“ஏன் இதை மாத்தணும்ன்னு நினைக்கறீங்க? இந்த பேச்சை தொடங்கினதே நீங்க தான்னு எனக்கு நியாபகம்… அம்மா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துவாங்கன்னு தோணுது… என்ன பண்ணறதுன்னு புரியலைன்னு நீங்க இழுத்து நிறுத்தினப்ப நான் விலகி இருக்கணும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன் தானே? அதே மாதிரி தான் இருக்கவும் செய்தேன். இப்ப கூட இங்கே வந்தே இருக்க மாட்டேன். ஆனா என்ன செய்ய என் பொண்ணுக்காகன்னு யோசிச்சப்ப என் சுயகௌரவம் பெருசா தெரியலை. அவளுக்காக மட்டும் தான் வந்தேன். அதோட இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும் என்ன திடீர்ன்னு… எப்பவும் போலவே இருந்துப்போம்ண்ணா…” என முகம் மாறாமல் பேசுபவளின் ஒவ்வொரு வார்த்தைகளின் பின்னும் ஆயிரம் ரணங்கள் இருக்கிறது என தேவராஜனுக்குப் புரியாமல் இல்லை.
இப்பொழுது தன் மடத்தனம் பூதாகரமாகத் தெரிந்தது தேவராஜனுக்கு. யார் எதிர்த்திருந்தாலும் தன் கடமையிலிருந்து பின் வாங்கியிருக்கக் கூடாது தானே! குறைந்தபட்சம் அவளுக்கு சேர வேண்டிய சொத்துக்களையாவது அவளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். கணவனோடு நன்றாக வாழ்ந்த போது எனக்கு எந்த சொத்தும் வேண்டாம் என்றாள் தான், ஆனால், அதன்பிறகு கணவனைப் பிரிந்து தனித்து நின்றபோது அதுகுறித்து அவளிடம் கேட்கக்கூடவில்லையே? அது எவ்வளவு பெரிய தவறு?
ஆனால், தங்கையும் தன்னை தேடி வரவே இல்லை தானே! அதில் தானே அவர் அவளைக் குறித்து கவலையின்றி இருந்தார். அதோடு அவளிடம் நேரடி பேச்சுவார்த்தைகள் இல்லாதிருந்த போதும் அவளைக் குறித்து அவ்வப்பொழுது உறவினர்கள் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டே தானே இருந்தார்.
“ஏன் ராதிம்மா இத்தனை நாள் அந்த திருமூர்த்தியும், சுபத்ராவும் வந்து ஜீவனாவை பார்க்க உரிமை இருக்குன்னு சொல்லி பார்த்துட்டு போனாங்களே அப்ப அமைதியா தானே இருந்த…” என்ன சொல்லி சமாதானம் பேச என தெரியாமல் எதை எதையோ இழுத்தார்.
“ம்ப்ச்… நீங்க வந்துட்டு போயிட்டு இருந்தா அங்கே உங்க அம்மா தான் உங்களை ரொம்ப படுத்துவாங்க… எனக்கென்ன வந்துச்சு…” என விட்டேற்றியாகத் தங்கை சொல்லும்போது அவளின் குரல் கரகரத்தது. வாய் வார்த்தைக்குக் கூட பெரியம்மா என்று சொல்ல முடியவில்லை அவளால். அந்தளவிற்கு அவள் வாழ்வில் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
“இனி யாருக்காகவும் நான் பின்வாங்க போறதில்லை ராதி…” என அண்ணன் அழுத்தமாக சொல்ல, அதற்கு மேலும் முரண்டு பிடிக்க முடியவில்லை போலும். அதனால், “உங்க இஷ்டம். ஆனா, கல்யாண பேச்சை மட்டும் மறுபடியும் எடுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என கௌதமனின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டார்.
அவன் அதிர்ந்து போய் ஜீவனாவை பார்க்க, அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை.
