நான்கு  வருடங்களுக்கு முன்பு.. 

“ஹலோ உதய்.. வா வா..”  குணாவும், குணாவின் மகன் முகிலும் கொலு பூஜைக்கு வந்த அவனை வரவேற்றனர். 

முகில் உதய்யின் கல்லூரி நண்பன். இருவரும் BE, அடுத்து பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் ஒன்றாக முடித்து அவரவர் தொழில் இறங்கிய நேரம். நீண்ட நாட்களாக பார்த்து கொள்ள முடியாத நண்பர்கள் இருவரும் இன்று மீண்டும் சந்திக்க, ஓயாத பேச்சு, சிரிப்பு. 

“செம ஸீன்..” உதய் அவர்களின் பழைய கலாட்டாவை சொல்லி சிரிக்க, அவனையே ரகசியமாய் பார்த்த வண்ணம் “அவள்..”. 

அவளின் அந்த ரகசிய பார்வையை கவனித்துவிட்ட உதய்யின் பெருஞ்சிரிப்பு நின்றது.

 யார் இது..? உதய் அவளை கேள்வியாக பார்க்க, அவளோ இவன் -பார்த்துவிட்டான் என்று புரியவும்  லேசாக உதட்டை மடித்தவள் சட்டென திரும்பி நின்று கொள்ள, உதய்யிடம்  ஒரு முறுவல். 

“செமையா இருக்கா..”  அந்த வயதுக்குரிய இளமை துடிப்புடன் இருந்த உதய்க்கு கருநீல வண்ண ஹால்ப் சேரியில் வைரத்தில் மிளிர்ந்த அவளின் அழகு நிச்சயம் ரசிக்க தான் வைத்தது. 

அடுத்த சில நிமிடங்கள் இருவரின் கண்களும் கண்ணா மூச்சி ஆடியது. இவன் அவளை நேரடியாக பார்க்க, அவள் இவனை ரகசியமாய் பார்த்தாள். 

நிமிடங்கள் செல்ல செல்ல அந்த பார்வை.. சொல்ல தெரியாத உணர்வு. ஒரு உரிமையாக.. உடமையாக.. உதய்க்கு ஏதோ புரிவது போல இருந்தது. 

சுற்றிலும் அவனை போல.. ஏன் அவனை விட அழகான ஆண்கள் இருக்க, அவளின் பார்வை முழுக்க முழுக்க இவன்  மட்டுமே. அதுவரை அவளை சைட் மட்டுமே அடித்து கொண்டிருந்தவனுக்கு அவள் யார் என்று விசாரிக்க ஆர்வம் பொங்கியது. 

“யார்டா அது..”  உடனே முகிலிடம் விசாரிக்க, பார்த்த முகிலுக்கு தெரியவில்லை. 

“இப்போ தான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்..”  என, 

“உங்க வீட்டு பங்க்ஷனுக்கு தான் வந்திருக்கா..” என்றான் உதய். 

“உண்மையாவே தெரியலடா.. ஆமா நீ ஏன் இவ்வளவு ஆர்வமா விசாரிக்கிற..?”  குறுகுறுவென கேட்டான் முகில். 

“ஏன் விசாரிச்சா என்ன..?  கேட்டு சொல்லு..”    என்றவன் பார்வை அவள் மேலே.  வாய் திறந்து பெரிதாக மூச்சு விட்டான்.  அந்த வயதிற்கே உரிய ஆர்வத்தில் அவளை சைட் அடித்தவனுக்கு இப்போது அப்படி முடியவில்லை. 

“இது வெறும் சைட் மட்டும் இல்லை உதய்.. வேற ஏதோ..” அவளை பார்த்தான். யார் யாரோ அவளை தேடி வந்து பேசி போக, அவளின் உயரம் கொஞ்சம் புரிவதாய். முகிலின் அம்மா அவளை சாப்பிட அழைத்து செல்ல, ஒர கண்ணால் இவனை பார்த்துவிட்டே சென்றாள். 

“முகில்.. அவ யாருன்னு எனக்கு இப்போவே விசாரிச்சு சொல்லு போ..”  அவனை விரட்டவே செய்தான். 

“சரி இரு அப்பாகிட்ட கேட்டுட்டு வரேன்..” முகில் செல்ல, 

“ஹலோ.. உதய்..” என்று வந்தார் கலாதரண். பேர் சொல்ல கூடிய பிஸ்னஸ் மேன். 

“வணக்கம் சார்..” உதய் மரியாதையாக சொல்ல, அவனின் தோளை தட்டியவர், அவனுடன் அமர்ந்தார். 

“அப்பறம் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது..?” கேட்க, 

“ம்ம்.. நல்லா போகுது சார்..” என்றான். 

