உணவை உண்டு முடித்ததும் விட்டால் போதும் என்பது போல கதவருகே சென்று நின்று கொண்டாள். இவளின் அடர்த்தியான வீம்பைப் புரிந்துகொண்ட பிறகு, அன்று மன்னிப்பை கேட்டிருந்தால் கூட மன்னித்திருப்பாளா என்பது சந்தேகம் தான் என்று கௌதமுக்கு தோன்றியது.

இப்பொழுது நினைத்தாலும் மன்னிப்பை கேட்டு விடலாம் தான் ஆனால் உள்ளுக்குள் என்னவோ தடுத்தது. மன்னிப்பை கேட்டுத்தான் ஆக வேண்டுமா? தெரியாமல் தானே செய்தேன் மன்னிக்க மாட்டாளா என்றொரு எதிர்பார்ப்பு அவனுக்குள்… அர்த்தமே இல்லாமல்!

சிரிப்பு தான் வந்தது. அன்று அகங்காரம் விடவில்லை. இன்று ஏதோ ஒரு அங்கீகாரம் எதிர்பார்த்து மன்னிப்பைக் கேட்கவில்லை.

அவன் நினைவுகளின் விசித்திரத்தை அசைபோட்டபடியே கதவினை திறந்து விட்டவன், “தேங்க்ஸ் ரொம்ப நாளைக்கப்பறம் தனியா இல்லாம ஒருத்தங்களோட சேர்ந்து லன்ச் சாப்பிட்டிருக்கேன்” என்று உணர்ந்து சொல்ல, அவள் லேசான தலையசைப்பு கூட இல்லாமல் வெளியேறினாள்.

அவள் உணவு பையுடன் கௌதமன் அறையிலிருந்து வெளியேறியதை அனைவரும் விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தனர்.

‘போச்சுடா… இது வேறயா?’ என்றிருந்தது அவளுக்கு. முத்தாய்ப்பாய் சுபத்ரா வந்து, “கெளதம் கூட தான் தினமும் லன்ச் சாப்பிடறியா என்ன?” என்று கேட்க,

வேலைக்கு சேர்ந்த இந்த நான்கு நாட்களில் அவரையே இன்று தான் அலுவலகத்தில் பார்க்கிறாள். இதற்கும் இவளை வேலையில் அமர்த்தி, இவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் இத்தனை நாட்களும் கைப்பேசியிலேயே இவளுக்கு கட்டளைகள் கொடுப்பதும், அலுவலகம் வர முடியாதளவிற்கு பிஸியாக இருப்பதாகச் சொல்வதுமாக இருந்துவிட்டு, கண்ணில் பார்ப்பதே இப்பொழுது தான் எனும்பொழுது வந்ததும் வராததுமாக அனாவசிய கேள்வியை கேட்டால் அவள் என்னவென்று பதில் சொல்வதாம்?

அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்வையைச் சுழலவிட்டு தன் தந்தை எங்கே என்று தேட, “ம்ப்ச்… நான் எவ்வளவு முக்கியமா கேட்டுட்டு இருக்கேன். நீ என்னன்னா பதில் சொல்லாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க…” என்று சுபத்ராவின் குரல் சிடுசிடுத்தது.

‘நான் யார் கூட லன்ச் போறேங்கிறது தான் இந்த அம்மாவுக்கு இப்ப ரொம்ப முக்கியம்…’ என ஜீவனா கடுப்புடன் எண்ணியவள், “உங்க கேபின் எங்கே இருக்கு?” என்று மட்டும் கேட்டாள்.

“பேச்சை மாத்தறியா என்ன? நான் இதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டேன். உங்க அம்மா மாதிரி பத்தாம்பசலித்தனமா நான் இருப்பேன்னு நினைச்சுக்காத?” என்று ஒரு இளிப்புடன் சொல்லிவிட்டு ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் அவளையே பார்க்க, ஜீவனா கடுகளவு மதித்தாளில்லை.

‘சரியான அழுத்தம்… அவங்க அம்மாக்காரி மாதிரியே’ என மனதிற்குள் மாத்திரம் சுபத்ராவால் கடிந்து கொள்ள முடிந்தது. முகம் லேசாக இறுகிவிட, “நானும் உங்க அப்பாவும் அங்கே தான் இருப்போம்…” என தங்கள் கேபினை சுட்டிக்காட்டியவள், “இப்போதைக்கு இந்த கம்ப்ளீட் ஆன பிராஜெக்ட் தான் ஹை பிரையாரிட்டி… அதை பினிஷ் பண்ணி சேல் பண்ணற பொறுப்பை பார்த்துக்க… அதுக்கு இப்ப கெளதம் தான் இன்சார்ஜ்…” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

ஜீவனாவிடம் நீண்டதாக ஒரு பெருமூச்சு மாத்திரமே! தந்தையின் பொறுப்பில் இவள் வேலை இருக்கும் போல என்று தான் எண்ணியிருந்தாள். இந்த பிராஜெக்டுகள் குறித்து தகவல்கள் தந்த போதும் இது தந்தையும், சிற்றன்னையும் செய்து கொண்டிருக்கும் வேலைகள் என்று தான் சொன்னார்கள்.

