மௌனமதில் யுத்தம் ஏனடி? – 6

“தனியே தன்னந்தனியே நீ காத்து காத்து நின்றாய்…

நிலவே! பொறு நிலவே!

உன் பொறுமை வென்று விடுவாள்!”

என்ற பாடல் நகை ஒலி கலந்து ஒலித்த திசையில் ஜீவனாவின் தலை நிமிர மறுத்தது.

அவள் பாட்டிற்கு கொஞ்ச நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு போகலாம் என்று தனிமையைத் தேடி வந்தால், இங்கும் இவன் வந்து என்ன செய்யப் போகிறானாம் என்று கடுப்போடு பல்லை நரநரத்தபடி அமர்ந்திருந்தாள்.

கௌதமன் அவளைப் பேச வைப்பதற்காகவே சுற்றி சுற்றி வருவது வாடிக்கையாகிப் போயிருந்தது. ஆனாலும் இவள் இன்னமும் பொய் முகமூடியுடன் முறுக்கிக் கொண்டு தான் திரிகிறாள்.

அவன் மீது கோபம் போய் விட்டதா என்று கேட்டால் அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியவில்லை. அவன் அன்றிருந்த சூழலில் அடித்து விட்டான் என்று அவன் நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதற்காக இன்று வரையிலும் அவன் மன்னிப்பு கேட்காமல் இருப்பது அவளுக்கு ஏற்புடையதாக இல்லை.

கௌதமன் அவள் நிமிராததைப் பார்த்தபடி வேண்டுமென்றே அவளை இடித்தபடி அருகே அமர்ந்தான்.

“ம்ப்ச்…” என்று சலிப்பு காட்டிவிட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

“ரொம்பத்தான்…” என அவளுக்குக் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தவன் இன்னும் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தான். அவளை இடித்தபடியே தான்!

‘இதென்ன வம்பு?’ என அவளுக்கு கடுப்பானது. எழுந்து போகப் பார்த்தவளின் கையைப்பற்றி தடுத்தவன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஜீவி…” என்றான். குரலில் சின்ன கெஞ்சல். எதற்கு இப்படி இறங்கி வந்து கெஞ்சுகிறானாம் என அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.

“நீ என்கிட்ட சாரி எதிர்பார்ப்பன்னு எனக்கு புரியுது…” என்று தொடங்கியதும், என் முகத்தைப் பார்த்து உனக்கு புரியாட்டி தான் அதிசயம் என சலிப்புடன் எண்ணிக்கொண்டாள். அந்தளவிற்கு அவள் முகத்தை மனதின் கண்ணாடி போலப் பார்ப்பவன் ஆயிற்றே இவன்!

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “கரெக்ட்… உன் மனசுல நீ நினைக்கிறதை காட்டிக் கொடுக்கிற முகம் உனக்கு… அஃப்கோர்ஸ் அதை படிச்சு புரிஞ்சுக்கிற அளவுக்கு நானும் புத்திசாலி தான்…” என்கவும், ‘நீ பேசு ராஜா பேசு…’ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டாள்.

அவளின் எண்ணம் புரிந்தவன் போல மெலிதாக சிரித்தவன், பக்கவாட்டாகத் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தபடியே, “எனக்கு உன்னை முதல்ல பார்த்த அன்னைக்கு சாரி சொல்ல தோணலை ஜீவி. தப்பு என் மேல தான்னு தெரிஞ்சும் சாரி கேட்காம விட்டுட்டேன். அப்படி செய்யற அளவுக்கு திமிருன்னு சொன்னா சரியா இருக்கும்… இப்ப அந்த மாதிரி எந்த திமிரும் என்கிட்ட இல்லை. ஆனாலும் என்னால சாரி கேட்க முடியலை. ஏன்னு உன்னால புரிஞ்சுக்க முடியுதா?” என்றான் கொஞ்சம் உருகிய குரலில்.

திமிர் என்றும் ஒப்புக்கொள்கிறேன். இப்பொழுது திமிர் இல்லை என்றும் நம்ப சொல்கிறான். இப்படி மிகத்தெளிவாகக் குழப்புபவனிடம் என்னவென்று அவள் சொல்வதாம்? அதிலும் அவனிடம் பேசா மடந்தையாக இருப்பவள்!