“உனக்கு கன்சல்டன்ஸி ஆரம்பிக்கிற  கனவு இருக்கு இல்லை..”  கேட்க, 

“ஆமா சார்.. அதுக்கான முயற்சி எடுத்துட்டு இருக்கேன் சார்..”  என்றான். 

“ஹாஹா.. இனி உனக்கு அந்த அவசியம் இல்லை உதய்..” அவர் சிரிப்புடன் சொல்ல, உதய் கேள்வியாக பார்த்தான். 

“என்ன புரியலையா..? நீ ரொம்ப லக்கி சொல்றேன்.. இனி நீ கஷ்டபட தேவையில்லை. நேரடியா ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆள போற..”  என, உதய்யிடம் ஒரு ஆராய்ச்சியான பார்வை. 

“என்ன மேன்.. புரியலையா.. உனக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு, உனக்கு மிஸ்டர் ராம் குமார் “RK..” சார் தெரியுமில்லை. அதெப்படி தெரியாம போகும், எவ்வளவு பெரிய ஆள் அவர். அவர்கிட்ட இல்லாத பிஸினஸே இல்லை.. நம்ம ஸ்டேட்டோட பெரிய புள்ளி..”  சொல்லி கொண்டே போக, 

“எனக்கு அவரை ரொம்ப நல்லா  தெரியும் சார்.. என்னோட மானசீக குரு அவர்..”  என்றான் உதய். 

“என்ன குருவா..?  இனி அவர் உனக்கு குரு மட்டுமில்லை மாமனாரும் கூட..” என, உதய்யிடம் அதிர்ச்சி இல்லாமல் இல்லை. 

“என்ன பேசுறீங்க சார்..?”

“பாரு உன்னால கூட நம்ப முடியல, என்கிட்ட RK இதை பத்தி பேசுனப்போ நானும் உன்னை மாதிரி தான் அதிர்ச்சி ஆனேன்..”  சத்தமாக சிரித்தார் மனிதர். அவர் இப்படி அடிக்கடி சிரிப்பது உதய்க்கு எரிச்சலை கொடுத்தது. 

“இப்போ நான் சொன்னது முழுக்க முழுக்க உண்மை உதய்.. கனவு இல்லை.. நீ RK சார் வீட்டு மருமகனா ஆகப்போற,  இனி உன்னோட ரேஞ்சே வேற, நான் எல்லாம் உன்னை பார்க்கணும்ன்னா கூட அப்பாயிண்ட் மென்ட் வாங்கி தான் பார்க்கணும்.. தி கிரேட் RK சார் மருமகன்னா சும்மாவா..?”  என, உதய்யிடம் ஒரு அழுத்தமான அமைதி. 

“உதய் நான் கதைகள்ல தான் இப்படி கேள்வி பட்டிருக்கேன், ஆனா உனக்கு உண்மையாவே நடக்கவே போகுதுப்பா, அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுது, எந்த கஷ்டமும் இல்லாமல் காலட்டிக்கிட்டே ராஜா மாதிரி இருக்கலாம், உன்னோட அந்த சாப்ட்வேர் ஆசை எல்லாம்  ஒன்னுமே இல்லை.. அவரோட கம்பெனியே உனக்கு தான்..” என, 

“யாரோட கம்பெனியும் எனக்கு தேவையில்லை..” என்றான் உதய் அழுத்தமாக. 

“என்ன சொல்ற உதய்..” 

“எனக்கு யாரோட கம்பெனியும் தேவையில்லை சொல்றேன்..”  திரும்பவும் சொன்னான். 

“என்ன பேசுற நீ..?”

“புரியலையா சார்.. உங்க ஆபர் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்..”

“வேண்டாமா.. புரிஞ்சு தான் பேசுறியா..? எத்தனை பேர் இதுக்கு போட்டி போட்டுட்டு இருக்காங்க தெரியுமா..?”

“தெரிஞ்சுக்கிற அவசியம் எனக்கில்லை சார்..”  அவனின் பேச்சு திமிராக தெரிந்தது மனிதருக்கு. 

ஏற்கனவே அவருக்கு இந்த சம்மந்தத்தில்  உடன்பாடு இல்லை. அவரின் அண்ணன் மகனை தான் RK மருமகனாக்க  ஆசை பட்டு கொண்டிருக்க, RKவோ உதய்யை கை காட்டினார் பேச சொல்லி. 

காலதரனும், RK வும் நண்பர். இவரை நம்பி RK சொல்ல, அந்த நம்பிக்கையை காப்பாற்றும் எண்ணம் கலாதரனுக்கு இல்லை.  உதய்யை கோவப்படித்தும் படி பேசினார். அவனும் கோவமாக மீண்டும் நெய் ஊற்றினார் மனிதர். 

