Advertisement

அத்தியாயம் – 8

நேரில் கண்டதுப் போல் பேசிய பவளன் வார்த்தைகளில், சந்தேகமாகத் தன் அருகில் எங்கேயும் இருக்கிறானா? என்று நிமிர்ந்து தன்னை சுற்றி பார்த்தாள் அவந்திகா.

சந்தேகம் இருந்தப் போதும் பவளனின் குரலில் தெரிந்த அவசரத்தில் மேலும் கேள்விக் கேட்காமல், “ம்ம்” என்றாள் அவந்திகா.

அப்படியே பயந்துக் கொண்டே நில்லாமல் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி யோசித்தாள் அவந்திகா. ‘தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது. தன்னை யாளியுலகத்தினர் அடையாளம் கண்டுக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து என் கைக்காப்பை ஒழித்து வைத்தப் போதும் இந்த யாளிகள் என்னைத் தேடி வந்திருக்கின்றன.

இவை தற்ச்செயலான நிகழ்வாகத் தெரியவில்லை. இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று அறியும் முன்னே முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தாக வேண்டும்’ என்று மனதில் தீர்மானித்தாள்

அதே எண்ணத்துடன் கார்திகிடம் திரும்பி, “கார்திக், நாம் எப்போது கிளம்புகிறோம். நான் என் அறைக்குப் நேரே போகட்டுமா? நேற்றைப் போல என் அறைக்கே உணவனுப்பிவிட சொல்கிறீர்களா? உறங்கி எழுந்தால் தலைவலி போய்விடும் என்று நினைக்கிறேன்.” என்றாள் அவந்திகா

கார்திக் பதில் சொல்லும் முன்னே, அவந்திகா கேட்டதற்கு பதிலாக, “அச்சோ அவந்திகா. இன்றும் நீங்க எங்களுடன் சாப்பிட வரமாட்டிங்களா. இன்று எல்லோரும் வெளியில் சப்பிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். நீங்க வரலனா எப்படி?! நேற்றே நீங்க வரவில்லையென்று கார்திக் திட்டத்தை மாற்றிவிட்டார்” என்று சினுங்கினாள் அதுவரை அமைதியாக இருந்த மாலதி.

அவந்திகா அதற்குப் பதில் அளிக்குமுன்னே, “ஆமாம் அவந்திகா, தாஜ் உணவு விடுதிக்குச் சென்று உண்டப்பின் சிறிது நேரம் நடனம் பாட்டு (1) கண்டுவிட்டு வரலாம் என்று முடிவெடுத்திருந்தோம்” என்று மாலதியுடன் சேர்ந்து சொன்னான் கவிப்பிரியன்.

அதைக் கேட்டதும் அவந்திகா, ‘இதுதானே எனக்கும் வேண்டும். பாவனாவையும் உங்களுடன் அனுப்பிவிட்டால் நான் என் வேலையைத் தடை இல்லாமல் செய்வேன்’. நான் தனியாகக் குறைந்தது 3 மணி நேரமாவது இருக்குமாறு வாய்ப்பமைய வேண்டும்’ என்று மனதில் நிம்மதியுற்று, “அப்படியா?! பரவாயில்லை. நீங்கப் போய்விட்டு வாங்க. எனக்குப் பாட்டு நடனத்தில் எல்லாம் விருப்பமில்லை. தலைவலியில்லை என்றாலும் அவற்றில் எனக்கு ஆர்வமிருந்தது இல்லை. நான் வந்தால் எனக்காகச் செய்யும் செலவு விரயம்தான். அதானால் கவலைக் கொள்ள வேண்டாம்.” என்றாள் சமாதனமாக.

அவள் பதிலில் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரு சேர உணர்ந்த மாலதி, “அப்போ சரி. நாங்க போய்விட்டு வருகிறோம். ஆனால் நாளை மும்பை கடற்கரைக்குப் போகும் போது கட்டாயம் நீங்க வர வேண்டும்” என்று அவந்திகாவின் கையைப் பற்றிக் கொஞ்சிக் கேட்டாள் மாலதி.

மாலதியின் விடாப்பிடியான வற்புறுத்தலால்,” சரி… நாளை நாம் எல்லோரும் போவோம். இன்று எனக்கு ஓய்வு வேண்டும்” என்று அமைதியாக சொன்னாள்அவந்திகா.

அதுவரை அமைதியாக இருந்த கார்திக் அவந்திகாவின் முடிவைக் கேட்டதும் , “அப்படியென்றால் நீங்க எல்லோரும் தாஜ்க்கு கிளம்புங்க. நான் அவந்திகாவுடன் இருக்கிறேன். தனியாக அவங்களை மட்டும் விடுவது சரியாக இருக்காது. ரோஷன், நீதான் அனைவரிலும் பெரியவன். அனைவரையும் பத்திரமாகப் பார்த்து அழைத்து வர வேண்டும். காலம் தாமதிக்கக் கூடாது” என்று பொறுப்புள்ளவனாகச் சொன்னான்.

