ஜீவனா பேருந்தில் தான் பயணம் செய்தாள். பயணம் முழுவதும் சொல்லத் தெரியாத பாரம் ஒன்று மனதை அழுத்திக் கொண்டே இருந்தது.
கௌதமனை பார்த்த நாளிலிருந்தே அவன் இப்படித்தான் என அவனை ஒருநாளும் கணிக்க முடிந்ததில்லை.
ஆரம்பத்தில் அவன் மீது கோபம் கொட்டிக்கிடந்தது தான். அடித்து விட்டானே என்கிற கோபம். அதற்குப் பதிலுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம். ஆனால், வாய்ப்பு கிடைத்து அவனை மீண்டுமொருமுறை அடித்து விட்டுப் பழி வாங்கியபோது அவளின் கோபம் குறைந்தது மறுக்க முடியாத உண்மை.
ஏதோ ஒரு கோபத்தில் அடித்து விட்டாலும், என்னவோ சிறுபிள்ளைகள் போல இதென்ன? அவன் அடித்தால் பதிலுக்கு நீயும் அடிப்பாயா? என உள்ளம் மருகியது கிளைக்கதை.
அவனை அடித்து விட்ட பிறகும் அவனிடம் கடைப்பிடிக்கும் மௌனத்தை அவள் உடைக்க விரும்பவில்லை. தன் முகம் பார்த்து மனதை கணிக்கும் அவன் செய்கையில் வசீகரிக்கப்பட்டு விட்டாளோ என்னவோ?
பேருந்தில் வீட்டுக்குப் பயணப்பட்ட அந்த இரவு முழுக்க சரியாக உறக்கம் இல்லை மங்கையவளுக்கு. தவறி உறங்கிய கணங்களிலும் கௌதமன் தான் கண்களுக்குள் வந்தான். கோபமாக, கேலி பேசுபவனாக, அழகான புன்னகையோடு, ஒரு சொட்டு கண்ணீரோடு போகாதே என்று கேட்டபடி…
உறக்கம் போதாமல், மனதிலும் துளி உற்சாகமின்றி சோர்ந்து போனவளாக தங்கள் வீட்டிற்குள் நுழைந்தாள். “என்ன கொண்டு போன மொத்த பேக்கையும் கொண்டு வந்திருக்க” ராதிகா மகளை புரியாமல் பார்த்தார்.
“அங்க இருக்க பிடிக்கலை மா…” என சோர்வாக சொன்னவள், உள்ளே சென்று தன் படுக்கையில் விழுந்தாள்.
“பிடிக்கலையா? ஏன் அங்கே என்ன பிரச்சினை? உங்க அப்பா ஏதாச்சும் சொன்னாரா? இல்லை சுபத்ரா எதுவும் சொன்னாளா?” என விசாரிக்க, “ம்ப்ச்… அவங்க சொல்ல என்ன இருக்கு? இல்லை அவங்க என்கிட்ட என்ன சொல்லிடுவாங்கன்னு நீங்க பயப்படறீங்க?” என்றாள் கொஞ்சம் கோபமாக.
“ஜீவனா… அங்கே என்ன பிரச்சினைன்னு கேட்டா நீ ஏதேதோ பேசினா எப்படி?” என ராதிகா அப்பொழுதும் பொறுமையாகவே விசாரித்தார்.
“ஒரு பிரச்சினையும் இல்லைம்மா… ஒருத்தர் வந்து நான் தான் உன் தாய் மாமான்னு சொல்லறாரு… அவர் பையன் வந்து எனக்கு உன்னை பிடிச்சிருக்கு சொல்லறான்… நீங்க போன் பண்ணி மாப்பிள்ளை பார்த்திருக்கேன்னு சொல்லறீங்க… ஆனா நான் படிப்பை முடிச்சதே இப்ப தான். என்னோட கெரியரை கவனிக்காம அதுக்குள்ள எப்படி கல்யாணம் செய்யறதுன்னு எனக்கு யோசனையா இருக்கு… இது எல்லாம் கூட இப்ப பிரச்சினை இல்லைம்மா… உங்க அண்ணன் பையன் அந்த கௌதமன்… அவனை காரணமே இல்லாம எனக்கு பிடிச்சு வேற தொலைக்குது… அவன் சரியான அவசரக்காரன் மா… அவனை எனக்கு எப்படி பிடிச்சதுன்னு வேற தெரியலை…” என தலையை பிடித்துக் கொள்ள,
அவளின் அருகே அமர்ந்தபடி, “என்ன ஜீவாம்மா என்னென்னவோ சொல்லற…” என தவிப்புடன் அவளது தலையை வருடியபடி ராதிகா கேட்டார்.
