Advertisement

அத்தியாயம் – 2

பாவனாவிற்கு பதில் அளித்த போதும், ‘உண்மையில் அந்த வெள்ளை நிற ஆளின் மீது தனக்கு விருப்பமா? ‘ எனத் தனக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டாள் அவந்திகா.

பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு, ‘சே சே அப்படியெல்லாம் இருக்காது. ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொள்வதெல்லாம் மனிதர்களுக்கு இயல்பாக நடக்கும் ஒரு வாழ்க்கை முறை. ஆனால் நான் இப்போது இருப்பது மனித உடல் என்ற போதும் என்னுடைய மனம் இன்னமும் யாளியின் நிலையில் தான் இருக்கிறது. என் ஆன்மீகசக்தி (spritual Energy) என் புனிதத்தன்மையை பொறுத்து இருக்கிறது.

அதனால் காதல் விருப்பம் என்று என் எண்ணங்களை அலைய விடுவது சாத்தியமில்லை. அவரை நான் பார்க்க விரும்புவது நன்றி சொல்ல மட்டுமே. அந்தப் பாம்பின் தீண்டலில் தன்னை காப்பாற்றியதற்காக நன்றி சொல்லதான். அதனோடு அவருடையை இந்த இறகினை திருப்பித் தந்திடவும் கூட.’ என்று தன் நெஞ்சோடு பதிந்திருந்த இறகினை ஒருமுறை தொட்டு பார்த்தாள்.

‘மற்றபடி அந்த மனிதர் பாவனா சொன்னதுப் போல் யாரை திருமணம் செய்துக் கொண்டு எத்தனை பிள்ளைகளுடன் இருந்தால் என்ன. இல்லை ஏற்கனவே திருமணம் ஆகியவராகக் கூட இருந்திருக்கலாம். ‘என்று தன்னுள்ளே இருந்த குழப்பத்திற்கும் சேர்த்து யோசித்து தீர்வுக் கண்டாள்.

இவ்வாறாக அவந்திகாவின் மன நிலை இருக்க, இவை எதுவும் அறியாமல், “ம்ம்… அந்தப் பயம் இருக்கட்டும்”என்றாள் பாவனா. அதிக நேரம் வெளியில் காத்திருக்கவிடாமல் கார்திக் தானுந்தி வண்டியுடன் (car) வந்தார்.

வண்டியிலிருந்து இறங்கிய கார்திக் பாவனாவை, “ஹே பாவனா. தாமதம் இல்லாமல் கிளம்பிவிட்டீர்களே!”என்று பேசியவண்ணம் அவர்கள் அருகிலிருந்த பையை(luggage) எடுத்துக் தானுந்தியின் பின் வைத்தான்.

“ஆமாம் கார்திக். விமானம் நமக்காகக் காத்திருக்காது பாருங்க. அதுதான் சரியாகத் தயாராகிவிட்டோம்”என்று காலை வாரினாள் பாவனா.

அதற்கு உடனே சிரித்துவிட்ட கார்திக், “வாயாடி. சரிதான் போ.” என்று சத்தமிட்டு பேசியவன், அமைதியாக அங்கு நின்றிருந்த அவந்திகாவை கால் முதல் தலைவரை ஒருமுறை பார்த்துவிட்டுத் தனக்கானவள் என்ற கர்வம் மனதில் படரப் புன்னகையிட்டு குரல் மெலிந்து, “அவந்திகா. நீங்க இந்தத் தாவணியில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். “ என்றான்.

தன் விருப்பத்தைச் சொன்னபிறகு கார்திக் இதுபோல அவள் அழகைப் பற்றி அவந்திகாவிடம் சொல்வது அதிகமாகி இருந்தது. இவ்வாறு மற்றவர்கள் அவந்திகாவிடம் இயல்பாகச் சொல்வதுதான். இருந்தப் போதும் இன்று கார்திக்கின் மூலம் அவந்திகாவிற்கு இதைக் கேட்கப் பிடிக்கவில்லை. ‘இவரை மன வருத்தம் வராமல் எப்படி விலக்குவது’என்று புரியாமலும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கார்திக்கின் பார்வை தான் பேசாமல் விலகாது என்பதை உணர்ந்தும், “நன்றி கார்திக். கிளம்பலாமா? மற்ற எல்லோரும் எங்கே?” என்று பொதுவாகக் கேட்டாள் அவந்திகா.

