Advertisement

Author Note :
https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/

முன்னுரை:

குதிரையாளியின் வம்சத்தில் இளவரசியாகப் பிறந்து வளர்ந்த வன்னியின் ஆன்மா தவிர்க்க முடியாத காரணத்தினால் அதன் உடலை விட்டுப் பிரிந்தது. யாளி உலத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாததாலும் அவளது ஆயுட்காலம் முடியாததாலும் அவளது ஆன்மா அங்கிருந்து மனித உலகம் வந்துவிட்டது. மனித உலகில் இலக்கற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த ஆன்மா, வாழ்வதற்கான ஆசை இல்லாததால் ஆயுட்காலம் முடியும் வரை மனித உலகத்தில் இருக்க முடிவெடுத்து அங்கேயே தங்கிவிட்டது.

கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக யாளி உலகம் செல்லாமல் மனித உலகில் இருந்த வன்னி தானூந்து (car) வெடிக்கும் சப்தம் கேட்டுத் தான் தங்கியிருந்த குகையிலிருந்து வெளியில் வந்தாள். மும்பையிலிருந்து வன்னி இருந்தக் காட்டு வழியாகச் சென்றுக் கொண்டிருந்த தானுந்து(car), அவ்வழி சென்ற காட்டு யானைகளின் தாக்குதலால் விபத்துக்குள்ளானது. வன்னியின் ஆன்மா மயங்கிய நிலையிலிருந்த அவர்களைக் கண்டு, அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனை செல்ல அருகிருந்தவர்களுக்கு குரல் கொடுத்தது.

காப்பாற்ற ஆட்கள் வந்தவுடன் விலகிச் செல்லாமல் அருவமாக அவர்களுடனே சென்ற வன்னி, அந்தத் தம்பதியரின் பிறவாத குழந்தை வயிற்றிலே இறந்திருப்பதை உணர்ந்தது. அதனை அறிந்து கதறிய தாயின் கதறலில் மனமிழகி, இறந்த அந்தக் கருவின் உயிராக வன்னியின் ஆன்மா அந்தத் தாயின் வயிற்றில் பொதிந்து அந்தத் தாயின் துயரத்தைப் போக்கியது. அதன் பிறகு அவர்களுக்கு மனித பெண்ணாகப் பிறந்து, அவந்திகா என்ற பெயருடன் வன்னியின் ஆன்மா வாழ்ந்து வருகிறது. தன் மனித பெற்றோரின் மகிழ்விற்காக, மனித உடலின் சராரி வயது வரை இவ்வுலகில் இருக்க எண்ணமிட்டும் அவந்திகா அவர்களுக்காக மகளாக வாழ்ந்து வருகிறாள்.

அத்தியாயம் – 1

சடசடவென மழைத்தூறல் மரங்களின் இலைகளில் விழுந்து மெல்லிய மெட்டினை இசைத்துக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்ப ஊதகாற்று அங்கே பறவைகளால் உண்டான மரத்தின் துவாரங்களில் ஊடுருவிப் புல்லாங்குழலின் ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இது போதாதென்று மேகங்களுக்குள் என்னவென்றே தெரியாத கொண்டாட்டமாக ஒன்றொடொன்று லேசாக உரசி உரசி நடனம் ஆடிக் கொண்டிருந்தன. அவைகளின் உரசலால் உண்டான லேசான இடியின் சப்தம் மிருதங்கம் போல ஓசை எழுப்பி அங்கே ஒரு இசைக்கச்சேரியை உருவாக்கியிருந்தது. இவற்றைப் புகைப்படம் பிடிப்பதுப் போல் அவ்வப்போது மின்னல் எட்டி எட்டி பார்த்து அந்தக் காலைப் பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது.

எப்போதும் காலையிலே குளித்து முடித்துச் சஷ்டி கவசம் கேட்டுக் கொண்டே 20 நிமிடம் தியானம் செய்பவள் அவந்திகா. ஆனால் இன்றும் அதையே தொடர்ந்த அவந்திகாவை சஷ்டி கவச பாடலையும் மீறி அன்று கேட்ட இயற்கையின் இசையும் பல நாட்களுக்குப் பின் வீசிய மண் வாசமும் அவளது தியானத்திலிருந்து கண் விழிக்கச் செய்தது. அவளையும் அறியாமல் அவளது கால்கள் அவள் தங்கிருந்த மகளிர் விடுதி கட்டிடத்தின் மாடி படிகளில் நடந்துச் சென்றது.