குழம்பிய அவளின் முகத்தை அவதானித்தபடியே, “ஹ்ம்ம்… வெல்… பெட்டர் நானே சொல்லிடறேன். ஏன்னா நானே இந்த விஷயத்துல ரொம்ப குழம்பி ஒரு வழியா இப்ப தான் தெளிவாகியிருக்கேன். இப்ப மறுபடியும் உன்னை போட்டு குழப்பினா நீ என்ன செய்வ…” என்று பேசுபவனின் சொற்கள் எல்லாம் புரியாத புது மொழி போல தான் ஜீவனாவிற்கு இருந்தது.

கௌதமோ கொஞ்ச நேரம் அமைதி காத்தான். பிறகு அண்ணாந்து மரத்தின் உச்சியைப் பார்த்துக் கொண்டான். அவஸ்தையுடன் தலை கோதியவன், நீண்டதாய் ஒரு பெருமூச்சை வேறு விட, அவனின் செய்கைகளை வித்தியாசமாகக் கவனித்தபடி, ‘நேரம் வேற ஆகுதே!’ என்று ஜீவனா தனக்குள் புலம்பிக் கொண்டாள்.

இப்பொழுது “ம்ம்… ஹக்கும்…” என குரலை செருமியவன், “அது…” என்று தாடையைத் தடவினான்.

‘உனக்கு என்ன தான் டா வேணும்?’ என கடுப்போடு அமர்ந்திருந்தாள். ஒருவேளை நான் செய்த வேலைக்குப் பாராட்டோ? ஆனால், அதுதான் நேற்றே பாராட்டி அதற்கு சன்மானமும் வாங்கிக் கொண்டானே என எண்ணியவளுக்கு சிரிப்பு வரப்பார்த்தது. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அதற்குள் இதழ் குவித்து ஊதி தன்னை கொஞ்சம் நிலைப்படுத்தியவன், “சரி… நேராவே போட்டு உடைச்சிடறேனே… இங்கே பாரு சீரியஸா இதை உன்கிட்ட தான் முதன்முதல்ல சொல்லறேன். இதுபோல நான் யார்கிட்டயும் சொன்னதே இல்லை. என்னடா இது இவனை பத்தி எனக்கு பெருசா எதுவும் தெரியாது… என்னைப்பத்தி இவனுக்கு என்ன தெரியும்ன்னு இப்படி சொல்லறான்னு எல்லாம் யோசிச்சு குழப்பிக்காத… ஏன்னா நானும் பலமுறை இதெல்லாம் யோசிச்சுட்டேன். எனக்கே சரியான பதில் கிடைக்கலை அப்டிங்கிறப்ப உனக்கு எப்படி இதுக்கு பதில் சொல்லுவேன்… பட் நத்திங் கேன் ஸ்டாப் மீன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுக்கிட்டேன்… அதுனால தான் உங்கிட்ட சொல்லிடலாம்ன்னு வந்தேன். அது வந்து… ம்ம்ம்… லுக்… ஜீவி… எனக்கு என்னன்னு புரியலை பட் உன்கிட்ட எப்பவும் சாரி சொல்லக்கூடாதுன்னு தோணுது… அதாவது நமக்குள்ள அது அனாவசியம் மாதிரி…”

கெளதம் ஏதேதோ உளறவும் சுத்தமாக அவளுக்குப் புரியவில்லை. தலையை உலுக்கி விட்டு, நேரத்தை பார்த்தவள் பேசாமல் எழுந்து நடக்கப் பார்க்க, அவசரமாக அவளின் கையை பிடித்த இழுத்து நிறுத்தினான். இதென்ன இப்படி செய்கிறான் என்ற கடுப்புடன் அவள் தன் கையை அவனிடமிருந்து விடுவிக்கப் பார்க்க, அவனோ சற்று வலுவாகப் பற்றிக் கொண்டான். தன் தைரியத்திற்காகப் பற்றிக் கொண்டானோ என்னவோ அது அவனுக்குத் தான் வெளிச்சம்.

அவள் மீண்டும் குழம்ப, “ஹே ஜீவி… அது… உனக்கு இன்னும் புரியலையா? ஏன் இப்படி சொல்லறேன்னு நிஜமாவே புரியலையா ஜீவி… சரி ஸ்ட்ரைட்டாவே சொல்லிடறேன்… ஐ வான்னா பீ வித் யூ அன்டில் மை லாஸ்ட் பிரீத்… நாட் ஜஸ்ட் ஏஸ் அ பிரண்ட்… ஐ வாண்ட் யூ ஏஸ் மை லைஃப்… ஐ வாண்ட் யூ ஏஸ் மை சோல் மேட்…” என உளறித்தள்ள,

‘அடக்கடவுளே! இவன் பிரபோஸ் பண்ணிட்டு இருக்கானா?’ என்றிருந்தது ஜீவனாவிற்கு.

