Advertisement

அத்தியாயம் – 5

பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும் ஓய்வறையின் வாயிலில் ஒரு கண்ணுமாக அவந்திகா காத்திருந்தாள்.

எவ்வளவு நேரம் அவள் காத்திருந்தாளோ தெரியவில்லை.அறையில் இருந்த அனைவரும் கிளம்பி தனியாளாக அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டப் பின்பும் பவளன் வெளியில் வரவில்லை.இருந்தும் உண்மை அறிந்திட காத்திருந்த அவந்திகாவிற்கு வெளியில் இருள ஆரம்பித்ததும் தெரியவில்லை.

அப்போது, “ஏய் அவந்தி.இங்குத் தனியாக அமர்ந்துக் கொண்டு என்ன செய்கிறாயடி?போட்டியில் கலந்துக் கொண்ட அனைவரும் வெளியில் வந்துவிட்டனர்.யாரும் இல்லாமல் இங்கு அமர்ந்துக் கொண்டு என்ன சொப்பனம் காண்கிறாய்?வாப்போகலாம்.”என்று விடுவிடுவென உள்ளே வந்த பாவனா அங்கு அமர்ந்திருந்த அவந்திகாவின் கைப்பற்றிச் சொல்லிக் கொண்டே அவளது பதிலுக்கும் காத்திராமல் அவளை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.

பாவனா வந்து சொன்ன பிறகே அந்த அறையில் அவள் மட்டும் அமர்ந்திருப்பதை உணர்ந்த அவந்திகா பாவனாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து, “தலைவலிப் போல இருந்தது அதுதான் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வரலாமென்று இருந்தேன்” என்று வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.

‘இவளுக்குத் தன்னை பற்றியும் தெரியாது.தான் இளவரசி என்பதும் தெரியாது.அப்படி இருக்க இவளிடம் அந்த பவளனுக்காகக் காத்திருந்தேன் என்று சொல்வது நல்லதல்ல.பின் ஏன்?என்ன?என்று ஆயிரம் கேள்விகள் வரும்’ என வேறெதுவும் பேசாமல் உடன் நடந்தாள்.இருந்தபோதும் மீண்டும் அவளிருந்த அறையில் சுற்றும் முற்றும் ஒருமுறைப் பார்த்துவிட்டுப் பின் ஓய்வறையின் வாயிலை ஒருமுறைப் பார்த்து, ‘என் கண்ணில் அகப்படாமல் எப்படி வெளியில் சென்றான்?’என்று யோசித்த வண்ணம் அறையை விட்டுப் பாவனாவுடன் வெளியில் வந்தாள் அவந்திகா.

வெளி அறைக்கு வந்த பின்பே பெருமூச்சுவிட்டு நின்று அவந்திகாவின் பக்கம் திரும்பிக் கோபமும் அக்கறையுமாகப் பாவனா, “என்ன தலைவலி?எது எப்படி இருந்தாலும் நாம் தங்கும் அறையில் சென்று ஓய்வெடுக்கலாம்தானே.இப்படி தனியாக யாருமில்லாத இந்தப் புது இடத்தில் அமர்ந்திருப்பது சரியா?”என்று விளையாட்டுதனமின்றி ஏதோ பதட்டம் குறையாதவளாகச் சொன்னாள்.

அதுவரை அந்தப் பவளனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த அவந்திகா பாவனாவின் படப்படத்த குரலில் ‘வெகுசில சமயங்களிலே பாவனா பேச்சில் தீவிரமுடன் பேசுவாள்.கொஞ்சம் தாமதம் ஆனதுதான் என்றப் போதும் இவள் எதற்கு இப்படி பதட்டப்படுகிறாள்’ என்று புரியாமல், “அதுதான் நீ வந்துவிட்டாயே.இனி எனக்கென்ன கவலை.வாப்போகலாம்.இனி அப்படி செய்யவில்லை போதுமா” என்று விளையாட்டாகப் பேசி பாவனாவின் மனதை சமாதனம் செய்ய முயன்றாள்.

அவந்திகா பேசி முடிக்குமுன்னே பாவனா என்னத் தோன்றியதோ அவந்திகாவின் கைப்பற்றி நிறுத்தி “நாங்க எல்லோரும் எவ்வளவு பயந்துவிட்டோம் தெரியுமா?”என்று முகத்தில் சிறிது அச்சம் பரவக் கேட்டாள் பவனா.

