மௌனமதில் யுத்தம் ஏனடி? – 3

மறுநாள் காலையில் ஜீவனா சுறுசுறுப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வேலைக்குச் சேர்வதற்கு இன்றுதானே முதல் நாள். அந்த பரபரப்பு அவளிடம்.

முதல் நாள் இரவு பார்ட்டியிலிருந்து வீடு வந்து சேர்வதற்குள் ஒரு வழியாகி விட்டிருந்தாள்.

இன்னும் சொல்வதென்றால் அத்தனை பதற்றத்திலும் பயத்திலும் கூட துணிவுடன் தான் செயல்பட்டாள்.

அங்கிருந்த ஹோட்டல் ரிஷப்சனில் உதவி கேட்டு, அவர்கள் டாக்சியிலேயே தான் ஹாஸ்டல் வரை வந்து சேர்ந்தாள்.

வீம்பு பிடித்து… கௌதமனின் முகம் கூட பார்க்காமல்… அவன் உதவ முன் வந்ததை உதறித் தள்ளிவிட்டு தனியாக அவள் ஹாஸ்டல் வாசலில் வந்து இறங்கியபோது அவனுடைய காரும் அவளைப் பின்தொடர்ந்து வந்ததைக் கவனித்திருந்தாள்.

அவளுக்கு சலிப்பு தான். கோபமாகக் கூட வந்தது. அவனைத் துளியும் கண்டுகொள்ளாமல், திரும்பிக்கூடப் பார்க்காமல் விறுவிறுவென உள்ளே வந்து விட்டாள்.

கௌதமன் காரிலிருந்து இறங்கி, அதில் சாய்ந்து நின்றபடி கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முதுகைத் துளைக்கும் அவன் பார்வையை உணர்ந்தாலும் அவனை திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிற பிடிவாதம் அவளுக்கு.

மேலே அறைக்கு வந்ததும் தன்னறையின் விளக்கை ஒளிர விட்டவள், குளிப்பதற்காக மாற்றுடை மற்றும் டவலுடன் குளியலறை நோக்கி சென்றாள். திடீரென்று என்னவோ உறுத்த அவளின் நடை தடைப்பட்டது. ஜன்னலின் அருகே சென்றவள் அதன் திரைச்சீலையை மெல்ல விலக்கி கீழே எட்டிப் பார்த்தாள்.

இன்னமும் அவன் அங்கேயே அதே தோரணையில் தான் நின்றிருந்தான். பார்வை மட்டும் மேலே இவளின் அறையை நோக்கியவாறு.

அந்த நடுஜாமத்தில் மொத்தமாக இருள் சூழ்ந்த இடத்தில் ஓரிடத்தில் மட்டும் வெளிச்சம் வந்தால் அவளின் அறையைக் கண்டுபிடிப்பதில் அவனுக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?

ஜீவனா படபடத்துப் போய் வேகமாகத் திரைச்சீலையை மூடி விட்டாள். ‘நான் தான் ஹாஸ்டல் வந்து இறங்கிட்டேனே… இன்னமும் இவனுக்கு என்னவாம்? கிளம்ப வேண்டியது தானே… ஐயோ! நான் பார்த்ததைப் பார்த்திருப்பானோ?’ உள்ளே புலம்பியபடியே மீண்டும் அந்த கணமான திரைச்சீலையை மெல்ல விலக்கி எட்டிப்பார்க்க,

உண்மையில் அவனுக்கும் அவளின் ஜன்னல், அது வழியாகக் கசிந்து வரும் வெளிச்சம், அந்த திரைச்சீலையின் நகர்வு எல்லாமே தெரிந்தது தான்.

அவளை அந்த நேரத்தில் புது இடத்தில் தனியாகப் பிரயாணம் செய்யவிட மனமில்லாமல் தான் ஹாஸ்டல் வரை பின் தொடர்ந்து வந்தான். அவள் வந்து சேர்ந்து விட்டாள் என்று திரும்பியும் போய் இருப்பானோ என்னவோ… அதற்குள் அவளின் வீம்பு விளையாட்டில் சுவாரஸ்யம் வந்திருக்க, அவளை மேலும் கடுப்பேற்ற நினைத்தவன், இங்கிருந்து வேண்டுமென்றே பை என்று கையசைக்க… அவளுக்கு மூச்சடைத்து விட்டது.