அவளே அம்மா ஏற்பாடு செய்திருக்கும் திருமணத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என புரியாமல் குழப்பத்தோடு இங்கு வந்து அமர்ந்தால்… இவன் வேறு இவன் பங்கிற்கு வந்து காதல், கீதல் என்று… அட ராமா! என்று தான் அந்த நொடி தோன்றியது.

அதோடு இவன்தான் பெண்கள் என்றாலே ஒரு காத தூரம் ஓடுவானே! பெண்களின் வாடையே அறியாத ரிஷ்ய சிருங்கர் வம்சம் போல சுற்றித்திரிந்தவன் காதல் எல்லாம் செய்வானா என்ன? என்று கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“ஹே! நீ நம்பலையா என்ன?” என கௌதமன் படபடப்புடன் கேட்க, தலையில் அடித்துக் கொண்டாள்.

‘தெளிவா பிரபோஸ் பண்ணினோமா?’ என சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. அதை அவளிடம் கேட்கவா முடியும். ஏற்கனவே தலையில் அடித்துக் கொள்கிறாள்.

“ஜீவி ரொம்ப ஸ்பெஷலா இந்த மொமெண்ட்டை கிரியேட் பண்ண எல்லாம் எனக்கு வராதுடி… கண்டிப்பா சொதப்பிடுவேன்… கேண்டில் லைட் டின்னர், பூ, சாக்லேட்… இப்படி ஏதேதோ சர்ப்ரைஸ் எல்லாம் ட்ரை பண்ண தான் யோசிச்சேன். ஆனா எனக்கு அதெல்லாம் எப்படி செட் ஆகும்ன்னு தெரியவே இல்லை… டேட்டிங் கூட்டிட்டு போறது, உன்னை நான் புரிஞ்சுக்கிறது, என்னை நீ புரிஞ்சுக்க டைம் தரது இப்படி எதுவும் என்னால பிளான் பண்ண முடியலை… ஏன்னா என்னால இதுக்கும்மேல உங்கிட்ட கன்வே பண்ணாம இருக்க முடியாதுன்னு புரிஞ்சுடுச்சு…” அவன் உளறல்களை எல்லாம் கேட்கக் கேட்க இந்த அவசரக்காரனை எப்படி நிறுத்துவது என ஜீவனாவிற்கு புரியவில்லை.

கைகள் இரண்டையும் இறுக்கி மூடி, அனல் பார்வையால் அவனை எரித்தவளின் மூச்சுக்காற்றிலும் அனலடித்தது.

‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுறா?’ என கௌதமன் அவளையே பார்க்க, அவள் மீண்டும் முறைத்தாள்.

“சுபத்ரா அத்தை உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததே உன் மூலம் கம்பெனியில அவங்க கையில எடுத்திருக்கிற பிராஜெக்ட்ஸ் நல்லபடியா முடிக்கவும், எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி வெச்சு எங்க வீட்டுல அவங்க ஆதிக்கத்தை இன்னும் அதிகப்படுத்தவும் தான் தெரியுமா? அது தெரியவும் தான் உன்னை முதன்முதல்ல பார்த்தப்ப நான் கொஞ்சம் திமிரா இருந்தேன்… உன்னை இருட்டுல சரியா கவனிக்காம தான் அடிச்சேன். உன்னை அடிச்சிட்டு உன் மேல தப்பு இல்லைன்னு புரிஞ்சதும் மன்னிப்பு கேட்காததுக்கு அதுவும் ஒரு காரணம். அப்ப தான் நீ என்கிட்ட ஒதுங்கி இருப்ப, என் பக்கமே வர மாட்டேன்னு நினைச்சேன். ஏன்னா அவங்க திட்டம் பலிக்க கூடாதுன்னு ரொம்ப உறுதியா இருந்தேன்.

அதுதான் உன்கிட்ட திமிரோட இருந்தேன். இல்லை இல்லை இருக்க முயற்சி செஞ்சேன். ஆனா உன்கிட்ட என்னால திமிரை இழுத்துப் பிடிக்கவே முடியலை… அதுவும் உன்னை தப்பா நினைச்சு அடிச்சப்ப எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? நீ கோபத்தை காட்டவும் முடியாம… வருத்தப்படவும் முடியாம சோர்ந்து போயி இருந்தப்ப உண்மையா சொல்லணும்ன்னா நான் உடைஞ்சே போயிட்டேன். அப்ப அது என்ன உணர்வுன்னு கூட சரியா புரியலை. சம்மந்தமே இல்லாம உன் பின்னாடி தொல்லை பண்ணிட்டு வந்த கருணாகரன் அங்கிளோட முகத்தை உடைச்சு, உன்னைத் தனியா அனுப்ப முடியாம உன் பின்னாடியே ஹாஸ்டல் வரைக்கும் வந்து…” என அவன் சொல்ல சொல்ல,

இதெல்லாம் என்ன புது கதை என்று தான் அவளுக்குத் தோன்றியது.