பாவனாவின் அச்சத்தினால் வெலுத்திருந்த முகத்தைப் பார்த்துப் பேச்சிழந்து அவளை அணைத்துக் கொண்டாள் அவந்திகா. “ஏய் என்ன பவி.எதை நினைத்து இந்தப் பயம்.என்னைத் தற்காத்துக் கொள்ள எனக்குத் தெரியாதா?”என்று அவள் முதுகை வருடினாள்.

அவந்திகாவின் அணைப்பில் இதமாக உணர்ந்த பாவனா, “பெண்களின் பாதுகாப்பு எந்த நேரத்திலும் கேள்விகுறியாகலாம்.என்னென்னமோ செய்திகளில் படிப்பதில்லையா?அதுதான்.அதுவும் இது மும்பை.தெரியாத ஊர்.ஏதேனும் அவசர உதவிக்குக் கூட யாரை எங்கு போய்ப் பார்ப்பது” என்று லேசாக உடல் நடுங்க சொன்னாள்.

அவளது உடல் நடுக்கத்தை உணர்ந்த அவந்திகா, ‘இந்தப் பெண் என்மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறது.என்னென்னமோ எண்ணி பாவம் மிகவும் பயந்துவிட்டால் போல.என்னுடைய மாயம் மந்திரம் என்னிடமில்லை என்றப் போதும் என்னுடைய போர் பயிற்சி முறையின் ஒவ்வொரு அசைவும் மனித உடலே என்ற போதும் இமியும் மறக்காமல் இருக்கு.என்னைத் தற்காத்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்று இவளுக்கு எப்படி சொல்வது’ என்று ஒரு பெருமூச்சுவிட்டு, “சரி இனி உன்னிடம் சொல்லாமல் நான் எங்கும் தனியாக இருக்கவில்லை சரியா?இப்போது வா தங்கும் விடுதிக்குச் செல்லலாம்” என்று ஆருதலாகச் சொன்னாள்.

ஏற்கனவே வெகுநேரம் காத்திருந்ததாலும் போட்டியின்போது ஒழுங்காக உணவு எடுத்துக் கொள்ளாததாலும் களைத்து பசித்திருந்த பாவனா,அவந்திகா சொன்னதைக் கேட்டதும் கவலை மறந்து மீண்டும் துடுக்குதனம் மீண்டவளாக அவந்திகாவின் அணைப்பிலிருந்து விலகி, “ம்ம்… சொன்னப்படி செய்ய வேண்டும்” என்று மீண்டும் ஒருமுறை அவந்திகாவிடம் உறுதி வாங்கிக் கொண்டு, “வா வா.எனக்கு ரொம்பவும் பசிக்கிறது.உனக்காகக் காத்திருந்து காத்திருந்து என் காலுக்கு அடியில் வேர் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்” என்று தன் கால்களை ஒன்று மாற்றி ஒன்றாகத் தூக்கிப் பார்த்தாள்.

அதனைப் பார்த்த அவந்திகா சட்டெனச் சிரித்துவிட்டு,தன் எதிரே நின்றிருந்த பவனாவின் நெற்றியில் தன் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் மடக்கி சுண்டிவிட்டு, “உன் குறும்பு தனத்திற்கு அளவே இல்லை.வாயாடி.வாப்போகலாம்” என்று அவள் கைப்பற்றி வெளியில் வந்தாள்.

வெளியில் வந்ததும்,எங்கிருந்தோ அவசரமாக வந்துக் கொண்டிருந்த கார்திக் கவலையாக அவந்திகாவைப் பார்த்து, “என்ன ஆச்சு அவந்திகா?ஏன் எல்லோரும் வந்தப் பிறகும் நீங்க வெளியில் வரவில்லை.யாரேனும் உங்களை அங்குக் காத்திருக்க சொன்னார்களா?”என்று பாவனாவைப் போலவே கேட்டுக் கொண்டு நின்றான்.

அதற்கு அவந்திகா பதில் சொல்லுமுன்னே, “அப்படி எதுவுமில்லை கார்திக்.உங்க ஆளுக்குத் தலைவலியாம்.அதுதான் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டு வர நினைத்திருக்கிறாள்.”என்று கண்ணடித்தால் பாவனா.

மற்றவர்களைத் தங்கும் விடுதிக்குத் தானூர்தியில்(car)அனுப்பிவிட்டு வந்து அவந்திகாவையும் பாவனாவையும் அழைத்துச் செல்லவென்று கவலையும் பதட்டமுமாக மீண்டும் ஓடி வந்த கார்திக்கின் முகம் பாவனாவின் உன் ஆள் என்று அவந்திகாவைச் சொன்ன முறையில் பிரகாசமானது.ஒரு பெருமூச்சுவிட்டு, “அவ்வளவுதானே!நான் என்னமோ என்று மிகவும் பயந்துவிட்டேன்” என்றான்.

