ஆனால், யாராவது ஒருவர் வந்து, “இப்படின்னு விஷயம் கேள்விப் பட்டோம். நிஜமா? இதுக்குத்தான் பொம்பிளை பிள்ளைங்களை படிக்க எல்லாம் அனுப்ப கூடாதுன்னு சொல்லறது. அதுவும் அம்மா இல்லாத புள்ளை வேற. யாரு உரிமையா நல்லது கெட்டது எல்லாம் சொல்லித்தர போறாங்க. அம்மா சொல்லறதுக்கும் மத்தவங்க சொல்லறதுக்கும் வித்தியாசம் இருக்கும் தானே?” என புத்திமதி கூற செல்வத்திற்கும், மாணிக்கத்திற்கும் ஓய்ந்து போனது.
“இத்தனை பேச்சு வந்துடுச்சு. பேசாம ராதிகா படிச்சு முடிச்சதும் திருமூர்த்திக்கே கட்டி வெச்சுடலாம். அவனும் நல்ல படிச்ச பையன் தானே?” என யோசிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
தாமரைக்குப் பேச்சு போகும் திசையே பிடிக்கவில்லை. பேசாமல் கணவனிடம் ராதிகாவிற்கு ராஜேஷை பேசலாம் என சொல்லி வைக்கலாம் என யோசித்தாள்.
இந்த நேரத்தில் வேதவல்லி தாமரையை அழைத்து, “ராதிகாவுக்கு எப்படியோ நல்ல மாப்பிள்ளையா அமைஞ்சிடுச்சு. நம்ம சுபத்ராவுக்கு உன் தம்பி ராஜேஷை பார்க்கலாமா?” என்று ஒரு இடியைத் தூக்கிப் போட, தாமரை அரண்டு போனாள்.
என்னவோ எல்லாம் திட்டம் போட்டுச் செய்து வைத்தது போலக் கனகச்சிதமாக நடக்கிறதே என அவளுக்குத் திக்கென்று இருந்தது.
“அதுதான் அவளே மாப்பிள்ளை பார்த்துட்டாளே! திருமூர்த்தியை தான் சொல்லறேன்…” என்று சொல்ல,
“எனக்கு ராதிகாவை பத்தி நல்லா தெரியும் அத்தை. அவ மனசுல யாரும் இல்லை. நம்ம பிள்ளையை நம்மளே தப்பா பேசறது நல்லா இல்லை அத்தை…” என முதல் முறையாக வேதவல்லியை எதிர்த்துப் பேசி விட்டாள்.
வேதவல்லிக்கு அது பொறுக்குமா? “இந்த வீட்டுக்குக் கல்யாணம் பண்ணிட்டு வரும்போது கூட இல்லாத தைரியம் ஒரு பிள்ளையை சுமக்கிறன்னு ஆனதும் வந்துடுச்சோ” என ஆத்திரத்துடன் கேட்கத் தாமரை மிரண்டு போனாள். இன்னும் பிள்ளை உண்டானதை அவள் கணவனிடம் கூட சொல்லவில்லை. உறுதியாகட்டும் என காத்திருக்க, இந்த அம்மா எப்படி கண்டு பிடித்தது என அவள் குழம்பினாள்.
“இங்கே பாரு… ராதிகாவோட கல்யாண விஷயத்துல மூக்கை நுழைச்ச உன் பிள்ளை உனக்கு இல்லை… அதை எப்படி கருவறுக்கணும்ன்னு எனக்கு தெரியும்…” என மனித தன்மையே இல்லாமல் பேசும் பெண்மணியை இப்போது தாமரை வெறுப்பாகப் பார்த்தாள்.
“செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா?” என சீற, “செய்யக்கூடிய ஆள் தான்னு நீங்கன்னு ராதிகாவை இத்தனை வருஷம் நடத்தியதை வெச்சே புரிஞ்சுக்க முடியுது…” என்று தாமரை வெறுப்பாக பதில் தந்தாள்.
“ஹ்ம்ம் பரவாயில்லை. புத்தியுள்ளவ தான்… போ…” என அவளை விரட்டி விட்டார். தாமரை அவரின் மிரட்டலுக்கு பயப்படவில்லை என்றாலும் விஷயத்தை ஆறப்போட நினைத்தாள்.
