Beautiful winter panoramic landscape. White horse with long mane galloping across winter snowy meadow.

Advertisement

அத்தியாயம் – 7

சின்ன சிரிப்பை உதிர்த்த (chuckle) பவளன், “நிச்சயம் இளவரசி!” என்றான்.

அவனை மறுமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, மற்றப் போட்டியாளர்களின் ஓவியத்தைத் திரையில் திரும்பிப் பார்த்த வண்ணம்,” ம்ம்…இப்போது போட்டி முடிவைக் கவனிப்போம்” என்றாள் அவந்திகா.

“ம்ம்” என்ற பவளனின் கண்கள் மற்றவர்கள் வரைந்த ஓவியத்தில் இல்லை. கவனம் சிதறமால் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது.

ஒருவழியாக போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது. மனிதர்கள் அறியாத விழாவாக இருந்தப் பின்பும், நேர்த்தியாக வரைந்ததாலும், அந்த விழாவைப் பற்றிய விளக்கமாக அவந்திகா எடுத்துச் சொன்னவிதமும் அனைவரையும் ஈர்க்க அவர்களுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது.

நேற்று வெளியில் வரத் தாமதமானதால் கவலையுற்ற பாவனாவின் முகம் நினைவு வர இந்த அறையிலே நின்றுக் கொண்டு பவளனிடம் பேச அவந்திகா முயலவில்லை. அதனாலே பரிசு அறிவிப்பிற்குப் பின் பவளனை நோக்கித் திரும்பி, “பவளன், வெளியில் சென்று பேசலாம் தானே?” என்று கேட்டாள் அவந்திகா.

“ம்ம்” என்று பவளன் அவளை முன்னே செல்லுமாறு சைகை செய்து அவள்பின் நடந்து சென்றான்.

அனைவரும் அறையைவிட்டு வெளியில் சென்றுக் கொண்டிருக்க, அவந்திகா கூட்டத்தில் ‘தன்பின் பவளன் வருகிறானா?’ என்று திரும்பிப் பார்க்கவில்லை. வெளியில் வந்தப்பின் அவனிடம் பேசலாம் என்று எண்ணி திரும்பிப் பார்த்த அவந்திகா, அவன் இருக்கும் இடம் கண்ணுக்குப் புலப்படாமல் திகைத்தாள்.

இங்கும் அங்கும் அவளது விழிகள் தேடி பின் உண்மையில் அவன் கண்ணில் படாததை உணர்ந்து ‘பவளனுக்கு என்னிடம் பேச விருப்பமில்லைப் போலும். என்னைப் போல எந்த வித இடையூறும் இல்லாமல் மனித உலகில் இருக்கும் காலம்வரை இருந்துவிட்டு போகலாம் என்று இந்த மனிதயாளி வந்திருக்குமோ! எதிர்பாரமல் என்னைச் சந்திக்க நேர்ந்ததால் பயந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அப்படியென்றால், நாமும் இனி அவனிடம் பேச வேண்டும் என்று தொந்தரவு செய்யக் கூடாது. அதுவே இருவருக்கும் நல்லதும் கூட’ என்று எண்ணிக் கொண்டு பெருமூச்சுவிட்டாள் அவந்திகா.

பின் அதிக நேரம் நின்ற இடத்திலே இருந்து யோசித்துக் கொண்டிராமல் ‘பாவனாவும் மற்றவர்களும் போட்டியில் வெற்றிப் பெற்றார்களா என்று தெரியவில்லை. அந்த வாயடி போட்டியில் என்ன படம் பிடித்து வெற்றிப் பெற்றால் என்று கேட்போம். நேற்றே இந்தப் பவளனால் குழப்பமடைந்து அவளிடம் ஒழுங்காகப் பேசவில்லை. இன்று நேற்றைக்கும் சேர்த்து அவளிடம் பேச வேண்டும்’ என்று பவளனை மறந்து பாவனாவை நினைத்து அவளது குழுவினர் வழக்கமாகக் காத்திருந்த இடத்தை நோக்கி திரும்பி நடந்தாள் அவந்திகா.

சற்று தொலைவில் அவள் குழு வினர் மேஜையுடன் கூடிய நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அது பல உணவு விடுதிகளுடன் கூடிய தளம் (food court). பல மேஜைகளும் நாற்காலிகளும் அங்காங்கே ஒவ்வொரு உணவு விடுதிக்கான உணவு விலைகளுக்கான மின் பலகைகளும் இருந்தது. சிலர் உணவுக்காகக் காத்திருந்தும், சிலர் உணவு வாங்க வரிசையில் நின்றுக் கொண்டும் நின்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில்தான், அவந்திகாவின் விழிகள் அவளது குழுவினரை தேடிக் கொண்டிருந்தது. முதலிலே அவந்திகாவை பார்த்துவிட்ட கார்திக் அவர்களைதான் அவள் தேடுகிறாள் என்பதை உணர்ந்து எழுந்து நின்று, “இங்கே அவந்திகா… இங்க பாருங்க…” என்று அவள் திரும்பும் வரை கை அசைத்து அவள் பார்த்ததும், “வாங்க” என்று முகம் மலரப் புன்னகைத்து அவளுக்குச் சைகை காட்டினான்.