எப்போதும் அவந்திகாவின் வார்த்தைகள் குறைவு என்பதால் பேதமெதுவும் உணராமல், “வண்டியில் ஏறிக் கொள்ளுங்க. மற்றவர்கள் இன்னொரு வண்டியில் கிளம்பிவிட்டார்கள். நாம் சென்றதும், நுழைவுவாயில்(gate) 16 க்கு நேராகப் போக வேண்டியதுதான். அவர்களை அங்குப் போய்க் காத்திருக்க சொல்லியிருகிறேன்.” என்றான் கார்திக்.

இதனைக் கேட்ட பாவனா, “ஓ. அப்படியா நம்மோடு வருவார்கள் என்று எண்ணினோம். “என்று வண்டியில் ஏறி அமர்ந்தாள். பின்னோடு அவந்திகாவும் ஏறிக்கொள்ள வண்டி விமான நிலையத்தை நோக்கிக் கிளம்பியது.

அமைதியாகச் சென்றுக் கொண்டிருந்த வண்டியில் பாவனாவே அந்த அமைதியை கலைத்து பேசத் தொடங்கினாள். “மும்பையில் தங்குவதற்கான இடமெல்லாம் பதிவாகிவிட்டதா கார்திக். “ என்று கேட்டாள்.

அதற்குப் பதிலாக, முன் இருக்கையில் அமர்ந்திருந்த கார்திக் தலை திருப்பி அவந்திகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாம் தயார். நீங்கச் சொல்ல வேண்டியதுதான் மீதம்”என்றான்.

அவனது பதிலின் இரட்டை பொருள் உணராமல் பாவனா, “என்ன, சொல்ல வேண்டியதா? என்ன சொல்ல வேண்டும்”என்று கேட்டாள்.

அமைதியாக ஜன்னலில் வேடிக்கை பார்த்திருந்த போதும் அவந்திகாவிற்கு கார்திக்கின் வார்த்தைகள் காதில் விழாமலில்லை. ‘எப்படி விருப்பமில்லை என்று கார்திக்கிடம் சொல்வது. விருப்பமில்லை என்று அவனிடம் சொன்னால் பாவனாவிற்கு உதவி செய்வதை விட்டுவிடுவானோ. இப்போதுதான் பாவனா அவள் துறையில் நிறைய கற்றுக் கொண்டதாகச் சொல்கிறாள். என் பதில் அவளுக்குப் பாதிப்பாகிவிடுமா? அதற்காகப் பொய்யாகக் காதல் வளர்க்கவும் முடியாதே!’ என்று தனக்குள்ளே பலதும் யோசித்து சோர்ந்தாள்.

உடனே வார்த்தைகளைத் திருத்தியவனாக, “இல்லை இல்லை. விடுதிகள் எல்லாம் தயார்தான் அது நாம் செல்ல வேண்டியதுதான் மீதம் என்றேன்“ என்றான் கார்திக். அதன் பிறகு கார்திக்கிற்கு கைப்பேசியில் அழைப்பு வந்துவிட அவர்களுடன் பேசியவண்ணம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். எல்லாரும் பதிவு (Check in) செய்து முடித்தப் பின் நுழைவுவாயில் 16 க்கும் வந்துவிட்டனர். மற்ற 4 வரும் இவர்களைப் பார்த்ததும் முகமன் சொல்லி அவர்கள் போட்டிக்கு என்னவெல்லாம் செய்வதென்று முடிவடுத்திருப்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ரோஷனும், காயத்ரியும் கதை எழுதுபவர்கள் என்பதால் அதுகுறித்து இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டனர். கவிப்பிரியனும், மாலதியும் அசைவூட்டப்பட்ட படம் (animation) தொடர்பான குறிப்புகளைப் பற்றி ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பாவனா இயக்கம்பற்றிய அவளது கேள்விகளைக் கார்திக்கிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அவந்திகா தனித்துவிடப்பட்டதுப் போல் இருந்தப் போதும் கண்கள் மூடி அவளது கற்பனையில் ஓவியத்தின் பிம்பத்தைச் சித்தரித்துக் கொண்டிருந்தாள்.

