத்தில் நின்று உணவு பரிமாற, கண்ணம்மா அப்போதும் கொறித்து தான் வைத்தார்

வள்ளி.. ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துட்டு வா..”  மனைவி சரியாக சாப்பிடாததில் ஹார்லிக்ஸ் குடிக்க வைத்தவர், “வா கொஞ்ச நேரம் தூங்கு.. நைட் எல்லாம் முழிச்சு முழிச்சு படுத்திருந்த..”  மனைவியுடன் பெட் ரூம் சென்றார்

ஏங்க போன்.. தம்பி கூப்பிடுறான் சொல்லியிருக்கான்..”  படுக்காமல் மொபைல் எடுக்க வர

கண்ணு..”  கணபதி குரலில் தானே சென்று படுத்துவிட்டார். “தம்பி கூப்பிட்டா நான் எழுப்புறேன்.. நீ இப்போ தூங்கு..”  கண்டிப்புடன் சொல்ல, கண் மூடி தூங்க முயற்சி செய்தார்

கண்ணம்மா என்னதான் வெளியே, “இப்போ என்னாங்குற..?” என்று உதார் விட்டு திரிந்தாலும், உள்ளுக்குள் அவரும் சராசரி அம்மாவே. என்ன கொஞ்சம் வித்தியாசமானவர்

பிள்ளைகள், குடும்பம் மீதான அவரின் கவலைகள், பயம், புலம்பல்கள் எல்லாம் கணவனோடு தனி அறையில் மட்டுமே. வெளியே வந்துவிட்டால் எதையும் சமாளிப்பேன் என்று மார் தட்டி கொள்வார். சமாளிக்கவும் செய்வார்

பல  ஆண்களை போல தான் கணபதியும் தொழில் மட்டுமே. குடும்பம் முழுக்க முழுக்க கண்ணம்மா பொறுப்பு. “கணபதியும் என் மனைவி என்னை விட நன்றாகவே எதையும் செய்வாள்..”  என்று நூறு சதவீதம் நம்பும் மனிதர். அந்த நம்பிக்கை தான் கண்ணம்மாவின் பலமும் கூட

எதற்கும் கணவனை எதிர்பார்க்க மாட்டார், தானே எடுத்து செய்வார். வீட்டு நிர்வாகம், பிள்ளைகள் வளர்ப்பு  மட்டுமில்லை அவர்களின் கல்யாணமும் தான்

அவர்களின் மகள் அனிதா படிப்பு முடித்து சில வருடங்கள் வேலை பார்க்கிறேன், என் சொந்த கால்ல நிக்க போறேன்.. என்று நின்ற போது அம்மாவாக அவ்வளவு கவலை

இப்போது பெண்கள் பலர் அப்படி தான் இருக்கின்றனர் என்றாலும் அம்மாவாக கவலைப்படாமல் இருக்க முடியாதே. முதல் சில மாதங்கள் அவள் போக்கிலே வேலை பார்க்க வைத்து, வயது ஏறுகிறது, நல்ல மாப்பிள்ளை என்று சமாதானம் செய்து நல்ல படியாக.. நல்ல வரனாக பார்த்து திருமணமும் செய்து வைத்தார்

அதுதான் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதே என்று நம் அம்மாக்கள் ஓய்ந்துவிட முடியாது. அவர்களின் வாழ்க்கை எப்படி போகிறது என்று கவனித்து மகளை வழிப்படுத்தும் பொறுப்பு இருக்கும். அடுத்து அவர்களுக்கு  குழந்தை

அதிலும் அனிதாவின் கணவர், “இரண்டு வருடம் போகட்டும், இப்போ என்ன அவசரம், லைபை என்ஜாய் செய்யலாம்..”   என்றுவிட, இவர்க்கு தான் டென்க்ஷன்

அப்படியென்ன என்ஜாய் பண்ண போறாங்க, பொறுப்பை எடுக்க  அவ்வளவு கஷ்டம்..”  கணவரிடம் புலம்பி தள்ளி விட்டார்

மகளிடமும்,  “வயசுலே ரெண்டு பிள்ளை பிறந்தா தானே அவங்களை வளர்த்து ஆளாக்க முடியும், உனக்கும் உடம்பு ஒத்துழைக்கும்..”  அனுபவப்பட்டவர் அனிதாவிற்கு புரிய வைத்து அவள் மூலம் மருமகனுக்கு புரிய வைத்து என்று ஒரு வருடம் ஓடிவிட்டது

அதற்கு பின் எப்படியோ மூன்று வருட இடைவெளியில் இரண்டு குழந்தைகள் வந்தாயிற்று. இரண்டு பிரசவத்திற்கும் லண்டன் தான் சென்றார். அங்கு குழந்தை பிறந்தால் தான் எங்களுக்கு வசதி என்றுவிட, ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வருடம் என்று இரண்டு வருட லண்டன் வாசம்

மகளை நம்பாமல் தானே எல்லாம் செய்து பார்த்து பார்த்து அவர்களை ஒரு வயது வரை வளர்த்து கொடுத்தே ஊர் திரும்பினார். இப்போதும் அடிக்கடி என்று இல்லாமல் ஒரு நாளில் ஒருமுறை மகளுக்கு போன் செய்து, வீடியோ கால் செய்து அவர்களின் நலம் பார்த்துவிடுவார். அப்போது தான் திருப்தி. அந்த நாளே முடியும்.