“ம்ம் சரி கார்திக்” என்றான் ரோஷன்.

‘என்ன!!’ என்று அதிர்ச்சியுற்ற அவந்திகா, ‘நானே எப்படி தனியாகச் செல்வதென்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கார்திக் என்ன செய்கிறான்.’ என்று கண்ணையெட்டாத புன்னகையுடன்(awkward), “இல்லை கார்திக். நானே” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாவனாவும் உடன் மேகனும் வந்துவிட்டார்கள்.

“ஏய் அவந்தி…” என்று அமர்ந்திருந்த அவந்திகாவின் கழுத்தில் கைக்கோர்த்து, “எப்போ வந்தாய். நீ போட்டியில் வெற்றிப் பெற்றிருப்பாயென்று தெரியும். நானும் வெற்றிப் பெற்றுவிட்டேன் தெரியுமா. எல்லாம் மேகனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று அவந்திகா பதில் அளிப்பதற்கு இடம் தராமல் பேசிக் கொண்டே இருந்தாள் பாவனா.

மேகன் அருகில் வந்துவிட்டான் என்பதை உணர்ந்த அவந்திகாவின் உடல் உடனே விரைப்புற்றது. அதிகம் பேசாமல், “ம்ம். நல்லது. வாழ்த்துக்கள்” என்று ஓரிரு வார்த்தைகளில் லேசான புன்னகையில் பேச்சை நிறுத்தினாள்.

ஏற்கனவே மேகனின் பலவித நகைச்சுவை கலந்த பேச்சிலும் அவன்மீது இயற்கையாக உண்டான ஈர்ப்பிலும் பாவனாவிற்கு அவந்திகாவின் தடும்மாற்றாம் புரியவில்லை.

பின் அவந்திகாவின் அருகில் அமர்ந்திருந்த கார்திக்கை எழுப்பிவிட்டு அவந்திகாவின் அருகில் அமர்ந்துக் கொண்டு, தொடர்ந்து மேகன் எப்படி கடினமான தலைப்பை எளிமையாகக் கையாண்டு தாங்கள் வெற்றிப் பெற்றோம் என்ற புராணத்தை அடுக்கிக்கொண்டிருந்தாள் பாவனா.

அவந்திகா மற்றும் பாவனாவின் நெருக்கம் அனைவரும் உணர்ந்ததால் மற்றவர்கள் மேகனும் பாவனாவும் வாங்கி வந்திருந்த தேனீரினையும் பலகாரங்களையும் உண்ட வண்ணம் அவர்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

கார்திக்கும், மேகனும் அருகிலிருந்த மேஜைகளிலிருந்து நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர்.

கார்திக் அமைதியாக அவந்திகாவைப் அடிக்கடி பார்த்தவண்ணம் வாங்கி வந்திருந்த பானிபூரியினை எடுத்து வாயிலிட்டுக் கொண்டிருந்தான்.

பாவனாவின் பேச்சு முழுதும் மேகனைப் பற்றியே இருந்ததால், எதுவும் பேசாமல் ஒவ்வொரு முறை பாவனா மேகன் பெயரைச் சொல்லும் போதும் உள்ளுர புன்னகைத்த(chuckle) வண்ணம் பாவனாவை பார்த்துக்கொண்டிருந்தான் மேகன்.

பாவனாவின் பேச்சில், அவந்திகா மேகன் பாவனாவின் போட்டியில் ஜோடி என்பதை உணர்ந்தாள். அதனோடு பாவனாவிற்கு மேகன் மீது இருக்கும் ஈர்ப்பும் புரிந்தது. இது அவந்திகாவிற்கு உண்மையில் தலைவலியை தந்தது.

பாவனாவின் பேச்சுக்கு, “ம்ம்” என்று சொல்லியப் போதும், ‘அறியா பிள்ளைப் போலப் பாவனாவின் நேசம் வெறும் இயக்கம் கற்று தந்தவன் என்ற மரியாதையால் வந்ததா? அல்லது காதலா?’ என்று தன் தலையினைப் பிடித்தாள் அவந்திகா.

ஒரு வழியாகப் பாவனா பேச்சை நிறுத்தி, “ஏய் அவந்தி… எங்கே உன்னுடன் போட்டியில் கலந்துக் கொண்டவர்.?” என்று பேசி ஓய்ந்ததன் அடையாளமாக அங்கிருந்த குளிர்பானத்தை எடுத்து அருந்தினாள்.