பின் அவந்திகாவை பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தேவை இல்லாமல் வேறு எதுவும் பேசாமல், “அப்படியென்றால் முதலில் நம் அறைச் சென்று ஓய்வெடுக்கலாம்.நான் உங்க அறைக்கே உணவை அனுப்ப சொல்கிறேன் அவந்திகா.மற்றவர்களை உங்களுக்குக் காத்திருக்காமல் உண்டுவிட்டு ஓய்வெடுக்கச் சொல்கிறேன்.ஆனால் இதுப்போல் இனி தனியாக எங்கும் அமர்ந்திருக்காதீர்கள்.எதுவென்றாலும் என்னிடம் சொல்லுங்க. ” என்று அக்கறையாக அவந்திகாவிடம் சொன்னான்.

காதலனாக ஏற்க விருப்பமில்லை என்ற போதும் கார்திக்கின் அன்பும் அக்கறையும் அவந்திகாவிற்கு தோழமையை தர ஒரு சிறு புன்னகையை அவனை நோக்கி உதிர்த்து, “புரிகிறது.இனி இவ்வாறு நடக்காது”என்றாள்

அவளது புன்னகையிலும் தெளிந்த வார்த்தைகளிலும் எதுவும் கைமீறி போய்விடவில்லை என்பதை உணர்ந்து பெருமூச்சுவிட்டான் கார்திக்.பின் அவனது கையிலிருந்து கைப்பேசியை எடுத்து ஏற்கனவே தங்கும் விடுதிக்குச் சென்ற மற்ற நால்வருக்கும் தொடர்புக் கொண்டு பேசியவண்ணம் சரி வாங்கப் போகலாம்” என்றான்.

அவந்திகாவின் புன்னகை பாவனாவிற்கும் வியப்பை அளித்தது.அவந்திகா பொதுவில் யாரை நோக்கியும் இதுபோல் தோழமையோடு புன்னகைக்க மாட்டாள்.இந்த மாற்றம் பாவனாவிடம் குறும்புதனம் எட்டி பார்க்கச் செய்திட, “என்னடி புன்னகை.உன் ஆள் என்றதும் வெட்கமா?”என்று கிண்டலடித்தாள் பாவனா.

பாவனாவின் வார்த்தையில் நினைவுக்கு வந்த அவந்திகா பாவனாவின் கையினைக் கிள்ளி, “ஏய் வாயாடி.என்னடி உன் ஆள் அது இது என்கிறாய்.எனக்குதான் அவர்மீது விருப்பமில்லை என்றேனில்லை” என்று கிசுக்கிசுப்பாகப் பாவனாவிடம் கடிந்துக் கொண்டாள் அவந்திகா.

அவந்திகாவின் கவலை உணர்ந்த போதும் கார்திக்கின் நல்ல குணமும் அவனுக்கு அவந்திகாவின் மீது இருந்த அக்கறையும் அதனோடு அவந்திகாவிடம் தெரிந்த மாற்றமும் உணர்ந்த பாவனா,விளையாட்டுத்தனம் இல்லாமல் “இல்ல அவந்தி.பாவம் அவர்தான் நீ வெளியில் வருவதற்குள் என்னைவிட அதிகம் பயந்துவிட்டார்.அவர்தான் அவசரமாகச் சென்று உன்னைத் தேட போட்டி அறைக்குச் செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தார்.அவரே உள்ளேயும் வந்திருப்பார்.

நான்தான் அனைவரும் களைத்து தெரிகிறார்கள் என்று மற்றவர்களைத் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று சேர்த்துவிட்டு வாங்க என்றேன்.அவரும் மனமே இல்லாமல்தான் சென்றார்.பார் இருந்தும் எவ்வளவு வேகமாக மீண்டும் ஓடி வந்திருகிறார்.என்னைக் கேட்டால் நான் சொல்கிறேன் கேள்.அவரைவிட உன்னை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளக் கூடியவர் யாரும் இருக்க முடியாது.அதனால் அவருடைய காதல் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்.”என்று வெகு தீவிரமாகச் சொன்னாள்.

பாவனாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவந்திகா ஒரு பெருமூச்சுவிட்டு, ‘இவளுக்கு என்னவென்று சொல்வது.காதல் திருமணமெல்லாம் என் வாழ்வில் எளிதல்ல என்பதை எப்படி புரிய வைப்பது.யாளிகளின் காதலும் திருமணமும் ஆன்மாவிற்கும் ஆன்மாவிற்குமான பந்தம் (soul binding). யாளிகளின் ஆன்ம ஆற்றலைப் பொருத்து அவர்களின் ஆயுட்காலம் மாறுபடும்.குறைந்தபட்ஷமாகப் பலவீனமாக யாளியின் ஆன்மா கூட1000வருடங்களாவது வாழக்கூடும்.ஆனால் மனிதர்களின் வாழ்வோ அதிகமாக100வருடங்கள்.அதன் பிறகு அவர்களின் ஆன்மா அவர்களின் பாவ புன்னியங்களைப் பொறுத்து மறு ஜன்மமோ மோட்ஷமோ அடையும்.

விருப்பம் இருந்தாலாவது இந்தச் சிக்கலுக்கான காலவேறுபாட்டை கையாள்வதற்கான முறைப் பற்றி யோசிக்கலாம்.அதுவும் இல்லை.நல்ல மனிதனாக இருக்கும் இந்தக் கார்திக்கிடம் என்னவென்று சொல்லிப் புரியவைப்பது.அவரிடம் சொல்வது இருக்கட்டும்.இங்குப் பாவனாவே என்னைத் தொல்லை செய்யக்கூடும் போல் இருகிறதே!’என்று கார்திக்கிடம் கதைப் பேசிச் சிரித்துக் கொண்டே வந்த பாவனாவை ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்த பாவனா அவந்திகாவைப் பார்த்துக் கண்ணடித்து சப்பதம் வராமல், “என்னடி நான் சொல்வது புரிந்ததா?”என்று வாயசைத்தாள்.

அவளை பார்த்துக் கண்ணை எட்டாத புன்னகையை உதிர்த்த அவந்திகா,மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். ‘இது என்ன தொல்லையாகும் போல் இருக்கிறது.என் பெற்றோரிடம் தான் யாளி என்ற உண்மையை சொல்லித் திருமணம் பற்றிப் பேசக் கூடாது என்று உறுதி வாங்கியதுப் போலப் பாவனாவிடமும் சொல்லி விட முடியாது?நால்வருக்கு தெரிந்தால் அது ரகசியமும் ஆகாது என்று யோசித்த வண்ணம் பொய்யாகச் சொன்ன தலைவலி உண்மையில் வந்துவிட தன் தலையைப் பற்றியவண்ணம்,மீண்டும் அருகில் வந்து நின்ற பாவனாவிடம் “அதுகுறித்து பிறகு பேசலாம் பவி.ஆனால் இனி இதுப் போல் உன் ஆள் என்றெல்லாம் பேசாதே” என்றாள்.

முன்பு புன்னகைத்த அவந்திகா இப்போது முகம் கருத்துத் தெரிவதை புரிந்துக் கொள்ள முடியாமலும்,அவளது தலைவலி அதிகமாகிவிட்டதை உணர்ந்து அவளை மேலும் தோண்டி துருவாமலும், “சரி பிறகு பேசலாம்” என்று சொன்னாள் பாவனா.

அதன்பிறகு அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்தப்படி அறைக்கு வந்து ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் போட்டிக்கும் தயாராகி கிளம்பிவிட்டனர்.

இன்றும் முந்தைய நாள் போட்டியைப் போலவே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதனைக் கொண்டு ஒவ்வொரு குழுவும் போட்டியில் போட்டியிட்டனர்.

முந்தையனாள் காணாமல் போயிருந்த பவளன் இன்று அவந்திகாவிற்கு முன்பே வந்து அவளுக்காகக் காத்திருந்தான்.அவந்திகா வந்ததும், “போகலாமா அவந்திகா?”என்று கேட்டுக்கொண்டு நின்றான்.இன்றும் நேற்றையப் போலவே வெள்ளை நிறத்திலே மேல் சட்டை அணிந்திருந்தான்.அவந்திகாவும் வெள்ளை நிற தாவணியும் நீல நிற பாவடை சட்டையும் அணிந்திருந்தாள்.

அவனைப் பார்த்ததும் நேற்று கேட்க வேண்டுமென்று எண்ணியதை அவந்திகா அவனிடம் கேட்டாள். “பவளன்.என்னை ஏன் இளவரசி என்று நேற்று சொன்னீங்க” என்று அவசியமற்று வலவலக்காமல் நேரிடையாகக் கேட்டாள்.

அதற்குச் சத்தமில்லாத சின்ன சிரிப்பை(chuckle)உதிர்த்துவிட்டு அவந்திகாவுடன் நடந்த வண்ணம் “உங்களை அந்த அரண்மனையில் இளவரசியாக எண்ணியதால் அப்படி சொன்னேன்” என்று அசுவரசியமே இல்லாதவனாகப் போட்டிக்கான தலைப்பை எடுத்துக் கொண்டு கண்ணாடி அறையை நோக்கி நடந்தான்.