“RK வே உன்னை கேட்கிறதால இப்படி பேசுறியா நீ..? அவரோட ரேன்ஜு என்னன்னு  தெரியும் இல்லை, நீ எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை, உன்னோட ஸ்டேட்டஸ் என்ன..? அவரோட ஸ்டேட்டஸ் என்ன..?  உன்னை எல்லாம் அவர் சூஸ் பண்ணதே பெரிய அதிசயம் தான், நீ வேண்டாம் சொல்றியா..?” என அவனை கீழிறக்கி பேச, உதய்யின் முகம் கோவத்தில் சிவந்தது. 

“இன்னொரு முறை உங்க வாயில்  இருந்து ஒரு வார்த்தை வந்தா கூட அடுத்த வார்த்தை வர உங்க வாய் இருக்காது, ஏதோ பெரிய மனுஷன்னு மரியாதை கொடுத்தா என்ன வேணும்ன்னாலும் பேசுவியா நீ..? என்னை பத்தி என் ஸ்டேட்டஸ் பத்தி பேச நீ யார்..? யாரோட அதிர்ஷ்டத்துலயும் நான் வாழ வேண்டாம், RK சார் மேல எனக்கு அளவில்லா மரியாதை இருக்கு, ஆனா அவருக்கு மருமகனா வர விருப்பமில்லை..”

“அண்ட் இனி நீ என்கிட்ட எப்போவும் பேசிடாதா.. அப்பறம் பேச நாக்கு இருக்காது..”  விரல் நீட்டி காலதரனை எச்சரிக்க, என்னடா ஆச்சு..? என்று வந்தான் முகில். 

காலதரனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி இருந்தாலும், வெளியே அவனை முறைத்து விட்டு சென்றார். “என்னடா..?” முகில் திரும்பவும் கேட்க, “விடுடா..” என்றுவிட்டான். 

சாப்பிட சென்ற அவள் திரும்பி வர, உதய் மொபைலை பார்த்து அமர்ந்திருந்தான். அவளை கவனிக்கவும் இல்லை. அவளின் முகம் சுருங்கியது. 

“ஏய் உதய்.. RK சார்டா..” முகில் சொல்ல, உதய் நிமிர்ந்து பார்த்தான். ஒரு படையே அவரை நெருங்க முயன்று கொண்டிருக்க, அவரின் பார்வை இவனை தேடி சினேகமாக சிரித்தது. 

உதய்யால்  அவரின் சிரிப்புக்கு பதில் சிரிப்பு கொடுக்க முடியவில்லை. இதற்கு முன் மீட்டிங்கில், பங்க்ஷனில் ஓரிரு முறை இவனை தேடி அவர் பேசியது ஏன் என்று இன்று புரிந்தது உதய்க்கு. 

“RK சாருக்கு என்னை தெரிஞ்சிருக்கு..”  அன்று பூரித்து போனான். ஆனால் இன்று அப்படி இல்லை. அவரை தேடி செல்லவும் இல்லை. மரியாதைக்காக எழுந்து நின்றவன்  திரும்பவும் அமர்ந்து கொண்டான். 

“வாடா போய் பேசலாம்..” முகில் கூப்பிட, 

“நான் வரல, நீ போ முகில்..” என்றுவிட்டான். 

“என்ன..? RK சார் கிட்ட பேச வரல சொல்றியா..?”  முகில் ஆச்சரியமாக கேட்டான். 

“ம்ப்ச்.. வரல முகில்.. என்னை விடு..” உதய் சொல்ல, 

“ஆஹான்.. இப்போ நான் சொல்ல போற விஷயத்துல நீ கண்டிப்பா அவரை பார்க்க வருவ..” முகில் சிரிப்புடன் சொன்னான். 

“என்ன..?”  உதய் புரியாமல் கேட்க, 

“அங்க  பாரு..”  அவனின் முகத்தை திருப்பினான். அங்கு RK விடம் “அவள்..” அவளை தோளோடு அணைத்தபடி RK. 

“என்ன புரியலையா..? நீ இவ்வளவு நேரம் விழுந்து விழுந்து சைட் அடிச்சது RK வோட பொண்ணை தான்..”  என, உதய் முகத்தில் ஒரு இறுக்கம் தான். தெரிந்து தான் என்னை பார்த்திருக்கிறாள் புரிந்தது. 

இப்போதும்  அவனின் முடிவு தவறாக தெரியவில்லை. மனதில்  அழுத்தம் தான். மறுப்பதற்கில்லை.

அதே நேரம் அங்கு காலதரனும் RK விடம் விஷயத்தை சொல்லி கொண்டிருக்க, அப்பா, மகள் இருவரும் இவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர். 

அதிலும் அவளின் பார்வை முன்பு போல ரகசிய பார்வையாக இல்லாமல் நேரடி பார்வையாக இருந்தது. உதய் அசராமல் அவளின் பார்வையை எதிர்கொண்டான்.