‘ச்சே! பார்த்துட்டான்…’ என முணுமுணுத்தவள் தட் தட் என்ற வேக நடையுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘உனக்கு கொஞ்சம் கூட ரோசமே இல்லடி… அவன் இருந்தா உனக்கென்ன? கிளம்பினா தான் உனக்கென்ன? அமைதியா வேலையை பார்க்காம எதுக்கு போயி எட்டிப் பார்த்த?’ தன்னையே கடிந்தபடி குளித்துவிட்டு வந்தவளுக்கு அன்றைய இரவு உறக்கம் தூரப்போனது.

இப்பொழுது காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருப்பவளின் செவிகளில், “நீ நாளைக்கு ஜாயின் பண்ணறது எங்க கம்பெனியில தான்…” என்று சொன்னவனின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

‘ம்ப்ச் அவனை பத்தியே ஏன்டி யோசிக்கிற? அவன் அங்கே இருந்தா உனக்கு என்ன வந்தது? நீ உன் வேலையை மட்டும் பாரு…’ என தன்னையே கடிந்து கொண்டாள்.

அவன் பெயர் கூட தெரியாது. அவன் மீது நல்லபிப்ராயமும் துளியும் இல்லை. ஆனால், அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். அதனாலேயே ஒருவித காரணமற்ற எரிச்சல் தன்மேலேயே அவளுக்கு.

சரியாக ராதிகா அந்த நேரம் அழைத்தார். சட்டென்று எரிச்சல் மறைந்து ஜீவனாவின் முகம் புன்னகை பூசி விட, வீடியோ காலை அட்டண்ட் செய்தாள்.

“கிளம்பியாச்சா ஜீவா…” என்று அன்னை கேட்க,

“அதெல்லாம்… எப்படி இருக்குன்னு சொல்லுங்க…” என்றவள் டிரஸிங் டேபிள் முன்பு போனை வைத்துவிட்டு சற்று தள்ளி நின்று தாயிடம் தன் தோற்றத்தை ஒருமுறை அழகாக சுழன்று காட்டினாள்.

இளம் ரோஜா வண்ண சல்வாரில் தேவதையாக மிளிர்ந்த தன் மகளை ஆசையாகப் பார்த்தவர், “பர்ஃபெக்ட்” என்றார் சிறு புன்னகையுடன்.

“தேங்க்யூம்மா…” என்று சொன்னவளிடம், “நீ வளர்ந்துட்ட உனக்கு சொல்ல வேண்டியது இல்லை… இருந்தாலும் கவனம் மா…” என்றார் ராதிகா.

நேற்று அன்னை மிகவும் கலங்கிப் போயிருப்பார் என்று அவளுக்குப் புரிந்தது. “சாரிம்மா… இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கிறேன்…” என்றாள் வருந்தியவளாக. நேற்று பட்ட அவமானத்தில் கண்கள் கலங்கிப் போனது. தாயிடம் மறைக்கத் தலையைக் குனிந்து கொண்டாள்.

“பரவாயில்லை ஜீவா… நீ பத்திரமா இருந்தா போதும்…” என்று சொல்லிவிட்டு, “ஆல் தி பெஸ்ட்… நல்லா பண்ணிட்டு வா…” என்று வாழ்த்தினார்.

ஜீவனா, “தேங்க் யூ சோ மச் மா…” என்று சொன்னவள் இப்பொழுது கண்ணீரை உள்ளிழுத்து சுதாரித்திருந்தாள். ஆனாலும் அவளின் கரம் உயர்ந்து தன்போல அவளின் கன்னத்தினை வருடிக் கொண்டது.

“ஓகேம்மா… ஈவினிங் கால் பண்ணறேன். பை பை…” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டு, கூகிள் மேப் உதவியுடன் ஆட்டோ பிடித்து அலுவலகம் வந்து விட்டாள். நகரின் முக்கிய இடத்தினில் பிரமாண்டமாக அமைந்திருந்த அந்த அலுவலகத்தை, அதன் கட்டிட வடிவமைப்பை எல்லாம் ரசனையாகப் பார்த்தபடி தான் உள்ளே நுழைந்தாள்.

லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நன்கு வளர்ந்து வரும் நிறுவனம்! கௌதமன் வந்த பிறகு நிறைய லாபங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தது.