‘இதென்ன வம்பா இருக்கு. குடும்பம் ஒன்னா சேர்ந்தா கல்யாணம் செஞ்சு தானே வைப்பாங்க. இவங்க என்ன புதுசா செய்ய மாட்டேன்னு சொல்லறாங்க’ என கடுப்புடன் பார்த்தான் அவன்.
இங்கு வந்ததிலிருந்து ஜீவனாவிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறான். முன்போல அவள் மௌன விரதம் எதுவும் இவனிடம் கடைபிடிப்பதில்லை. ஆனால், தேவைக்கு மேல் ஓரிரு வார்த்தைகள் கூட அவளிடமிருந்து வந்ததில்லை. சரி அம்மாவைக் குறித்து கவலையில் இருக்கிறாள் போல என பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டான். ஆனால், இப்பொழுது யோசித்தால், அம்மாவின் சிகிச்சையின் போது ஆறுதலுக்காகக் கூட தன்னை நாடி வரவில்லை என்று புரிந்தது. ஏன் சிகிச்சை முடிந்து அது குறித்து ஆசுவாசத்தைக் கூட தன்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
முன்பு சிறு புள்ளியாய் அவளிடமிருந்து கிடைத்த இணக்கம் இப்பொழுது பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காது போல!
கடுப்புடன் தான் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். நிச்சயம் இவனின் பார்வையை அவளால் உணர்ந்திருக்க முடியும். ஆனாலும் முகத்தை இவன்புறம் திருப்பாமல் அழுத்தமாக நின்றிருந்தாள்.
தாமரையும் தேவராஜனும் என்ன சொல்லி ராதிகாவை சமாதானம் செய்வது என புரியாமல் நின்றிருக்க, “அத்தை… உங்களுக்கு உடம்பு இப்ப பூரண குணம் ஆகட்டும். மேற்கொண்டு ஆக வேண்டியதை மெதுவா பேசிக்கலாம். அப்பறம் இந்த கல்யாண விஷயம் பேசக்கூடாதுன்னு சொல்லாதீங்க. அதை பேசாம இருக்க எங்க ரெண்டு பேரோட மேரேஜ் ஒன்னும் இவங்க செய்ய நினைக்கிற அரேஞ் மேரேஜ் இல்லை… உங்க பொண்ணை நான் மனசார விரும்பறதால நடக்க இருக்கிற லவ் மேரேஜ்… உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்காம இருந்தாலோ, இல்லை உங்களுக்கு என் மேல ஏதாவது அதிருப்தி இருந்தாலோ மட்டும் சொல்லுங்க… மத்தபடி வேற எந்த காரணம் சொல்லியும் தட்டிக் கழிக்காதீங்க…” என்று கௌதமன் திடமாகச் சொல்ல, ராதிகா அவனது உறுதியான பேச்சில் ஒரு நொடி அவனை நிதானித்துப் பார்த்தார்.
இத்தனை உறுதியும் ஆளுமையாக தன் அண்ணன் மகனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்! அண்ணன் கொஞ்சம் திடமானவர் தான் என்றாலும் அது தொழில் என்று வரும்போது மட்டுமே! மற்றும்படி வீட்டில், உறவில் எல்லாம் கொஞ்சம் இலகுவாகத்தான் இருப்பார். எங்கும் கட் அண்ட் ரைட்டாக அவர் பேசியதே இல்லை எனலாம். அதிலும் பெரியவர்கள் பேசும்போது குறுக்கிட்டதும் இல்லை. மனதில் இருப்பதைச் சொல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை. கொஞ்சம் பெரியம்மா அப்படி கட்டுப்படுத்தி வளர்த்து விட்டிருந்தார்.
அப்படி இருக்க அண்ணன் மகன் இவ்வளவு உறுதியும் தெளிவுமாகப் பேசினால்? கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது. ஆனால், அதற்காக அவரின் மனம் மாறி விடுமா என்ன?