இப்பொழுது இவள் முக்கியமாக முடித்தே ஆக வேண்டிய பிராஜெக்ட் மட்டும் கெளதம் கைவசமாம்! மற்றவர்களிடம் வேலை செய்வதில் அவளுக்கு சுணக்கம் இல்லை தான்… அந்த மற்றவர் கௌதமாய் இல்லாத வரைக்கும்! மீண்டும் மீண்டும் அவனிடம் சென்று நிற்க வேண்டியது ஒரு மாதிரி சொல்ல முடியாத எரிச்சலாக இருந்தது.

தன் வெட்டி எண்ணங்களை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு அந்த வீட்டில் என்னென்ன மாறுதல்களைச் செய்யலாம் அதற்கு இன்னும் எந்தளவிற்கு பட்ஜெட் தேவைப்படும் என்றெல்லாம் திட்டமிட்டுவிட்டு அந்த ரிப்போர்ட்டை அன்றைய தினமே கௌதமனுக்கு அனுப்பி வைத்தாள்.

‘நேரில் வந்து சொல்ல மாட்டாளா?’ என்று அவனுக்கு கடுப்பாக இருந்தாலும், அவள் அனுப்பியவற்றை எல்லாம் பார்த்தவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது அப்ரூவலை அனுப்பி விட்டான். வேலைக்கு ஆட்களை யார் மூலம் அழைக்க வேண்டும் என்றும் மெயிலிலேயே தகவல்களைத் தந்திருக்க இவளின் அடுத்தடுத்த நாட்கள் மிகவும் பரபரப்பாகத் தான் சுழன்றது.

தினமும் அலுவலகம் வராமல் நேராக சைட்டிற்கே சென்று விடுவாள். எல்லா வேலைகளையும் கூட இருந்து சரிபார்க்கத் தொடங்கினாள். கொஞ்சம் இறங்கி வேலை பார்த்தாள் என்று சொல்லலாம். அந்தளவிற்கு டெடிகேஷனை போட்டிருந்தாள்.

சரியாக அடுத்த மூன்று வாரங்களில் அந்த வீடு இன்னும் மெருகேறி புதுப்பொலிவுடன் மின்னியது.

அந்த தகவலும் கௌதமனுக்கு வந்து சேர்ந்திருக்க சைட் விசிட் வந்து பார்த்தவன் அசந்து தான் போனான். முன்பு அந்த வீட்டில் பல குளறுபடிகள் இருப்பது போல தோன்றும். இப்பொழுது பார்த்தவுடன் பிடிக்கும் படியான தோற்றம். இதற்கும் சின்ன சின்ன மாறுதல்கள் தான் செய்திருந்தாள். அதுவே அந்த வீட்டை அத்தனை அழகாக எடுத்துக் காட்டியது.

அதுவும் அவன் வந்த நேரம் தான் சேல்ஸ் டீமை சார்ந்தவர், ஒரு குடும்பத்தை அழைத்து வந்திருக்க அவர்களுக்கும் வீடு மிகவும் பிடித்து விட்டதாகக் கூறி, கையோடு முன்பதிவு செய்து விட்டுத் தான் சென்றனர். லாபம் குறையும் என்ற கணக்கீட்டில் இவன் இருக்க அதை சரிசெய்திருந்தது ஜீவனா செய்திருந்த வேலைகள்.

கௌதமால் நம்பவே முடியவில்லை. ஜும் மந்திரகாளி போட்டது போல இவ்வளவு எளிதில் இந்த பிரச்சினை முடியும் என அவன் எப்படி நம்புவான்?

எத்தனை நாட்கள் அதிகமாக முடங்கி விட்ட பணத்திற்காக உறக்கமில்லாமல் தவித்திருக்கிறான். இப்படி அநியாயத்திற்கு மாயம் செய்து விட்டாளே பெண்ணவள்!