அவனது பதிலில் விழிக் கூர்மை இன்னும் அதிகம் அடைந்த அவந்திகா, ‘இளாவரசி என்று கற்பனையா!உண்மையில் இது எதார்தமாக அமைந்த ஒற்றுமையா?இல்லை இவனிடம் ஏதேனும் ரகசியம் இருக்கிறதா?’என்று நினைத்தாள்.

அதற்குள் கண்ணாடி அறைக்குள் வந்துவிட்ட பவளனைப் பார்த்து அவனைத் தொடர்ந்து வந்த அவந்திகா,அதே ஆராய்ச்சி பார்வையுடன், “ஓ… அப்படிதானோ!அது இருக்கட்டும் அந்த அரண்மனையை நேரில் பார்த்ததுப் போல் தத்ரூபமாக வரைந்தீர்களே!எப்படி?”என்று அவன் முக மாறுதலில் உண்மை அறிய முயன்றாள்.

அவள் தன்னை கேள்வியுடன் பார்ப்பது தெரிந்தப் போதும் தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பதுப் போல இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு, “நேரில் பார்த்ததாகதான் வைத்துக் கொள்ளுங்களேன்” என்று அவளுக்குப் பதில் அளித்துவிட்டு,அவள் மேலும் எதுவும் கேள்விக் கேட்டுவிடாமல் கையிலிருந்த தலைப்பினை பிரித்துப் படித்தான் பவளன்.

அவன் சொன்ன பதிலை முழுமையாக மனதில் பதிக்குமுன் பவளன் இன்றைய தலைப்பு ‘ஒரு கலாச்சார விழா.நீங்க முதல் பாதியை வரையுங்கள்.”என்று அவளது பதிலுக்கும் காத்திராமல் சிவப்பு நிற பொத்தானை அழுத்திவிட்டு முந்தைய நாள்போல அவளுக்குக் கைக்காட்டி வழி அனுப்பினான்.

‘மேலும் பேசாமல் உள்ளே செல்லுங்க’ என்பது போலான பவளனின் செய்கையும் பார்வையும் அவந்திகாவை எதுவும் பேசாமலும் அவன்மீதான ஆராயும் பார்வை தளர்த்தாமலும் போட்டி அறைக்குள் நுழையச் செய்தது.பவளனின் வார்த்தையில் அவந்திகாவிற்கு அவன் மீதானா சந்தேகம் 50%அதிகமானது.

‘நேரில் பார்த்தாக நான் வைத்துக் கொள்ள வேண்டுமா?அந்த அரண்மனை அழிந்து கிட்டத்தட்ட400வருடங்கள் ஆகிறது.அதைப் பார்த்தவனாக இருப்பதென்றால் குறைந்தது 400வயதான யாளி உலகத்தைச் சேர்ந்த மனிதன்.மனிதந்தானா?இல்லை யாளியா?கையில் எதுவும் மேகனைப் போல யாளிகளுக்கான கைக்காப்பு இல்லையே!

மனிதனாகதான் இருக்க வேண்டும்.இருந்தும் எந்தவித தீய எண்ணம் உள்ளவனாகத் தெரியவில்லை.மேகனை காணும்போது ஏற்படும் பதட்டம் இவனை பார்க்கும்போது உண்டாகவில்லையே.இவன் யார்?என் சந்தேகம் சரிதானா என்று முதலில் தெளிவு படுத்திக் கொள்ளா வேண்டும்’ என்று தோழமையில்லாத புன்னகை அவள் உதட்டில் மின்ன ‘இப்போது நான் வரையும் படத்தின் மீதிப் பாதியை எந்தவித குறைப்பாடும் இல்லாமல் இவன் வரைந்தால் கண்டிப்பாக இவன் யாளி உலகத்திலிருந்து வந்தவனாகதான் இருக்க வேண்டும்.

இன்றைய போட்டி முடிவில் இவனை இனம் கண்டுக் கொள்ளலாம்.’என்று போட்டியின் வெற்றி தோழ்விப் பற்றிய எண்ணமின்றி பவளனின் அடையாளம் அறிவது மட்டுமே குறிக்கோளாக மனித உலகில் இல்லாத கலாச்சாரமாகவும் யாளி உலகில் அதுவும் பரி யாளியின் வம்சத்தில் நேர்த்தியாகக் கொண்டாடப்படும் விழாவான ‘தாமரை இலை தீபத்திருநாளின்’ நிகழ்வை வரைய ஆரம்பித்தாள்.

Advertisement