“நான் சொல்லறது இருக்கட்டும்… முதல்ல உங்களுக்கு உடம்புக்கு என்னன்னு சொல்லுங்க… இல்லை ஏதாவது கடன் தொல்லையில மாட்டிக்கிட்டீங்களா? இல்லை நமக்கு வேற ஏதாவது பிரச்சினையா?” என ஜீவனா அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, ராதிகா பதில் சொல்ல முடியாமல் மௌனமாகி விட்டார்.
“இங்கே பாருங்க காரணமே இல்லாம அப்பாவும் சரி அந்த லேடியும் சரி உங்களை மிரட்ட முடியாது… என்னவோ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். அது எனக்கு தெரியக்கூடாதுன்னு நீங்க நினைச்சிருக்கணும்… அது என்னன்னு முதல்ல சொல்லுங்க… எனக்கு யோசிச்சு யோசிச்சு மண்டை காயுது…”
“ஏன் ஜீவா என்னென்னவோ பேசற?” ராதிகா இயலாமையுடன் கேட்டார்.
“எனக்கு அது கூட புரியாத அளவு மக்குன்னு என்னை நினைச்சீங்களாம்மா… அவங்க உங்களை என்னவோ சொல்லி மிரட்டறாங்க அதை முறியடிக்கணும் நினைச்சு தான் அங்கேயே போனேன். என் வேலைக்கும் அந்த ஊரில் நல்ல ஸ்கோப் இருந்தது… ஆனா பக்கத்துல இருந்து பார்க்க பார்க்க அவங்க சுயநலம் அப்பட்டமா தெரியுது… அவங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசம் இல்லைம்மா… நல்லா வேலை செய்யும் ஒரு பொண்ணு… அவளை வெச்சு நம்ம பிராஜெக்ட்ஸ் நல்லபடியா முடிச்சு லாபம் பார்த்துக்கலாம்ங்கிற எண்ணம் மட்டும் தான் அவங்களுக்கு…
நீங்க உங்க அண்ணன்கிட்ட சொத்து வேண்டாம்ன்னு வந்திருக்கலாம். ஆனா அவங்க அவங்களுக்கான பங்கு எல்லாத்தையும் வாங்கி எப்பவோ ஏப்பம் விட்டுட்டாங்க. இப்பவும் ஜம்பமா வந்து ஆபிஸ்ல உட்கார்ந்து நோகாம சம்பாரிச்சுக்கிறாங்க… அந்த சம்பாத்தியம் நிலைக்க, நல்லா வர தான் நான் அவங்களுக்கு அங்க… நீங்க என்ன நினைச்சு என்னை அனுப்பி விட்டீங்க? இதெல்லாம் கண்டிப்பா உங்களுக்கு புரியாம இருந்திருக்காது. இருந்தும் நான் அங்கே போறேன்னு சொன்னப்ப அமைதியா விட்டுட்டீங்க…”
படபடவென்று பேசிக்கொண்டே சொன்ன மகளின் மனநிலை என்னவென்று ராதிகாவால் இனம் காண முடியவில்லை. அதிலும் அவள் தன் பிறந்து வீட்டு விஷயம் எல்லாம் தெளிவாகச் சொல்லவும், இவளுக்கு யார் சொன்னார்கள் என்றிருந்தது.
ஒரு பெருமூச்சுடன், “முதல்ல அமைதியா இரு… இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி இருக்க? என்ன நடந்திருந்தாலும் அதை அப்பறம் பேசிக்கலாம். நீ முதல்ல குளிச்சிட்டு, பிரேக் பாஸ்ட் சாப்பிட்டு கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு…” என்று பரிவுடன் சொன்ன அன்னையையே இயலாமையாகப் பார்த்தவள், அவர் மடியிலேயே தலையை சாய்த்து படுத்துக் கொண்டாள்.
“கேட்ட கேள்விங்களுக்கு பதில் சொல்லாம சமாளிச்சுட்டா நான் அப்படியே விட்டுடுவேன்னு உங்களுக்கு தோணுதா? என்ன டீச்சர் என்னை பார்க்க உங்களுக்கு லூசு மாதிரி இருக்கா?”