அவளும் நேற்று கார்திகிடம் உண்டான நேசம் மலர, பதிலுக்குப் புன்னகைத்து அவர்களை நோக்கி நடந்தாள். நடந்த வண்ணம் அங்கே அமர்ந்திருந்த குழுவினரில் பாவனாவை தேடினாள் அவந்திகா. ஆனால் பாவனா அவள் குழுவினருடன் இல்லை.

பின் சுற்றும் முற்றும் அவளைத் தேடிய அவந்திகா உணவு வாங்கும் வரிசையில் நின்றிருந்த பாவனாவைப்பார்த்து அவளை நோக்கி முதலில் போவோம் என்று நினைத்துக் காலடி எடுத்து வைத்தாள். அடுத்த அடி எடுத்து வைக்கும் முன்னரே பாவனாவுடன் நின்று சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து விக்கித்து நின்றாள்.

‘மீண்டும் இந்த மகரயாளி எங்கு வந்தது. அதுவும் பாவனாவுடம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது என்றால்?’ என்று அவந்திகாவின் மனதில் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு அதிர்ச்சியாக அவந்திகாவின் மனதில் அசரீரி ஒலித்தது.

எதிர்பாரமால் உணர்ந்த அந்த அசரீரி அவளை இமைக்க மறந்தும் நடக்க மறந்தும் காலில் வேரோடியதுப் போல அப்படியே பிரமைப் பிடித்தவள் போல் இருக்கும் இடத்திலே நிற்கச் செய்தது. “மன்னித்துவிடுங்கள் இளவரசி. அவசர வேலையாக நான் அங்கிருந்து கிளம்ப நேரிட்டது. விடைப்பெற்று செல்ல வழி இல்லாமல் கூட்டம் தடுத்திட வேறுவழி இல்லாமல் வந்துவிட்டேன். நாளை நிச்சயம் பேசலாம். கோபமில்லையே?” என்றது பவளனது குரல்.

மேகனை கண்டு அதிர்ந்த அவந்திகாவின் இதயம் அதிலிருந்து மீளும் முன்னே ஆன்ம இணைப்பில்(soul link) தொடர்புக் கொண்ட பவளனின் குரலால் மேலும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. படப்படத்த இதயத்தைத் தன் வலது கையால் மிதமாகத் தடவிய வண்ணம், முத்து முத்தாக வியர்த்துவிட்டிருந்த வியர்வை துளிகளைத் தனது இடது கையின் பின்னால் ஒற்றி எடுத்தாள் அவந்திகா. அவளையே பார்த்திருந்த கார்திக் அவளின் இந்தத் திடீர் மாற்றத்தை உணர்ந்து அவளிடம் ஓடி வந்தான்.

“அவந்திகா என்ன ஆயிற்று. உடலுக்கு எதுவும் செய்கிறதா? முதலில் வந்து உட்காருங்க” என்று அவளது கைப்பற்றி அவர்கள் குழுவிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அமரவைத்தான் கார்திக்.

அவந்திகா, கார்திக் அருகில் வந்தப் போது நிமிர்ந்து பார்த்தோடு சரி. அதன் பின் எதுவும் பேசவில்லை. அவன் தன் கைப்பற்றி அழைத்து வந்ததும் அவளது மூளைக்கு புலப்படவில்லை. தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து தனக்கு அமர வழிவிட்ட ரோஷனும் அவளுக்கு மனதில் படவில்லை.

லேசாக எச்சில் விழுங்கியவண்ணம், அப்படியே சில வினாடி கண் மூடிச் சிந்தனையில் ஆழ்ந்தாள் அவந்திகா. மயக்கம் போல் உணருகிறாளோ என்று எண்ணி குழுவினர் சிறிது விலகி அவளுக்குக் காற்றோட்டம் படர வழிவிட்டனர்.

சுற்றியிருக்கும் சூழல் மறந்து அவந்திகாவின் எண்ணலைகள் பவளனை நினைத்துப் படர்ந்தது. ‘ஆன்ம இணைப்பு(soul link) (1). குறைந்தது 5 சக்கர சக்தி நிலையை அடைந்தவர்களால் மட்டுமே ஆன்ம இணைப்பை உருவாக்க முடியும். 7 சக்கர(2) சக்தி நிலையும் ஆன்மீக(spiritual Energy) ஆற்றலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

ஒவ்வொரு சக்கர நிலையைக் கடப்பதற்கும் பல வருடங்கள் தவம் இருக்க வேண்டும். அவளைப் போல வெகு ஒரு சிலரே அதிர்ஷ்டமுற்றவர்களாக விரைவில் சக்கர நிலைகளைக் கடக்க முடியும். மனிதயாளிகளுக்கு சக்கர நிலையை அடையும் சக்தி இல்லை. அப்படி இருக்க எப்படி மனிதயாளியான பவளனால் ஆன்ம இணைப்பை உருவாக்க முடிந்தது.