ஜீவனாவுக்கு நேரம் கழித்து உறங்கியதோ, நேற்றிரவு நடந்த அலைக்கழிப்போ பெரிய விஷயமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், திருமூர்த்தியும், சுபத்ராவும் இன்னமும் விழிக்கக் கூட இல்லை. அலுவலகம் வர வேண்டும் என்பதோ, இவளை இன்று பணியில் அமர்த்த வேண்டும் என்பதோ நினைவில் இல்லாமல் இன்னும் உறங்கியபடி இருந்தார்கள். அதுசரி, அவர்களுக்கு வயது பெண்ணை இரவு நேரத்தில் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற நினைவே இல்லாத போது இந்த நினைவு மட்டும் எங்கிருந்து வரப் போகிறது?

ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் தனது ஜாயினிங் லெட்டரை காட்டினாள். “பிளீஸ் வெயிட் மேம்…” என்ற அந்த ரிஷப்சனிஸ்ட் அடுத்து அழைத்தது கௌதமனுக்கு தான். அவனிடம் விவரம் சொல்லவும், “உள்ளே அனுப்புங்க…” என்று சொல்லி விட்டான்.

“மேடம் நீங்க உள்ளே போகலாம்… பர்ஸ்ட் பிளோர்ல ரைட் சைட் செகண்ட் ரூம்…” என்று சொன்னதும், “தேங்க் யூ…” என்று சொன்னவள், மேலே ஏறினாள்.

‘அப்பா போன் பண்ணினா மட்டும் அட்டெண்ட் செய்ய மாட்டேங்கறாங்க… ஆனா ஆபிஸ் வந்திருப்பாரு போலவே… ஏதாவது வேலையா இருந்திருப்பாரு…’ என்று நினைத்தபடி தான் மேலே சென்றாள்.

அறையின் கதவைத் தட்டிவிட்டு, “எஸ் கம் இன்…” என்ற குரல் உள்ளிருந்து கேட்கவும் கதவைத் திறந்தவளுக்கு ஸ்தம்பித்த நிலை. அங்கு நிச்சயம் அவனை எதிர்பார்க்கவில்லை.

அதற்கடுத்து ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைக்கவும் அவளுக்கு மனம் இல்லை. வேகமாக வந்த வழியே திரும்பி விறுவிறுவென்று சென்று விட்டாள். உள்ளம் படபடத்துக் கொண்டிருந்தது.

கௌதமனுக்கு சுள்ளென்று ஏறியது. வாயில் வரை வந்தவள் உள்ளே வராமல் சென்றது முகத்தில் அடித்தது போல இருந்தது. அத்தனை நேரமும் அவளைப்பற்றிய பெரிதாக சிந்தனை இல்லை, வேலையில் தான் மூழ்கி இருந்தான். நேற்று இரவிலிருந்தே கொஞ்சம் உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. அடித்தும் விட்டு மன்னிப்பும் கேட்காமல் வந்திருக்கக் கூடாது என்று! இன்று அலுவலகம் வருவாள் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று கூட நினைத்திருந்தான். அதன்பிறகு தான் ஆசுவாசமே!

இன்று காலையில் அலுவலகம் வந்ததும் வேலை பிடித்துக் கொண்டது. அதில் மூழ்கி போனவனுக்கு அவளின் எண்ணங்கள் பின்னோக்கிப் போயிருக்க, இப்பொழுது ரிஷப்ஷனிஸ்ட் அழைத்துக் கூறியதும் தான் நினைவிற்கே வந்தாள்.

சரி வரட்டும் மன்னிப்பு கேட்டு விடுவோம் என்று அவன் காத்திருக்க, வந்தவளோ அவனை மதிக்காமல் சென்றதில் அப்படியொரு எரிச்சல்.

சிசிடிவியில் அவளின் செயல்பாடுகளைத் தான் பார்த்தான். வேகமாகக் கீழ்த்தளம் இறங்கி சென்று ரிஷப்சனிஸ்ட்டிடம் எதையோ விசாரிப்பது புரிந்தது. அந்த பெண்ணும் எதையோ பதிலுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள். இவள் மறுத்து என்னவோ பேசிக் கொண்டிருக்க, இவனுக்கு இங்கு கடுப்பாக இருந்தது. திருமூர்த்தியை தான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பாளாக இருக்கும் என்று சரியாகக் கணித்தான்.

‘இன்னைக்கு ரெண்டும் ஆபிஸ் பக்கமே வராதுங்க…’ என கடுப்பாக முணுமுணுத்தவன் மேற்கொண்டு என்ன செய்கிறாள் என்று பார்க்க, சோர்ந்து போனவளாய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து யாருக்கோ அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள்.