பவளனைப் பற்றிப் பாவனா கேட்டதும் அவந்திகாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. “அவர்…” என்று இழுத்தவள், ‘ நான் மனித உலகில் இருக்கும் வரை அவனையும் இந்த மேகனையும் பார்க்காமல் இருந்தால் நன்றாயிருக்கும்’ என்று மனதில் எண்ணி மறைத்து, “அவர் போட்டி முடிந்ததும் கிளம்பிவிட்டார்” என்றாள்.

அவந்திகாவின் வார்த்தைகளில் பேதமெதுவும் உணராத பாவனா, “ஓ… அவருடைய கல்லூரி தோழர்களுடன் சென்றுவிட்டிருக்கக்கூடும். பரவாயில்லை விடு. நாம் போகலாம் நாளை அவரையும் அழைத்துச் செல்லலாம். தெரியுமா? மேகனும் இன்று நம்முடன் இரவு உணவுக்கு வருகிறார். ” என்று கிளுக்கி சிரித்தாள்.

மேகன் பாவனாவுடனே இருப்பதுப் போல் உடன் வருவதை உணர்ந்து அவந்திகா அதிர்ந்தாள். அவளது தடுமாற்றம் யாரும் உணரவில்லை என்றப் போதும் அவளையே பார்த்திருந்த கார்திக்கிற்கு சந்தேகத்தைத் தந்தது. ‘அவந்திகா மேகனால் தர்மசங்கடமாக உணர்கிறாளா’ என்று நினைத்தான்.

அதனால் கார்திக், உடனே பாவனாவிடம் திரும்பி, “பாவனா. அவந்திகாவிற்கு லேசாகத் தலைவலியிருப்பதால் நான் அவங்களை தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீங்க மட்டும்தான் இன்று தாஜ்க்குப் போகப் போறீங்க” என்று தேனீரை அருந்தியவண்ணம் சொன்னான்.

“என்ன? தலைவலியா? அவந்தி என்னாச்சு. நேற்றும் தலைவலி என்றாய். மருத்துவ மனைக்குச் செல்லலாமா? உனக்கு இதுப் போல் எதுவும் உபாதை வராதே” என்று அவந்திகாவின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

“காய்ச்சல் போலவும் இல்லை. ஒழுங்காகச் சாப்பிடுகிறாயா? ஓவியம் ஓவியம் என்று மதிய உணவை விலக்கிவிடுகிறாயா?” என்று கோழிகுண்டு கண்களை உருட்டி அவந்திகாவின் முகம்பற்றி மிரட்டினாள் பாவனா.

எப்போதும் இப்படி விழிவிரித்து மிரட்டும் பாவனாவின் முகம் (adorable) அவந்திகாவின் மனதினை லேசாக்கிவிடும். பாவனாவின் நெற்றியில் தன் ஆள்காட்டி விரலைக் கட்டை விரலால் மடக்கி சுண்டிவிட்டு, “வாயாடி. பெரிதாக எதுவும் இல்லை. ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். நாளையும் சரியாகவில்லையென்றால் மருத்துவமனைக்குச் செல்லலாம். சரியா?” என்று குழந்தைக்குச் சொல்வதுப் போல் சொன்னாள்.

“நிச்சயம் எதுவும் இல்லையே.” என்று மறுமுறை கேட்டாள் பாவனா.

“இல்லை. நம்பு. நாளைக் கடற்கரைக்குப் போகும்போது நிச்சயம் நானும் உடன் வருவேன். இன்று நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க” என்று ‘பாவனா உடன் வந்தால் தான் நினைத்ததை செய்வது கடினம். அதனோடு மேகன் கெடுதல் செய்யக் கூடியவனாக இருந்தால் இதுவரை காத்திருக்க வேண்டியதும் இல்லை.மற்றவர்களும் உடன் இருப்பதால் எச்சரிக்கையாய் இரு என்று பாவனாவிடம் சொன்னால் மட்டும் போதும்’ என்று அவளைச் சமாதனம் செய்தாள்.

“அப்போ சரி.” என்று மேலும் குளிர் பானத்தை அருந்திவிட்டு, ‘எனக்கு மேகனை பிடிப்பதுப் போல், அவந்திக்கும் கார்திக் மீது ஈர்ப்பு ஏற்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு தனிமையான சூழலை ஏற்படுத்தினால்தானே அவர்களுக்குள் புரிதல் வரும் ‘ என்று தனக்குள்ளே தந்திரம் போட்டவளாக பாவனாஅவந்திகாவை வற்புருத்தவில்லை.

மேகனைப் பற்றி நினைத்தப் போதுதான் அப்படி ஒருவன் தன் அருகில் அமைதியாக அமர்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்தாள் பாவனா.