அன்று மாலையே வேதவல்லி இன்னொரு நாடகத்தை அரங்கேற்றினார். “தாமரை அவ தம்பிக்கு நம்ம சுபத்ராவை கல்யாணம் செஞ்சு வைக்கணும்ன்னு என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கா… இதை முறையா பேசறதை விட்டுட்டு இப்படி பேசறாளே…” என வேதவல்லி அங்கலாய்ப்பது போல சொல்ல,
“நான் எங்கே அப்படி சொன்னேன் அத்தை?” என பதறியபடி தாமரை குறுக்கே வந்தாள். தாமரை மாமியாருக்கு மரியாதை தருவாளே தவிர அவர் மிரட்டலுக்கு எல்லாம் அடங்கும் அளவிற்குக் கோழை இல்லை.
“நீ தானம்மா சொன்ன… ராதிகா திருமூர்த்தியை தான் காதலிக்கிறான்னு நினைக்கிறேன் அத்தை. மாமாங்க கிட்ட பேசி அவரோடயே கல்யாணம் பண்ணி வெச்சுடுங்க. காதலிக்கிறவங்களை பிரிக்கிற பாவம் நமக்கு வேண்டாம்ன்னு கெஞ்சி கேட்ட. கூடவே சுபத்ராவுக்கும் உன் தம்பிக்கும் கூட கல்யாணம் பேசிடலாம்ன்னு சொன்னியே?” என்று சாதுரியமாக பேச,
ராதிகா பதறியபடி, “அண்ணி உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா?” என வந்தாள். அண்ணியே தன்னை நம்பவில்லையா என கலங்கி போனாள் அவள்.
“நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் சொல்லலை ராதி… உனக்கு அத்தையைப் பத்தி தெரியாதா?” என அப்போதும் தாமரை மாமியாரின் வலையில் விழாமல் நிதானமாகத் தான் பேசினாள்.
“சும்மா பசப்பாத… அப்படி அவ மேல நம்பிக்கை வெச்சிருக்கிறவ ஏன் மாசமா இருக்கிறதை வீட்டுல இருக்கிற எல்லார்கிட்டயும் மறைச்ச? இவளோட காதல் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரட்டும் அப்பறம் சொல்லலாம்ன்னு தானே?” வேதவல்லி வாய்க்கு வந்ததை எல்லாம் சாமர்த்தியமாகப் பேசி கதை புனைந்தார்.
தாமரைக்கு இந்த அம்மாவின் பேச்சில் தலையே சுற்றியது. ஆனால், அவர் விரித்த வலையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்கிற உறுதியுடன், “எனக்கு நாள் தள்ளி போயிருக்கிறது நிஜம் தான். மாசமா இருக்கேனோன்னு சந்தேகம் கூட இருக்கு. ஆனா, இன்னும் உறுதி ஆகலை. அதுனால தான் நான் யார்கிட்டயும் இதைப்பத்தி சொல்லலை. அதை வெச்சு நீங்க சொல்லற மத்த எந்த கதையும் நிஜம் இல்லை. ராதிகா மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கைக்கு அடையாளமா என் தம்பிக்கே ராதிகாவை கட்டி வைக்கிறேன்…” என கொஞ்சம் தைரியமாகப் பேசினாள்.
பெரியவர்களுக்குக் கூட, ‘அட! ராஜேஷ் நல்ல பையன் ஆயிற்றே! அவன் ராதிகாவுக்கு பொருத்தமாக இருப்பானே!’ என்ற எண்ணம் வந்துவிட்டது.
வேதவல்லியோ தாமரையை வன்மமாக பார்த்தபடி, “ராதிகாவுக்கு திருமூர்த்தி கூட தான் கல்யாணம் நடக்கணும்…” என அழுத்தமாகச் சொல்லியவர், ராதிகாவை நோக்கி, “என்ன புள்ளைடி நீயெல்லாம். கம்பெனியில அவனை வளைச்சு போட்டிருக்க. உங்க அண்ணி சொல்லறத பார்த்தா அவங்க தம்பியையும் வளைச்சிட்ட போல… இன்னும் படிக்க போற இடத்துல எத்தனை பேரோ? எப்படி இந்த மாதிரி இருக்க?” காலம் காலமாக பெண்களின் நடத்தையைப் பற்றிப் பேசி பலவீனமாக்கும் யுக்தியை வேதவல்லி கையிலெடுக்க, ராதிகாவிற்கு அந்த வார்த்தைகளைத் தாங்கவே முடியவில்லை. வயதில் பெரியவர் என ஒதுங்கிப் போனால், இந்த அம்மா என்ன இப்படி பேசுகிறது என அவரை வெறுப்போடு பார்த்தாள்.