“இப்ப நாங்க சேலத்துக்கு கிளம்பறோம் கெளதம்… மத்த விஷயத்துல உன் மனசை மாத்திக்க…” என்று மட்டும் சொல்லிவிட்டார்.
இப்பொழுதும் ஜீவனா அவனை திரும்பிப் பார்த்தாளில்லை. அவளுள் அவன்மீது சலனம் இருக்கிறது தான். ஆனாலும் என்னவோ ஒரு தடை! அவளது அன்னையிடம் அவளுக்கு கௌதமை பிடித்திருக்கிறது என்று சொன்ன பிறகும் இப்படி உறுதியான முடிவெடுத்திருக்கிறார் என்றால் அவருள் எத்தனை வலி நிறைந்திருக்க வேண்டும்? அந்த வலியை அவள் காதல் மேலும் அதிகப்படுத்துமென்றால் அவள் நிதானிக்கத்தானே வேண்டும்!
அவள் ஊருக்குச் செல்கிறேன் என்று நின்றதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தவன் அவன். இன்று இப்படி ஒரு பெரிய முடிவு அதற்கு உடன்படுவது போல அவள் மெளனமாக நிற்பது என எல்லாம் சேர்ந்து அவனுள் அப்படியொரு பேரிரைச்சல். பேரலைகள் அவனைச் சூழ்ந்து தவிக்க விடுவது போல இருந்தது.
பொறுமையின் அகராதியே அறிந்திடாத அவசரக்காரன் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தான். அத்தையின் உடல்நிலை ஒரு முக்கிய காரணம் என வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறான சூழலில் தான் ராதிகாவும், ஜீவனாவும் சேலம் கிளம்பிச் சென்றார்கள்.
கொஞ்ச நாட்கள் ராதிகாவுக்கு ஓய்வில் கழிந்தது. மீண்டும் பள்ளிக்கு பணிக்கு செல்லத் தொடங்கினார். ஜீவனாவும் முன்பு வேலை பார்த்த நிறுவனத்திலேயே தனது வேலையைத் தொடர்ந்தாள்.
மகள் கொஞ்ச நாட்களில் கௌதமனை மறந்து விடுவாள் என்ற அன்னையின் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உடைய தொடங்கியது.
ஜீவனாவிடம் முன்பிருந்த கலகலப்பு சுத்தமாக இல்லை. தோற்றத்தில் உணவில் எதிலும் அக்கறையற்றவள் போலத் திரிந்தாள். முகத்தில் சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது. எதிலும் ஈடுபாடற்ற தன்மை! மொத்தத்தில் ஜீவனாவிடம் ஜீவன் இல்லை.
ராதிகா சோர்ந்து போனார். இப்படி ஒரு நிலை வரும் என அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திருமூர்த்தி, சுபத்ராவின் உண்மைத் தன்மையை முழுமையாக புரிந்து கொண்டு மகள் மொத்தமாக விலகி வந்து விடட்டும். அவர்களின் தொல்லை இனி தீரட்டும் என்று எண்ணித் தான் மகளைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவர் எண்ணியது நடந்தது தான்! ஆனால், கூடவே கொசுறாய் மகளுக்குக் காதலும் வந்து சேர்ந்து விட்டதே! இனி அவர் என்ன செய்வார்?
அதிலும் மகள் அடிக்கடி கைப்பேசியை எதிர்பார்ப்புடன் பார்ப்பதும், பின்பு அழைப்பு வரும்போதெல்லாம் அவள் எதிர்பார்த்த அழைப்பு வராமல் சோர்ந்து போவதுமாக இருக்க, பார்க்கவே பாவமாக இருந்தது. அவளின் உடல் முன்னெப்போதையும் விட ரொம்பவும் மெலியத் தொடங்கியது. உணவைக் குறைத்தாள். உறக்கம் தொலைத்தாள்.
என்ன செய்து இவளை சரிகட்ட என புரியாமல் அன்னையாக ராதிகாவின் மனம் தவித்தது.