ஈரமுற்றிருந்த தலைமுடியினை சுற்றியிருந்த பூந்துவலை துணியினை பிரித்துத் தலையினை துவட்டிய வண்ணமே நடந்து வந்த அவந்திகா, அந்த மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த ஓட்டினால் ஆன சிறு கூரையின் அடியில் நின்று வான் வெளியை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கூரை அந்த மகளிர் விடுதியில் இருப்பவர்கள் துணி துவைப்பதற்காகவென்று போடப்பட்ட நிழற்குடம். அங்கு இரண்டு தண்ணீர் குழாய்களும் துணி துவைக்கும் கற்கள் இரண்டும் இருந்தது. அந்தத் துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்துக் கொண்டு இன்னமும் முழுதும் கொட்டி முடிக்காத மழையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்.

கருநிற மேகங்கள் கண் எதிரே தோன்றிய மலையின் மீது தவழ்ந்துச் சென்றுக் கொண்டிருந்தது. அந்த இயற்கை காட்சி அவந்திகாவின் மனதின் ஓரத்தில் பயனில்லை என்று ஒதுக்கி வைத்திருந்த தன் பழைய நினைவுகளின் பெட்டகத்தை திறக்கப் போராடியது. இருந்தும் இந்த மழையும் அந்த மழையும் ஒன்றல்ல என்று தெளிவாக அறிந்ததால் அந்த எண்ண அலைகளை ஒதுக்கிக் கண்ணெதிரே தெரிந்த இயற்கை காட்சியைக் கொண்டு அவள் மனம் ஒரு ஓவியத்தைத் தீட்டியது. அந்த ஓவியத்திலே தானும் ஒரு ஓவியமாக உருவகம் செய்து, அவளது அடுத்த வரைதீடலை கற்பனையில் குறித்து கொண்டிருந்தாள் அவந்திகா. இவ்வாறாகச் சில நொடிகளில் தொடங்கிய அவளது லயிப்பு பல நிமிங்கள் கடந்தும் முடியவில்லை.

எப்போதும் அவந்திகா தியானம் செய்யும் நேரம் குளிக்கச் செல்லும் பாவனா, அவளது சஷ்டி கவசம் முடியும் வரை வெளியில் வரமாட்டாள். இன்று விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் விரைந்து வெளியில் வந்த பாவனா, அங்கு அவந்திகாவை காணாமல், ‘இவள் எங்குப் போனாள்? ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதே! முதலில் நாம் தயாராகுவோம். பிறகு அவளைப் பற்றி யோசிக்கலாம். நமக்குதான் தயாராக அதிக நேரம் ஆகும்’என்று எண்ணிய வண்ணம் விரைந்து தயாரானாள்.

அவந்திகாவும், பாவனாவும், பள்ளி காலமுதலே ஒன்றாகப் படித்து வந்த தோழிகள். அவந்திகாவின் அப்பா செல்வமும், பாவனாவின் அப்பா கேசவனும், தொடர்வண்டி(Railway) நிலையத்தில் மத்திய அரசின் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். முதலில் அவந்திகாவின் அப்பா மும்பை பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பின் அவளுக்கு 4 வயது இருக்கும்போது சேலம் பிரிவிற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர். அரசு பணியாளர்களுக்கான வாடகை வீட்டில் (Railway Quarters), செல்வத்தின் குடும்பமும், கேசவனின் குடும்பமும் அருகருகே அமைந்துவிட இரு குடும்பமும் நெருங்கிய நண்பர்களாகி போயினர்.

செல்வம் மற்றும் கனிதா தம்பதியருக்கு அவந்திகா மற்றும் அருண் என்று இரண்டு பிள்ளைகளும், கேசவன் மற்றும் வனஜா தம்பதியருக்கு பவன் மற்றும் பாவனா என்று இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். பாவனாவும் அவந்திகாவும் நெருங்கிய நண்பர்கள். அதுபோல, வயது வேற்றுமை இருந்த போதும் அருணும் பவனும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் பவனே அனைவருக்கும் பெரியவன். அவந்திகாவும் பாவனாவும் ஒத்த வயதினர். அருண் அனைவருக்கும் கடைக்குட்டி.