அவசரக்காரன் ஆர்வமிகுதியில் அவளைத் தேடி அந்த புது இல்லத்திற்குள் சென்றான். அவளோ மாடி படிகளின் வளைவில் தான் ஏற்படுத்தியிருந்த மாறுதல்கள் சரியாக வந்திருக்கிறதா என்று ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

கீழே உள்ள அறைகளில் எல்லாம் கண்ணில் படாமல் போனவளைத் தேடி மாடி ஏறியவனுக்கு இடையிலேயே அவளின் தரிசனம்.

“ஹே சண்டைக்காரி! யூ டிட் எ பெண்டாஸ்டிக் ஜாப்…” என ஆர்ப்பாட்டமாய் சொன்னவன், அவளை வேகமாக அணைத்து தோளினை தட்டிக்கொடுத்து விட்டு, அணைத்த வேகத்திலேயே விடுவித்தான். முகமெல்லாம் மத்தாப்பு போல பூரிப்பும் புன்னகையும்.

வெகு சாதாரண அணைப்பு தான்! அவளுக்கும் அது நன்கு புரிந்தது. ஆனால், உள்ளே எரிந்து கொண்டிருந்த கோப நெருப்பு அவளை சும்மா விடுமா என்ன? எதையும் யோசிக்காமல் கிடைத்த வாய்ப்பில் ஓங்கி அறைந்திருந்தாள்.

அவன் அடித்ததோடு ஒப்பிட்டால் இந்த அடி ஒன்றுமே இல்லை தான்! ஆனாலும் ஒருவித திருப்தி அவளுக்குள். இத்தனை நாட்கள் வாட்டி வதைத்த மனதின் நமைச்சல் குறைந்தது போல உணர்ந்தாள்.

இடது கையால் கன்னத்தில் அழுத்திக் கொண்ட கெளதம் அவளையே தான் பார்த்திருந்தான்.

‘என்ன?’ என்று திமிராய் பார்த்தாள். திருப்பிக்கொடுத்து விட்ட திருப்தி அவளிடம்.

அது அவனுக்கும் புரிந்திருந்தது போல… “மேடம் என்னை நிமிர்ந்து பார்க்கணும்ன்னா அறை வாங்கணும் போலவே…” என சாதாரண குரலில் சொன்னவன், “குட் ரிவென்ஜ்…” என்றும் சேர்த்துச் சொல்ல, அவள் தான் இப்பொழுது பே என்று விழித்தாள்.

அப்பொழுதுதான் புத்திக்கு உரைக்க அவசரமாக யாரும் கவனித்திருப்பார்களோ என்று ஜீவனா சுற்றி சுற்றி பார்க்க, “அதெல்லாம் மேலே வேலை செய்யற பிளம்பர், கீழே வேலை செய்யற ரெண்டு பெயிண்டர்ஸ் பார்த்துட்டாங்க…” என்று கூலாக சொன்ன அவசரக்காரனை அவள் பாவமாகப் பார்த்து வைத்தாள்.

‘ம்ப்ச்… அவனை அவசரக்காரன்னு திட்டிட்டு இப்ப நீ என்ன செஞ்சு வெச்சிருக்க?’ அவளுக்கு அவளை நினைத்தே கஷ்டமாக இருந்தது. அது புரிந்தவன் போல, “இதைத்தான் பூவோட சேர்ந்து நாரும் மணக்கும்ன்னு சொல்லுவாங்க…” என்றான் சிரிப்பால் சீண்டியபடி.

‘இவன் என்ன இப்படி நல்லவனா மாறிட்டான். என்னவோ இடிக்குதே!’ என்று ஜீவனா நம்பாத பார்வை பார்க்க, “அது தான் உன் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு பார்த்தேனே! உனக்கு எல்லாம் அந்த கொடுமையே போதும். புதுசா ஒரு கொடுமை எதுக்கு?” என்று வெகு இயல்பாகத் தான் கெளதம் கலாய்த்தான்.

முறைக்கவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டவளின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. இவனோடு இத்தனை இலகுவாக ஒத்துப்போக முடியும் என்று அவள் எண்ணியதே இல்லை. முதல் சந்திப்பில் நடந்த குளறுபடி அப்படி! ஆனால், மாயம் போல அனைத்தையும் நடத்திக்காட்டி நம்ப வைத்துக் கொண்டிருக்கிறான்.

அவனிடம் கடைபிடிக்கும் மௌனத்தை உடைத்திருப்பாள் தான்! ஆனால், மெளனமாக இருந்தாலும் மனதில் எண்ணுவதை அவன் அப்படியே சொல்லும் இந்த விளையாட்டு ஏனோ பிடித்து விட்டது. ஆக, இன்னும் கொஞ்சம் அவனை சுற்றலில் விட நினைத்து விட்டாள்.

அவளின் மௌனம் அவனிடம் உடைவது எப்போதோ?