இன்னும் 40 நிமிடங்களில் விமானம் புறப்பட இருப்பதை பார்த்துவிட்டு, பாவனாவிடம் சொல்லிவிட்டு ஓய்வறைக்கு(restroom) எழுந்துச் சென்றாள். மீண்டும் நுழைவுவாயில் 16 க்கு போக நினைத்துத் திரும்பியவள், அவள் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் ஒருவன் நின்றுக்கொண்டு பாவனாவிடம் எதையோ கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

அவளது உள்ளணர்வு ‘எச்சரிக்கை’என்று சொல்ல அருகில் செல்ல நினைத்த அவந்திகாவின் கால்கள் சற்று தூரத்தில் நின்று ஒரு தூணின் மறைவில் ஒதுங்கியது. என்ன பேசுகிறார்கள் என்று தெரியாதப் போதும் அந்த ஆளைக் கூர்ந்து கவனிக்க செய்தாள். வானத்தின் நீல நிறத்தில் மேல் சட்டையும், குருந்தாடியும் (French bear) தோள்வரை வளார்ந்திருந்த தன் தலை முடியை இழுத்து பிடித்துக் குதிரைவால் (ponytail) போலக் கட்டியும் இருந்தான் அந்த ஆள்.

அவனது கையில் நீல நிறத்தில் முத்தால் ஆன காப்பை (bracelet) பார்த்ததும் அந்த ஆள்மீது ஏற்பட்ட சந்தேகம் வலுப்பெற்றது. ‘நிச்சயம் இவன் யாளி உலகத்திலிருந்துதான் வந்திருக்கிறான். அதுவும் மனித உருமாற்றத்துடன் வந்திருக்கிறான். நீல நிற காப்பு என்றால் இவன் மகரவாளி வம்சத்தை சேர்ந்தவன். இங்கு எதற்கு வந்திருக்கிறான். ?’ என்று அவந்திகாவின் மனதில் பலதும் எண்ணிக் கொண்டு நின்றாள். இருந்த போதும் அந்த நீல நிற ஆளின் மீது வைத்த கண்களை விலக்கினாள் இல்லை.

அவன் பாவனாவிடம் பேசிவிட்டு அவந்திகா இருந்த தூணைக் கடந்து அங்கே இருந்த தானியியங்கி படிகளில் ஏறி மேல் தளத்திற்கு அவசரமாகச் சென்றான். அவளது உள்ளுணர்வு அவனைப் பின் தொடர்ந்து செல்ல அவளை உந்தியது. அதனால் நொடியும் தாமதிக்காமல் எங்குச் செல்கிறோம் என்று உணராமல் அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள்.

எவ்வளவு வேகமாகச் சென்ற போதும் படிகளின் மூலம்மேல் தளம் வந்து பார்த்தவள் எங்குத் திரும்பிப் பார்த்தும் அந்த மகர யாளியின் தடம் தெரியாமல் அவனைத் தவறவிட்டுவிட்டாள் அவந்திகா.

சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம். ‘எங்குப் போனான். என்ன காரணமாக இங்கு வந்திருக்க கூடும். யாளி உலகைவிட்டு வந்து எந்த விருப்பு வெறுப்பற்று இருந்த போதும் அவந்திகாவிற்கு எதுவோ சரியாகப் படவில்லை. அவளது ஆன்மா மட்டுமே இங்கு வந்தது. ஆனால் வந்திருப்பவன் கண்டிப்பாக மனித உருமாற்றம் அடைந்த உண்மையான யாளி. இதுகுறித்து நிச்சயம் அறிந்திட வேண்டும்‘ என்று யோசனையுடன் யாருமற்ற இடத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்தாள் அவந்திகா.