அவந்திகா எளிதில் யாரிடமும் பேசமாட்டாள். அவளுக்கும் சேர்த்து பாவனா அதிகம் பேசுவாள். அவந்திகா அதிகமாகப் பேசும் ஒரே நபர் அது பாவனா மட்டுமே. எதிலும் அதிக ஆர்வமில்லாததுப் போல் இருந்த போதும் அவந்திகா எதை எடுத்துச் செய்தாலும் திறம்பட செய்வாள். பாவனாவிற்கு எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று இருந்த போதும் சராசரி அளவுக்கே செய்ய முடியும்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்தப் பின் என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போது தான் கலைதுறையில் (BFA – Bachelor of Fine Arts) படிக்க வேண்டுமென்று பாவனா சொன்னாள். அவந்திகாவும் அவளுடன் படிக்க வேண்டுமென்று கேட்ட பாவனாவின் அன்புகட்டளையால் கலைத்துறையில் படிக்க ஒத்துக்கொண்டாள். பின் இருவரும் சேர்ந்து சென்னை அரசுக் கலை கல்லூரிக்குப் பதிவு செய்து அதில் சேர்ந்துக் கொண்டனர். அதிக மதிப்பெண் இருந்ததாலும் நேர்காணலில் நேர்த்தியாகப் பதில் அளித்ததாலும் இருவருக்கும் அங்கே படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

பாவனாவுடன் இருப்பதற்காக என்று அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்த போதும் அவந்திகா ஓவியத்திய பிரதான பாடமாகவும், பாவனா பட இயக்கத்தை முதன்மை பாடமாகவும் தேர்வு செய்தனர். இருவரும் ஒன்றாக ஒரே மகளிர் விடுதியில் ஒரே அறையில் தங்கி அவர்கள் படிப்பைத் தொடர்ந்தனர். இது அவர்களது இறுதி ஆண்டுப் படிப்பு. கடைசி பரிட்சை முடிந்தப்பின்பு இந்திய அளவில் ஒரு கலைப் போட்டி முன்பையில் நடத்த அனைத்து இந்திய கலை நிறுவனம் முடிவு செய்திருந்தது. அந்தப் போட்டிக்காக மும்பை செல்லதான் பாவனாவும் அவந்திகாவும் விமான நிலையம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

தற்கால நாகரீகமாகப் பாப் பாடல் ஒன்றை ஓடவிட்டு, அதனோடு சேர்ந்து பாவனாவும் பாடல் வரிகளை முனுமுனுத்துக் கொண்டே தன்னை நேர்த்தியாக அலங்கரித்துக் கொண்டாள். ஜீன்சையும், மேல் சட்டையும் அணிந்துக் கொண்டு, ஆடைக்குப் பொறுத்தமான அணிகலங்களையும் அணிந்துக் கொண்டாள். பின் தன்னையே ஆள் உயர கண்ணாடியில் ஒரு முறை வட்டமடித்து கர்வமாகப் பார்த்துக் கொண்டாள். வெகுதாமதாகத் தயாரகிய போதும் இன்னமும் அவந்திகாவை காணாததால், பொறுமையிழந்த பாவனா அங்கும் இங்கும் என்று அவளைத் தேடி பின் கடைசியாக மாடிக்கே வந்துவிட்டாள்.

அங்கே வானத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவை பார்த்ததும் பாவனாவிற்கு எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலக் கோபமாக வந்தது. அதே கோபத்தில், “ஹப்பா. என்னடி? கிளம்புகிற எண்ணம் இல்லையா? எப்போதும் வரும் மழைதானே! அதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய். விமான நிலையத்திற்கு நேரம் ஆகிட்டு. வாப்போகலாம்”என்று குறை பட்டவண்ணம் இடுப்பில் தன் இடக்கையை வைத்து வலது கையை அவந்திகாவின் முன் ஒற்றைவிரலால் மிரட்டும் விதமாகக் கேட்டுக் கொண்டு வந்து நின்றாள் பாவனா.

பாவனா வருவதற்கும் மழை நிற்பதற்கும் சரியாக இருக்க, அவந்திகாவின் கற்பனையிலே வரைய பட்டுக் கொண்டிருந்த மனஓவியம் பாதியிலே நின்றது. பாவனாவின் குரல் கேட்டதும், “வாடி, வாயாடி.! ஏன்டி கத்துகிறாய். கிளம்பிவிடலாம் இரு. அங்க பாரு அந்த மலையைப் பாரு. எத்தனை முறை மழை வந்தாலும் அந்த மலையின் உச்சியில் தவழ்ந்து போகும் மேகத்தின் அழகை பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும். கற்பனையிலே இந்தக் காட்சி வைத்து இன்று ஒரு ஓவியம் யோசித்து வைத்திருக்கிறேன்டி. உனக்குப் பிறகு வரைந்து காட்டுகிறேன்”என்று வந்த பாவனாவின் ஒரு கையைப் பற்றி இழுத்து, தன் பால்ய சினேகிதியான அவள் தோள்மீது தன் மற்றொரு கையைப் போட்டு இயல்பாகப் கதை பேசினாள் அவந்திகா.