இங்கே சுபத்ரா அவளை அவர்கள் பார்க்கும் பிராஜெக்ட்ஸ் நல்லபடியாக முடித்துத்தர அழைத்து வந்திருந்தது அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. அது அவர்களின் சுயநலத்திற்காக எடுத்த முடிவு என்றாலும் யாருக்கும் பெரிதளவில் பாதிப்பு இல்லை என்பதால் அந்த பிழையைக் கொஞ்சம் மன்னிக்கக் கூடியதாகவும் இருந்தது.

ஆனால், இவளின் திருமணத்தை முடிவு செய்ய அவர் யார்? அதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறதாம்? தலை விண்விண்ணென்று வலித்தது. சென்னைக்கு வந்தே இருக்கக்கூடாதோ என எரிச்சலாக நினைத்தாள்.

அன்னை ஒருபுறம் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகச் சொல்கிறார்… இங்கே இந்த கௌதமனும் திடீரென்று வந்து காதல் என்று சொல்கிறான்… போதாக்குறைக்கு சுபத்ராவும் உன்னை எனக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டம் போடுகிறார் என்றும் இவன் சொல்கிறான்.

இப்படி தன் மனதை அறியாமல் ஆளாளுக்கு திருமணம் என பேசுவது அத்தனை மனவுளைச்சலாக இருந்தது. அவள் இப்பொழுது தானே கல்லூரி படிப்பை முடித்தாள். வயதும் குறைவு தானே! அதற்குள் திருமணம், அதன் பொறுப்பு எல்லாம் ஏன் ஏற்க வேண்டும்?

அம்மாவை மாத்திரம் சமாளித்தால் போதும். இவர்களுக்கும் எனக்கும் என்ன இருக்கிறது என்பது தான் அவளின் அப்போதைய எண்ணம். அவளின் ஆழ் மனதில் கௌதமன் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை அவள் இன்னமும் அறியவில்லையோ என்னவோ?

எதுவும் சொல்லாமல் கோபமாக அங்கிருந்து நடக்க, கௌதமிற்கு தான் என்ன செய்ய என ஒன்றும் புரியவில்லை. தன் காதலை அவள் நிராகரித்துச் செல்லும்போது மனதில் ஆழமான ரணம் கொண்டான். தன்னை இத்தனை தூரம் பாதித்தவளை தான் துளிகூட பாதிக்கவில்லை போல என்பது பெரும் வேதனையாக இருந்தது.

அவள் தன்னை பார்க்க வேண்டும், தன்னுடன் பேச வேண்டும் என்கிற ஏக்கம் நாளுக்கு நாள் அவனுக்கு அதிகரித்து அவனை வதைக்கையில் அவனாலும் என்ன செய்துவிட முடியும்?

கௌதமனின் தந்தை தேவராஜன் அன்று லக்ஷ்மி கண்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு வருகை தந்திருந்தார்.

கம்பெனியின் எம்.டி., பதவியில் அவர் இருந்தாலும் அடிக்கடி அலுவலகம் வருவதோ, அதிகமான வேலைகளில் தலையிடுவதோ எதுவும் இல்லை.

பார்க்கிங்கில் இருந்து வந்து கொண்டிருந்த அவருக்கு எதிரே தான் ஜீவனா கடுகடுவென்ற முகத்துடன் வந்து கொண்டிருந்தாள். கோபத்தில் இவர் எதிரில் நிற்பதை அவள் கவனிக்கவில்லை. மோதி விடுவது போல வந்தவளின் தோள்களைப் பற்றி நிறுத்தியவர், அவள் குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்க்கவும்,

அவளின் தாடையைப் பற்றி, “நீ ராதிகாவோட பொண்ணு தானேம்மா… ஜீவனா… ஜீவனா தானே நீ…” என்றார் நெகிழ்வான குரலில். கண்களில் நீர் பளபளத்தது.