“இல்லை சின்ன குழந்தையா இருக்கும் போது தூக்கம் பத்தாட்டி ஞை ஞைன்னு அழிச்சாட்டியம் பண்ணுவ… அப்படியே இருக்கு…” என அன்னை கேலி பேசவும், “ச்சு… போங்கம்மா…” என்று சொன்னவள், குளிக்கவோ உணவுண்ணவோ கூட செய்யாமல் அன்னை மடி தந்த சுகத்தில், அன்னையின் விரல்கள் தலை கோதிய ஸ்பரிஸத்தில் அப்படியே உறங்கிப் போனாள்.
மகளின் முகத்தையே ஆழ்ந்து பார்த்திருந்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றார் ராதிகா.
இவளது கேள்விகளைச் சமாளிப்பதா, இல்லை இவளின் காதலை சாமளிப்பதா என்று ராதிகாவுக்கு தெரியவில்லை.
அண்ணன், அண்ணி குறித்து அவளுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அங்கே அவர்களிடம் தன் மகளை மருமகளாய் ஒப்படைக்கத் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுமளவு அவளின் மனம் நிறைந்தவர்கள். ஆனால், வேதவல்லி? சுபத்ரா? எல்லாவற்றிக்கும் மேலாக அந்த சுயநலமே உருவான மனிதன் திருமூர்த்தி? இவர்களும் அந்த வீட்டுக்கு நெருக்கமானவர்கள் தானே? அதிலும் வேதவல்லி அந்த வீட்டிலேயே வசிப்பவர்! அப்படி இருக்கும் ஒரு நரி கூட்டத்திற்கு நடுவில் மகளை காலம் முழுக்க தவிக்க விட ராதிகாவால் எப்படி முடியும்?
வெறும் ஒரு மாத பழக்கம்! சாதாரண ஈர்ப்பாகத் தான் இருக்கும். இங்கேயே இருந்தாளானால் அந்த பையனின் நினைவே விரைவில் மறைந்து விடும்!
அது தான் மகளுக்கும் நல்லது! இல்லாவிட்டால் தான் ஒதுங்கி வந்த இடத்திற்கு மகளை அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு எப்படி இருக்க முடியும்? என்கிற உறுதியோடு ராதிகா இருந்தார்.
மகள் கொஞ்ச நேர தூக்கத்திலேயே எழுந்து கொண்டாள். ஒரு காக்கா குளியல் போட்டுவிட்டு வந்து பசிக்குது என நின்றாள்.
பொங்கல், இட்லி, வடை என மகளுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாலும் இவள் எப்பொழுது என்ன கேட்டு வைப்பாளோ என்று அன்னைக்கு நெஞ்சுக்கூடு பிசைந்து கொண்டே தான் இருந்தது.
பயம் சரியே என்பது போல உணவு உள்ளே சென்றவுடன், “முதல்ல அவங்க ரெண்டு பேரும் என்ன சொல்லி உங்களை மிரட்டறாங்கன்னு எனக்கு சொல்லுங்க…” என பிடிவாதம் செய்தாள் ஜீவனா.
“என்ன உளறிட்டு இருக்க? அவங்க எதுக்கு என்னை மிரட்ட முடியும் ஜீவாம்மா” உண்ட பாத்திரங்களை ஒதுங்க வைத்தபடியே மகளின் முகத்தைக்கூட பார்க்காமல் பதில் சொன்னார் ராதிகா.
“அதை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம் உங்களுக்கு? என்னை பார்த்துக் கூட பதில் சொல்ல மாட்டீங்கறீங்க” அன்னையின் முகத்தைக் கூர்ந்தாள் இளையவள்.
“நான் எதுவும் இல்லைன்னு எவ்வளவு நேரம் சொல்லணும் ஜீவா?” பதற்றத்தை மறைக்கக் கோப முகமூடி போட்டுக் கொள்ளப் பார்த்தார். ஜீவனா லேசில் விடுவதாக இல்லை. அன்னையும் பதில் தருவதாக இல்லை.
“கண்டதையும் யோசிக்காம தூங்கி ரெஸ்ட் எடு… நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன். வந்து பேசிக்கலாம்” பேச்சு பாதியிலேயே நிற்க ராதிகா கிளம்பி பள்ளிக்குச் சென்று விட்டார்.