நேரம் ஆனதால் ஏற்கனவே பொறுமை இழந்திருந்த பாவனா, “உன்னுடைய ஓவிய திறமையையும் கற்பனை திறமையையும் இப்போதுதான் காட்ட வேண்டுமா. நாளை அந்த மும்பை போட்டியில் காட்டு. இங்க பாரு”என்று தன் மேல்சட்டையின் நிறத்திற்கு தகுந்தாற்போல அணிந்திருந்த தன் கைக்கடிகாரத்தை காட்டி, “9 மணி ஆகிறது. இன்னும் 30 நிமிடத்தில் கார்திக் வந்துவிடுவார். குளித்திருந்த போதும், நீ இன்னமும் அறையில் போடும் உடையிலே சுற்றிக் கொண்டிருக்கிறாய். கிளம்பு. நேரம் ஆகிடுச்சு”என்று ஆணையிட்டு, கையோடு அவந்திகாவை இழுத்துக் கொண்டு படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.

அவந்திகாவும் நேரமாவது புரிந்து, உடன் நடந்த வண்ணம், “சரி சரி. போகலாம் வா. எதற்குக் கார்திக்கை வரச் சொன்ன. நாமே போய்க் கொள்ளலாம் தானே. ஊபர் (Uber) பதிவு செஞ்சா, விமான நிலையத்தில விட்டுவிட போறாங்க. அதற்கு எதற்கு அவரை வரச் சொன்ன?” என்று கேட்டாள்.

அதற்குள் தங்கள் அறை வந்துவிட்ட பாவனா, “நானாக அவரை அழைக்கவில்லை. அவரே கைப்பேசியில்(phone) அழைத்து இங்கு வருவதாகச் சொன்னார். எனக்கு மறுத்துப் பேசக் காரணமில்லை. அதனால் வரச் சொல்லிவிட்டேன். அவர்தானே நம்மோடு மும்பை போட்டிக்கு உடன் வரப் போகிறார். நம்ம கல்லூரி ஆசிரியர்களும் அவரைதானே நம்மைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ள உடன் அனுப்புகிறார்கள். அதனால் நம்மோடு வரும் அடுத்த 4 நபர்களையும் கூட அவரே அழைத்து வருகிறாரோ என்னமோ!? ஏன்? அவர் வருவதில் உனக்கேதும் பிரச்சனையா?” என்று ஏற்கனவே காரணம் அறிந்த போதும் அவந்திகாவை வம்பு செய்யும் எண்ணமுடன் கேட்டாள்.

அவள் சொல்லுவதை கேட்டுக்கொண்டே, அவந்திகா வழக்கமான அவளது ஆடைமுறையான தாவணியை எடுத்து அங்கிருந்த கட்டிலில் வைத்தாள். இன்று பச்சை நிற தாவணியும் சிவப்பு நிற பாவடையும் அணிந்துக்கொண்டாள்.

பாவனாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே சீப்பினை எடுத்துத் தலையினை வாரினாள் அவந்திகா. “பிரச்சனை என்று இல்லை பவி (பாவனா). உன்னிடம்தான் சொன்னேனே! அவர்தான் என்னை விரும்புவதாகச் சொன்னார் என்று. நான் இன்னமும் அவருக்கு என் பதிலைச் சொல்லவில்லை. அதுதான் அவசியம் இல்லாமல் அவரிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்க விரும்பவில்லை. இப்போது விடு. ஏற்கனவே சொல்லிவிட்டாய். மாற்றிச் சொன்னால் நன்றாயிராது. இனி இதுபோல உதவிகளை ஏதேனும் காரணம் சொல்லித் தவிர்த்துவிடு”என்றாள் அவந்திகா.