அவளது எண்ண அலைகளைக் கலைக்கும் விதமாக அப்போது அவள் தோளில் மாட்டியிருந்த கைப்பயிலிருந்து கைப்பேசி ஒலிக்க ஆரம்பித்தது. அதனை எடுத்த அவந்திகா கவனம் எங்கோ இருக்க அதனைக் கீழேத் தவறவிட்டாள். அப்போது அங்கு வெள்ளை நிற குருத்தாவும் நீல நிற ஜீன்ஸும் அணிந்த ஒருவன் அந்தக் கைப்பேசியை எடுத்துக் அவந்திகாவிடம் கொடுத்தான்.

அவனிடமிருந்து கைப்பேசியை வாங்கிய அவந்திகா அவனை நிமிர்ந்தும் பாராமல், “நன்றி”என்றாள்.

‘யாளி ஏன் மனித உலகம் வந்தது. ஒருவேளை மனித உலகம் யாளி உருமாற்றத்துடன் வருவது எப்போதும் இயல்பிலே நடப்பதுதானோ. நான் யாளி உலகில் இருந்தது 20 வருடங்கள்தான். எத்தனையோ விவரங்கள் அறியும் முன்னே இங்கு வந்துவிட்டேன். நான் யாளி என்பதால் யாளிக்கும் மனிதர்களுக்கும் உள்ள பேதம் என்னால் பார்த்ததும் அறிந்திட முடிந்தது. சாதாரண மனிதர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. அதனால் யாளிகள் இப்படி மனித உலகம் வருவது இயல்பான ஒன்றாக இருக்க கூடும். அப்படிதான் இருக்க வேண்டும். இதைப் பற்றிப் பெரிதாக யோசிக்க வேண்டியதும் இல்லை’என்று இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்த கைப்பேசியை எடுத்துத் தன் காதில் பொருத்தினாள்.

கைப்பேசியில் அழைத்தது பாவனாவே. “ஏய்… எங்கடி போன. விமானத்தில் எல்லோரும் ஏற(boarding) ஆரம்பித்துட்டாங்க. சீக்கிரம் வா.” என்றாள் பாவனா.

“ஓ… இ…தோ வ…ந்துட்டேன்டி.” என்று திக்கிய வண்ணம் சொல்லிக் கொண்டு நீண்ட நேர யோசனையிலிருந்து மீள முயன்று தன் கன்னத்தில் இருந்த வியர்வையை தன் இடது கையின் பின்னால் ஒற்றி துடைத்தாள்.

அதற்கு, “சீக்கிரம் வாடி. இங்குக் கார்திக் வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார். உன்னை ஏன் தனியே அனுப்பினேன் என்று. உன்னை விட்டு ஒரு நொடிக் கூடப் பிரிய கூடாதாம். உன்னுடைய பாதுகாப்பு என் பொறுப்பாம். உனக்கு எதாவதென்றால் எனக்குப் பட இயக்கம்பற்றிச் சொல்லித் தரமாட்டாராம்”என்று கார்திக்கின் காது படவே பொறிந்து தள்ளினாள் பாவனா.

அவளது பதிலில் பெருமூச்சுவிட்ட அவந்திகா, “அவரிடம் சொல், நான் சிறு பிள்ளை இல்லை. என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்று. நான் வந்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கைப்பேசியை வை”என்று எழுந்து நடந்தாள்.

யாரோ தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுப் போலத் தோன்ற பின் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தாள் அவந்திகா. யாருமில்லை என்பதை அறிந்தபோதும் யோசனையுடன் தானியங்கி படியில் ஏறி நின்றாள். கவனம் முழுதும் சுற்றி இருக்க, படிகளில் கவனம் இல்லாமல் இருந்த அவந்திகாவின் தாவணி தானியங்கி படியில் மாட்டிக் கொள்ள கீழே விழப் போனாள்.