ஜீவனாவுக்கு ஆரம்பத்தில் கூட அந்தளவுக்கு பயம் இல்லை. சாதாரணமாக ஏதோ மிரட்டி வைத்திருப்பார்கள் போல… பிள்ளையின் திருமணத்தின் போது நிற்க மாட்டேன், திருமணம் கைகூடத் தடை செய்து விடுவோம் அது இதுவென்று ஏதாவது சொல்லி அம்மாவை மிரட்டுவார்கள் போல என நினைத்து வந்தாள். இப்பொழுது அம்மா ஒதுங்கி வந்த இடத்திற்கே சரி மகள் போய் வேலை பார்க்கட்டும் என்றளவு துணிந்த காரணம் என்னவாக இருக்கும் என மண்டை குடையவும் தான் உடனேயே கிளம்பி வந்து விட்டாள்.
இப்பொழுது அம்மா பள்ளிக்கு கிளம்பிச் செல்லவும் வீட்டைப் பூட்டியவள், ஒரு இடம் விடாமல் எல்லாம் தேடினாள். எதைத் தேடுகிறோம் என்றே அவளுக்கு தெரியவில்லை. ஏதாவது கடன் வாங்கிய பத்திரம், மருத்துவ அறிக்கை இப்படி ஏதாவது என வீடு முழுக்க தேடி அலைந்தவளுக்கு ஒன்றும் உருப்படியாகக் கிடைக்க மறுத்தது. சோர்ந்து போய் அமர்ந்து கொண்டாள்.
இடையில் கௌதமன் வேறு இருமுறை அழைத்திருந்தான். வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் விட்டு விட்டாள்.
அவளின் பார்வை வீட்டை மீண்டுமொருமுறை அலசியது. எங்காவது நாம் தேடாமல் விட்டு விட்டோமா என பார்வையால் ஒவ்வொரு இடமாக அளந்தாள்.
மீண்டும் விடுபட்ட இடங்களை எல்லாம் தேடினாள். மெத்தைக்கு அடியில், அம்மாவின் உடை அலமாரியில் புடவைகளுக்கு இடையில், சமையலறையில் என தேடிக் கலைத்தாள். இவளின் பழைய புத்தகங்கள் இருந்த இடத்தில் ஒரு வழியாக அம்மாவின் மருத்துவ அறிக்கை ஒன்று கண்ணில் பட்டு விட்டது.
உள்ளே ரிப்போர்ட்டை எடுத்து பார்த்தவளுக்கு நுரையீரல் சம்மந்தமாக சிகிச்சைகள் என்றளவு புரிகிறது. ஆனால், மருத்துவ ஞானம் வேண்டுமே என்ன பிரச்சினை என்று தெளிவாக புரிந்துகொள்ள! அவள் கையிலிருந்த ரிப்போர்ட்டுகளில் கடைசி இரண்டு ஆண்டுகளுக்கான விவரங்கள் தான் இருந்தது. பிரச்சினை அப்போதிருந்து தானா இல்லை முன்பிலிருந்தே இருக்கிறதா?
ஒருவேளை இது சாதாரண டெஸ்ட் ரிப்போர்ட் தானா? மீண்டும் குழப்ப மேகங்கள் சூழ்ந்து கொண்டு வதைத்தது.
இம்முறை வேறு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு! ட்ரூ காலரில் ராஜேஷ் என காட்டவும், அவள் கொஞ்சம் பரபரப்பானாள். ராஜேஷ், கௌதமனின் தாய் மாமா. அவர் ஒரு மருத்துவர் ஆயிற்றே! அவருக்கு இந்த ரிப்போர்ட்டை அனுப்பி வைத்தால் என்ன ஏதென்று சொல்லுவாரே!
பரபரப்புடன் அழைப்பை ஏற்று, “ஹலோ…” என்க,
“ஏன் நான் போன் பண்ணினா எடுக்க மாட்டீங்கற?” என எரிந்து விழுந்தான் கௌதமன்.
ம்ப்ச்! இது இவன் வேலை! அப்படி என்ன என்னிடம் பேச அவசரமாம் இவனுக்கு! என எரிச்சல் பட்டவள், அமைதியாகவே இருக்க, “என்ன மறுபடி உன்னோட மௌன விரதத்தை தொடங்கிட்டியா?” என்றான் காட்டமாக.