அவந்திகா, பாவனாவிற்கு நேர்மாறாக ஆடை அணிவாள். அவளது அம்மா, ஆச்சாரம், குடும்ப பழக்க வழக்கமென்று அவந்திகாவை சேலை, தாவணி தவிர வேறு ஆடைகள் அணிய விட்டதில்லை. வெகுசில சமயங்களிலே சுடிதார் அணிய அனுமதியுண்டு. இருந்தும் அடிக்கடி அதை அணிந்தால் அதற்கும் அர்ச்சனை விழும். நாளடைவில் அவந்திகாவிற்கும் இந்த ஆடை பழக்கம் பிடித்துவிட, அவளுக்கு எந்தக் குறையும் தோன்றிடவில்லை. ஆனால் பாவனாவும், அவந்திகாவும் ஒன்றாக வெளியில் செல்லும்போது சில கேலி கிண்டல்கள் நடப்பதும் உண்டு. இருந்தபோதும் இருவருக்கும் அதைப் பொருட்படுத்த தோன்றியதில்லை.

தயாராகிவிட்டதால், கட்டிலில் அமர்ந்து தயாராகிக் கொண்டிருந்த அவந்திகாவையே பார்த்த பாவனா, “என்னமோ. கார்திக் நன்றாகத் தானே இருக்கிறார். சரியென்று சொல்ல வேண்டியதுதானே அவந்தி. உனக்கு வேறு யார் மீதும் விருப்பம் இருப்பது போலவும் இல்லை. பிறகென்ன.? இன்னும் யோசனை.” என்று எழுந்து சென்று ஜவ்வாது வாசனை திரவியத்தை லேசாகத் தன் மேல் சட்டையில் தடவிக் கொண்டாள்.

அவந்திகா தன் சிறிய ஜுமிக்கி தோடினை காதில் பூட்டிய வண்ணம், “நன்றாகதான் இருக்கிறார். நல்லவரும் கூட. இருந்தும் எனக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் வேணும் பவி. உனக்கே தெரியும் நான் அவ்வளவு எளிதாக யாருடனும் தோழியாகக் கூட நெருங்கிப் பழகிவிட மாட்டேன். கார்திக்கிடம் ஒழுங்காகப் பேசுவதே அவர் கல்லூரி படிப்பு முடிந்து வெளியில் சென்று உதவி இயக்குனராக ஆன பிறகுதான். அதுவும் உன்னுடைய இயக்குனர் பாடத்திட்டங்களுக்குத் தேவையான சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக அவரைச் சந்திக்க உனக்குத் துணையாக உன்னோடு நானும் வந்ததால்தான் அவருடன் சில வார்த்தைகள் அதிகமாகப் பேசியிருக்கிறேன். என் மனம் இன்னமும் அவரை நண்பராகக் கூட முழுதும் உணரவில்லை. அதனால் இந்த விசயத்தில் என்னைக் கட்டாய படுத்தாதடி. “ என்று சொன்னாள்.

வார்த்தைகள் அவ்வாறு சொல்லிய போதும் ‘திருமணம் என்பது தன் வாழ்வில் எப்போதும் சாத்தியமில்லை. இதை இவளிடம் சொன்னால் புரிந்துக் கொள்ளவா போகிறாள்’என்று எண்ணிய அவந்திகா தன்னுள்ளே புன்னகித்துக் கொண்டு “நான் தயார். வாக்கிளம்பலாம்”என்றாள்.

அவந்திகாவை சிறு வயதிலிருந்தே புரிந்து வைத்திருந்த பாவனா, அவளின் பிடிவாதம் அறிந்ததாலும், இது விரைந்து எடுக்க வேண்டிய முடிவில்லை என்பதாலும், மேலும் வற்புருத்தாமல் விட்டுவிட்டாள். இருந்தும் ஒரு சந்தேகம் வர, “அதுதான் காரணம் என்றால் சரி. அதை விடுத்து நீ சின்ன வயதில் பார்த்த அந்தச் வெள்ளை நிற ஆடை அணிந்து வந்து உன் கழுத்தில் இருக்கிறதே அந்தக் கருப்பு கயிறை கொடுத்தவன் மீது விருப்பம் (Puppy Love) என்று சொல்லிவிடாதே. உன் 7 வயதிலே அவருக்கு 25 வயதிற்கும் மேல் இருக்கும் என்றாய். இப்போது அவர் 40 வயதுக்கும் மேலான நடுத்தர வயது காரராக இருப்பார். அனேகமாக இரண்டு மூன்று குழந்தைகளும் இருக்க கூடும். “என்று கிண்டலாகச் சொல்லிச் சிரித்தாள்.

அவளுடன் சேர்ந்து சிரித்த வண்ணம் பைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு வெளியில் வந்து கார்திக்கிற்காக இரு பெண்களும் காத்திருந்தனர்.