ஒருவேளை பவளன் மனிதயாளி இல்லையென்று சொன்னாலும், அவனது சக்தி நிலை சொல்லும் கைக்காப்பு எங்கே.? இவையணைத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், என்னுடைய ஆன்ம இணைப்பின்(soul link) கடவுச்சொல் (password) எனக்கு யாரென்றே தெரியாத இந்தப் பவளனுக்கு எப்படி தெரிந்தது.? என்று பல கேள்விகள் அவந்திகாவின் மனதிரையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் அவள் அப்படி அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை, அவந்திகாவின் பதிலுக்காகக் காத்திருந்த பவளன், அவள் வெகுநேரம் ஆகியும் பதிலளிக்காததால் மீண்டும் ஆன்ம இணைப்பின் மூலம் “இளவரசி?” என்று அழைத்துப் பேசியப் போதே நினைவுக்கு வந்தாள்.

ஆனால் பல கேள்விகளுடன் இருந்த அவந்திகா மனதில் இருந்த அழுத்ததை மறைத்து “ம்ம்… கோபம் இல்லை.” என்று ஒற்றை வரியில் ஆன்ம இணைப்பின் மூலம் பதிலளித்தாள். பின் விழி திறந்து மேகன் நின்றிருந்த இடத்தை நோக்கி ஆராயும் கண்ணுடன் பார்த்தாள்.

இவ்வளவு அவளுள் நிகழ்ந்துக் கொண்டிருக்கும்போது அருகில் அமர்ந்திருந்த கார்திக், முகம் வெலுத்து தெரிந்த அவந்திகாவை கண்டு பதட்டமுற்ற ரோஷனை தண்ணீர் வாங்கி வர அனுப்பியிருந்தான்.

அவந்திகா கண்களைத் திறக்கவும் அவன், “இந்தாங்க அவந்திகா… முதலில் தண்ணீர் குடிங்க” என்று தண்ணீர் குடுவையை (bottle) அவளிடம் தருவதற்கும் சரியாக இருந்தது.

அவன் குரலில் முகம் திருப்பிய அவந்திகா, ஏற்கனவே ஒரளவு தன்னை கட்டுபடுத்தி இருந்த முகத்துடன் ஒரு புன்னகையை சிந்திவிட்டு, “நன்றி ரோஷன்” என்றாள்.

அவள் தண்ணீர் குடிப்பதற்காகக் காத்திருந்த காயத்ரி “அவந்திகா என்னாச்சு… இன்னமும் தலைவலி இருக்கிறதா? நேற்றே பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிகவும் முடியவில்லையென்றால் மருத்துவமனைக்குச் செல்லலாமா?” என்றாள்.

அக்கறையுடன் கேட்ட காயத்ரியிடம் லேசாக இதழ் விரித்து, “லேசாக வலி இருக்கிறது. இப்போது பரவாயில்லை. மருத்துவமனை செல்ல வேண்டுமென்று இல்லை” என்றாள் அவந்திகா.

அவள் பதட்டத்தை நேரில் கண்டதைப் போல மீண்டும் ஆன்ம இணப்பில், “அந்த மகரயாளியிடம் எச்சரிக்கையாக இருங்க. இப்போது நான் செல்ல வேண்டும். இணைப்பைத் துண்டிக்கிறேன். பிறகு பேசலாம்” என்றான் பவளன்.

நேரில் கண்டதுப் போல் பேசிய பவளன் பேசியதில், சந்தேகமாகத் தன் அருகில் எங்கேயும் இருக்கிறானா? என்று நிமிர்ந்து தன்னை சுற்றி பார்த்தாள் அவந்திகா.

Author Note:

(1) Soul Link -ஆன்மாவிற்கும் ஆன்மாவிற்கும் செய்தி தொடர்புக்கான இணைத்தலை ஏற்படுத்த முடியும். அதனோடு ஒரு ஆன்மா மற்றொரு ஆன்மாவுடன் connection create பண்ண ஒவ்வொருவரும் password வைத்திருப்பர்.

(2). 7 chakra – உடலில் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப இந்தச் சக்கரங்கள் நகரக்கூடும். இந்தக் கதையில் சொல்லப்படும் soul binding 5 சக்கர சக்தி நிலையைக் கடந்தவர்காளாலே உருக்க முடியும்.

Advertisement