செல்வம் பொறுக்க மாட்டாமல், “உனக்கெல்லாம் நாக்கு அழுகி தான்டி போக போகுது…” என சபித்தார். தேவராஜன், “அம்மா வாய்க்கு வந்ததை பேசாதீங்க…” என கத்தினான்.
“நீ ஏன்டா இப்படி துள்ளற? நான் உள்ளதைத் தானே சொல்லறேன்…” என வேதவல்லி அப்பொழுதும் அசராமல் சொல்ல,
“அண்ணி நானும் அமைதியா போகணும் அமைதியா போகணும்ன்னு பார்த்தா நீங்க என் மகளை ரொம்பவும் மட்டமா பேசறீங்க… என்னால எல்லா நேரமும் பொறுத்துட்டே இருக்க முடியாது அண்ணி…” என்று மாணிக்கமும் ஒருபுறம் கத்த,
“பொறுமை போயிடுச்சுன்னா என்ன செய்வ? ரோஷம் வந்து பொண்ணு கூட தனியா போயிடுவியா என்ன? அதெப்படி போவ?” என குடும்பத்தைப் பிரிக்கும் விதமாகப் பேச, செல்வம் மனைவியை அந்த வயதிலும் அடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த பேச்சு ஒருவழியாக ஓய்ந்து விடும் என அனைவரும் நினைத்தனர். இனி வேதவல்லி அடங்கி இருப்பார் என எண்ணி அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் இயல்புக்கு மீண்டனர்.
அந்த சமயத்தில் தான் ராதிகாவின் படிப்பு முடிந்தது. அவள் ஒரு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்து கொண்டே அரசு வேலைக்காகத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள்.
தாமரை தன் பிறந்த வீட்டில் இங்கு இருக்கும் பிரச்சினை எல்லாம் சொல்லியதில்லை. ஒருநாள் பேச்சு வாக்கில், “ராதிகாவை நம்ம தம்பிக்குக் கேட்கலாமா அம்மா?” என விசாரிக்க, அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை. காரணமாக ஜாதகத்தைச் சொல்லித் தட்டிக் கழித்தார்.
தாமரைக்கு அன்னையைத் தவறாக நினைக்க முடியவில்லை. அவர் வரையிலும் வதந்தி போயிருக்கிறது என புரியாமல் தன் கணவனிடம் அம்மா சொன்னதை சொன்னவள், “நம்ம வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கலாம்ங்க…” என சொல்லவும், தேவராஜனும் இதில் என்ன இருக்கு என எண்ணியபடியே வெளியே மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி விட்டார்.
ஆனால், வதந்தி இன்னும் அடங்கிய பாடில்லை. வேதவல்லி ஊர் முழுக்க ராதிகா, திருமூர்த்தி என பரப்பி வைத்திருக்க, எங்கு சென்றாலும் அந்த பேச்சு முன் வந்து நின்றது. வேறு வழியே இல்லாத நிலை!
கெட்டதிலும் ஒரு நல்லதாக திருமூர்த்தி வேலை விஷயத்தில் கொஞ்சம் சூட்டிப்பு குறைவாக இருந்தாலும், நல்லவன் என்கிற பிம்பம் இருந்தது பெரியவர்களுக்கு. ஆக, இப்படியே அனைத்து இடத்திலும் அவமானப்படுவதற்கு அவனோடே திருமணத்தை செய்து வைத்து விடலாமா என யோசித்தனர்.
தேவராஜனுக்கு இதில் பெரிதாக உடன்பாடில்லை. ஆனால், அப்பா, சித்தப்பா இருவரும், நம்ம பொண்ணு பேரு அந்த பையன் பேரு கூட தான் சுத்திட்டு இருக்கு. அவனும் படிச்சவன் தான்! பேசாம நம்மளே கல்யாணம் செஞ்சு வெச்சிடலாம் என அழுத்திச் சொல்லும்போது மறுக்கவும் முடியவில்லை.
கடைசியில் வேதவல்லியின் சதி தான் வென்றது! யாருக்கும் அது புரியவில்லை பாவம். ராதிகா, திருமூர்த்தி திருமணத்தை பெரியவர்கள் முடித்து வைத்து விட்டார்கள். அவனின் சுயரூபம் தெரியாமல்!