விழுந்துவிட போகிறோம் என்று எண்ணிய அவந்திகா கைப்பிடியை இறுக்க பற்ற முயன்றாள். கீழே விழுவது ஒன்றும் அவளுக்குப் பெரிய கடினமில்லை. காயமும் வலியும் அவளுக்குப் புதிதும் இல்லை. அதனால் பெரிதாகப் பயமோ அல்லது நடுக்கமோ அவளுக்கு உண்டாகவில்லை. ஆனால் அவள் வலியை அனுபவிப்பதை பார்க்கத்தான் வேறொரு உயிருக்கு விருப்பமில்லை போலும்.

விழத் தயாராக இருந்த அவள் எதிரே நொடிப் பொழுதில் எங்கிருந்தோ வெள்ளை நிற குருத்த அணிந்த இளைஞன் மாயம் போலத் தோன்றினான். ஆச்சரியத்தில் வட்ட விழிவிரித்து பார்த்துக் கொண்டு நின்ற அவந்திகா சூழல் உணருமுன்னே அவன் அவளது இடையில் ஒரு கையும் அவள் முதுகில் மற்றொரு கையுமாகப் பிடித்து அவளைக் கீழே விழுந்துவிடாமல் நிறுத்த முயன்றான். ஆனால் சரிவாகச் சாய்ந்து விழுந்த அவந்திகாவின் இதழ் இரண்டு படிகள் கீழ, எதிரே இருந்தவனின் இதழினை தொட்டுவிடுமாறு நிலையிழந்தது. கிட்டத்தட்ட அவர்களது இதழணைப்பை தவிர்க்க முடியாது என்பதுப் போன்ற நிலை. இதனை அவளை விழுந்துவிடாமல் பிடித்தவனும் எதிர் பார்க்கவில்லையோ இருவரின் விழிகளும் அதிர்ந்து விழித்தது.

எதிரிலிருந்தவனின் முகம் மிக அருகில் வருவது தெரிந்த போதும் என்ன செய்வது என்று புரியாமல் தன் விதியால் நேர இருக்கும் முத்தத்தை ஏற்க கண்களை மூடித் தயாரானாள் அவந்திகா. ஆனால் இதனை ஏற்க அந்த இளைஞன் தயாராக இல்லையோ. ஒரு சென்டிமீட்டர் இடைவெளியில் அவர்களின் இதழ்கள் இருக்கும்போது அவளது முதுகிலிருந்த அவனது ஒரு கையினை நகர்த்தி அவள் பின்னங்கழுத்தில் பொதித்து லேசாக அவளது கழுத்தை சாய்த்து தன் அகன்ற மார்பிலும், வலிமையான தோள்பட்டை மற்றும் கழுத்து வளைவிலும் அவளது முகத்தைப் பொதித்தான்.

ஒரு நொடி எதிரிலிருந்தவனின் மூச்சு காற்று அவள் இதழ்களில் உணர்ந்த அவந்திகா மறுநொடி அது அவளது கழுத்து வளைவில் விழுவதை உணர்ந்து மெய் சிலிர்த்தாள். அதனோடு அவனது தோள்வளைவில் இருந்த அவளது முகமும், நாசியும் அவனது தேகத்தின் வாசத்தை உணர்ந்தது. யாளியாக இருக்கும்போது இது போன்ற அணைப்போ அல்லது இயல்பான தொடுகையோ எந்தவித ராசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாது. யாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உடல் உணர்வுகள் தூண்டப்படும். ஆனால் இந்த மனித உடல் இயல்பான அணைப்பில் மெய்சிலிர்த்து நிற்கிறதே!’ என்று அவந்திகா முதல் முறையாக மனித உடலின் அசௌகரியத்தை உணர்ந்து தன்னை அணைத்து நின்றவனின் கையிலிருந்து விலகி நிற்க முயன்றாள்.