அவனை இன்னமும் அவந்திகாவிற்கு அறிமுகம் செய்யவில்லை என்பதை நினைத்து, உடனே மேகனிடம் திரும்பி, “ஏய் குதிரைவால்! அ.. அங்.. மேகன் மன்னித்துவிடுங்க. நான் உங்களை என் தோழி அவந்தியிடம் அறிமுகம் செய்ய மறந்துவிட்டேன்” என்று மன்னிப்பு கோரும் விதமாகக் கேட்டாள் பாவனா.

சின்ன சிரிப்பை உதிர்த்த மேகன், “நீ அவந்தி அவந்தி என்று வாக்கியத்திற்கு ஒருமுறை என்னிடம் பேசும்போது சொல்லும்போதே உங்க நெருக்கம் உணர்ந்திருக்க வேண்டும். நாம் வந்து அமர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இப்போதுதான் என் நினைவு உனக்கு வருகிறது பாவனா!! ” என்று குறைபட்டவனாக வார்த்தையிலும், பெருந்தன்மையுடனாக முகத்துடனும் சொன்னான்.

மேகனின் வார்த்தைகளை மறுத்துப் பேசாமல், அசடு வலிந்த பாவனா “அதுதான் இப்போது நினைவு வந்துவிட்டதுல்லை?!. கேட்டுக்கோங்க. இவள்தான் என்னோடைய பால்ய சினேகிதி அவந்தி.” அவந்திகாவின் தோள்மீது கைப்போட்டு சொன்னாள்.

மென்னகையிட்ட மேகன், “வணக்கம் அவந்திகா. உங்களைத் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. விமானத்தில் உங்களைப் பார்த்தப் போதும் பேச வாய்ப்பமையவில்லை” என்றான் நேசமாக.

மேகனை பார்த்ததும் எச்சில் விழுங்கிய அவந்திகா அவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பது உணர்ந்து, “வணக்கம் மேகன். பரவாயில்லை” என்றாள்.

பாவனா அவந்திகாவிடம் திரும்பி, “அவந்தி…நினைவிருக்கிறதுதானே? நான் விமானத்தில் பார்த்தப் போது சொன்னேனே அந்த குதிரைவால் இவர்தான். என் அதிருஷ்டமாக அவரும் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ளதான் வந்திருக்கிறார். அவரால்தான் நானும் நேற்றும் இன்றும் வெற்றிப் பெற்றேன்.” என்று மேகனை நோக்கிப் புன்னகைத்து அவந்திகாவிடம் சொன்னாள் பாவனா.

பாவனாவின் வார்த்தையில் கூச்சம் உணர்ந்த மேகன், “அப்படியெல்லாம் இல்லை பாவனா. நீங்களும் எளிதில் கற்றுக் கொண்டு என்னுடன் சரிசமமாகப் போட்டியிட்டதால் நாம் வெற்றிப்பெற்றோம்” என்று அவளது பராட்டை அடக்கமாக மறுத்தான்.

இதனை கேட்ட அவந்திகா, ‘சிறந்த இயக்கமாக இல்லையென்றால்தான் ஆச்சரியபடவேண்டும்.இந்த் போட்டியில் கலந்துக் கொள்ளவென்று இந்த மகர யாளி எந்த பெரிய இயக்குனரின் கனவில் தோன்றி அவர்களின் அனுபவத்தை படித்ததோ!.

மகர யாளிகளின் சிறந்த திறமையே கனவுகளை உருவாக்கி அவர்களின் எண்ணங்களை உணர்வதுதானே. ஆனால் அதற்கு அதிக ஆன்மீக சக்தியை(spiritual energy) பயன்படுத்த வேண்டும். மீண்டும் பழைய சக்தி அளவு சக்தியை(heal) அடைய 3 மாதங்களாவது தவம் செய்ய வேண்டும்.

இந்த மனித உலகில் சக்தியை அப்படி பயன்படுத்தினாலும் மனிதர்களுடன் வாழ்வதால் சண்டை வரும் என்றுமில்லை. அவசரமாக சக்தி வேண்டுமென்றுமில்லை’ . அதனால் அதிக அனுபத்துடன் பவிக்கு அவன் கற்று தந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை’ என்று மறந்துப் போன நினைவுகளை தூசி தட்டி எழுப்பினாள்.

அவளது நினைவலைகள் மேகன் பாவனாவிடம் சரி சரி.. பேசிக்கொண்டே இருக்காதே பாவானா. நாம் கிளம்புவோம். நேரம் ஆகிறது. ” என்று கேட்டதில் நினைவுக்கு வந்தது.

“ம்ம் சரி மேகன். கிளம்பலாம்” என்றாள் பாவனா.

‘தனியாக எங்கே பாவனாவை மேகன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறான்’ என்று அதிர்ந்த அவந்திகா ‘எங்கே?’ என்று கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள்.

Author note:

(1) நடனம் பாட்டு என்று இங்கே நான் குறிப்பிட்டது discotheque. எனக்குச் சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்க.

Advertisement