“ம்ப்ச் சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாம என்ன விஷயம்ன்னு சொல்லு கெளதம். நானே டென்ஷன்ல இருக்கேன்…”
“என்னன்னு சொன்னா தானே தெரியும்? சும்மா என்கிட்ட கத்தற… உங்க அம்மா பத்தி எதுவும் தெரிஞ்சுக்கிட்டியான்னு கேட்க தான் கூப்பிட்டேன்… அதோட அப்பா கண் விழிச்சுட்டாரு… உன்னை தான் கேட்டாரு. நான் நீ ஹாஸ்ட்டல் போயிருக்கேன்னு சொல்லி சமாளிச்சு வெச்சிருக்கேன்”
“ம்ப்ச் அம்மாவோட மெடிக்கல் ரிப்போர்ட் கிடைச்சிருக்கு. ஆனா எனக்கு ஒன்னும் விளங்கலை” என சோர்வாகச் சொன்னவள், “உங்க அப்பாவுக்கு இப்ப நல்லா இருக்கு தானே?” என விசாரித்தாள்.
“அவர் ஓகே தான்! நல்லா ஆனதும் காருல அள்ளி போட்டு சேலத்துக்கு கூட்டிட்டு வந்துடறேன். சரி உங்க அம்மா ரிப்போர்ட் இங்கே அனுப்பி விடு… மாமாவை என்னன்னு பார்க்க சொல்லறேன்…” என்று சொன்னான்.
“அதெல்லாம் நீங்க யாரும் இங்கே வர வேண்டாம். அப்பறம் நான் பொல்லாதவ ஆயிடுவேன் பார்த்துக்க. இப்ப அம்மாவோட ரிப்போர்ட்ஸை அனுப்பி வைக்கறேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னன்னு பார்த்துட்டு சீக்கிரம் கூப்பிடு. பை…” என்றவள் அவனின் பதிலை கூட எதிர்பாராமல் துண்டித்து விட்டு அம்மாவின் ரிப்போர்ட்டை மொபைலில் ஸ்கேன் செய்து ராஜேஷ் நம்பருக்கே அனுப்பி வைத்தாள்.
‘சரியான திமிரு. என்னை நல்லா அலைய விடறா…’ என்று கடுப்புடன் எண்ணியவன், அவள் அனுப்பிய ரிப்போர்ட்ஸ்களை ராஜேஷிடம் காட்டினான்.
அதை கவனமாகப் பார்வையிட்டவரின் முகம் கொஞ்ச நேரத்தில் இருண்டு போனது. என்னவோ ஏதோ என கெளதம் பதற, அவரோ விறுவிறுவென்று அப்பா அட்மிட் ஆகியிருந்த அறைக்குள் போனார். பின்னாலேயே கௌதமனும் ஓடினான்.
அறையின் உள்ளே தேவராஜனும், தாமரையும் மாத்திரம் தான் இருந்தார்கள்.
“இன்னும் எவ்வளவு பாவம் செய்ய போறீங்க?” உள்ளே நுழைந்தவுடன் கோபமாகக் கத்தினார் ராஜேஷ்.
மற்ற மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்லற தம்பி? என்ன பாவம்?” என தாமரை தான் ஒருவழியாக வாயைத் திறந்தார்.
“ஏன் உங்க யாருக்கும் தெரியாதா என்ன? அதுதானே அந்த பொண்ணை புருஷனும் அம்போன்னு விட்டுட்டான். பிறந்த வீடும் அம்போன்னு விட்டுடுச்சு… இப்ப பாருங்க அந்த பொண்ணுக்கு நுரையீரல்ல நீர் கோர்த்துட்டே இருக்கு… இதுவரை இவ்வளவு ட்ரீட்மெண்ட் பண்ணியும் சரி ஆகலைன்னா அவ இனி எவ்வளவு நாள் உயிரோட இருப்பா? இந்த ரிப்போர்ட் படி பார்த்தா இனி அவளைப் பிழைக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். ஆரம்பத்திலேயே கவனிச்சு ட்ரீட்மெண்ட் போயிருந்தா இந்நேரம் அவளை காப்பாத்தி இருந்திருக்கலாம். யார் சப்போர்ட்டும் இல்லாம அந்த பொண்ணும் எவ்வளவு தான் சமாளிக்கும்? இப்படி அவளை விட்டுட்டீங்களே!” என்று சொன்னபோது தேவராஜன் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.