உடை, தோற்றம் எல்லாமே பணத்தின் செழுமையைப் பறைசாற்ற, இவர் தன்னை நிறுத்தி வைத்திருப்பதும் தன்னிடம் நெகிழ்வுடன் பேசுவதும் ஏனென்று ஜீவனாவுக்கு புரியவில்லை. இவரை இதற்கு முன்பு பார்த்தது போலவும் நினைவில் இல்லை.

யோசனையாக அவரை பார்த்தபடியே, ஆம் என தலையசைத்தவள், அவர் கையிலிருந்து மெதுவாக விடுபட முயன்றாள்.

அவரோ தன் பிடியை இறுக்கியவராய், “உங்க அம்மாவுக்கு அப்படி என்ன அவசரமாம்? இப்ப உனக்கு என்ன வயசுன்னு கல்யாணம் பண்ணி வைக்க யோசிக்கிறா?” என்றார் கோபத்துடன்.

‘அச்சோ! இவர் யாருன்னே தெரியலையே. வீட்டு விஷயம் வரை தெரிஞ்சு வெச்சிருக்காரு…’ என்று ஜீவனாவின் குழப்பம் மேலும் அதிகரித்தது.

“தப்பு என் மேல தான்… அவ எப்படியோ சமாளிச்சுப்பான்னு நான் ஒதுங்கி இருந்திருக்கக் கூடாது. அதுனால தான் இவ்வளவு பெரிய முடிவை அவ தனியா எடுத்திருக்கா…” என்றார் வருந்தியவராக.

அவளுக்கு இவர் யார் என தெரியாமல் வெகுவாக குழம்பிப் போனாள்.

அவரோ நிறுத்துவதாக இல்லை. “நீ எப்படி இருக்கடா? இங்கே அந்த பிராஜெக்ட்டை நீ வந்தவுடனேயே சரி பண்ணிட்டியாமே? கேள்வி பட்டதும் எப்படி என்னால உன்னை பார்க்காம இருக்க முடியும் சொல்லு. இத்தனை நாள் நீ இங்க வந்தும் நான் உன்னை பார்க்காம அமைதியா இருந்ததே ரொம்ப பெரிய விஷயம் தெரியுமா? ஆனா நான் ஏன் ஒதுங்கியே இருக்கணும். இவ்வளவு வளந்துட்டேன். என் பையனே என் முடிவை ஏத்து நடப்பானான்னு தெரியலை. ஆனா நான் பாரு… ம்ப்ச் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்டா…

பாரு நீ எப்படி வளர்ந்து நிக்கற… உன்னை பத்தி எதுவுமே தெரியாம… நீ வளர்ந்த அழகை ரசிக்காம இதெல்லாம் எனக்கு என்ன வாழ்க்கை சொல்லு… இப்ப யோசிச்சா இந்த வாழ்க்கையே தண்டனை மாதிரி இருக்கும்மா… நான் பெரிய பாவி. எனக்கான கடமையை சரியா செய்யலை. உங்க அம்மா மாதிரி எனக்கும் தைரியம் இருந்திருக்கணும். அவளை எப்படி என்னவோ பண்ணிக்கட்டும்ன்னு விட்டேன்… என் துணையை தந்திருக்கணும் தானே? இந்த பாவத்தை எங்கே போயி துடைப்பேன் சொல்லு…

ஆனா, இனி அப்படி இருக்க மாட்டேன். நீ என்கிட்ட வந்துட்ட… உன் மூலம் கடவுள் என்னோட கடமையை நினைவு படுத்தறாரு… இனியும் நான் ஒதுங்கி இருந்தா அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டாரு…” என மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அவர் பாட்டிற்கு நீளமாகப் பேசிக்கொண்டே போக,

ஜீவனாவிற்கு ஒரு வார்த்தையின் அர்த்தம் கூட புரியவில்லை. இவர் யாராக இருக்கும் என யோசித்து யோசித்துக் குழம்பிப் போனாள்.

இவள் நிலைக்குக் கொஞ்சமும் குறைவில்லை இவளைப் பின்தொடர்ந்து வந்த கௌதமனின் நிலை. தந்தை இவளிடம் பேசத் தொடங்கியதிலிருந்து அவனுக்கு மண்டை காய்ந்து போனது. ‘அப்பா என்ன பேசிட்டு இருக்காரு?’ என குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவனை மேலும் மேலும் குழப்பி விட்டார் தேவராஜன்.

தேவராஜனுக்கும் ஜீவனாவிற்குமான உறவு என்னவாக இருக்கும்? அவர் இவ்வளவு தூரம் வருந்துவதும் புலம்புவதும் ஏனோ? இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.