பாவனாவின் கிண்டலுக்கு பதிலேதும் சொல்லாமல் இருந்த அவந்திகாவிடம், “என்னடி பதிலே இல்லை. உன் கருப்பு கயிற்று ஆள்மீது விருப்பம் இல்லைதானே. இன்னமும் அவர் தந்த அந்தக் கயிற்றைக் கழுத்திலிருந்து கழற்றியத்தில்லை. யாரையும் தொட விட்டதில்லை. அதனால் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது. சொல்லடி. அப்படி எதுவும் இல்லைதானே”என்று தன் தோழியின் மீது அக்கறையாகக் கேட்டாள்.

அதற்கும் பதிலளிக்காமல் மென்னகையிட்ட அவந்திகா அவள் முகம் பார்க்காமல், தன் நெஞ்சோடு பதிந்திருந்த அந்தக் கருப்பு கயிற்றையும் அதன் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய பறவையின் இறகையும் தொட்டுப் பார்த்தாள்.

எப்போதுமே பாவனவாவிற்கு பொறுமை இருந்ததில்லை. அவந்திகாவையே பார்த்துக் கொண்டிருந்த பாவனா அவளின் இந்தச் சைகையில் கோபமுற்று, “என்னடி சிரிப்பு. கேட்கிறேன் இல்ல.”என்று அவந்திகாவின் கைப்பற்றி அவள் முகத்தைத் தன் முகம் நோக்கித் திருப்பித் தொடர்ந்து பேசினாள்.

“அவரை இன்னமும் நினைத்துக் கொண்டில்லையே. இப்போது அவர் வேறொருவருடைய கணவனாகக் கூட இருக்கலாம். இதில் அந்த ஆளுடைய கண்ணை மட்டும்தான் பார்த்ததாகச் சொன்னாய். வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து வந்ததால் தேவ தூதர் என்று எண்ணிக் கொண்டாயா? இதில் வேறு பெண்கள்போல நீளத் தலைமுடியும், முகம் மறைக்கும் விதமாகப் பாதி முடியை எடுத்து முகமுன் விட்டிருந்தார் என்றும் சொன்னாய். ஆதாரமாக உன் கழுத்திலிருக்கும் கருநிற கயிறு மட்டுமில்லையென்றால் நீ சொன்னது போல் ஒருவர் இருப்பதே சந்தேகம், ஏதேனும் கனவு கண்டிருப்பாய் என்றே நினைத்திருப்பேன். இப்போது அதற்கும் வழியில்லை. அதனால் கேட்கிறேன். அந்த ஆள் உன்னைத் தேடி வருவான் என்று காத்திருக்கவில்லையே!” என்று பதட்டமும், கவலையுமாகக் கேட்டாள் பாவனா.

பாவனாவின் கலக்கம் புரிபட, அவளை மேலும் வருத்தாமல், “அவர்மீது விருப்பமென்று இல்லை பவி. அவ்வளவு எளிதில் எனக்கு யார் மீதும் காதல் வந்துவிடாது. அவர் வருவார் என்று காத்திருக்கவில்லை. இருந்தும் அவரை ஒரே ஒருமுறை பார்த்து நன்றி சொல்ல வேண்டும். மற்றப்படி நீ சொல்வது போல் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நீ சொல்வதுப் போல அப்படி ஒருவர் இந்த உலகில் இருப்பது சந்தேகம்தான்” என்று மீண்டும் புன்னகைத்தாள் அவந்திகா. அதனோடு ‘யாளி உலகத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ’என மனதில் நினைத்தாள்.

அவள் சொன்னதை கேட்ட பாவனாவிற்கு குழம்பிவிட்டது. தலைமுடியை இழுத்து போட்டிருந்த தலைஊசியை (catch clip) சரி செய்தவண்ணம், “என்னமோ போ. எனக்குத் தெரியாமல் மனதில் அப்படியொரு ஆசை வளர்த்து வைத்திருந்தாய்.? அவ்வளவுதான் தெரிந்துக் கொள்”என்று தன் கோழிக்குண்டு கண்ணால் முறைத்து மிரட்டினாள்.

சிறு பிள்ளைப் போல் (Adorable) பாவனாவின் மிரட்டலில் சட்டெனச் சிரித்துவிட்டாள் அவந்திகா. பின், “அப்படியே ஆகட்டும் வாயாடி. தங்கள் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. சரிதானா”என்றாள். பாவனாவிற்கு பதில் அளித்த போதும், ‘உண்மையில் அந்த வெள்ளை நிற ஆளின் மீது தனக்கு விருப்பமா? ‘ எனத் தனக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டாள் அவந்திகா.

Advertisement