அவள் முயற்சி புரிந்து விலகியவன் அவள் கண் விழித்துப் பார்க்குமுன்னே மாயமாகக் காணாமல் போயிருந்தான். அவன் மட்டுமல்லாமல் அவள் எதிரே யாரும் இல்லை. குழம்பிய வண்ணம் சிலையாக அப்படியே படியின் இறுதியில் நின்றாள். பின் திரும்பித் தன் தாவணியின் கிழிந்து தெரிந்த தையலை பார்த்தாள். ‘இது பிரமையில்லை. யாரோ தன்னை விழுந்துவிடாமல் தடுத்து இருக்கிறார்கள். அவன் வெள்ளை நிற மேல் சட்டை அணிந்திருந்தான். அந்தக் கண்கள். அவனது அந்தக் கண்கள். 15 வருடத்திற்கு முன்பு பார்த்த அந்தக் கண்கள்.’ என்று எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணெட்டும் தூரம்வரை யாரும் அந்த நிற உடையில் இல்லை.

இவ்வாறாகக் குழம்பி படிகளிலே நின்றிருந்த அவந்திகாவை தேடிக் கொண்டு அவள் இருக்கும் இடமே வந்துவிட்ட கார்திக் அவளது கையைப் பற்றி, “நேரம் ஆகிவிட்டது அவந்திகா. சீக்கிரம் வாங்க.”என்றான்.

அவனது குரலில் திரும்பி அவனைப் பார்த்த அவந்திகா, குழப்பத்துடனே அவனுடன் இணைந்து நடந்தாள். தன் கையைக் கார்திக் பற்றியிருப்பதும் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் வருவதையும் அவள் கையைக் கார்திக் பற்றியிருப்பதையும் பார்த்த பாவனா, ‘இல்லை இல்லை. என்றுவிட்டு கார்திக்கின் கைக்கோர்த்து வருவதை பார். இரு அவந்தி. இரு. விடுதி சென்றதும் உனக்கு இருக்கு கச்சேரி’என்று எண்ணி கேலியாகச் சிரித்தாள்.

நேராகப் பாவனாவிடம் வந்த கார்திக், “அவந்திகா, மும்பை சென்று வரும் வரை பாவனாவை விட்டுத் தனியே எங்கும் செல்ல வேண்டாம். நீங்கக் கொஞ்சம் பயந்த பெண்போல இருக்கீங்க. பாவனாவுடன் இருந்தால் எந்தப் பிரச்சனையென்றாலும் அவள் பேச்சிலே சமாளிப்பாள். என்னால் உங்களுடன் எல்லா நேரமும் இருக்க முடியாது. அனைவரின் போட்டி குறிப்புகளை ஒழுங்கு படுத்தி அவர்களுக்கான அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதனால் உங்க பாதுகாப்பில் கொஞ்சம் அக்கறையாக இருங்க”என்று அறிவுரை என்ற பெயரில் அவந்திகாவிடம் அக்கறை காட்டினான்.

இதனைக் கேட்ட பாவனா, “அடேயப்பா… கார்திக் என்னை வாயாடி என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் தானே. உங்க அவந்தி என்னுடைய தோழியும் கூட, அவளை எனக்கு உங்களைவிடவும் நன்றாகத் தெரியும். அவளை அவ்வளவு எளிதில் யாராலும் பயமுறுத்த முடியாது. என்ன அவந்தி சரிதானே”என்று பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த அவந்திகாவை பார்த்துக் கேட்டாள்.

படிகளில் நேர்ந்த விபத்தினாலும், மகரயாளியை கண்டதனாலும் குழப்பதிலிருந்த அவந்திகா இன்னும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். அதனால் தீடீரென்று பாவனா கேட்ட கேள்வி என்னவென்றே புரியவில்லை. என்னவென்றே தெரியாமல், “ச… சரி தான்.”என்றாள்.

அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

Advertisement